மரணத்தில் முடியும் அகதிகளின் கனவு



உலகில் இன்று அகதிகளுக்கு நடக்கும் அத்தனை வலிகளும், சொல்லில் அடங்காதவை. மனிதராக பிறந்ததால்தான் இத்தனை துயரங்களா? ஒருவேளை மிருகங்களாக பிறந்திருந்தால் இவ்வளவு கொடுமையை அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள். யாரை நோவது? உறவுகளை இழந்தவனை அநாதை என்பர்; சொந்த நாட்டை இழந்தவனை அகதி என்கின்றனர்.

நாடுகளுக்கு இடையே ஏற்படும் போர்ச்சூழல், உள்நாட்டுப் போர், இயற்கைப் பேரிடர், இனம், மதம், தேசியம், வேலைவாய்ப்பின்மை, பஞ்சம், நோய், அரசியல் குழப்பம் போன்றவற்றால் தங்களது இருப்பிடம், உடைமை, உற்றார் உறவினர்களை இழந்து, மக்கள் தங்களது வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள, பிற நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர் அகதிகளாக...

இன்றைய நிலையில், உலகளவில் சிரியாவிலிருந்து 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லெபனான், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். துருக்கி, பாலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

தங்களது நாட்டை விட்டு வெளியேறும்போது கடல், ஆறுகளைக் கடந்து தோணியிலும், நீந்தியும் சென்றாலும், ேதாணி கவிழ்ந்து உயிரிழப்பது, மணல் திட்டுகளில் படகோட்டிகள் இறக்கி விட்டுச் செல்லுதல், பிற நாடுகள் ஏற்க மறுப்பது, சில நாடுகள் தஞ்சம் கொடுத்தாலும் அங்குள்ள மக்களால் தாக்கப்படுவது என, அவர்களின் வாழ்க்கையே துயரங்களின் புதைகுழியாக உள்ளது.

‘அனைத்து நாடுகளும் மனிதாபிமானத்துடன் அகதிகளை நடத்த வேண்டும்’ என்று ஒருபக்கம் ஐக்கிய நாட்டு சபை தெரிவித்தாலும், பல நாடுகள் அகதிகளை ஏற்க மறுக்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இடப்பெயர்வு அதிகரித்த வண்ணம் உள்ளன. அதே
நேரத்தில் அகதிகளாகக் குடிபெயர்ந்த தங்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகளுக்கு விசுவாசமாக இருந்து, புகழடைந்தவர்களும் உண்டு. அந்த வகையில் பிரான்ஸ் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ஜினடின் ஸிடேன், ஸ்வீடன் கால்பந்து நட்சத்திர வீரர் ஸ்லாடென் இப்ராகிம் மோவிக் போன்றோரைக் கூறலாம்.

ஐ.நா சபை அகதிகள் ஏஜென்சியின் கணக்கெடுப்புப்படி, 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் 7 கோடியே 8 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இவர்களில், 2 கோடியே 59 லட்சம் மக்கள் தங்களது பாதுகாப்புக்காக அகதிகளாக வாழிடத்தைவிட்டு வெளியேறி உள்ளனர். 4 கோடியே 13 லட்சம் மக்கள் ஒரே நாட்டுக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள், வேறு காரணங்களுக்காக அகதி
களாக வாழ்கிறார்கள். கடந்த 20 ஆண்டு புள்ளிவிவரங்களைப்பார்த்தால், 2018ல் இருமடங்காக அகதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது, கிட்டத்தட்ட தாய்லாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமம்.

ஒவ்வொரு நாளும் 37,000 பேர் இடம்பெயருகின்றனர். புதிய புள்ளிவிவரத்தின்படி, கடந்தாண்டு 13 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியான்மர் மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகளிலிருந்து வெளியேறியவர்கள்தான்.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அகதிகளில் சரிபாதி எண்ணிக்கை குழந்தைகள், சிறார்கள் என்பதுதான். பெற்றோர்கள்தான் அகதிகள் என்றால், யாதுமறியாத அவர்களது குழந்தைகளோ போர், வன்முறை, பாலியல் பலாத்காரம் போன்ற தாக்குதல்களால் இறக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கும் அனைத்து கனவுகளும் தகர்க்கப்படுகின்றன.

அந்த வகையில், 2015 செப்டம்பர் 2ம் தேதி... துருக்கி கடற்கரை மணலில் முகம் கவிழ்ந்த நிலையில் சிரியா நாட்டு அயிலான் குர்தி என்ற சிறுவனின் புகைப்படம். அந்தப் பிஞ்சு முகத்தைக் குற்ற உணர்ச்சியுடன் உலகமே தடவியதை மறந்துவிட முடியாது. அவன் அணிந்திருந்த சிவப்பு சட்டையும் நீல நிற டிரவுசரும் போரின் கொடூரங்களை நினைவூட்டின. உயிர் தப்பிக்க கடத்தல்காரர்களின் படகில் ஏறியது, லைப் ஜாக்கெட் வாங்கப் பணம் போதாமல் மனைவியையும் மகன்களையும் கண்ணெதிரே பறிகொடுத்த தன் சகோதரனின் நிலைமையை, அவரது சகோதரி பின்னாளில் வலியுடன் எழுதியிருக்கிறார்.

இவ்வாறிருக்க, மெக்ஸிக்கோ, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகமாக புலம் பெயரும் மக்களைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற (Zero Tolerance) நடவடிக்கை என்று கடுமையான நடவடிக்கை எடுத்து
வருகிறது. கடந்த வாரம் வடக்கு அமெரிக்கா - மெக்ஸிக்கோ எல்லையில் பாயும் நதியான ரியோ கிரேண்டியின் கரையில் குழந்தையும், அவளது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தன.

நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் தலைகளும் நீருக்குள் மூழ்கி முகம் தெரியாத நிலையில் இருந்தன.இருவரும், அமெரிக்காவின் அண்டை நாடான எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள்; இறந்தது ஆஸ்கர் அல்பெர்டோ மார்டிநெஸ்சும் (25), அவரது 23 மாத மகள் வலேரியா என்பதும்தெரிந்தது. மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் அகதியாகச் செல்ல முயலும்போது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். அந்தப் புகைப்படம் இன்று உலகையே உலுக்கி வருகிறது. எல்லோரது மனங்களையும் ரம்பமாக அறுத்து ரணப்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘ஆஸ்கருக்கு தன் மகள் வலேரியா மீது கொள்ளைப் பிரியம்; அப்பா இல்லாமல் அவள் ஒரு நொடி கூட தனித்திருக்க மாட்டாள்; அதனால்தான் மரணத்தால் கூட அவர்களைப் பிரிக்க முடியவில்லை போலும்’ என்று ஊடகங்களில் வெளியான தன் மகன் மற்றும் பேத்தியின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்து கண்ணீர் மல்கினார்  பாட்டி ரோஸா. இதையெல்லாம் பார்க்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.

உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு, அரசியல் தந்திரத்தில் குளிர்காயும்  பல நாடுகளும் அகதிகள் உருவாவதற்கான காரணங்களாக இருக்கின்றன. மனிதர்கள் வாழும் ஒரே அழகிய கோளான பூமியில், அதன் இயற்கையைச்சீரழித்து வருவது மட்டுமின்றி, யுத்தங்களாலும், நாடு பிடிக்கும் காலனி ஆதிக்கத்தாலும், சித்தாந்த திணிப்புகளாலும் மக்கள் கொல்லப்படுவதும், அவர்கள் நாடுகடத்தப்பட்டு அகதிகளாக,நாடோடிகளாக சுற்றித்திரிய விடுவதும் மானிடத்துக்கு எந்த வகையில் நீதி? வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் அதிகாரம் எவருக்குமில்லை....!       

சாடிஸ்டிக் டிரம்ப்

ஆஸ்கரும் அவரது மகளும் ஆற்றில் மூழ்கி கரை ஒதுங்கிய புகைப்படச் செய்தியை, அமெரிக்க பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து ‘சாடிஸ்டிக்’ (மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணுதல்) டிரம்பின் முகம் தெரிவதாக தெரிவிக்கின்றன. ‘திகிலுடன் முடிந்த அமெரிக்கனாகும் கனவு’ போன்ற தலைப்புகளில் அமெரிக்க அதிபரின் குடியுரிமை திட்டத்தை கடிந்து எழுதியுள்ளன.

மெக்ஸிகோ எல்லையில் 92 கிலோமீட்டர் தூரத்துக்கு தடுப்பு வேலி அமைக்கவும், சாலைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்புக்கான பட்ஜெட்டிலிருந்து 100 கோடி டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுமார் 18 அடி உயரத்துக்கு தடுப்பு வேலி அமைக்கும் இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே மெக்ஸிகோ - அமெரிக்க எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,300 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.

பிரச்னைக்கு விடை தெரியல!

உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளுக்குத் தங்களின் ஆதரவை அளிக்கும் விதமாக, 2000ம் ஆண்டு ஐக்கிய நாட்டு பொதுச்சபை சிறப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ம் தேதி, சர்வதேச அகதிகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. அதிலிருந்து, ஆண்டுதோறும் அகதிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக அகதிகளாக ஆபத்தான முறையில் வெளியேறிய குழந்தைகளில் 32,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 1,600 பேர் ஆறு மாதத்துக்கும் குறைவானவர்கள். மத்திய கடல் வழியாக ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் செய்பவர்கள்தாம் அதிகமாக உயிரிழக்கின்றனர். அவர்களில் குழந்தைகள் மட்டும் 17,900 பேர் இருக்கும். அடுத்தபடியாக மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்கு நுழையும் குழந்தைகளில், கடந்த 5 ஆண்டுகளில் 1,900 பேர் இறந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் ஆணையர் க்ராண்டி கூறுகையில், ‘‘ஒவ்வோர் ஆண்டும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் இடம்பெயருவதற்கான காரணமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பழைய காரணங்களுக்கான தீர்வுகள் இன்று வரை கிடைக்கவில்லை’’ என்றார்.

தலைவர்கள் என்ன சொன்னாங்க?

*தந்தை, மகள் மரணம் குறித்துஅமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘அந்த மரணங்கள் வருத்தத்திற்குரியதுதான். இறந்த தந்தை, மகளைப் பார்க்கையில், அந்த இளைஞன் தன் மகளுக்கு மிக அற்புதமான தகப்பனாக இருந்திருப்பான் என்று புரிகிறது. ஆனாலும் இதுபோன்று நிகழ்ந்ததற்கு அவர்களே காரணம். சட்டங்கள் மக்கள் மீற முடியாதவையாக இருந்தால், அவர்கள் இப்படி சட்ட விரோதமாக ஆற்றின் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சித்திருக்க மாட்டார்கள்! அவர்களது உயிரிழப்புக்குக் காரணம் ஜனநாயகக் கட்சிதான்’’ என்றார்.

*எல் சால்வடார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்ஸாண்ட்ரா ஹில் கூறுகையில், ‘‘நம்முடைய நாடு மீண்டும் ஒருமுறை துக்கத்தில் மூழ்கியுள்ளது. நாங்கள், எல்லாக் குடும்பத்தினரிடமும் கெஞ்சிக் கேட்கிறோம். ஆபத்தை முயற்சிக்காதீர்கள். வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்கது. பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது’’ என்றார்.                  

செ.அமிர்தலிங்கம்