ரத்த மகுடம்-60



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசியை அங்கு கண்டதும் மொத்த அவையும் பக்தியுடனும் மரியாதையுடனும் எழுந்து நின்றது. ‘‘மாமன்னர் இரண்டாம் புலிகேசி வாழ்க... வாழ்க...’’‘‘சாளுக்கியர்களின் புகழ் ஓங்குக..!’’ஒரே குரலில் எல்லோரும் தங்கள் உயிருக்கு உயிரான மாமன்னருக்கு தலைவணங்கினார்கள்.அனந்தவர்மரும் தன்னை மீறி அந்த ஜெய கோஷத்தில் கலந்து கொண்டார். அவரது உள்ளமும் உடலும் கசிந்தது. குறிப்பாக நடுங்கியது!

இதைக் கண்ட சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் முகத்தில் இனம்புரியாத உணர்வுகள் தாண்டவமாடின.மற்ற யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தன் அண்ணன் அனந்தவர்மரின் நயனங்களை மட்டும் பார்த்தபடி பேசத் தொடங்கினார். கர்ஜனை குறைந்திருந்தது. அழுத்தம் கூடியிருந்தது!

‘‘இங்கு அமர்ந்திருப்பவர் என் தந்தையும் நம் அனைவரது வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியவரான இரண்டாம் புலிகேசி மாமன்னர்தான்.

ஆனால், இது சிலை! நம் எல்லோருக்கும் ஒரே மன்னரான இவர் போர்க்களத்தில் உயிர்துறந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்! என்றாலும் மூளைக்குத் தெரிந்தது புத்திக்கு உறைக்கவில்லை! உறைக்கவும் செய்யாது! அதனால்தான் இது சிலையா உருவமா என்றெல்லாம் நாம் ஆராயவில்லை. பார்த்ததுமே அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பி தலைவணங்குகிறோம்! ஏன்..?’’எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்கிரமாதித்தர் தொடர்ந்தார்.

‘‘நம் மன்னரின் வீரம் அப்படி. சாளுக்கிய சிம்மாசனத்தை யார் வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். ஆனால், பரந்துவிரிந்த சாளுக்கிய தேசத்தின் ஒரே மாமன்னர் அன்றும் இன்றும் என்றும் இரண்டாம் புலிகேசிதான்! என்ன காரணம்..?மங்களேசனுடன் போரிட்டு தனக்குரிய சாளுக்கிய தேசத்தை என் தந்தை கைப்பற்ற சில ஆண்டுகள் பிடித்தன. இந்த உள்நாட்டுப் போரின் விளைவாக நம் தேசத்தின் வலிமை குறைந்தது. பகைவர்கள் பல திசைகளிலும் கிளம்பினார்கள்.

இந்த நேரத்தில்தான், தான் வெறும் மன்னரல்ல... மாமன்னர் என்பதை இரண்டாம் புலிகேசி நிரூபித்தார். கலகம் செய்தவர்களுள் ஒருவரான ஆப்பாயிகன் என்பவரை பீமரதி நதிக்கரையில் வென்றார்.

ஆப்பாயிகனுக்கு துணை நின்ற கோவிந்தன் வேறுவழியின்றி என் தந்தையிடம் சரணடைந்தார்.பின்னர் கடம்பர் தலைநகரான பனவாசி மீது படையெடுத்து அதை இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார். தென் கன்னடத்தில் ஆட்சி செய்த ஆலுபர்களும் மைசூரில் இருந்த கங்கர்களும் என் தந்தையின் மேலாதிக்கத்தை உடனடியாக ஏற்றனர்.

கங்க மன்னர் துர்விநீதன் தன் மகளை என் தந்தைக்கு மணமுடித்துக் கொடுத்தார்!இதன் பிறகு மவுரியர்களின் தலைநகரான புரி மீது இரண்டாம் புலிகேசி படையெடுத்துச் சென்றார். உடனே அவர்கள் சாளுக்கியர்களின் மேலாதிக்கத்தை ஏற்றனர்.

இப்படி சாளுக்கியர்களின் புகழ் இதோ இவர் காலத்தில் வட இந்தியா முழுக்க பரவியது...’’ என்றபடி இரண்டாம் புலிகேசியின் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் விக்கிரமாதித்தர்.இதைத் தொடர்ந்து அவையில் இருந்த ஒவ்வொருவரும் அச்சிலைக்கு தனித்தனியாக மரியாதை செலுத்தினர்.

இதற்காக, தான் பேசுவதை நிறுத்தாமல் தொடர்ந்தார் விக்கிரமாதித்தர்.‘‘இந்த நேரத்தில் ஹர்ஷருடைய வலிமைக்கு அஞ்சிய லாடர்களும், மாளவர்களும், கூர்ஜரர்களும் தங்கள் தற்காப்புக்காக சாளுக்கிய தேசத்துக்கு நண்பர்களானார்கள்.இதனால் சாளுக்கிய ராஜ்ஜியத்தின் வடஎல்லை ஒரே மூச்சில் மஹீநதி வரையில் சென்றுவிட்டது.ஹர்ஷன் தக்காணத்தின் மீது படையெடுத்தபோது , நர்மதை நதிக்கரையில் அவரை எதிர்த்து தீரமுடன் போரிட்டார் இரண்டாம் புலிகேசி. இந்தப் போரில் சாளுக்கியர்களே வெற்றி பெற்றார்கள். ஹர்ஷரின் ஆணவம் முற்றிலுமாக அடங்கி ஒடுங்கியது.

இதன்பின் கிழக்குத் தக்காணத்தின் மீது ஒரு நீண்ட படையெடுப்பை என் தந்தை தொடங்கினார். தென் கோசலமும், கலிங்கமும் முதலில் அடிபணிந்தன. பின்னர் பீஷ்டபுரத்தை தாக்கி அடக்கிவிட்டு குனலா ஏரியின் கரையில் விஷ்ணு குண்டினர்களை படுதோல்வி அடையச் செய்தார்.

இதன் பிறகே பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார்... இதன் பிறகு நடந்த அனைத்தும் நம் எல்லோருக்கும் தெரியும்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் மெல்ல நடந்து அனந்தவர்மரின் அருகில் வந்தார்.

‘‘இதுதான் நம் தந்தை... இதுவேதான் அவரது வீரம்! தனக்குரிய உரிமையைப் பெற அவர் தன் நண்பர்களின் உதவியைத்தான் பெற்றார். சாளுக்கியர்களின் பரம்பரை எதிரியான பல்லவர்களின் உதவியை அல்ல!நம் தந்தையின் மரணம் நினைவில் இருக்கிறதா என் அருமை அண்ணா! பல்லவ மன்னரான நரசிம்மவர்மர் நம் தலைநகரான வாதாபியை அழித்த போரில் நம் தந்தை இன்னுயிர் நீத்தார். இதனை அடுத்து சாளுக்கிய தேசத்துக்கு நெருக்கடி காலம் தொடங்கியது. அடங்கியிருந்த சிற்றரசர்கள் தன்னாட்சி பெற முயன்றார்கள். அரசப் பிரதிநிதிகளாக ஆட்சி செய்துவந்த நம் உறவினர்களும் சிற்றரசர்கள் போலவே கொடி தூக்க ஆரம்பித்தார்கள்.

இந்தச் சூழலில்தான் சாளுக்கிய தேசத்தின் மன்னராக நான் அமர்ந்தேன். அதுவும் எப்படி..? நமது போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் உட்பட இங்கிருக்கும் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் மீண்டும் அதை சுருக்கமாகச் சொல்கிறேன்!

எனக்கு சந்திராதித்தர், ஆதித்தவர்மர் என இரு மூத்த சகோதரர்கள் உண்டு. இப்படி ஒன்றுக்கு இரு மூத்தவர்கள் இருக்க இளையவனான நான் எப்படி மன்னனானேன்..? சொல்லுங்கள், சாளுக்கிய மன்னராக முடிசூட வேண்டிய ஆதித்தவர்மரே... எப்படி அப்பதவி உங்களை விட்டுப் போனது..?

சாளுக்கிய மன்னராக வேண்டும் என்ற பேராசையில் கீழ்த்தரமான காரியம் ஒன்றைச் செய்தீர்கள்! அதாவது நம் தலைநகரை அழித்தவரும் நம் தந்தையும் சாளுக்கிய மாமன்னருமான இரண்டாம் புலிகேசி மரணமடையவும் காரணமாக இருந்த பல்லவ மன்னரான நரசிம்மவர்மரிடம் உதவி கேட்டீர்கள்!

ஏற்கனவே சாளுக்கியர்களை வெற்றி கொண்ட மிதப்பில் இருந்த நரசிம்மவர்மர், இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள உங்களுக்கு படையுதவி செய்தார்! எப்பேர்ப்பட்ட கேவலமான விஷயம் இது! வரலாறு உங்களை மன்னிக்கவே மன்னிக்காது அனந்தவர்மரே!
நீங்கள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த செய்கையில் இறங்கியதால் சாளுக்கியர்களின் பெருமையைக் காப்பாற்ற என் தாய்வழி தாத்தாவான கங்க மன்னர் துர்விநீதன் துணையை நாடினேன்.

துர்விநீதருக்கும் நரசிம்மவர்மருக்கும் ஏற்கனவே பகை உண்டு. துர்விநீதன் ஆண்ட கங்க நாட்டின் ஒரு பகுதியை நரசிம்மவர்மர் முன்பே கைப்பற்றி துர்விநீதனுடைய தம்பியிடம் கொடுத்திருந்தார்.இதனால் நரசிம்மவர்மரை வீழ்த்த காத்திருந்த துர்விநீதர், எனக்கு படை உதவி அளித்ததன் மூலம் பல்லவர்கள் மீதான தன் பகையைத் தீர்த்துக் கொண்டார்.

பல்லவ உதவி பெற்ற உங்கள் படையை வீழ்த்தி சாளுக்கியர்களின் அரியாசனத்தில் அமர்ந்தேன். நம் மீது கறையாகப் படிந்திருக்கும் பல்லவ வெற்றி
யைத் துடைக்க இதோ பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறேன்.இப்பொழுது பல்லவ நாடும் காஞ்சிபுரமும் நம் வசம்தான் இருக்கிறது. ஆனால், போர் புரியாமல் இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம். எனவே இது வெற்றி அல்ல!

பல்லவர்களை நேருக்கு நேர் சந்தித்து போர்க்களத்தில் அவர்களை ஓட ஓட விரட்டவேண்டும். அப்பொழுதுதான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் ஆன்மா சாந்தியடையும்.இதற்காக சாளுக்கிய வீரன் ஒவ்வொருவனும் அல்லும் பகலும் உழைத்து வரும் நேரத்தில் நீங்கள் திரும்பவும் சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற அதே பல்லவர்களின் உதவியை நாடி இருக்கிறீர்கள்!

அதுவும் யாரிடம்..? போர் புரியாமல் நாட்டை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரிடம்!
அதற்கான அத்தாட்சி இதோ...’’ தன் மடியில் இருந்து ஒரு பொருளை எடுத்து தரையில் வீசினார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.அப்பொருளைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் பிரமை பிடித்து நின்றார்கள். அனந்தவர்மரின் கைகால் நடுங்கத் தொடங்கியது.

இந்நிலையில் அடுத்த அம்பைக் குறி பார்த்து வீசினார் விக்கிரமாதித்தர்!‘‘சிவகாமி குறித்த உண்மை கரிகாலனுக்குத் தெரிந்து விடும் என்றுதானே சொன்னீர்கள்..? இந்நேரம் கரிகாலன் இறந்திருப்பான்! சிவகாமி அவனைக் கொலை செய்திருப்பாள்!’’

அருவிக் கரையில் கரிகாலனும் சிவகாமியும் கட்டிப் புரண்டு மல்யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.சிவகாமி தன் கரங்களால் கரிகாலனின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்