ரஜினியுடன் நடித்தவர் இன்று வறுமையுடன் போராடுகிறார்!



திரையில் நம்மை மகிழ்வித்த கலைஞர்கள் பலரின் சொந்த வாழ்க்கையைப் புரட்டினால் சோகமே அள்ளும். வறுமையும் வெறுமையும் சூழ்ந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், நடிகர் நந்தகோபால். கே.பாக்யராஜின் ‘சுந்தர காண்டம்’, ‘அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’ என பல படங்களில் நடித்தவர்.‘சுந்தர காண்டம்’ படத்தில் வகுப்பாசிரியர் சண்முகமணியாக இருப்பார் பாக்யராஜ்.

அவரிடம் குறும்புத்தனம் பண்ணும் மாணவியான சிந்துஜாவிடம், ‘‘மாதா, பிதா, குரு, தெய்வம்... அந்த வரிசையில் எங்கள வச்சிருக்காங்க. அப்படி இருக்கும் போது அந்த குருங்கற ஸ்தானத்துக்கு என்ன ஒரு அந்தஸ்து, மரியாதை குடுக்கணும்னு தெரியுமா?’’ என சீரியஸாக சொல்லிக் கொண்டிருப்பார்.

அப்போது வகுப்பில் என்ட்ரியாகும் குண்டு மாணவர் ஒருவர், பாக்யராஜைப் பார்த்து ஆச்சரியமாகி ‘‘டேய் சண்முகமணி... நல்லா இருக்கீயாடா?’’ என சொல்லிக்கொண்டே பாக்யராஜை இறுக்கி அணைத்தபடி, ‘‘எங்கூட படிச்சு எனக்கே நீ வாத்தியாரா வந்தது எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமாடா?’’ என்று சொல்லி சந்தோஷப்படுவார்.

அந்த குண்டு மாணவராக நடித்தவர்தான் இந்த நந்தகோபால். பின்னர் அவர் ‘அம்மா வந்தாச்சு’வில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மச்சினனாக... ‘ராசுக்குட்டி’யில் பாக்யராஜின் சித்தப்பா பையனாக, ‘அருணாசலம்’ படத்தில் ரஜினியுடன் ஸ்டார் ஹோட்டலுக்கு வரும் கிராமத்து நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக... எனப் பல படங்களில் நடித்தார். பிறகு..? அதே வேகத்தில் காணாமலும் போனார். அவர் என்னவானார் என யாருக்குமே தெரியாது.

இந்நிலையில், சமீபத்தில் கோடம்பாக்கம் தெரு ஒன்றில் நந்தகோபாலைக் கண்டோம். கால்கள் இரண்டும் ரொம்பவே வீங்கிப் போயிருந்தன. உடல் எடை கூடி பருத்த தேகத்துடன் நடக்கவே முடியாத நிலையில் கையில் வலுவான ஸ்டிக் ஒன்றுடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தார். ‘‘வூட்டுக்கு வாங்க... உட்கார்ந்து பேசுவோம்...’’ எனத் தன் வீட்டிற்கு அழைத்துப் போனார்.

ஒண்டுக் குடித்தன ஏரியா. சிங்கிள் பெட். ஸ்டீல் கட்டில் மட்டுமே போடக்கூடிய அளவில் சின்னதாக ஓர் அறை. அதனையொட்டி அதில் பாதியாக இன்னொரு அறை. செயல்படாத கறுப்பு வெள்ளை பிபிஎல் டிவி. இருந்த இடத்தின் மேல் ஷெல்பில் ‘சுந்தர காண்டம்’ படத்தின் 150 நாள் விழா ஷீல்டு! ‘‘சில வருஷங்களாதான் இப்படி இருக்கேன். கால் ரெண்டும் வீங்கினதுல சுத்தமா எழுந்து நடக்க முடியல. கட்டில்ல படுத்தே இருந்தா முதுகுல பெட்சோர் வந்துடுமோன்னு பயமா இருக்கு. முடிஞ்சவரை இந்த ஸ்டூல்ல உட்கார்ந்தே இருப்பேன்.

இப்படி ஒரு நிலை வரும்னு நினைச்சே பார்க்கலை. ஒருநாள் திடீர்னு காய்ச்சல், குளிர் வந்தது. எங்க அக்கா என்னை அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போச்சு. அங்க நிறைய டெஸ்ட் எடுத்தாங்க. மருந்து மாத்திரை குடுத்தாங்க. ஒரு மாசமாகியும் குணமாகல. அப்புறம் என் பின் மண்டையில் ஏதோ ஒரு நரம்பு பாதிச்சிருக்குனு சொன்னாங்க. நாட்கள் போகப் போக... இதோ இப்படி ஆகிட்டேன்...’’ கண்கலங்கும் நந்தகோபால், நடிக்க வருவதற்கு முன்னர் மெக்கானிக்காக இருந்திருக்கிறார்.

‘‘சொந்த ஊர் மேட்டுப்பாளையம் பக்கம் சிறுமுகை. அப்பா டீசல் இன்ஜின் மெக்கானிக். அப்பாகிட்டயே உதவியாளனா போனேன். என் ஆர்வத்தை பார்த்த எங்கப்பா, மெக்கானிக் தொழில்நுட்பங்களை எல்லாம் கத்துக் கொடுத்தார். நானும் கற்பூரமா புடிச்சிக்கிட்டேன். அவரே மெச்சுற மாதிரி பெரிய மெக்கானிக்கா பெயரெடுத்தேன்.

கோவை மாவட்ட பாக்யராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சுந்தரம் ரெண்டு பேருமே எனக்குத் தெரிஞ்சவங்க. பாக்யராஜ் சார் ‘சுந்தரகாண்டம்’ படத்துல நடிக்க நடிகர்கள் தேவைனு வெங்கடேஷ்கிட்ட சொல்லியிருக்கார். உடனே என்னைப் பத்தி சார்கிட்ட தெரியப்
படுத்தி இருக்காங்க.

அப்ப நான் மைசூருக்கு மெக்கானிக் ஒர்க்குக்கு போகவேண்டிய நாள். அன்னிக்கு ராத்திரி ஒரு மணிக்கு எங்க வீட்டுக் கதவைத் தட்டி, ‘பாக்யராஜ் சார் உன்னை நடிக்க கூப்பிடுறார்’னு வெங்கடேஷ் சொன்னார். ‘எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. மெக்கானிக் பொழப்பே நல்லா போயிட்டிருக்கு’னு சொல்லிப் பார்த்தேன். அவர் காதுல வாங்கிக்கவே இல்ல. ‘சினிமாவுல உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’னு வற்புறுத்தினார். எங்க அப்பாவையும் கன்வின்ஸ் பண்ணினார். அங்கிருந்தே டிரங்க்கால் போட்டு பாக்யராஜ் சாரையும் பேச வச்சார்.

அரைமனசா அவங்களோட சென்னை வந்தேன். என் கோயமுத்தூர் பேச்சு பாக்யராஜ் சாருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. உடனே அவர் என்னை ஷூட்டிங்குக்கு வரச் சொல்லிட்டார். ‘சுந்தரகாண்டத்துல என்னோட நடிப்பு சூப்பர்னு சொல்லி எங்க டைரக்டரே பாராட்டினதும் இன்னும் உற்சாகமாகிடுச்சு. தொடர்ந்து நடிக்கறதுக்கான வாய்ப்புகளை பாக்யராஜ் சாரே ஏற்படுத்திக் கொடுத்தார்.

‘அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’க்கு அப்புறம் ‘வந்துட்டீயா ராசா’னு ஒரு படம் கமிட் ஆனேன். அதுவும் பாக்யராஜ் சார் பண்ண வேண்டிய படம்தான். அந்தப் படம் டேக் ஆஃப் ஆகாம அவர் ‘சொக்கத் தங்கம்’ போனார். நான் ‘அன்னை வயல்’, ‘சின்னச்சிட்டு’, ‘அம்மா பொண்ணு’, ‘அருணாசலம்’னு படங்கள்ல நடிச்சேன்.

மடமடனு வாய்ப்புகள் குவியும்னு எதிர்பார்த்தேன். அப்ப எல்லாம் நடிக்க சான்ஸ் கேட்டு போனாதான் வேலை கிடைக்கும். நிறைய கம்பெனிகளுக்குப் படையெடுத்தேன். எல்லாருமே, ‘நீங்க நடிச்ச படங்கள்ல ஹெவி ரோல் பண்ணிட்டீங்க. சின்ன ரோல்ல உங்கள நடிக்க வைக்கறது சரியா இருக்காது. ஹெவி ரோல் வரும்போது சொல்லி அனுப்புறோம்’னு திருப்பி அனுப்பினாங்க.

நம்பிக்கை இழக்காம மறுபடியும் முயற்சி பண்ணிட்டிருந்தேன். எனக்கு சினிமாவும் வரும்னு நினைச்சேன். நானே ஹீரோவா நடிக்க, அதுக்கான கதை எழுதி இயக்கவும் ரெடியானேன். ஒரு தயாரிப்பாளரும் அமைஞ்சார். ஆனா, அதிர்ஷ்டம் என் பக்கம் இல்ல. மறுநாள் பூஜை போடலாம்னு இருந்த டைம்ல என் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய இடத்துல இருந்து பணம் வரல. அந்தப் படமுயற்சி அப்படியே ஸ்டாப் ஆச்சு. அந்த டைம்லதான் எனக்கு காய்ச்சலும், குளிரும் வந்துச்சு...’’  என நந்தகோபால் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்து சேர்ந்தார் அவரது அக்கா தங்கம்.

‘‘சாதாரண காய்ச்சல்னுதான் நினைச்சோம். ஆனா, இவ்ளோ தூரம் கொண்டுபோய் விடும்னு நினைச்சுக் கூட பார்க்கல...’’ எனக் குரல் உடைந்து பேசத் தொடங்கினார் அவர்.‘‘என் தம்பி சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சதும், சென்னைல அவனைப் பாத்துக்க நானும் கிளம்பி வந்தேன். எங்க அம்மா இறந்த 28 நாள்ல நந்தகோபாலுடைய அண்ணனும் இறந்துட்டான். அப்புறம் எங்க அப்பாவும் இறந்தார்.

அதனால, தம்பியை தனியா விட மனசில்லாம அவனை எங்களோடவே இருக்கச் சொல்லிட்டோம். அவன் கதை எழுதி படம் ஆரம்பிக்கும்போது அவ்ளோ உற்சாகமா இருந்தான். அவனோட படம் ரெடியானதும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு ஒரு பொண்ணு வீட்டுலயும் பேசி வச்சிருந்தோம்.

ஆனா, படம் ஆரம்பிக்கல. உடம்புல ஏதோ பிரச்னை இருக்குனு தெரிஞ்ச அன்னிக்கு இவனே பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி ‘வேற இடத்துல மாப்ள பாத்துக்குங்க’னு சொல்லிட்டான். என் வீட்டுக்காரர் கூலி வேலைக்குத்தான் போறார். மாசத்துல பத்து நாள் அவருக்கு வேலை இருந்தாலே பெரிய விஷயம். தம்பி இப்படியானபிறகு வருமானமும் இல்லாமல், சாப்பாட்டுக்கே சிரமப்படுறோம்.

என் தம்பி நடிகர் சங்கத்துல உறுப்பினராகவும் இருக்கான். அவனை அங்கே அழைச்சிட்டு போய் எங்க நிலைமையை சொல்லிட்டு வரலாம்னு தோணும். ஆனா, அதுக்கான ஆட்டோ செலவுல ரெண்டுநாள் அடுப்பு எரியுமேனு பேசாம இருக்கோம்.அவன் பழையமாதிரி நல்லா நடந்தாலே போதும். இப்ப அவன் படற அவஸ்தையை எங்களால பார்க்க முடியலை...’’ கண் கலங்கிய தன் அக்காவைப் பார்த்து நந்தகோபாலும் அழத் தொடங்கினார்.  

சில நிமிடங்களுக்குப் பின் இயல்புக்கு வந்த நந்தகோபால், சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற போது, தன் குருநாதர் பாக்யராஜைப் பார்த்ததாகக் குறிப்பிட்டார்.  ‘‘நடக்க முடியாம போனதால வெளியே எங்கேயும் வேலை கேட்டு போக முடியல. என்னை பாத்துக்கிட்ட அக்காவையும், அவங்க குடும்பத்தையும் நான் நல்லபடியா கவனிக்கணும்னு ஆசையா இருக்கு. ஆண்டவன் பழையபடி உடம்பை கொடுத்தா போதும். மறுபடியும் சுறுசுறுப்பாகிடுவேன்.

வீட்ல சின்னதா ஒரு டிவி கூட இல்லாததால எந்தப் பொழுதுபோக்கும் இல்லாம இருக்கேன். நாலு சுவத்தை பார்த்துக்கிட்டே இருக்கறதால வாழ்க்கை இன்னும் வெறுமையா கொடுமையா இருக்கு. இந்த உடம்போடு நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஓட்டு போடப் போயிருந்தேன். என்னைப் பார்த்த பாக்யராஜ் சார், அப்படியே ஷாக் ஆகிட்டார். அவருக்கும் கண்ணு கலங்கிடுச்சு.

‘என்னாச்சு நந்தகோபால்’னு நலம் விசாரிச்சார். ‘இன்னும் சில நாட்கள்ல உனக்கு வேண்டிய மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு பண்றோம்’னு அக்கறையா சொல்லியிருக்கார். எனக்கு மருத்துவ வசதி பண்ணிக்குடுத்தா போதும். அந்த உதவியை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கேன்...’’ சொல்லும்போதே நந்தகோபாலின் குரல் தழுதழுக்கிறது.

படங்கள் உதவி: ஞானம்

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்