ஜெ. அறிமுகப்படுத்திய மினி பஸ் என்ன ஆச்சு? ஷாக் ரிப்போர்ட்



சென்னையில் 200 மினி பஸ்கள் ஓடிக்கொண்டிருந்தன. லாபம் இல்லை என்று அதில் இருபது பஸ்களை நிறுத்திவிட்டது தமிழக அரசு. இது மினி பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை வெகுவாக பாதித்துள்ளது.

இதனால் அதிக கட்டணம் செலுத்தி ஷேர் ஆட்டோக்களிலும், மினி வேன்களிலும் பயணிக்க வேண்டிய நிலை. ‘‘லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி அரசு இயங்கினால் மககளுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல திட்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.

மினி பஸ் போன்ற அத்தியாவசிய தேவைகள் சுவடில்லாமல் அழிந்துபோய்விடும்...’’ என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யு) பிரிவின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரைச் சந்தித்தோம்.

‘‘அரசுப் போக்குவரத்து லாப நோக்கத்துக்காக அல்ல; அது மக்களுக்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டது. மினி பஸ் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஓடும் பெரிய டவுன் பஸ்களில் கூட 1500-ஐ நிறுத்திவிட்டார்கள்.

இதற்கும் லாபம் இல்லை என்று சொல்கிறார்கள். மக்களுக்காக இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து நஷ்டமடைவது இயல்புதான். உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. ஆனால், பஸ்ஸில் விட்ட லாபம் வேறு வழியில் கிடைக்கும்...’’ என்று கறாராக ஆரம்பித்தார் ஆறுமுக நயினார்.

‘‘பிரிட்டிஷ் காலத்தில் தனியார்தான் பஸ்களை இயக்கி வந்தனர். ‘தனியார் பஸ்கள் கொள்ளையடிக்கிறது’ என்று பொதுமக்களிடமிருந்து புகார் வர, அரசுப் போக்குவரத்தை பிரிட்டிஷ்காரர்கள் கொண்டுவந்தார்கள்.

நம்மை ஆண்ட ஒரு காலனி அரசே லாப நோக்கமில்லாமல் தான் பொதுப்போக்குவரத்தைக் கொண்டுவந்தது. ஆனால், இதில் லாபம் வேண்டும் என்று இப்போதைய அரசு சொல்வதில் என்ன நியாயமிருக்கிறது? கடந்த தி.மு.க ஆட்சியில் குறுகிய தெருக்களில் பஸ் போக்குவரத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன் மினி பஸ் திட்டம் தீட்டப்பட்டது.

ஆரம்பத்தில் தனியாருக்குத்தான் மினி பஸ் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. 3500 பஸ்கள் வரை அவர்கள் இயக்கலாம். ஆனால், அரசு சொல்லும் ரூட்டில்தான் பஸ்கள் செல்ல வேண்டும். இதனால் 500 மினி பஸ்கள் மட்டுமே ஓடின. கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் மீண்டும் மினி பஸ் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இந்த முறை அரசே மினி பஸ்களை இயக்கியது.

‘லாபம் இல்லை என்பதால் மினி பஸ்களை தனியார் நிறுவனங்கள் இயக்கவில்லை’ என்று அரசுக்கே தெரியும். ஆனாலும் சேவை நோக்கத்தோடுதான் மினி பஸ்களை இயக்க அரசு முடிவெடுத்தது. இதில்தான் இப்போது லாபம் இல்லை என 20 பஸ்களை குறைத்திருக்கிறது...’’ என்றவர் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

‘‘போக்குவரத்து போன்ற சேவை நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டம் வேறு வழிகளில் லாபத்தை சம்பாதித்துக்கொடுக்கும். உதாரணமாக பஸ் போக்குவரத்து சிறப்பாக இருந்தால் டூவீலர்கள் மற்றும் காரின் தேவை குறையும். இதனால் அதன் விற்பனையும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாகன கம்பெனிகளுக்காக நாம் செலவிடும் பணமும், அன்னிய செலவாணியும் குறையும்.

இப்படி நடந்தால் நம் பண மதிப்பு அதிகரிக்கும். அத்துடன் காற்று மாசுபாடு, டிராபிக் ஜாம், விபத்துகள் குறையும். இவையெல்லாம் பஸ் போக்குவரத்து சிறப்பாக செயல்படும்போது தான் நடக்கும்...’’ என்கிற நயினார் மினி பஸ், டவுன் பஸ் குறித்தும் பேசினார்.

‘‘காலை 8 - 10 மணி மற்றும் மாலை 6-8 மணி வரைதான் பஸ் போக்குவரத்து பிஸியாக இருக்கும். மற்ற நேரங்களில் பயணத்துக்காக பஸ்ஸை பயன்படுத்தும் மக்கள் குறைவு. பீக் ஹவர் இல்லாத நேரத்தில் பஸ்கள் ஓடும்போது செலவு அதிகமாகும். ஆனால், இந்த இழப்பை ஈடுகட்ட அரசு வரிகளைப் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல தமிழ்நாடு அரசு பொது பட்ஜெட்டில் வருடத்துக்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடிகளை ஒதுக்குகிறது. இதில் ஒரு 5000 கோடியை ஒதுக்கினாலே போதும் பஸ் போக்குவரத்து சிறப்பாக நடக்கும். இந்தத் தொகையை ஒதுக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு குடிமகன் ஒருவருக்கு 20 முதல் 30 பைசா வரை தான் அரசு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இதன்படி பார்த்தால் பஸ் போக்குவரத்தை இலவசமாகவே அரசால் வழங்க முடியும். தவிர, சென்னையைவிட ஹைதராபாத் சிறிய நகரம். ஆனால், அங்கே 4500 டவுன் பஸ்கள் ஓடுகின்றன. சென்னையில் வெறும் 3500 பஸ்கள். இன்றைய நிலையில் சென்னையில் 1000 மினி பஸ்களும், 5000 டவுன் பஸ்களும் ஓட வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 30 லட்சம் பஸ் பாஸ்கள் கொடுக்கிறார்கள்.

ஆனால், பள்ளி நேரத்தில் ஓடும் பஸ்களின் எண்ணிக்கை வெறும் 10 ஆயிரம் தான். இதனால்தான் தொங்கிக்கொண்டு செல்வது, விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கிறது. பஸ்ஸைக் குறைத்தால் லாபம் கூடும் என்று அரசு நினைக்கிறது. அதனால்தான் பஸ் குறைப்புகளைச் செய்கிறது.

விதிப்படி பார்த்தால் ஒரு பெரிய பஸ்ஸில் 41 பேர்தான் போக வேண்டும். உட்காருவற்கு 25, நிற்பதற்கு 16 என்பதுதான் கணக்கு. ஆனால், நம்ம ஊர் பஸ்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செல்கிறார்கள். மினி பஸ்கள் போகும் பாதைகளில் எல்லாம் டாட்டா மேஜிக், ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன. டாட்டா மேஜிக் போன்ற வெள்ளை வண்டிகள் பொதுப் போக்குவரத்துக்கான வண்டிகள் கிடையாது.

அது பாதுகாப்பானதும் அல்ல. அதற்கு அரசு அனுமதியும் இல்லை. போலீஸுக்கும் ஆர்.டி.ஓக்களுக்கும் லஞ்சம் கொடுத்து ஓட்டுகிறார்கள். லாபத்தைக் காட்டிலும் மக்களின் பாதுகாப்பை முன்னிட்டாவது அரசு பொது போக்குவரத்தைப் பலப்படுத்தவேண்டும். இதற்கு ஒரே வழி பஸ்களை மேலும் அதிகரிப்பதுதான்...’’ என்று அழுத்தமாக முடித்தார் ஆறுமுக நயினார்.

டி.ரஞ்சித்

ஏ.டி.தமிழ்வாணன்