கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-18



வந்தார் அத்திவரதர்!

பிரம்மனின் அஸ்வமேத யாகசாலையில் அன்று அநேக சுபசகுனங்கள் தோன்றின. யாகத்தின் தீ என்றும் இல்லாத பிரகாசத்துடன் ஜொலித்தது. யாகத்தில் இருந்து கிளம்பிய புகை அற்புதமான தெய்வீக மணத்தை பரப்பியது. தேவ துந்துபிகள் முழங்கின. இந்திரன் முதலிய வானவர்கள் நடக்கஇருக்கும் அதிசயத்தைக் காண வானத்தில் கூடிவிட்டார்கள்.

இத்தனையும் கண்டபின் பிரம்மன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆம்; நடந்த சம்பவங்கள் அவருக்கு நல்ல பாடத்தைக் கற்பித்திருந்தன. நொடியில் அவர் பிரம்ம பதவியை இழந்தபோது செல்வம் மற்றும் புகழின் நிலையாமையை உணர்ந்திருந்தார்.

ஆசை மனைவி சரஸ்வதி பிரிந்ததோடு அவருக்கு பல இடைஞ்சல்களையும் கொடுத்தாள். இது இந்த உலகில் எந்த உறவுகளும் இறுதியானதல்ல என்பதைத்தானே உணர்த்துகிறது?
ஆனால், இத்தனை இன்னல்களிலும் மாறாத அன்போடு துணை இருந்தது மாலவன் திருவருள் மட்டுமே!

எனவே அவரது பொற்பாத சரணங்களே உயிர்களுக்கு அரண் என்பதை நன்கு உணர்ந்தார் நான்முகன். அதன்பின் அவர் உடல் யாகத்தை செய்தாலும் உள்ளம் மாதவனையே நாடியது. சாஸ்திர முறைப்படி மற்ற தேவர்களுக்கு கொடுக்கும் அவிர்பாகத்தை, பிரம்மன் மாதவனுக்கு கொடுப்பதாகவே பாவித்து கொடுத்தார்.

இந்த பக்குவ நிலையைத்தான் ‘சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி’ என்கிறது சாஸ்திரம். அதாவது எந்த தெய்வத்தை வணங்கினாலும் அது அவர்களுள் அந்தர்யாமியாக இருக்கும் திருமாலையே அடைகிறது என்று பொருள். கண்ணனும் கீதையில் இதையே சொல்கிறார். இந்தப் பிரமாணங்களை எல்லாம் கொண்டு காண்கையில் பிரம்மனின் செய்கையே சாலச் சிறந்தது என்பது நன்கு விளங்கும்.

இப்படி பூரணமாக நாரணனை சரணடைந்துவிட்ட பிரம்மன் நடந்த சுப சகுனங்களுக்குக் காரணம் மாலவன் கருணையே என்று எண்ணி அகமகிழ்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே!சூரியன் உதிக்கும் உன்னதமான வேளை.

யாகத்தீயில் கோடி இளஞ்சூரியன் தோன்றியது போல ஒரு பிரகாசம் உதித்தது. அதன் நடுவே தங்க நிறத்தில் புண்ணிய கோடி விமானம் ஜொலித்தது. அதற்குள் தங்கப் பெட்டியில் வைத்திருந்த நீல மணி ரத்தினம் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தார் வரதர்!தேவர்கள் அனைவரும் ‘வந்தார் வரதர்!’ என்று ஆடிப் பாடி அகமகிழ்ந்து போனார்கள்.

முனிவர்கள் வேத மந்திரத்தால் அந்த வேத விழுப் பொருளைத்  துதித்தார்கள். பிரம்மனோ தனக்கு அருள் செய்வதற்காக இறங்கி வந்தார் வரதன் என்றெண்ணி பித்துப் பிடித்தவர் போல் ஆடினார்... பாடினார்... கொண்டாடினார்... பலமுறை வலம் வந்து  மணிவண்ணனை வணங்கினார்!

அப்படி வணங்கும்போது தன்னையும் அறியாமல் பல முறை அப்பிரதட்சணமாகவே - Anticlockwise - வலம் வந்தார். இதை ‘ப்ரதக்ஷிணம் ப்ரைதி ததாப்ரதக்ஷிணம் ப்ரயாதி புநரேதி ஸந்நிதிம்...’ என்று பிரம்மன் நிலையை வருணிக்கிறது பிரம்மாண்ட புராணம்.

அடியவரின் எக்குற்றத்தையும் பொறுக்கும் வரதர் இந்த சிறு குற்றத்தை பொறுக்காமலா இருப்பார்?! ஆடிப் பாடிய பிரம்மன் நின்று நிதானமாக பகவானின் அவயவங்களை சேவிக்க ஆரம்பித்து ‘ஓ...’ என அழ ஆரம்பித்து விட்டார்.

‘‘எனக்காக நான் செய்த யாகத்தில் உதித்த பெருமானை உடனே  தீயை விட்டு வெளியில் எடுக்காமல் போனேனே. ஆ, என்ன பாவம் செய்துவிட்டேன்! யாகத் தீயின் வெப்பத்தால் மாதவனின் கண்ணாடிக் கன்னங்களில் கொப்பளங்கள் வந்து விட்டதே...’’ வருத்தத்தில் அரற்றினார் நான்முகன். அவர் மீது தனது அருள் பார்வையை செலுத்தினான் மாயவன்.

‘‘நான்முகா! வருத்தம் களைவாய். அனைத்து தர்ம காரியங்களின் பலனும் என்னை அடைவதே என்பதை உணர்த்தவே உனது வேள்வித் தீயில் இருந்து உதித்தோம்! இந்த உண்மையை உலகில் உள்ளவர்கள் ஆதாரத்துடன் உணர்வதன் பொருட்டே எனது கன்னத்தில் கொப்பளங்கள் தோன்றச் செய்தேன்! இனி இன்பமாக உன் உலகம் சென்று பிறப்பு வேலையை கவனி. உனக்கு உன் பதவியை மீண்டும் தந்தது என் திருவடியே! அதை என்றும் மறவாதே!’’
கட்டிக் கரும்பாகத் தித்தித்தது வரதனின் சொற்கள்.

‘‘தேவர் பெருமானே! பிரம்ம தேவனான எனக்கும் மற்ற தேவர்களுக்கும் தனிப் பெரும் தலைவன் நீ அல்லவா? ஹே பரம்பொருளே! உன் சிங்கார ரூபத்தை கண்டு இன்புற்ற பின் பிரம்ம பதவியோ இந்திர பதவியோ வேறு எந்த பதவியும் எனக்கு கசக்கத்தான் செய்யும்! ஆகவே அருட்குன்றே! இங்கேயே இருந்து உன்னைப் பூஜிக்கும் வரத்தை தந்தருள்வாய்...’’ மன்றாடினார் பிரம்மன்.  

வரதர் இளநகை பூத்தார். அது அவர் முகத்துக்கு மேலும் அழகை அளித்தது. ‘‘பிரம்மனே! ஒரு புண்ணியம் செய்தாலும் ஆயிரம் மடங்கு என்ன... கோடி மடங்கு பலன் தரும் திவ்ய தேசம் காஞ்சிபுரம்! இதை உலகம் உணர வேண்டும். அதற்கு இங்கு ஒரே ஒரு அஸ்வமேத யாகம் செய்த நீ மீண்டும் பிரம்ம பதவி பெற வேண்டும்.

சித்திரை ஹஸ்தம் அன்று தோன்றிய எனக்கு வைகாசி சிரவணத்தன்று தீர்த்தவாரி செய்து அற்புதமாக உற்சவம் நடத்தி வழிபடு! இதனால் உன் ஆசையும் ஈடேறும். நீ எடுத்த இந்த விழா, பிரம்மோற்சவம் என்றே இந்த வையகத்தில் வழங்கப்படும்! கிருத யுகத்தில் உனக்கு அருள் செய்த நான், திரேதா யுகத்தில் கஜேந்திரனுக்கு அருள உள்ளேன்! துவாபர யுகத்தில் பிருகஸ்பதி என்னை பூஜித்து அருள் பெறுவார்! கலியுகத்தில் ஆதிசேஷன் என்னை வணங்கி நற்கதி பெறுவான்!

நான் இங்கேயே எனது குழந்தைகளின் கண்ணிற்கும் கருத்திற்கும் இலக்காகும் படி சேவை சாதிக்க உள்ளேன். எனவே நீ எனக்கு ஆலயம் எழுப்பி உற்சவம் எடுத்து வணங்கி வழிபட்டு உன்னுலகம் அடைவாய்... ஆசிகள்!’’ என்றபடியே சிலையாக சமைந்தார் அந்த மாயவன்.
என்ன அதிசயம்... அவர் சிலையான பின்பும் அவர் முகத்தில் அந்த கொப்பளங்கள் அப்படியே இருந்தன; இருக்கின்றன! காஞ்சி வரதராஜபெருமாள் கோயில்.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர் இந்த ஆண்டு எழுந்தருளியதை முன்னிட்டு பக்தர்கள் அவரை தரிசிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தார்கள்.அந்த வரிசையில் நின்றபடியே வரதர் இந்தக் கோயிலுக்கு வந்த கதையைச் சொல்லி முடித்தார் நாகராஜன்.  ‘‘சூப்பர் தாத்தா! இத்தனை பேர் பூஜை செய்த பெருமாளைத் தான் நாம இன்னிக்கி பார்க்கப் போறோமா?’’ பிரமிப்புடன் கண்ணன் கேட்டான்.நாகராஜன் புன்னகையுடன் ஆமோதித்தார்.

‘‘கண்ணா! வரதரோட திருவிளையாடல் ஏராளம். அதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா இந்தப் பிறவி போதாது...’’ தழுதழுத்தபடி சொன்னாள் ஆனந்தவல்லி. ‘‘அப்படியா தாத்தா..?’’‘‘ஆமா கண்ணா... வரிசைல நகர்ந்தபடியே எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேளு...’’ என்றபடி நாகராஜன் பக்தியுடன் சொல்லத் தொடங்கினார்...

(கஷ்டங்கள் தீரும்)

- ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்