ககன்யான் விண்வெளியில் இந்தியாவின் புதிய வீடு!மனிதர்களோடு தொடர்புடைய இன்றைய பூமியின் இயக்கமே, விண்வெளியை நம்பித்தான் உள்ளது. காரணம், விண்வெளியில் இருந்துதான் தனது அறிவியல் தொழில்நுட்பத்தை பூமிப் பந்தில் இயக்கி வருகிறான் மனிதன்!

வானியல் முன்னறிவிப்புகளுக்கும், தகவல் தொழில்நுட்ப வசதிக்கும் விண்வெளியே மையம்; விளையாட்டுக் களம். எனவேதான் ஒவ்வொரு நாடும் அவரவர் வசதிக்கேற்ப செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தி தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்றன.

அந்த வகையில் வளர்ச்சியடைந்த நாடுகள் விண்வெளியில் பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை - ஐஎஸ்எஸ் (International Space Station) - 1998ல் கட்டத் தொடங்கி 2000ல் பயன்பாட்டுக்குக் ெகாண்டு வந்தன. இந்த நிலையத்தின் நீளம் 239 அடி; அகலம் 356 அடி; உயரம் 66 அடி; பொருள் திணிவு 4,50,000 கிலோ.

இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்கு சராசரியாக 27,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன.

தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது.இந்த மையத்தை ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, அமெரிக்காவின் நாசா, ஜப்பானின் ஜாசா, கனடாவின் சிஎஸ்ஏ, ரஷ்யாவின் ரோஸ்காஸ்மாஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து அமைத்தன.

இதுவரை 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் அங்கு சென்று ஆய்வுகளை நடத்திவிட்டு திரும்பி வந்துள்ளனர். நிரந்தரமாகவும் ‘ஐஎஸ்எஸ்’ஸில் வீரர்கள் உள்ளனர். இந்த விண்வெளி நிலையம் பூமியின் ஈர்ப்பு ஆற்றலால் மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி இறங்குகிறது. அப்போது அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர்.

இப்படி ஒரு தொடர் நடவடிக்கையாக விண்வெளியில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.பூமியின் கடற்பரப்பிலிருந்து 330 - 450 கிலோமீட்டர் உயரத்தில் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை வெவ்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், ‘நாசா’தான் அதிக அளவில் அதன் பராமரிப்பிற்காக நிதி ஒதுக்கி வருகிறது. இப்போது, விண்வெளிக்கு இன்பச் சுற்றுலா சென்று வருவது கூட சாத்தியமாகி விட்டது. வியாபார ரீதியில் கட்டப்படும் விண்வெளிக் கப்பலை அமெரிக்காவின் ஆக்ஸியம் நிறுவனம் 2020க்குள் முடிந்துவிடுமென்றும், 2022ல் வணிக ரீதியாக ஆட்களை அனுப்பும் திட்டத்தை தொடங்கிவிடுமென்றும் கூறப்படுகிறது.

பல நாடுகள் கூட்டு சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்திருந்தாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தங்களுக்கென தனியாக தலா ஓர் விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைத்துள்ளன. சீனாவைப் பொறுத்தவரை 2011ல் ‘சொர்க்கத்தின் அரண்மனை’ என்று அழைக்கப்படுகிற ‘டியான்காங் 1’ என்ற விண்வெளி நிலையத்தை விண்வௌியில் நிறுவியது. 2023ல் விண்வெளியில் நிரந்தரமாக மையம் அமைக்க திட்டமிட்ட நிலையில், முன்னோட்டமாக  ‘டியான்காங் 1’ விண்வெளி நிலையத்தை நிறுவி தனது ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டது.

பின்னர் அதன் ஆயுட்காலம் 2013ம் ஆண்டே முடிந்து போன நிலையில் மேலும் 2 ஆண்டுகள் அதன் ஆயுட்காலத்தை நீடித்து 2016ல் மார்ச் 21ம் தேதி ‘டியான்காங் 1’ விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த விண்வெளி நிலையம் 2017ம் ஆண்டின் இறுதியில் பூமியில் விழும் எனவும் தெரிவித்தது. அதன்படி, தென்பசிபிக் கடலில் விழுந்தது. அது விண்வெளியில் இருந்து கீழே விழும் போது 90 சதவீதம் வழியிலேயே எரிந்துவிட்டது. எஞ்சிய பாகங்கள் தகிதி தீவின் மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் சிதறி கடலில் விழுந்தது. அதேநேரம் 2022ல் விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையத்தை நிறுவ சீனா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இப்படி அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் விண்வெளியில் தங்களுக்ெகன ஓர் இடத்தை கட்டமைத்த நிலையில் இந்தியாவும் இந்த ஆட்டத்தில் குதித்துள்ளது!

யெஸ். தனது விண்வௌி ஆய்வு மையத்தை இன்னும் ஒருசில ஆண்டுகளில் இந்தியா கட்டமைக்கும். அதற்கான பெரும்பாலான கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்குகின்றன. இதன் ஒருபகுதி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது. இதற்காக ‘ககன்யான்’ (சமஸ்கிருதத்தில் விண்வெளி வாகனம்) என்று பெயரிடப்பட்ட விண்கலம் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனாலேயே ‘‘இந்தியாவிலிருந்து 2022ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவர்...’’ என்று பிரதமர் மோடி தனது முந்தைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) செயல்படுத்தப்படும் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்போது ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.

மேலும், ‘ககன்யான்’ திட்டத்தில் ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இஸ்ரோ ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதாவது, விண்வெளிக்குக் செல்லும் இந்திய வீரர்களின் உடல் நிலையைக் கண்காணிப்பது, உயிர் காக்கும் கருவிகளை அளிப்பது, விண்வெளிக் கழிவுகளில் இருந்து வீரர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை அந்நாட்டுடன் ஒருங்கிணைந்து இந்தியா மேற்கொள்ளும்.

‘ககன்யான்’ திட்டத்தின்படி விண்வெளிக்கு அனுப்பப்படும் 3 பேரில் ஒரு வீராங்கனையும் இடம்பெறுவார். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்
கலத்தில் செல்லும் 3 வீரர்களும் விண்வெளியில் 5 முதல் 7 நாள்கள் வரை இருப்பர். இந்த விண்கலம் புவியின் தாழ்வட்டப்பாதையில் சுமார் 400 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படும். புவியில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்களுக்குள் விண்வெளியில் விண்கலம் நிலை நிறுத்தப்படும். இந்தத் திட்டத்தால் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மேம்படும்.

‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் சுமார் 15 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவர். விண்வெளிக்குச் செல்லும் 3 பேரும் இந்திய விமானப் படையால் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

தி இந்தியன் ஸ்பேஸ்ஃப்ளைட் பரோக்ராம் (The Indian Spaceflight Programme) என்று அழைக்கப்படும் இந்த மிஷனை 2021ம் ஆண்டு இறுதியில் ‘ககன்யான்’ என்ற ஸ்பேஸ்கிராஃப்ட்டின் மூலம் செயல்படுத்த உள்ளது.சரி, எதற்காக விண்வெளியில் இந்தியா தனக்ெகன ஓர் இடத்தை கட்டமைக்கிறது?இன்று சீனாவிற்கு அடுத்த இடத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக உள்ள இந்தியா, தன்னை அறிவியல்பூர்வமாக கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே, விண்வெளியில் தனக்கென ஓர் இடத்தை கட்டமைப்பதன் வழியாக பூமியின் இயக்கம், அதன் சுற்றுச்சூழல் மாற்றங்கள், கடலில் உருவாகும் புயல்களின் நகர்வுகள், பால்வெளியை நோக்குதல்... உள்ளிட்ட எண்ணற்ற இயற்கைச் சீற்றங்களை, சவால்களை எதிர்கொள்ள முடியும்.
இத்தனையும் தாண்டி சர்வதேச அரசியலுடன் போட்டிபோட முடியும்.

ஆம். இதற்கும் வறுமை ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை..!
           
விறுவிறு சுறுசுறு இஸ்ரோ!

*‘ககன்யான்’ விண்கலத்தை 2021ம் ஆண்டின் இறுதிக்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜூலை 15ம் தேதி சந்திரயான் - 2 விண்கலம் நிலவுக்கு பயணத்தைத் தொடங்குகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திரனில் அந்த செயற்கைக்கோள் இறங்கியதும், பல்வேறு புதிய தகவல்களைப் பெற முடியும்.

*சூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020ம் ஆண்டு ‘ஆதித்யா எல்1 மிஷன்’ என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதன்மூலம் சூரியனின் வெப்பத்தை ஆய்வு செய்ய முடியும்.

*விண்வெளியில் இந்தியா சார்பில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்பது இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் மிக உயர்ந்த இலக்குகளில் ஒன்று. இத்திட்டம் இந்திய தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஏதும் இருக்காது. விண்வெளி ஆய்வு மையம் 20 டன் எடை கொண்டதாக இருக்கும். அதன் முதல் திட்டத்தின்படி, ‘ககன்யான்’ விண்கலத்தை 2021ம் ஆண்டின் இறுதிக்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

*செவ்வாய்க்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக்கோள் செலுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. மேலும், மங்கள்யான் - 1 வெற்றியைத் தொடர்ந்து, 2022 - 2023ம் ஆண்டில் மங்கள்யான் - 2 செயற்கைக்கோளைச் செலுத்த 2017ல் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதால், அதற்கான பணிகளும் நடைபெறுகின்றன.

*வெள்ளி கிரகம், பூமியைப் போன்ற ஒரு கிரகம். பூமியின் அளவு, எடை, வளிமண்டல கலவை, புவியீர்ப்பு விசை போன்றவற்றில் வெள்ளி கிரகமும் பூமி கிரகமும் ஏறக்குறைய ஒன்று. அதனால், ‘சுக்ரயான் மிஷன்’ என்ற திட்டத்தை 2023 - 2025ம் ஆண்டுவாக்கில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் வெள்ளி கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்ய முடியும். மேலும், சூரியனிடமிருந்து வரக்கூடிய சூரியக் கதிர்வீச்சு மற்றும் சூரியக் காற்று போன்றவற்றையும் கவனிக்க முடியும்.

செ.அமிர்தலிங்கம்