கடனுக்காக கோப்பைகளை ஏலம் விடும் டென்னிஸ் அரசன்!



6 கிராண்ட் ஸ்லாம் பட்டம்... 49 சர்வதேச விருதுகள்...

இன்றைய ஜென் Z தலைமுறையினருக்கு போரிஸ் பெக்கரைத் தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால், இன்று 40+ வயதில் இருக்கும் மத்திய வயதுக்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். போரிஸ் பெக்கர் என்றதுமே அவர்கள் கண் பளிச்சிடும்.
இளவயது நாஸ்டால்ஜியாவில் ஒரு கணம் மூழ்கித் திரும்புவார்கள். இந்தியாவில் டிவி என்ற குட்டி உலகம் ஒவ்வொரு வீட்டிலும் நுழையத் தொடங்கிய எண்பதுகளில் கிரிக்கெட், டென்னிஸ், ஒலிம்பிக்ஸ் பார்ப்பது என்ற கலாசாரமும் ஒரு மோஸ்தராக இருந்தது. அந்நாளின் நவநாகரிக இளைஞர்களான பெல்ஸ் அணிந்த மாமாக்களுக்கு ஆதர்ச டென்னிஸ் நாயகன் போரிஸ் பெக்கர்தான்.

போரிஸ் பெக்கர் ஜெர்மனியின் புகழ்பெற்ற டென்னிஸ் சாம்பியன். ஹாலிவுட் ஆக்டரைப் போல் ஸ்டைலான மனிதர். கோர்ட்டில் அவர் இறங்கினாலே ரசிகைகள் மனம் துள்ளும். ரசிகர்களோ பரவசமாவார்கள். போரிஸ் பெக்கரும் யுவான் லெண்டிலும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்நாளைய டென்னிஸை இன்றும் பலரால் மறக்க முடியாது.

சரி, இத்தனை வருடங்கள் கழித்து எதற்கு போரிஸ் பெக்கரின் புராணம்?
இதைச் சொன்னால் பெக்கரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைவீர்கள். வருந்தவும் செய்வீர்கள். ஒரு காலத்தில் டென்னிஸ் உலகையே ஆண்டுகொண்டிருந்த பெக்கர் இன்று கடன்களை அடைக்க வேண்டி தன்னுடைய கோப்பைகளை ஏலம் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்!

வைல்ஸ் ஹார்டி எனப்படும் பிரிட்டனின் ஆன்லைன் ஏலம் விடும் நிறுவனம் ஒன்றோடு இணைந்து இதைச் செய்கிறார் போரிஸ் பெக்கர். இந்த ஏலத்தில் அவர் பெற்ற மெடல்கள், கோப்பைகள், கைக்கடிகாரங்கள், புகைப்படங்கள் உட்பட அவரின் 82 பொருட்கள் ஏலத்துக்கு வருகின்றன. எதிர்வரும் ஜூலை 11ம் தேதியை ஏல முடிவாக அறிவித்துள்ளது வைல்ஸ் ஹார்டி நிறுவனம்.

இந்த கோப்பைகளில் சேலன்ஜ் கோப்பையும் அடக்கம். இதை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு அடைந்தார். ரென்ஸா கப் எனும் கோப்பையையும் ஏலம் விடுகிறார். இதை இளம் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பெற்றிருந்தார். எல்லாவற்றையும்விட பெக்கர் 1990ம் ஆண்டு ஸ்வீடி ஸ்டீபன் எட்பெர்க்கை வென்று விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தபோது பெற்ற கோப்பையையும் ஏலத்துக்கு விடுகிறார்.

51 வயதான போரிஸ் பெக்கருக்கு பல கோடி கடன் உள்ளதாம். இந்தக் கோப்பைகளை எல்லாம் ஏலம் விட்டாலும் அவரால் கடனிலிருந்து மீள முடியாது என்பதுதான் சோகம் என்கிறார்கள்.

வருத்தமாக இருக்கிறது. ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர், 49 சர்வதேச டென்னிஸ் விருதுகளை வென்றவர், தன் வாழ்நாளில் இருபது மில்லியன் யூரோவை பரிசுத் தொகையாகப் பெற்ற ஒரு ஜாம்பவான் இப்படி கடன்காரராக வாழ்வது பரிதாபம்தான்!

இளங்கோ கிருஷ்ணன்