பகவான் - 36பகவானுக்கு வீடில்லை.. நாடில்லை!!அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப் பட்டதுமே அத்தனை தொல்லைகளும் முடிந்துவிட்டதாகத்தான் ஓஷோ கருதினார். வேண்டா வெறுப்பாக அவர் மீண்டும் இந்தியாவுக்கே வந்ததுதான் இந்தத் தொடரின் முதல் அத்தியாயமே.“இனிமேல் இந்தியாவில்தான் இருப்பேன்” என்று ஊடகங்களிடமும் சொன்னார்.

பூனே ஆசிரமம் மீண்டும் பகவானுக்காக அமெரிக்க ரஜனீஷ்புரத்து வசதிகளோடு தயாராகத் தொடங்கியது.அதுவரை இமாலயத்தின் மடியில் குலு பள்ளத்தாக்கில் மணாலிக்கு அருகே இருந்த ஸ்பான் ரிசார்ட்ஸ் என்கிற இடத்தில் சில மாதங்கள் தங்கியிருக்க திட்டமிட்டார்.ம்ஹூம்.

இந்தியாவிலும் பகவானுக்கு நேரம் சரியில்லை.நவம்பர் 1985ல் அவர் இந்தியாவுக்கு வந்தார். அவருடன் அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரிய சகாக்களும் வந்திருந்தனர்.பகவான் இங்கு வந்து சேர்ந்த அடுத்த மாதமே இந்திய அரசு இவர்களுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது.

அப்போது இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ்காந்தி பதவியேற்று இருந்தார். அவரது தாயார் இந்திராகாந்தி உள்ளிட்ட இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் முன்பு பகைத்துக் கொண்டிருந்தவர் ரஜனீஷ். அமெரிக்க நெருக்கடி ஒரு புறம். ரஜனீஷ், பொதுவாகவே கலகக்காரர், ஏதாவது பிரச்சினை செய்து மக்களிடையே உங்கள் நற்பெயரைக் கெடுப்பார் என்று ராஜீவ்காந்தியிடம் அதிகாரிகள் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த சூழல் மறுபுறம். ரஜனீஷ்புரம் மாதிரியே பூனே நகரை தனி அரசாங்கமாக வளர்த்தெடுக்க ஓஷோ திட்டமிடுகிறார் என்று சில உளவுத்துறை அதிகாரிகளும் ரிப்போர்ட் அனுப்பி இருந்தார்கள்.

எனவே, அட்டாக்கிங் கேமுக்கு தயாரானார் ராஜீவ்.இதற்கிடையே பகவானின் உடல்நிலை மீண்டும் மோசமடையத் தொடங்கியது. அவருக்கு அடிக்கடி வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. உணவு உண்டதுமே வாந்தியெடுத்து விடுவார். இதனால் உடல் அடிக்கடி சோர்வுக்கு உள்ளானது. கண் பார்வை மங்கத் தொடங்கியது. தலைமுடி கொட்டத் தொடங்கியது. அமெரிக்காவில் 17 நாட்கள் சிறையில் இருந்தபோது, அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில் ‘ஏதோ’ கலந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது.

இந்தச் செய்திகளெல்லாம் உலகம் முழுக்க பரவத் தொடங்கியது. ஐரோப்பாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் அவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர்.இந்திய அரசாங்கம் விழிப்படையத் தொடங்கியது.டூரிஸ்ட் விசா வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களுக்கு நெருக்கடி தரத் தொடங்கினார்கள். இந்தியாவைக் காண வரும் பயணிகளை கண்காணிக்கத் தொடங்கினார்கள். ஓஷோவின் பக்தர்கள் என்று தெரிந்தாலே ஏதாவது சப்பைக்காரணம் காட்டி விசா தர மறுத்தார்கள்.

இந்திய அரசு குறித்து எதிர்மறையான சில கருத்துகள் கொண்டிருந்தாலும், இந்தியாவின் அரசியலமைப்பு வழங்கிய கருத்துச் சுதந்திரம் மீது ஓஷோவுக்கு பெரிய மரியாதை இருந்தது. நம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை மற்றும் சகிப்புத்தன்மை குறித்து பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைவரும் அவரவர் சொந்தக் கருத்துகளை, விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் உரிமை கொண்டிருந்தது குறித்து பெரிதும் மதிப்புக் கொண்டிருந்தார்.
அதையெல்லாம் உடைக்கும் வகையில் இந்திய அரசு நடந்து கொள்ளத் தொடங்கியது.

திடீரென ஓஷோவுடன் தங்கியிருந்த அவரது செயலர், வெளிநாட்டு நண்பர்கள் மற்றும் சீடர்கள், மருத்துவர்கள் அத்தனை பேரின் விசாவையும் திரும்பப் பெற்றது. காரணம் கேட்டவர்களுக்கு எந்த சமாதானமும் சொல்லப்படவில்லை. “நீங்கள் வெளியேறுங்கள்” என்று மட்டுமே திரும்பத் திரும்ப இந்திய அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஓஷோவை தனிமைப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதை உணர்ந்தார்கள். “இந்தியாவை விட்டு நீங்கள் வெளியே எங்கேயும் செல்லக்கூடாது” என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவரை மிரட்டினர்.

வேறு வழியே இல்லாமல் நேபாளத்துக்குச் செல்ல ஓஷோ முடிவெடுத்தார். ஏனெனில் அப்போது நேபாளத்துக்குத்தான் விசா இல்லாமல் செல்ல முடிந்தது. அந்நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் ஓர் ஓட்டலில் தங்கினார்.நேபாள மக்கள் பகவானை விரும்பி வரவேற்றனர். மாலையில் மக்களுக்காக அவர் உரையாற்றத் தொடங்கினார்.

ஒவ்வொரு நாளும் அவரது உரையைக் கேட்க நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டனர். மக்களின் அன்புக்காக நேபாளத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்றுகூட அவர் நினைத்தார். மேலும் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்க வேறெங்கும் பயணித்து அலைய முடியாது என்கிற நெருக்கடியிலும் இருந்தார்.

பகவானுக்கு நேபாளத்தில் உருவாகி வரும் ஆதரவு அலையை இந்தியா உணர்ந்தது. எனவே அரசு மட்டத்தில் அவருக்கு அங்கேயும் நெருக்கடி ஏற்படுத்த முனைந்தது. தர்மசங்கடமான நிலையில் நேபாள அதிகாரிகள், “எங்களை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் திரும்பவும் இந்தியாவுக்கே சென்று விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

பக்தர்கள் கொதிப்படைய, நேபாளத்தின் அரசரே ஓஷோவை நேரில் சந்தித்தார்.“நீங்கள் பதட்டமடைய வேண்டாம். ரஜனீஷ்புரம் மாதிரி ஒரு புதிய நகரத்தையோ, சமுதாயத்தையோ இனியும் அமைக்கக்கூடிய எண்ணம் எதுவும் எனக்கில்லை” என்றார் ஓஷோ.பகவானின் கையை அப்படியே பிடித்துக் கொண்டார் அரசர்.

“நீங்கள் நேபாளத்தில் தங்குவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெருமைதான். இந்திய அரசிடம் நான் பேசிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஏதோ பேசவந்து அப்படியே தயங்கி நின்றார்.

அவர் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த பகவான், “ஏதோ கேட்க விரும்புகிறீர்கள். தைரியமாகக் கேளுங்கள்” என்றார்.“அப்படியே எனக்கு நீங்கள் இன்னும் ஒரு வாக்கையும் தரவேண்டும்”“கேட்டால் கொடுப்பதுதான் என் வழக்கம். ஆனால், என்னால் முடிந்ததைக் கேளுங்கள்” என்று புன்னகைத்தார் பகவான்.

“உலகிலேயே நாங்கள் மட்டும்தான் இந்து நாடு. இந்த நாட்டில் நீங்கள் இருந்துகொண்டு இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கக் கூடாது.”அந்த நெருக்கடியான சூழலிலும் வாய்விட்டுச் சிரித்தார் பகவான்.

“நீங்கள் அரசர். எதைப் பேசவேண்டும், எதைப் பேசக்கூடாது என்று அனைவருக்கும் ஆணையிடுபவர்.ஆனால் நானோ வெறும் சன்னியாசி.

எதைப் பேசவேண்டும், எதைப் பேசக்கூடாது என்றெல்லாம் எனக்கே தெரியாது. எதைப் பேசுவேன், எப்போது பேசுவேன் என்றும் தெரியாது. ஏதோ ஒன்று சரியல்ல என்று தோன்றினால் உடனடியாக அதை மறுத்து, எது சரியென்று மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையில் இருப்பவன் நான்.

எந்நாளும் அந்தக் கடமையிலிருந்து நான் தவறக்கூடாது.”சொல்லிவிட்டு அரசரை கூர்மையாகப் பார்த்தார் பகவான். அரசர் கொஞ்சம் நெளிந்தபடியே பகவானின் கண்களைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தார். ஓஷோ தொடர்ந்தார்.

“நான் எந்தவொரு நாட்டுக்கோ, எந்தவொரு சமயத்துக்கோ உரிமையானவன் அல்ல. இந்த உலகம் மொத்தமுமே இங்கே பிறந்தவர் அனைவருக்குமே சொந்தமென்று கருதுகிறேன். மேலும் அநீதியைக் கண்டால் அதற்கு எதிராக வெளிப்படும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும். அது இந்து மதமா, கிறிஸ்தவ மதமா, இஸ்லாமிய மதமா என்றெல்லாம் பாகுபாடு பார்க்க மாட்டேன்” என்றார்.நேபாள அரசர் தோல்வி முகத்தோடு திரும்பினார்.

ஓஷோ யாரைச் சந்திக்கிறார், என்னென்ன பேசுகிறார், என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பதையெல்லாம் அங்கிருந்த இந்தியத் தூதரகம், தினசரி ரிப்போர்ட்டாக டெல்லிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தது. பகவானை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு நேபாளத்துக்கு நெருக்கடியும் கொடுத்துக்கொண்டே இருந்தது.தன்னுடைய சீடர்களை அனுமதிக்காத இந்தியாவுக்கு திரும்ப பகவானுக்கு விருப்பமில்லை.
அப்போது ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது.

கிரீஸ் நாட்டின் பிரதமருடைய மகன் ஓஷோவின் பக்தர். அவர் பகவானைச் சந்திக்க காட்மாண்டுவுக்கு வந்திருந்தார். இங்கிருந்த நிலைமைகளை கவனித்த அவர், “நீங்கள் கிரேக்கத்துக்கு வந்து தங்கிக்கொள்ளலாம்” என்று ஆலோசனை சொன்னார்.ஆனால் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி தங்கள் நாட்டிலிருந்து வெளியேறக்கூடாது என்று நேபாளம் தடை போட்டது (அதாவது நேபாளம் வாயிலாக இந்தியா தடை போட்டது).

இங்கிலாந்து அரசி சுற்றுப் பயணத்துக்காக நேபாளம் வருகிறார், அந்தச் சமயத்தில் பகவானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை வானில் பறக்கவிட அனுமதிக்க முடியாது என்று ஒரு மொக்கைக் காரணத்தையும் முன்வைத்தது.நேபாளத்தை விட்டும் உடனடியாக வெளியேறுவது என்று முடிவெடுத்தார் பகவான்.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்