2017ல் உலக தடகளப் போட்டியில் இவர் பங்கேற்கக் கூடாது என பெயரை நீக்கினார்கள்...



2019ல் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்!

எப்படி கோமதி மாரிமுத்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தாரோ அதுபோலவே, பி.யு.சித்ரா கடைசி நாளில் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் பெற்று பதக்க வேட்டையை முடித்து வைத்தார்.கோமதியைப் போலவே சித்ராவின் குடும்பமும் விவசாயப் பின்னணியைக் கொண்டதுதான். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள முண்டூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சித்ரா.

தந்தை பாலக்கீழ் உன்னிகிருஷ்ணனும், தாய் வசந்தகுமாரியும் விவசாயக் கூலிகள். இவர்களின் நான்கு குழந்தைகளில் சித்ரா மூன்றாவது. பள்ளியில் படிக்கும்போதே பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் இவர் தன் வசப்படுத்தியவர்.

அப்போதே ஓட்டத்துக்காக இருமுறை நானோ காரைப் பெற்றவர். ஆம். ப்ளஸ் டூ படிக்கும் போது உத்தரப்பிரதேசத்திலுள்ள இட்டாவா நகரில் நடந்த பள்ளி அளவிலான தேசிய தடகளப் போட்டியில்சிறந்த தடகள வீராங்கனை என்ற விருதுடன் ஒரு நானோ காரை பரிசாகப் பெற்றார்.

பிறகு, சில மாதங்களிலேயே கேரள மாநில தடகளப் போட்டியில் சிறந்த தடகள வீராங்கனை விருதுடன் இரண்டாவது தடவையாக இன்னொரு நானோ கார் பரிசைத் தட்டினார்.பி.டி.உஷா, ஷைனி வில்சன், அஞ்சு ஜார்ஜ் எனக் கேரளாவின் முன்னணி தடகள வீராங்கனைகளைப் போல ஆகவேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர் சித்ரா.

அந்தக் கனவைத் துரத்திப் பிடித்திருந்தாலும் இவர் கடந்து வந்த பாதை கொஞ்ச நஞ்சமல்ல. 2016ம் வருடம் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், 2017ல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் தட்டினார்.

இதனால், லண்டனில் நடந்த உலக தடகளப் போட்டிக்கு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது!
உடனே, நீதிமன்றக் கதவைத் தட்டினார் சித்ரா. கேரள உயர்நீதிமன்றம் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டது. ஆனால், காலதாமதத்தால், இனி முடியாது எனத் தடகள சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு கைவிரித்தது.

தொடர்ந்து 2018ம் வருடம் இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றார். இப்போது தங்கத்தை வென்று, முன்பு தன்னை நிராகரித்ததற்குப் பதிலடி கொடுத்துவிட்டார்.

‘‘இந்தோனேசியாவுல என்னை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியவர் பஹ்ரைன் வீராங்கனை டிஜிஸ்ட் காஷாவ். இப்ப அவரை மில்லி செகண்ட்ல முந்தி முதல் இடத்தைப் பிடிச்சுட்டேன்! கடைசி நேரத்துல கொஞ்சம் பரபரப்பாவே இருந்துச்சு...’’ என மூச்சு வாங்கப் பேசும் சித்ரா இப்போது நேரடியாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதியாகியுள்ளார்.