அமெரிக்காவுக்கு கா... கனடாவுக்கு பழம்!



என்ன காரணமோ... இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அப்படியொரு தடையை விதிக்கிறது அமெரிக்கா. அதுவும் அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தாலும் வந்தார்.. தினமும் இங்கி பிங்கி பாங்கி போட்டு H1-B விசா சட்டங்களைக் கடுமையாக்கிக்கொண்டே இருக்கிறார்.

‘டிரம்புக்குதான் புத்தி கெட்டுவிட்டது... இந்தியர்களுக்கு என்ன? நன்றாகத்தானே இருக்கிறார்கள்..? ஏன் மற்ற நாடுகளுக்கு பிழைக்கச் செல்லாமல் அமெரிக்காவையே தேர்வு செய்ய வேண்டும்..?’

நியாயமான கேள்வி. இதற்கான பதிலைத்தான் ஆர்ப்பாட்டமாக சூடம் ஏற்றி சத்தியம் செய்யாமல் கமுக்கமாக செயலில் இந்தியர்கள் காட்டத் தொடங்கிவிட்டார்கள்! யெஸ். ‘இதோ வர்றோம் பாஸ்’ என கனடாவுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 60 ஆயிரம் (பொது), ப்ளஸ் 25 ஆயிரம் (அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர்கள்- சிறப்புக் கோட்டா) என மொத்தம் 85 ஆயிரம் H1-B விசாவை அமெரிக்கா வழங்குகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் இந்தாண்டு ஏப்ரல் ஒன்று முதல் வழங்கப்பட்டன. ஐந்தே நாட்களில் சில லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு! ஏனெனில் பல லட்சம் பேர் விண்ணப்பிப்பதுதான் இதுவரை நடந்தது. இதற்கு அமெரிக்காவில் மேல்படிப்பு படித்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டிருப்பது ஒரு காரணம் என்கிறார்கள்.

இதற்கு நேர்மாறானது கனடா. இந்தியர்களை மட்டுமல்ல... ஈரேழு உலகத்தைச் சேர்ந்த மக்களையும் ‘வாங்க... வாங்க...’ என வெற்றிலைப் பாக்கு வைத்து இந்த நாடு அழைக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே 2017ல் குளோபல் ஸ்கில் ஸ்டாடர்ஜி திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் திறமைசாலிகளாக இருப்பவர்களை எல்லாம் கனடாவில் குடியேற வைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
மட்டுமல்ல; 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இந்தத் திட்டத்தின்படி சென்ற ஆண்டு தங்கள் நாட்டில் நிரந்தரமாகக் குடியேற அனுமதி வழங்கியிருக்கிறார்கள்!

ஒரு நபருக்கு ஒரு முறை H1-B விசாவை அமெரிக்கா வழங்கினால் 3 ஆண்டுகள் மட்டுமே அந்நாட்டில் வேலை பார்க்க முடியும். அதன்பிறகு இன்னொரு 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். அதாவது அதிகபட்சம் 6 ஆண்டுகள்தான். அதன் பிறகு ஊர் திரும்ப வேண்டியதுதான்.

இந்த கிடுக்கிப்பிடி டிரம்ப் அதிபரானபிறகு இன்னும் இறுகியிருக்கிறது. அதாவது முதல் முறை ஒரு நபருக்கு H1-B விசா கிடைப்பதே கஷ்டம். அதையும் மீறி பெற்றாலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்புப் பெற தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அளவுக்கு டிரம்ப் கடுமையாக்கி இருக்கிறார்.

எப்படித் தெரியுமா? ஒபாமா காலத்தில் நீட்டிப்பு வழங்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு வழங்குவார்கள். இல்லை என்றால் நீட்டிப்பை மறுப்பார்கள். ஆனால் டிரம்ப் காலத்தில் 5 நாட்கள், 50 நாட்கள் என்றெல்லாம் இஷ்டத்துக்கு நீட்டிப்பு வழங்கி ஹார்ட் அட்டாக்கை வரவைக்கிறார்கள்.

இதனால்தான் இந்தியர்களிடம் அமெரிக்க மோகம் குறைந்து வருவதாக ‘ஸ்டாக்ராஃப்ட்’ என்ற ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐடி துறையில் அதிக திறன் படைத்த ஊழியர்கள்கூட அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற அலகு குத்தி தீ மிதிக்க வேண்டும். அதன்பிறகும் எப்போது மூட்டையைக் கட்டச் சொல்வார்களோ என அச்சப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்தச் சிக்கல் எல்லாம் கனடாவில் இல்லை. விண்ணப்பித்த ஒருசில மாதங்களில் நிரந்தரக் குடியேற்றத்துக்கான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு விடுகின்றன. என்ன... அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் சம்பளம் குறைவு. என்றாலும் இந்தியாவில் பெறும் ஊதியத்தை விட பல மடங்கு அதிகம்!எனவே இப்போது இந்தியர்கள் அமெரிக்காவுக்கு ‘கா’ விட்டுவிட்டு கனடாவுக்கு ‘பழம்’ விடத் தொடங்கியிருக்கிறார்கள்!     

சுப்புலட்சுமி