தலபுராணம்- ராயப்பேட்டை மருத்துவமனை



‘‘ராயப்பேட்டை மருத்துவமனைதான் சமீபகாலம் வரை ‘போலீஸ் கேஸ்’ மருத்துவமனையாக இருந்தது. அதாவது, அடிதடியில் காயம் பட்டாலோ, சாலை விபத்தில் சிக்கினாலோ அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குத்தான் எடுத்துச் செல்லணும். பிரேத பரிசோதனையும் ராயப்பேட்டை மருத்துவமனையில்தான்.

இப்ப மத்த அரசு மருத்துவமனைகளிலும் இதெல்லாம் செய்யறாங்க. ஆனா, இப்பவும் விபத்துல காயம், தேள் கொட்டினது, தற்கொலை முயற்சினா ராயப்பேட்டை மருத்துவமனைதான் சட்டுனு நினைவுக்கு வருது...’’‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ நூலில் ராயப்பேட்டை மருத்துவமனையின் முக்கியத்துவம் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளார் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன்.  

அவர் சொன்னது போலவே இன்றும் தென்சென்னையின் அதிமுக்கிய மருத்துவமனையாக இருப்பது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையே! சென்னையின் தென்பகுதியில் எந்தவொரு விபத்ேதா, அவசர சிகிச்சையோ என்றால் உடனடியாக இங்கேதான் கொண்டு வரப்படுகின்றனர்.
எப்போது உருவானது?

இம்மருத்துவமனை 1912ம் வருடம் 120 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு முன்பே இந்த மருத்துவமனை மெட்ராஸ் மாநகராட்சியின் கீழ் இயங்கி வந்துள்ளது!இதை 1908ம் வருடம் வெளிவந்த, ‘The Imperial Gazetteer of India - Vol XVI’ என்ற நூல் மூலம் அறிய முடிகிறது.

அதில், ‘ராயப்பேட்டை மருத்துவமனை 1843ம் வருடம் தொடங்கப்பட்டது. மெட்ராஸ் மாநகராட்சி இந்த மருத்துவமனையை நிர்வகித்தது. அங்கே பணியாற்றிய பணியாளர்களுக்கு அரசு சம்பளம் கொடுத்து வந்தது’ என்கிற குறிப்புகள் உள்ளன.

தவிர, ஆரம்பத்தில் உள்ளூர் நோயாளிகளுக்கென 55 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த மருத்துவமனை. அன்று, நாளொன்றுக்கு 250 வெளிநோயாளிகள் வந்து சென்றுள்ளனர்.மட்டுமல்ல. 1867ம் வருடம் வெளிவந்த, ‘The Madras Quarterly Journal of Medical Science - Vol Eleven’ நூலில் ராயப்பேட்டை மருத்துவமனையில், 1866ம் வருடம் நவம்பர் 17ம் தேதி முதல் 1867 மார்ச் 13ம் தேதி வரை காலராவுக்கு சிகிச்சை அளித்தது பற்றிய அறிக்கையைக் காணமுடிகிறது.

இதை ராயப்பேட்டை மருத்துவமனை மருத்துவர் மேஜர் பி.ஜி.ஃபிட்ஸ்ஜெரால்டு தந்துள்ளார். அதில், ‘‘17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் என காலராவால் பாதிக்கப்பட்ட 35 பேர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். இதில், ஆறு பெண்களும், பதினோரு ஆண்களும் இறந்து போயினர். 18 பேர் காப்பாற்றப்பட்டனர்...’’ என்கிற தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், குடல் புழுக்கள் பாதிப்பால் பத்து பேர் வந்ததாகவும், அதில் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் அளித்துள்ளார்.
அன்று சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருந்த அரசுப் பொது மருத்துவமனை, ராயபுரம் மருத்துவமனை ஆகியவற்றுடன் ராயப்பேட்டை மருத்துவமனையும் சிறப்பாக இயங்கி வந்துள்ளதை அறியலாம். குறிப்பாக, தென் சென்னைவாசிகளுக்கு ஓர் வரமாகவே இருந்துள்ளது இந்த மருத்துவமனை.

1910ம் வருடம் இந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளராக மருத்துவர் கர்னல் சார்லஸ் டோனவன் என்பவர் வந்து சேர்ந்தார். இவரே, ராயப்பேட்டை மருத்துவமனையின் முதல் கண்காணிப்பாளர்.இவர், காலா அசார் மற்றும் டோனவனோசிஸ் என இரண்டு நோய்களுக்கான காரணிகளைக் கண்டறிந்தவர். இதில், காலா அசார் வெள்ளையாக இருப்பவர்களைக் கருப்பாக மாற்றிவிடும் தன்மை கொண்ட கொடும் உயிர்க்ெகால்லி நோயாகும். இதற்கான காரணியை ராயப்பேட்டையில் பணியாற்றும்போதே கண்டுபிடித்தார் டோனவன்.

இவர் வந்து சேர்ந்த அதே வருடமே மருத்துவமனைக்குப் புதிதாகக் கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அன்று மெட்ராஸ் மாநகராட்சியின் நகரப் பொறியாளராக இருந்த இ.பி.ரிச்சர்ட்ஸ் கட்டடத்துக்கான டிசைனை வடிவமைத்தார். பாஷ்யம் நாயுடு என்கிற ஒப்பந்ததாரர் கட்டி முடித்தார்.

1912ம் வருடம் மே மாதம் மருத்துவமனை கட்டடம் திறப்பு விழா கண்டது. அப்போது மாநகராட்சியின் தலைவராக இருந்த பி.எல்.மூர் முன்னிலையில், தலைமை மருத்துவர் டபிள்யூ.பி.பானர்மேன் இந்தப் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.இதுவே, இன்று பீட்டர்ஸ் சாலையும், ராயப்பேட்ைட நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ள சிவப்புநிற கட்டடம். ஒரு மாடி கொண்ட இந்தக் கட்டடத்திலிருந்துதான் நீண்ட காலமாக  மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

இன்று இதில், குடல் மற்றும் இரைப்பைத் துறையும், கண் மருத்துவப் பிரிவும் செயல்பட்டு வருகின்றன. தவிர, மருத்துவப் பொருட்களுக்கான ஸ்டோர் ரூமும் இங்குள்ளது. தற்போது பாரம்பரியக் கட்டடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் பின்புறத்தில் மருத்துவமனையின் பிண அறை உள்ளது. ஆனால், இன்று ‘ஓல்டு பில்டிங்’ என்றாலே எல்லோருக்கும் பிண அறை மட்டுமே நினைவில் வந்து போகிறது.

இதை அசோகமித்திரன் தன்னுடைய நூலில் நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார். ‘‘பீட்டர்ஸ் சாலை தாண்டி மிக விசாலமான இடத்தில் மருத்துவமனை இயங்கத் தொடங்கிய பிறகும் கூட அந்த ஒற்றைக் கட்டடத்தில்தான் சவக்கிடங்கு இருந்தது. சவத்தை வெளியே எடுத்துவர தெருப்பக்கம் ஒரு மிகச் சிறு வாயிற்படி. சவத்தை எடுத்துச் செல்வதற்கு என்றே அன்று சில ஜட்கா வண்டிகள் இருந்தன. ஆமாம். குதிரை பூட்டிய ஜட்கா வண்டிகள்தான்.

விவரம் தெரிந்த பலர் ஜட்கா வண்டியில் ஏறமாட்டார்கள். இந்த உயிர்ச் சவாரி வருவதற்கு முன் அதில் உயிரற்ற சவாரி போயிருக்கலாம் அல்லவா?’’
பின்னர், மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் தேவைகள் கருதி மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டது. பீட்டர்ஸ் சாலைக்கு அந்தப் பக்கமாக ராயப்பேட்டை மணிக்கூண்டு செல்லும் வழியில் 1962ம் வருடம் நிர்வாகத்துக்காகவும், வெளிநோயாளிகளுக்காகவும் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

இதை அன்றைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். இதேநாளில், கவர்னர் பிஷ்ணுராம் ேமதி, மருத்துவமனையின் பொன்விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.1843ல் மருத்துவமனை உருவாக்கப்பட்டுவிட்டது. என்றாலும், கட்டடம் திறக்கப்பட்ட 1912ம் வருடத்தைக் கணக்கிட்டு 1962ம் வருடம் இந்தப் பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்திற்கான குழுத் தலைவராக மெட்ராஸ் மேயராகவும், சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்த டாக்டர் பி.வி.செரியன் ெசயல்பட்டார்.

தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனை பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, ேதால், இதயம், குடல், சிறுநீரகம், இரைப்பை, குழந்தைகள் நலம் என மருத்துவத்தின் எல்லா துறைகளிலும் வளர்ச்சி கண்டது. குறிப்பாக இன்று எலும்பு முறிவு, கேன்சர், தலைக்காயம் ஆகியவற்றுக்குச் சிறப்பு மருத்துவமனையாக மாறி உள்ளது.
 
இதுகுறித்தான கூடுதல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார் ராயப்பேட்டை மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலரான ஆனந்த் பிரதாப்.
‘‘தமிழக வரலாறுல இடம்பிடித்த முக்கிய சம்பவங்கள்ல இந்த மருத்துவமனைக்கும் பங்கு இருக்கு. மகாகவி பாரதியாரை பார்த்தசாரதி கோயில் யானை மிதிச்சதும் இங்கேதான் சிகிச்சைக்காக தூக்கிட்டு வந்தாங்க. அந்தப் பழைய கட்டடத்தில் அவருக்கு சிகிச்சை நடந்துச்சு. ஆனா, இரண்டு நாட்கள் கழிச்சு அவர் இறந்து போனார்.

அப்புறம், எம்.ஆர்.ராதா கூட ஏற்பட்ட பிரச்னையில் குண்டடிபட்ட எம்ஜிஆரை இங்கே கொண்டு வந்தாங்க. பிறகு, எம்.ஆர்.ராதாவையும் முதல்கட்ட சிகிச்சைக்காக இங்கே அழைச்சிட்டு வந்தாங்க. இப்படி ஒண்ணு… ரெண்டல்ல… நிறைய சம்பவங்கள் இருக்கு. தவிர, அரசியல், சினிமா, பிசினஸ்னு பல்வேறு துறைகள்ல முன்னணியில இருக்கிற பல விஐபிக்கள் இங்க சிகிச்சைக்காக வந்திருக்காங்க...’’ என்றபடியே இன்றைய விஷயங்கள் பற்றி தொடர்ந்தார்.

‘‘அன்னைக்கு 120 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட ஆஸ்பிட்டல் இன்னைக்கு 834 படுக்கை வசதிகள் கொண்டதா மாறியிருக்கு. மொத்தம் 20 துறைகள் இருக்கு. ஒரு நாளைக்கு 900 பேர் வெளிநோயாளிகளா வர்றாங்க. உள்நோயாளிகளா மட்டும் 200 பேர் அட்மிட் ஆகுறாங்க. அதேபோல, 150 பேர் வரை வெளியேறுறாங்க.

எல்லாவிதமான அறுவை சிகிச்சைகளும் செய்றோம். ஒருநாளைக்கு ஏறக்குறைய முப்பது அறுவை சிகிச்சைகள் நடக்கும். சிறிய அறுவை சிகிச்சைகள் மட்டும் அறுபது வரை நடக்குது. இங்க அதிநவீன எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம். அந்தளவுக்கு
எங்ககிட்ட உபகரணங்களும், வசதிகளும் இருக்கு. அதேபோல, புற்றுநோய் துறைக்கு மட்டும் ஐந்து அடுக்குல தனி கட்டடமே இருக்குது.அங்க மருத்துவம், அறுவை சிகிச்சை, ரேடியோதெரபினு மூணு பிரிவையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்திருக்கோம்.

இங்க புற்றுநோய்க்குத் தரமான சிகிச்சை தரப்படுறதால நம்ம மாநிலத்துல இருந்து மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் மருத்துவத்திற்கு வர்றாங்க.  கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜுடன் இந்த மருத்துவமனை இணைஞ்சிருக்கு. அதனால, அங்குள்ள மாணவர்கள் இங்க படிக்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் வருவாங்க.

டிஜிட்டல் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்னு நவீன வசதிகளும் இங்க இருக்கு. சமீபத்துல குழந்தைகள் நலப் பிரிவை பழைய கட்டட வளாகத்துல தொடங்கியிருக்கோம். விபத்துக்கும், அவசர சிகிச்சைக்கும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கிறதால நிறைய கேஸ்கள் வந்திட்டே இருக்கும். மருத்துவர்களும் எந்நேரமும் தயாராகவே இருப்பாங்க...’’ என்கிறார் ஆனந்த் பிரதாப்.         

பேராச்சி கண்ணன்  

ஆர்.சந்திரசேகர்

ராஜா