ரத்த மகுடம் -51பிரமாண்டமான சரித்திரத் தொடர்

மன்னருக்கு உரிய எந்த ராஜரீக ஆடையும் இன்றி வீரனுக்குரிய உடையுடன் வந்த சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைக் கண்டதும் சக்கரவர்த்தினியின் புருவம் உயர்ந்தது. வைத்த விழியை அகற்றாமல் தன் கணவரை ஏறிட்டாள். ‘‘என்ன... புதிதாகப் பார்ப்பது போல் பார்க்கிறாய்..?’’ புன்னகையுடன் மன்னர் கேட்டார்.‘‘புதிதாகத் தெரிவதால்...’’ சாளுக்கிய பட்டத்தரசி மெல்ல பதில் சொன்னாள்.‘‘புதிதா..? என்ன மாற்றம் கண்டாய் என் உடலில்..?’’ கேட்டபடி உச்சி முதல் உள்ளங்கால் வரை தன்னைத்தானே விக்கிரமாதித்தர் பார்த்துக் கொண்டார்.

‘‘உடையில் என அதையே திருத்திச் சொல்லலாம்...’’ புன்னகைத்த சக்கரவர்த்தினியின் முகத்தில் வினாக்கள் பல பூத்தன. ஆனால், எதையும் அவள் வாயை விட்டுக் கேட்கவில்லை. ராஜாங்க விஷயம் என்பதால் தன் கணவராக எதுவும் சொல்லாத வரை எதையுமே அவள் என்றுமே கேட்டதில்லை. அன்றும் அதே வழக்கத்தைப் பின்பற்றினாள்.

‘‘சரி கிளம்புகிறேன்...’’ சாளுக்கிய மன்னர் தன் ஆடைகளை சரிப்படுத்திக் கொண்டார். ‘‘போஜனத்துக்கு வந்துவிடுவேன்...’’

‘‘விசாரணை நடக்கும் இடத்துக்குத்தானே..?’’ பட்டத்தரசியின் குரல் மன்னரைத் தேக்கி நிறுத்தியது. நின்று திரும்பினார்.

‘‘காலை முதல் அரண்மனை முழுக்க அதுதான் பேச்சாக இருக்கிறது... கடிகையைச் சேர்ந்த ஒரு வித்யார்த்தி... பார்ப்பதற்கு பாலகன் போல் இருப்பானாம்... பல்லவர்களுக்கு உதவி புரிந்ததற்காக நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்துக்கு இன்று காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்... அதுதான் கேட்டேன்...’’

கேள்வியும் கேட்டு தானாகவே பதிலையும் சொன்ன சக்கரவர்த்தினி இறுதியாக ஒன்றை மட்டும் வினவினாள். ‘‘நம் மகன் விநயாதித்தன் விரைவில் வந்துவிடுவான் இல்லையா..?’’‘‘கூடிய விரைவில்!’’ கண்கள் மலர விடையளித்து தன் மனைவியை நெருங்கிய விக்கிரமாதித்தர் மெல்ல அவள் சிகையைக் கோதினார்.

கணவரின் மார்பில் ஒன்றவேண்டும் என்று எழுந்த உணர்வை அடக்கி கலங்கிய கண்களுடன் மன்னரை ஏறிட்டாள். பேச்சு வரவில்லை. சரி என தலையசைத்தாள்.நிதானமாக தன் அந்தரங்க அறையை விட்டு வெளியே வந்த சாளுக்கிய மன்னர், உரிய ஆடைகளுடன் காத்திருந்த கங்க இளவரசனை தன் அருகில் அழைத்தார்.மரியாதையுடன் அருகே வந்து நின்றான் கங்க இளவரசன்.

வீரர்கள் அனைவரும் தொலைவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கங்க இளவரசனைத் தட்டிக் கொடுப்பதுபோல் அவன் இடையில் ஓலைக் குழல் ஒன்றை செருகினார்.பாசத்துடன் அவனை அணைப்பதுபோல் அவன் செவியில் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.

புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக மன்னரை ஏறிட்ட கங்க இளவரசன் தன் கண்களால் அவரிடம் விடைபெற்று புறப்பட்டான். விக்கிரமாதித்தரின் முகத்தில் புன்னகை பூத்தது!

‘‘தங்களை சாளுக்கிய போர் அமைச்சர் அழைக்கிறார்..!’’ கதவைத் தட்டிவிட்டு, ‘வரலாம்...’ என அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்த சாளுக்கிய வீரன் தன் முன் கம்பீரமாக அமர்ந்திருந்த கரிகாலனின் பெரிய தாயாரை வணங்கிவிட்டு விஷயத்தைச் சொன்னான்.
பதிலேதும் சொல்லாமல் இருக்கையை விட்டு எழுந்தவர் அந்த வீரனைத் தொடர்ந்தார். அவரது நடவடிக்கைகள் அனைத்தும் இதற்காகவே அவர் காத்திருப்பதை உணர்த்தியது.மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள்.

புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், காலடி ஓசை கேட்டுத் திரும்பினார். திடுக்கிட்டார். ‘‘நீங்கள் இன்னும் கிளம்பவில்லையா..?’’
‘‘எங்கு..?’’ தன் அக உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாமல் நிதானமாகவே பதிலுக்கு வினவினார் கரிகாலனின் பெரிய தாயார்.

‘‘நீதிமன்றத்துக்கு...’’‘‘எதற்கு..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் சுருங்கின. ‘‘விசாரணையை நீங்கள் காண வேண்டாமா..?’’
‘‘எந்த விசாரணை..?’’‘‘பல்லவர்களுக்கு, குறிப்பாக கரிகாலனுக்கு உதவி செய்ததாக கடிகையில் படிக்கும் வித்யார்த்தி ஒருவனை நேற்றிரவு கைது செய்திருக்கிறார்கள்... அதுகுறித்த விசாரணை இன்று நடைபெறுகிறது...’’

சொல்லிவிட்டு கரிகாலனின் பெரிய தாயாரை ஊன்றிக் கவனித்தார் சாளுக்கிய போர் அமைச்சர்.அந்த அம்மையாரின் முகத்தில் சலனம் ஏதுமில்லை. ‘‘நான் வரவில்லை... நீங்கள் சென்றுவிட்டு வாருங்கள்...’’பதிலை எதிர்பார்க்காமல் கரிகாலனின் பெரிய தாயார் தன் அறையை நோக்கி நடந்தார். அவர் மனதில் நேற்றிரவு பறந்த ஐந்து புறாக்கள் வட்டமிட்டன!

நீதிமண்டபம் முழுக்க மக்கள் கூட்டம் மண்டிக் கிடந்தது. அவர்களை இருபுறமும் ஈட்டிகளைக் கொண்டு அடக்கி வைத்த வீரர்களைத் தவிர யாரும் தப்ப முடியாதபடி அளவுக்குச் சற்று அதிகமாகவே காவல் இருந்தது.மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நீதிபதி ஸ்தானத்துக்கு அருகே வந்ததும் அந்த இருக்கையின் மீது கண்களை உயர்த்திய கடிகையைச் சேர்ந்த பாலகன் சில கணங்கள் அதிர்ந்து நின்றான்.

அந்த இருக்கையில் அமர்ந்திருந்தது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அல்ல! அவரது மூத்த சகோதரரான ஆதித்யவர்மர்! நீதிபதி இருக்கையில் கொடூரத்துக்கும் வஞ்சகத்துக்கும் பெயர் பெற்ற ஆதித்யவர்மர் அமர்ந்திருப்பதைக் கண்டு பாலகனின் நெஞ்சில் கூடச் சிறிது அச்சம் உண்டாயிற்று.

பிரேதத்தின் கண்களைப் போல் ஒளியிழந்து கிடந்தாலும், ஒளியிழந்த காரணத்தினாலேயே பயங்கரமாகத் தெரிந்த நீதிபதியின் கண்கள் தன்னை ஊடுருவிப் பார்ப்பதையும், அந்தப் பார்வையைத் தொடர்ந்து நீதிபதியுடைய வெளுத்த இதழிலே ஒரு புன்னகை விரிந்ததையும் கண்ட பாலகனுக்கு பல விஷயங்கள் குழப்பத்தை அளித்தாலும், தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் எழவில்லை.

சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரோ அல்லது சாளுக்கிய நீதிபதிகளோ அமரவேண்டிய இடத்தில் எந்தப் பதவியிலும் இல்லாத ஆதித்யவர்மர் எதற்காக அமர்ந்திருக்கிறார் என்ற விவரங்கள் புரியவில்லையே தவிர, விசாரணை ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கும் என்பதிலோ, தன் தலையைச் சீவும்படி தீர்ப்பு கூறப்படும் என்பதிலோ எந்த ஐயமும் பாலகனுக்கு ஏற்படவில்லை.

அப்படி மரணத்தை எதிர்நோக்கி நிற்கும் தருவாயில் அச்சம் காட்டுவதோ, எதிரிக்கு, தான் தாழ்ந்தவன் என்று பொருள்பட இடங்கொடுப்பதோ தகுதியற்றது என்ற காரணத்தால் தானும் ஒரு பதில் புன்முறுவலைக் கொட்டினான் பாலகன்.பல்லவர்கள் மீது அளவுக்கு அதிகமான வன்மத்தைக் கொண்டிருப்பவர் எனப் பெயர் எடுத்திருந்த ஆதித்யவர்மர், தன் உள்ளத்தில் படர்ந்திருந்த வன்மத்தை துளிக்கூட காட்டாமல் நீதியை மட்டுமே கவனிப்பவர் போல் விசாரணையை நடத்தினார்! சிறைப்பட்ட கடிகை பாலகனிடம் அனுதாபம் கொண்டவர் போல் நடித்தார்! எத்தனை கண்ணியமாக விசாரணை நடத்த முடியுமோ அத்தனை கண்ணியமாக நடத்தினார்! நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாக அன்று விதித்த தண்டனைகள் அனைத்தையும் நீதியின் பெயராலும் நேர்மையின் பெயராலும் விதித்தார்.

அர்த்த சாஸ்திரம் முதல் சுக்கிர நீதி, விதுர நீதி வரை அனைத்தையும் கசடறக் கற்றிருந்த பாலகன், அவர் நடத்திய விசாரணையையும் விதித்த தண்டனைகளையும் கவனித்தான். அந்த நீதி மண்டபத்தின் உயர்ந்த தூண்களையும் ஆதித்ய வர்மரையும் மாறி மாறிப் பார்த்து, ‘இங்கு தூண்கள்தான் உயர்ந்திருக்கின்றனவே தவிர நீதி தாழ்ந்துதான் கிடக்கிறது...’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அன்று நீதிமண்டபத்தில் ஏராளமான தமிழர்கள் சிறைப்பட்டு நின்றிருந்ததால் கடிகை பாலகன் கடைசியிலேயே விசாரிக்கப்பட்டான். நடுப்பகல் வந்த பிறகே அவன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இத்தனை நேரம் கழித்து விசாரிக்க எதற்காக ஊருக்கு முன்பு தன்னை அழைத்து வந்தார்கள் என்று எண்ணிப் பார்த்த பாலகன், சாளுக்கிய விரோதிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதைத் தனக்கு உணர்த்தவே ஆதித்யவர்மர் தன் விசாரணையைத் தாமதிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டான்.

சிறிது நேரத்தில் உயிரிழக்கப் போகிறவனையும் இறுதி வரை துன்புறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர பாலகனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.இத்தகைய பல படிப்பினைகள் கடிகை பாலகனுக்கு ஏற்படுவதற்கு முன்பாக, அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகள் எதிலும் குறை வைக்கவில்லை! தன் எதிரில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட கடிகை பாலகனை நோக்கி இளநகை புரிந்த ஆதித்யவர்மர் தன் கண்களை அவன் மீது நிலைக்கவிட்டார்.

அந்த பிரேதக் கண்களின் பார்வை அளித்த சங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள அப்புறமும் இப்புறமும் பார்த்த பாலகன் மீது மீண்டும் ஒருமுறை புன்னகையை வீசிய ஆதித்யவர்மர் எதிரேயிருந்த காவலர்களைப் பார்த்து, ‘‘இந்த பாலகனுக்கு ஆசனம் போடுங்கள். கடிகையில் கற்கும் வித்யார்த்திகள் மரியாதைக்கு உரியவர்கள்...’’ என்றார்.

இப்படிக் கூறியவரின் குரலில் நிதானம் இருந்ததையும், குரலும் பலவீனமாகவே வெளிவந்ததையும், அப்படி பலவீனமாக வந்த குரலிலும் ஒரு கடூரமும் கம்பீரமும் விரவி இருந்ததையும் பாலகன் கவனித்தான்.தனக்குச் செய்யப்படும் அத்தனை மரியாதையும் காவுக்கு அனுப்பப்படும் ஆட்டுக்குப் பூசாரி செய்யும் மரியாதையைப் போன்றது என்பதை சந்தேகமற உணர்ந்த பாலகன், அடுத்து நடப்பதை கவனிக்கத் தொடங்கினான்.

ஆதித்யவர்மர் உத்தரவுப்படி பெரிய ஆசனம் ஒன்று பாலகனுக்கு அளிக்கப்பட்டதும் விசாரணையைத் தொடங்கியவர் வேவு பார்க்கும் குற்றங்கள் சாட்டப்பட்ட பலரை முதலில் தன் முன்பு கொண்டு வர உத்தரவிட்டார்.நீதி நிர்வாக ஸ்தானிகன் குற்றச்சாட்டுகளைப் படிக்க, ஆதித்யவர்மர் கேள்விகளைக் கேட்டு தண்டனைகளை விதித்துக்கொண்டே போனார்.

குற்றச்சாட்டுகள் எல்லாமே வேவு பார்ப்பது சம்பந்தமாக ஒரே மாதிரியாக இருந்ததையும், முக்கியமானவர்களுக்கு எல்லாம் மரண தண்டனையும் மற்றவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதையும் கண்ட பாலகனுக்கு தன் நிலை தெளிவாகவே புரிந்தது.

குழுமி இருந்த பல்லவ மக்களுக்கு எந்த சந்தேகமும் எழாதபடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்லவ மன்னர்களைவிட தாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அதிக அனுதாபமும் அன்பும் கொண்டிருப்பதாக ஆதித்யவர்மர் காட்டிக் கொண்டார். வேறு வழியில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்ற புரிதல் அனைவருக்கும் ஏற்படும்படி அங்கு காட்சிகள் அரங்கேறின.

மற்றவர்களை எல்லாம் விடுவிடு என்று விசாரித்து தீர்ப்பு வழங்கிக்கொண்டே வந்த ஆதித்யவர்மர் பாலகனின் முறை வந்ததும் சற்று நிதானித்தார். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனை எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டார்! ஆம்.

கட்டளையிடவில்லை!
ஆசனத்தை விட்டு எழுந்து ஐந்தடி நடந்து ஆத்யவர்மரின் முன்னால் நின்றான் அந்தப் பாலகன்.நீதி மண்டபத்தின் மாடியில் தூணோடு தூணாக மறைந்தபடி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண், வில்லில் நாணைப் பூட்டி அம்பை எடுத்தாள்.
சரியாக பாலகனைக் குறிபார்த்தாள்.அவள், சிவகாமி!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்