ஒரு டிராஃபிக் போலீஸ்... ஒரு ரேசர்... ஒரு படம்!



‘‘படத்தோட டைட்டிலே ‘சிவப்பு மஞ்சள் பச்சை’தான். மக்களோடு புழக்கத்தில், நெருக்கத்தில் இருக்கிற வார்த்தை. படத்திற்கும் ரொம்பப் பொருந்தியது. கேரக்டர்களின் தன்மையும், இயல்பும், போக்கும்கூட இந்தத் தலைப்பின் ஊடாக வருது. ‘பிச்சைக்காரன்’ மாபெரும் வெற்றி அடைஞ்சதும் எல்லோரும் பெரிய ஆர்ட்டிஸ்ட் வைச்சு சீக்கிரமா படம் பண்ணி பணம் பண்ணுங்கனு சொன்னாங்க. ஆனாலும் மூணு வருஷங்கள் ஆகிப்போச்சு. இப்ப நல்லபடியாக ஒரு படம் கொடுத்திருக்கோம்னு ஒரு திருப்தி இருக்கு.

நிச்சயமாக யார்கிட்டேயும் கெட்ட பெயர் வாங்க மட்டேன். சக்ஸஸ் படம் கொடுத்திடலாம், நல்ல படமும் கொடுத்திடலாம். ஆனால், நல்ல சக்ஸஸ் படம் கொடுக்கிறதுதான் கஷ்டம்! சக்ஸஸ் பத்தியே கவலைப்படாமல் நல்ல படம் கொடுத்திடலாம். நல்ல படத்தைப்பத்தி கவலையே இல்லாமல் ஒரு சக்ஸஸ் படமும் கொடுத்திடலாம். இது இரண்டையும் சேர்த்து கொடுக்கத்தான் பாடுபட்டிருக்கேன். மக்கள் தீர்ப்பு சொல்லட்டும்...’’ பொறுமையாகப் பேசுகிறார் இயக்குநர் சசி. நம்பகமான இயக்குநர் என அடையாளமானவர்.

தாமதமாக வந்தாலும் ஒரு நல்ல சினிமாவுக்கான அனுபவத்தைத் தர முனைப்பு காட்டுறீங்க...அதிலிருந்து எப்படி நான் மாறுவேன்? அது என் அடையாளமாச்சே! எனக்கு இதுவரைக்கும் புகழும், பொருளும், மரியாதையும் அதுலதானே வந்தது? இத்தனை ஆண்டு காலமாக ஒரு மனுஷனை ஏன் தொடர்ந்து பார்க்கிறாங்க! அந்த நம்பிக்கையை குலைச்சிடக்கூடாது.

நல்லா வரலைன்னாகூட விடுங்க, அந்த முயற்சியில் உண்மை இருக்கணும். சின்ன வித்தியாசமாவது காட்டுவார்னு ஒரு நம்பிக்கையை தெரிஞ்சோ, தெரியாமலோ வளர்த்து வச்சிருக்கேன். நல்ல ஒரு லைசென்ஸ் கொடுத்து வைச்சிருக்காங்க. அதில் இதுவரைக்கும் புகார் கிடையாது. அதை நல்லபடியாக காப்பாத்தி வரணும்ங்கிறதும் என் ஆசை.

இப்பெல்லாம் படம் நல்லாயில்லைன்னா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிடுறாங்களே. மக்கள்கிட்டேயிருந்து ஒரு சின்ன மிரட்டல் இருந்துகிட்டே இருக்கே. வேறு வழி இல்லை. இங்கே நல்லதும் கெட்டதும் இருக்கு... ஆர்ப்பாட்டமும் இருக்கு. உங்களுக்குப் பிடிக்காததும் ஜெயிக்கும்.

ஒரு படத்தில என் ஜட்ஜ்மெண்ட் தவறினதை நான் புத்தி கொள்முதல் மாதிரிதான் எடுத்திருக்கேன். இங்கே எல்லாத்துக்கும் இடம் இருக்கு. ஒரு நல்ல சினிமா, கெட்ட சினிமானு முடிவு செய்கிற பட்சத்தில் அதுவே தராசு ஆகிடும். எது வேணுமோ அதை மக்கள் எடுத்துக்கட்டும்.

இந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ எடுக்கும்போதே ஒரு நல்ல சினிமா வந்திருக்குன்னு சொல்லத் துணிந்தேன். ஒரு வண்ணத்துப்பூச்சியை அறிய என்ன வழி? அதை பின்தொடர்ந்து காத்திருக்க வேண்டியதுதான். எனக்கு கலையும், படிப்பும், சினிமாவும் அப்படிப்பட்டதுதான்.
சித்தார்த் - ஜி.வி. பிரகாஷ் காம்பினேஷன் புதுசா இருக்கு...

சித்தார்த் டிராபிக் போலீஸ். ஜி.வி., ரேஸர். அவங்க இரண்டு ேபரும் ேமாதிக்க ேவண்டிய ஒரு சூழல் வருது. இரண்டு ேபரும் முற்றிலும் எதிரெதிர் ேகரக்டர்கள். குரூப் 1 பாஸ் ஆகியிருந்தும், விரும்பி இந்த வேலையைத் தேர்ந்தெடுக்கும் சித்தார்த். ஒரு கையைக் காட்டினால் ஆயிரம் பேர் நிற்கிறார்கள். இன்னொரு அசைவுக்கு ஆயிரம் பேர் வெளியே போகிறார்கள். அஞ்சு நிமிஷம் அதிகமாக ஒரு தகப்பனை குழந்தையைக் கொஞ்ச வைச்ச திருப்தி அவருக்கு இருக்கு.

ரோட்டைப் பார்த்தாலே ஒரு நாட்டோட லட்சணம் தெரிஞ்சிடும்னு சொல்வாங்க. பெரிசா வண்டியோ, ட்ராக்கோ பார்க்க ஜி.வி., கிட்ட காசு இல்லை. ரோட்டுல இரண்டு பைக்குக்கிடையில் உயிரை பயணம் வைச்சு ரேஸ் நடத்துறாங்க. இடையில் இவர்கள் நடுவில் வருகிற ஜி.வியின் அக்கா லிஜோமோள். இப்ப உறவுகள் எப்படி முடியுது, அதன் விளைவுகள் என்னன்னு உறவுகளையும், அன்பையும் பேசுகிறது படம்.

சித்தார்த் இதுமாதிரி போலீஸ் ஆக வந்ததில்லை. விரும்பி தேர்ந்தெடுத்தார். அவருடைய டெடிகேஷன் அதிகம். அவரும் இன்னொருத்தரும் ஒரு சீனில் நடிக்கிறாங்கன்னா வேற கேரக்டர் எப்படி நடிக்குதுன்னு மட்டும்தான் பார்ப்பேன். இவரை பார்க்கவே மாட்டேன். அவ்வளவு நம்பிக்கையான ஆர்டிஸ்ட்.  

பத்தொன்பது வயசுப் பையனா ஒருத்தர் வேணும். சல்லடை போட்டு, தேடியும் மனசில வந்தவர் ஜி.வி. மட்டும்தான். சித்தார்த் சீன் பேப்பர் இல்லாமல் ஷூட்டிங் வரமாட்டார். ஒரு தடவை காப்பி ஷாப் காட்சியில் கொஞ்சம் அதிகமாக செய்றாரோன்னு நினைச்சேன். அவரிடம் அப்படி கண்டிப்பாக வேண்டாமேன்னு சொல்லவும் செய்தேன்.

இதுவரைக்கும் நடந்த சம்பவங்களை அடுக்கி, இந்த இடத்தில் இந்த வளர்ச்சி இருந்தால் நல்லாயிருக்குமேன்னு சொன்னார். எனக்கு ஒரு கேரக்டரை அவர் இப்படி ஸ்கெட்ச் பண்றாரேன்னு ஆச்சர்யம் தாங்கல்லை. நானே நினைக்காதது அது. இப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட்கிட்டே நான் இதுக்கு முன்னாடி வேலை பார்த்ததும் இல்லை.

ஜி.வி.பிரகாஷ் இதில் புதுசா துறுதுறுன்னு இருக்கார். கல்யாணத்திற்குப் பிறகு நாம் கொஞ்சம் மாறுவோம் இல்லையா, அதுமாதிரி புது மாதிரி நடிப்பு. எனக்குப் பிடிச்சது. லிஜோமோள் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் சின்ன ரோல் செய்தார். அவரே இதில் ஹீரோயின். காஷ்மீரா, பூனா தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஜி.வி.க்கு ஜோடி.

சித்துகுமார்னு புது மியூசிக் டைரக்டர். ‘ஏனோ வானிலை மாறுதே’னு ஒரு குறும்படம் பார்த்தேன். எக்கச்சக்க ஹிட்ஸ் போயிருந்தது. காரணம் தேடினால் அவரோட அருமையான மியூசிக்கும் காரணம்.படிக்கிறது எப்படி உதவுது..?உதவாமல் வேறென்ன... ‘இலையின் நுனியில் ஒழுகி நிற்கிற ஒற்றைத் துளிக்குள் ஓராயிரம் துளிகள்...’னு படிக்கும்போது பார்வை விரியுது.

 ‘வெள்ளை நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் அமைதியாய் படுத்துறங்கும் இந்தப்பூனை தாங்குமா மிருகம்...’ என்ற வார்த்தையைப் படிக்கும்போது ஐயோ இதை எப்படி எடுத்துக்கன்னு திகைப்பா இருக்கு. ஷோபா இறந்தபோது வைரமுத்து ‘பூ ஒன்று புல்வெளியில் விழுந்ததுபோல மௌனமாய் என்னை பாதித்திருக்கிறாய்...’ எனச் சொல்ல இது சினிமாவில் எப்படி உருவெடுக்கும்னு ேயாசிக்கிறேன். இதையெல்லாம் சினிமா தருமா... எழுத்துத்தான் கொடுக்கும்!

நா.கதிர்வேலன்