ஷங்கர் 25



சென்ற 20ம் தேதி இயக்குநர் மிஷ்கினின் அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டம்தான் இப்போதைய சிறப்புச் செய்தி.

சாரைசாரையாக கார்கள் அவரின் அலுவலகம் வர துடிப்பானது சாலைப் போக்கு வரத்து. இயக்குநர் ஷங்கரின் 25வது ஆண்டு வெற்றிகரமான திரைப்பயணத்தை ஆராதிக்கும் விதமாக தமிழின் முப்பதுக்கும் மேலான இயக்குநர்கள் அங்கே வர மாலை ஆறு மணிக்கே பிரத்யேகமாக விழா கூடியது.

அந்த விழாவுக்கான அடிப்படையாக இருந்த மிஷ்கின் நம்மிடம் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதில் சில துளிகள்.‘‘விஷாலின் நிச்சயதார்த்தத்திற்காக ஹைதராபாத் பயணமானபோதுதான் இந்த யோசனை வந்தது. ஷங்கரின் நட்பைப் புரிந்துகொண்ட விதம் பற்றி லிங்குசாமி பேசிக்கொண்டிருந்தார். சமீபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் அவரோடு இருந்து பெரிய அளவில் ஹோட்டலில் விழா எடுத்தது பற்றி பேச்சு திரும்பியது.

உடனே உடனிருந்த பாண்டிராஜ், ‘நாம் ஏன் இதைப்போல இயக்குநர்கள் சேர்ந்து அவருக்கு சிறப்பு செய்யக் கூடாது?’ என கேள்வி எழுப்பினார். ஆக, ஹதராபாத்தில் இந்த ஒன்று கூடலுக்கான விதை விழுந்தது. அதற்கடுத்து ஷங்கரைத் தொடர்பு கொண்டபோது, அவர் கூச்சம் கொண்டார். ‘உங்கள் அன்பே போதுமானது’ என அவையடக்கத்தோடு சொன்னார். ‘உங்களுக்கு அடக்கம் இருக்கலாம். எங்களுக்கு அடக்கம் இல்லை. இதை நாங்கள் கொண்டாடியே ஆக வேண்டும்’ என்றோம்.

விளைவு இந்த அருமையான, வாழ்நாள் முழுவதும் நினைவில் தங்கும் சந்திப்பு சாத்தியமானது. இயக்குநர்கள் மணிரத்னம், கௌதம் மேனன், கே.பாக்யராஜ், விக்ரமன், லிங்குசாமி, மோகன் ராஜா, பா.இரஞ்சித், ராம், ராஜா, பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், எழில், அட்லி, மாரி செல்வராஜ், ஆதித்யா, கருணாகரன், சசி, பாலாஜி சக்திவேல், கே.எஸ்.ரவிகுமார்... என குழும ஆரம்பித்தார்கள். புத்தகங்கள் சூழ்ந்த அறையில் மிகுந்த இணக்கமான சூழலில் நடந்ததுதான் இதில் விசேஷம்!’’ என்ற மிஷ்கின் சில ஹைலைட்ஸை பட்டிய
லிட்டார்.                                          

ஷங்கர் கேக் வெட்டி மணிரத்னத்திற்கு ஊட்ட, சந்திப்பு இனிதே தொடங்கியது. ‘நான் எந்த சாதனைகளும் செய்ததாகத் தெரியவில்லை, என் மேல் வீசப்படுகிற எல்லா மலர்களையும் நான் மணி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்றார் ஷங்கர். ‘எவ்வளவு பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும், அதை அச்சுப்பிசகாமல் திரையில் காட்டிவிட முடிகிற திறமை ஷங்கருக்கு இருந்தது. அதை ஒரு கண்டிப்பான இயல்பாகவே ஆக்கிக்கொண்டார். அவரது கதைகள் அரசியல் சார்ந்தது. அதை அவர் எல்லோருக்கும் கொண்டு போய்ச் சேர்த்தார். அது சாதாரணமானதில்லை’ என்றார் மணிரத்னம்.

பாலாஜி சக்திவேல் இன்னும் ஷங்கர் சிறந்த மனிதராக வெளிப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

என் வெற்றிகளுக்குப் பின்னால் எந்நேரமும் ஷங்கர் சாரை நினைவுகூர்கிறேன் என்றார் அட்லி. ராம் அவருக்கேயான முத்திரையில் ஷங்கர் சார் முன்னணிக்கு வந்ததை ஆதாரங்களோடு சொன்னார். ஷங்கர் படங்கள் எடுத்து வைத்த அரசியல் பற்றி பா.இரஞ்சித் பேசினார்.

‘நான் அவருக்கு ஒரு பாடலை எழுதி, இசையமைத்து அவருக்காகப் பாடினேன். கௌதம் மேனன் மைக்கை எடுத்து பல பாடல்களைப் பாடத்தொடங்கினார். ஷங்கர் படப்பாடல்கள், மணி சாரின் பாடல்கள், இளையராஜாவின் பாடல்கள் என கணிசமாக ஷங்கரின் விருப்பங்களாகவே அது அமைந்தது. பாலாஜி சக்திவேல் பழைய இளையராஜாவின் பாடல் ஒன்றுக்கு அவ்வளவு பெரிய உடம்பைப்பற்றி கவலைப்படாமல் ஆடினார். நாங்கள் அவர் பிரபுதேவாவை விழுங்கிவிட்டாரோ என பயந்துவிட்டோம். நானும் வகை தொகை இல்லாமல் ஒரு ஆட்டம் போட்டேன்...’ - மிஷ்கின்

ஷங்கருக்கு அவரே எதிர்பாராத விதமாக 25 பரிசுப்பொருட்களை கொடுத்தோம். அவருக்கு இஷ்டமான பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததில் அவர் நெகிழ்ந்து போய்விட்டார்.

வசந்தபாலன் உருக்கமாகப் பேசினார். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் டீடெயில் போகும் விதத்தை படிப்படியாக விவரித்துக்கொண்டே வந்தார். அவரின் குணாதிசயங்கள் வெளிப்படும் விதம், ஒரு சினிமா ஆரம்பித்ததும் அவரது அக்கறைகள் அதில் வெளிப்பட்டு துலங்கும் விதமென ஆச்சர்யங்களைத் தொகுத்தளித்தார்.

ஷங்கர் முற்றிலும் தோழமையாக ஆகியிருந்தார். மணிரத்னம் சின்னக் குழந்தை மாதிரி பழகத் தொடங்கிவிட்டார். முதல் படம் தொடங்கி இப்போதுவரை படம் எடுத்த காரணகாரியங்கள், பிரச்னைகள் வந்தபோது அதை எதிர்கொண்ட விதம் பற்றியெல்லாம் பேசினார். மற்ற இயக்குநர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மனப்பூர்வமான, நேரிடையான பதில்கள் கிடைத்தன.

ஷங்கர் முற்றிலும் தோழமையாக ஆகியிருந்தார். மணிரத்னம் சின்னக் குழந்தை மாதிரி பழகத் தொடங்கிவிட்டார். முதல் படம் தொடங்கி இப்போதுவரை படம் எடுத்த காரணகாரியங்கள், பிரச்னைகள் வந்தபோது அதை எதிர்கொண்ட விதம் பற்றியெல்லாம் பேசினார். மற்ற இயக்குநர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மனப்பூர்வமான, நேரிடையான பதில்கள் கிடைத்தன.

நா.கதிர்வேலன்