தண்ணீர்த் தாய்!



ராஜஸ்தான் பாலைவனத்தில் நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் இவர்தான்

தமிழகம் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறது. இத்தனைக்கும் ஜீவ நதிகளும் ஏரிகளும் ஆறுகளும் குளங்களும் நிரம்பிய மாநிலம் இது!இந்நிலையில் இவை எதுவுமே இல்லாத பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் தண்ணீர் கொண்டு வந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் தனி ஒரு பெண்மணியான ஆம்லா ரூயா. யெஸ். முந்நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் அதிகமான நீர்த் தேக்கங்களை உருவாக்கி சுமார் 4 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார்!

‘‘பெருசா நான் எதையும் செய்யலை...’’ அடக்கத்துடன் ஆரம்பிக்கிறார் ஆம்லா ரூயா. ‘‘நம்ம முன்னோர்கள் செய்துட்டு இருந்த முறைகளை அப்படியே பின்பற்றுகிறேன். அவ்வளவுதான்! உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானை சுத்தி இருக்கிற கிராமங்கள் 1990களின் இறுதில, 2000ம் ஆண்டின் தொடக்கத்துல கடுமையான தண்ணீர் பஞ்சத்தால தவிச்சது. என் தாத்தாவும் அப்பாவும் லாரில தண்ணீரை கொண்டு போய் அந்த மக்களுக்கு கொடுத்தாங்க.

ஆனா, இதெல்லாம் தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப டிவில ஒரு நியூஸ் பார்த்தேன். 1900கள்ல நம்ம முன்னோர்கள் நீர்த் தேக்கங்களை பயன்படுத்தி அறுவடை செய்திருக்காங்கனு ஃப்ளாஷ் ஆச்சு!’’ என்ற ஆம்லா ரூயா, அதுதான் தனக்கு பொறி தட்டியது என்கிறார்.

‘‘ஆனா, எனக்கு எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியலை. குடும்பமா உட்கார்ந்து பேசினோம். நீர்த் தேக்கங்கள்தான் எங்க நோக்கம். பொருட் செலவுகளை விட களப்பணியாளர்கள்தான் நிறையத் தேவைப்பட்டாங்க. மக்கள்கிட்ட நேரடியா போய் விளக்கினோம். கூட்டம் கூட்டமா கலந்துகிட்டாங்க. ஆனா, பெரிதா வேலைகள்ல ஆர்வம் காட்டலை. எல்லாத்துக்கும் மேல அரசியல், அரசாங்கத் தலையீடு! தனி மனுஷியா எந்த அடையாளமும் இல்லாம இதைச் செய்ய முடியாதுனு புரிஞ்சுது.

உடனே ‘ஆகர்’னு ஒரு தொண்டு நிறுவனத்தை பதிவு செய்தேன். மக்கள்கிட்ட விடாம பேசி அவங்க மனசை மாத்தி திரட்டினேன். மெல்ல மெல்ல மக்களுக்கு ஆர்வம் வந்தது. சுத்துவட்டாரப் பகுதி மக்களும் பங்கேற்கத் தொடங்கினாங்க. எங்க வேலைகள் பத்தி வெளில தெரிய ஆரம்பிச்சது. பண உதவி செய்ய வெளிநாட்டினரும் முன்வந்தாங்க. கிராம மக்கள் ஒண்ணா சேர்ந்து இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல கொடுத்தாங்க. மொத்தமா எட்டு கோடி திரட்டினோம்...’’ என்ற ஆம்லா, கரைகளைக் கட்டுவதுதான் இந்த முறை என்கிறார்.

‘‘ஜல்லி, உடைந்த மலைப் பாறைகள், மரத்துண்டுகள்... இதெல்லாம்தான் எங்க கட்டுமானப் பொருட்கள். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... முன்னாடி செய்திட்டிருந்த விவசாயத்தை விட இந்த நீர்த் தேக்கங்கள் கட்டினபிறகு நான்கு மடங்கு விவசாய வேலைகள் நடந்தது; நடக்குது.
ராஜஸ்தான்ல மட்டுமில்ல, ஒரிசா, மகாராஷ்டிரானு பல மாநிலங்கள்லயும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கோம். அங்கயும் நீர்த் தேக்கங்களை உருவாக்கி இருக்கோம்.

வட இந்தியாவை விட நீர் ஆதாரங்கள் தென்னிந்தியாவுலதான் அதிகம். அங்க இதேமாதிரி நீர்த் தேக்கங்களை உருவாக்கி மழை நீரையும் நிலத்தடி நீரையும் சரியா கிணறுகள்ல சேமிச்சா தண்ணீர் கஷ்டமே இருக்காது. இந்தியா முழுக்க இந்தத் திட்டத்தை கொண்டு போகணும் என்பதுதான் என் லட்சியம்...’’

அழுத்தமாகச்  சொல்லும் ஆம்லா ரூயா, 1946ல் உத்தரப்பிரதேசத்தில் ஆன்மீக நம்பிக்கை உள்ள குடும்பத்தில் பிறந்தவர். இன்று மொத்தக் குடும்பமும் சமூக ஆர்வலர்களாக இருக்கின்றனர். ஏழைக் குழந்தைகளுக்காக பிரைமரி கல்வி கற்பிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 80க்கும் மேலான ஆசிரியை பணியிடை பயிற்சிகளை இலவசமாகக் கொடுத்து வருகிறார்கள்.

‘‘எல்லாமே நம்மகிட்ட இருக்கும்போது நாம ஏன் பஞ்சத்துல கஷ்டப்படணும்? விவசாயம், மழை, இயற்கை வளம் இதெல்லாம் உலகத்துலயே அதிக அளவுல நம்மகிட்டதான் இருக்கு. கொஞ்சம் நம் முன்னோர்களுடைய பழக்கங்களைக் கண்டுபிடிச்சு அதை முறைப்படுத்தி செய்தாலே மொத்த உலகமும் நம்ம கிட்ட சாப்பாட்டுக்கு நிற்கும்!’’ஆம்லா ரூயா சொல்வது சரிதானே?

ஷாலினி நியூட்டன்