கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-9



ஞானம் அருள்வாள் பிரம்ம வித்யாம்பிகை. கயிலைநாதனை துயரத்தின்போது மட்டுமே நாடும் தேவர்கள் அன்றும் பரமனை நாடி கைலாயம் வந்து சேர்ந்தார்கள்.‘‘அப்பனே! பரமேஸ்வரா! உலகத்தை வேதத்தின் படி படைக்கும் பிரம்மனுக்கு, வேத சாரமான பிரணவத்தின் பொருள் தெரியாததால் தங்கள் குமரன் அவரைச் சிறையிலிட்டான்.

இப்போது தங்கள் அருளால் அவர் விடுபட்டுவிட்டார். ஆனாலும், சிறையில் பல காலம் இடர் பட்டதால் படைக்கும் தொழிலையே பிரம்மதேவர் மறந்து விட்டார். உலகத்தின் இயக்கமே இதனால் ஸ்தம்பித்துள்ளது. அப்பனே! தேவர் பெருமானே! இந்த இன்னலைத் தீர்த்து அருளுங்கள் சுவாமி...’’ என்று தேவர்கள் அனைவரும் ஒரே குரலில் முறையிட்டனர்.

அவர்களின் எதிரில் பிரமை பிடித்தவர் போல நான்கு முகங்களிலும் உள்ள எட்டு கண்களாலும் விழித்துக் கொண்டிருந்தார் பிரம்மதேவர்.முருகன் சிறையிட்டதால் தன் நிலை மறந்து, பித்துப் பிடித்தவர் போல் இருக்கும் பிரம்மனைக் கண்டு ஈசனின் உள்ளம் இளகியது.
‘‘நான்முகனே! பூலோகத்தில் திருவெண்காடு என்னும் திவ்ய தேசத்தில் சமாதி நிலையில் இருந்து எம்மையும் உமை அம்மையையும் தியானம் செய். தக்க சமயம் கனியும்போது உனக்கு காட்சி தந்து ஞானத்தைத் தந்து அருள்வோம்...’’ என்று திருவாய் மலர்ந்தருளினார் மகேசன்.

பரமேஸ்வரன் ஆணையிட்ட படி திருவெண்காட்டிற்கு பிரம்மன் வந்து சேர்ந்தார். மனம் மொழி, மெய்யினால் பிரம்மன் அம்மையப்பனை தன் முன் செய்த வினையெல்லாம் ஓயும் வண்ணம் பூஜித்து வந்தார். ஈசன் மனம் கனிந்தது. பிரம்மன் மீது அருளை மழையாகப் பொழிய தட்சிணாமூர்த்தி ரூபத்தில் பரமேஸ்வரன் காட்சி தந்தார். தன் கண்முன்னே நிற்கும் வேத விழுப்பொருளை பலவாறு போற்றித்  துதித்தார் நான்முகன்.  

ஈசன் அவருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்தார். உபதேசம் இனிதே நிறைவுபெற்றதும் பிரம்மன், ‘‘சுவாமி! பிரம்ம ஞானமான வேதத்தை உபதேசித்து விட்டீர்கள். ஆனால், நான் இன்னமும் அந்த வேதத்தின் பொருளை அறிந்தபாடு இல்லையே... தேவதேவா! மேலும் என்னை சோதிக்க வேண்டாம். இந்த ஏழையை ரட்சித்து அருளுங்கள் பிரபோ!’’ என்று ஈசனின் பாதத்தில் சரணாகதி அடைந்தார்.

பிரம்மனின் இந்தச் செயல் அவரிடம் இருந்த ஆணவம் முழுவதும் நீங்கிவிட்டதை உணர்த்தியது. ‘நான்’ என்ற ஆணவம் அழியும்போதுதானே ஞானம் பிறக்கிறது? ஞானத்தைப் பெற தயார் நிலையில் இருந்த பிரம்மனைப் பார்த்து பரமன் பேசத் தொடங்கினார்.‘‘நான்முகனே! உன் ஆணவம் அழியவே இந்தத் திருவிளையாடல் புரிந்தோம். இனி நீ ஞானம் பெறுவதில் ஒரு தடையும் இல்லை. உனக்கு வேதத்தின் பொருளை அம்பிகை உபதேசிப்பாள். நான் சொல் என்றால் அவள் பொருள். நான் வேதம் என்றால் அவள் அந்த வேதத்தின் பொருள். ஆகவே, வேதத்தின் பொருளை உமை உனக்கு உபதேசிப்பதே தகும்!’’

இப்படி ஈசன் சொன்னதுதான் தாமதம்... நொடியில் அந்த இடத்தில் கோடி சூரிய பிரகாசம் தோன்றியது. அந்தப் பிரகாசத்தின் நடுவே மரகதக்கொடி போல அம்பிகை  தோன்றினாள். அவளது தோற்றமே வேத ஞானத்தை சொல்லாமல் சொல்லியது. ஆம்! அவள் தளிர்க் கைகளில் தாமரை மலரும், ஜப மாலையும் ஜொலித்தது. வேதத்தின் சாரமான ஈசனுக்கு வாச நறுமலர் சாற்றி அர்ச்சிக்க வேண்டும் என்பதை அவளது ஒரு கையில் இருந்த தாமரைப் பூ உணர்த்தியது.

மற்றொரு கையில் இருந்த ஜபமாலையோ மறையின் உட்பொருள் சிவ சிவா என்று ஜபிப்பதே என்று சொல்லாமல் சொல்லியது.
அவளது கீழிரு கரங்கள் அபய முத்திரையும் வரத முத்திரையும் காட்டி ‘பிரம்மனே! இனி உனக்கு பயமில்லை...’ என்று ஆறுதல் கூறியது.
இப்படி அழகிய வடிவத்தில் காட்சி தந்த அம்பிகையின் பொற்பாத கமலங்களுக்கு பிரம்மன் வந்தனம் செய்தார். அவர் மீது கருணை கொண்டு அம்பிகை, பிரம்ம ஞானத்தையும் பிரம்ம பதவியையும் அவருக்குத் தந்தாள்.

ஞானமும் பதவியும் பெற்றபின் பிரம்மன் சொல்லொணா ஆனந்தம் அடைந்தார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
‘‘இப்படி பிரம்மனுக்கு ஞானத்த வாரி வழங்கினதாலதான் இந்தத் தலத்து அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகைனு திருநாமம் வந்தது. இன்னிக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஞானத்தையும் அருளையும் வஞ்சனை இல்லாம இந்த அம்பாள் கொடுக்கறா...’’ பக்தியோடு சொல்லி முடித்தார் நாகராஜன்.

‘‘அது மட்டுமில்ல... அந்த அம்பாளோட சன்னதி பிரணவ சக்தி பீடம்னு கொண்டாடப்படுது...’’ என தன் பங்குக்கு சொன்னாள் ஆனந்தவல்லி.
கண்ணன் இருவரையும் வாயைப் பிளந்தபடி பார்த்தான். தாத்தாவுக்கும் பாட்டிக்கும் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது!
‘‘வேத ஞானத்தையே அம்பிகைதான் உபதேசம் செய்யறாங்கனு கேட்கவே பிரமிப்பா இருக்கு...’’ லதா வியந்தாள். ‘‘பெண் அடிமைத்தனம் இதுல சுத்தமா இல்லையே...’’ ‘‘சரியா சொன்னமா...’’ நாகராஜன் புன்னகைத்தார்.

‘‘அம்பாள் பெருமையை நாளெல்லாம் பேசிட்டு இருக்கலாம். லதா வந்திருக்கறது அவங்க மகனுக்கு பிள்ளை பிறக்கணும்னு. மெய்கண்டார் கதையை சொல்லுங்க...’’ ஆனந்தவல்லி இடையில் புகுந்தாள். கண்ணன் உற்சாகமானான். இன்னொரு கதை!நாகராஜன் சொல்லத் தொடங்கினார்.
திருத்துறையூர். பச்சைப் பசேல் என வயல்களும் பூந்தோட்டங்களுமாகக் காணுமிடமெல்லாம் எழில் கொஞ்சியது. ஆனால், அந்தக் காட்சிகளை ரசிக்காமல் வாடிய முகத்துடன் ஒரு தம்பதி திருத்துறையூர் வீதிகளில் தேரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் முகம் அவர்களது மனக்கவலையை வெளிச்சமிட்டுக் காட்டியது.

அவர்கள் வேறு யாரும் இல்லை, திருப்பொண்ணாகடத்தின் சிற்றரசன் அச்சுத கலப்பாளரும், அவரது மனைவி ராணி மங்களாம்பிகையும்தான். மனக்குறை தீர தங்கள் குலகுருவை நாடிச் சென்றுகொண்டிருந்தனர்.அப்போது, ‘‘அரன் நாமமே சூழ்க... வையமும் துயர் தீர்கவே...’’ என்று பைரவி ராகத்தில் தீந்தமிழ் கானம் அவர்கள் செவிகளை எட்டியது.

அதைக் கேட்டதும் ‘‘இது நமது குலகுரு சாட்சாத் சகலாகம பண்டிதரின் குரலேதான்! இவ்வளவு உருக்கமாக தேவாரப் பதிகங்களை வேறு யாராலும் பாட இயலாது. வா... அவரைக் காண்போம்...’’ என்று அச்சுத கலப்பாளர் தன் மனைவி மங்களாம்பிகையை அழைத்துக்கொண்டு சப்தம் வந்த  இல்லத்தில் பிரவேசித்தார். வந்தது யார் என்று எட்டிப்பார்த்தார் பண்டிதர்.

‘‘அடடே... வா அச்சுதா. இப்படி முன்னறிவிப்பின்றி இந்த குருவைக் காண வந்ததன் காரணம் என்ன? திருப்பொண்ணாகடத்தில் அனைவரும் நலம் தானே?’’‘‘தங்கள் அருளால் சுகத்துக்கு பஞ்சமில்லை சுவாமி. அனைத்து செல்வங்களையும் தங்கள் அருளாலும் ஈசன் அருளாலும்
பெற்றுவிட்டேன். ஆனால், என்னை பெற்றவன் என்று அழைக்க ஒரு குழந்தை இல்லையே சுவாமி... இந்த ஏழையின் குறையைத் தீர்த்து வையுங்கள்!’’ என்று தன் மனைவியோடு சேர்ந்து பண்டிதரின் பாதங்களில் விழுந்தார் அச்சுதர்.  

‘‘ஊராரின் ஏச்சையும் பேச்சையும் என்னால் கேட்க முடியவில்லை சுவாமி...’’ என்று மங்களாம்பிகையும் பண்டிதரின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு அழுதாள். பண்டிதர்  இருவரையும் எழுப்பி ஓர் ஆசனத்தில் அமர வைத்தார். அச்சுதரின் ஜாதகம் பண்டிதருக்கு மனப்பாடமாகத் தெரியும். மாணவனல்லவா? எனவே, இந்த ஜென்மத்தில் அச்சுதருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது அவர் நன்கு அறிந்த விஷயம்.

இருப்பினும், தான் அல்லும் பகலும் சொல்லும் தேவாரப் பதிகங்கள் விதியையே மாற்றும் என்று அவர் உறுதியாக நம்பினார்.  
‘‘கவலைப்படாதே அச்சுதா! பிறவிப் பிணிக்கே மருந்தாகும் தேவாரப் பதிகங்கள் ஒரு புத்திரனைக் கொடுக்காமலா போய்
விடும்? சற்று பொறு. கயிறு சாற்றிப் பார்க்கிறேன்...’’

பண்டிதர் சொன்னதைக் கேட்டதும் அச்சுதரின் மனதில் தெளிவு பிறந்தது. ஆனால், மங்களாம்பிகைக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘சுவாமி! கயிறு சாத்துதல் என்றால் என்ன?’’ என்று கேட்டாள்.‘‘நம் குறை தீர்க்க ஈசனை வேண்டி கண்களை மூடிக் கொண்டு ஒரு தேவாரப் பதிகப் பாடலை எடுப்பதைத்தான் கயிறு போட்டுப் பார்ப்பது என்பார்கள். அவ்வாறு எடுக்கும் பாடலில் நிச்சயம் நம் கேள்விக்கான பதில் இருக்கும்...’’

சொன்ன சகலாகம பண்டிதர் பன்னிரு திருமுறைகள் அடங்கிய ஓலைகளுக்கு தூப தீபம் காட்டி ஈசனை வேண்டி ஒரு பாடலை எடுத்தார்.
‘‘ஆஹா! ஈசனின் கருணையே கருணை. அச்சுதா, இரண்டாம் திருமுறையில் உள்ள ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் வந்துள்ளது. திருவெண்காடு ஸ்தலத்தைப் பற்றிய பாடல். உன் குறைக்கு இதில் பதில் இருக்கிறது!’’ ஆனந்தமாகச் சொன்னார் சகலாகம பண்டிதர்.
‘‘சுவாமி! வந்திருக்கும் பாடலை சற்று உறக்கப் பாடுங்கள்...’’ ஆர்வத்துடன் கேட்டார் அச்சுதர்.

‘‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே...’’

- என்ற தேவாரப் பாடலை பண் முறை தவறாமல் சகலாகம பண்டிதர் பாடினார். பின் மங்களாம்பிகையை நோக்கி, ‘‘அம்மணி! திருவெண்காட்டில் உள்ள இறைவனை, அங்குள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்ற மூன்று குளங்களிலும் நீராடி வழிபட, நினைத்த காரியம் நடக்கும் என்று திருஞானசம்பந்தர் உறுதியாக இந்தப் பாடலில் கூறுகிறார்.  

சம்பந்தர் வாக்கு என்றும் பொய்யாகாது. உடன் சென்று சம்பந்தர் சொன்னது போல் திருவெண்காடரை மூன்று தீர்த்தங்களிலும் நீராடி நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் இருந்து வழிபடுங்கள். நிச்சயம் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்...’’ என வலது கையை உயர்த்தி ஆசி
கூறினார் பண்டிதர்.

‘‘சுவாமி! தாங்கள் இப்படி எங்களுக்கு ஆசி வழங்கியது அந்த ஈஸ்வரனே வழங்கியது போல் இருக்கிறது...’’ உருக்கத்துடன் அச்சுதர் தன் கரங்களைக் கூப்பினார். பின், இருவருமாக பண்டிதரின் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு விடை பெற்றனர்...

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்