பிரேக் ஆன ஸ்ருதியின் காதல்!
இரண்டே ஆண்டுகள்தான். சற்றே ரீவைண்ட் செய்தால் 2017 டிசம்பரில் சென்னையில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமண நிகழ்ச்சி ஃப்ளாஷ் ஆகும்.இதில் கமல்ஹாசனும் அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் கலந்துகொண்டனர். இவர்கள் அருகிலேயே ஒரு வெளிநாட்டு இளைஞர் வேஷ்டி சட்டையுடன் வந்திருந்தார் அல்லவா..?நினைவோடையில் அவரை ஜூம் செய்யுங்கள்.
 அருகிலேயே பட்டுப் புடவையில் வெட்கப்பட்ட ஸ்ருதிஹாசனையும் சேர்த்து ஃபோக்கஸ் செய்யுங்கள்.விஷயம் புரிந்தது அல்லவா..? அதே. அந்த வெளிநாட்டு இளைஞரின் பெயர் மைக்கேல் கார்சேல். இவருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையில் ‘ஒரு இது’ இருப்பதாக அப்பொழுதே பேசப்பட்டது.அதற்கு ஏற்ப கடந்த இரண்டு வருடங்களாக தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் ஸ்ருதி நடிக்கவேயில்லை. இத்தனைக்கும் டாப் மோஸ்ட் ஹீரோயினாகவே அப்போது இருந்தார்.
இந்நிலையில் திடீரென அவர் நடிப்பதற்கு ஃபுல்ஸ்டாப் வைத்தது திருமணத்துக்குத்தான் என கிசுகிசுக்கப்பட்டது. மைக்கேல் கார்சேலை மணந்து குடும்ப வாழ்க்கையை வாழப் போகிறார் என்றே ஸ்ருதி குறித்து சுருதி சேர்த்தார்கள்.இச்சூழலில் திடீரென இப்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ படத்தில் நடிக்க ஸ்ருதி கமிட் ஆகியிருக்கிறார்.என்ன விஷயம்..? என யோசித்து முடிப்பதற்குள் -
மைக்கேல் கார்சேல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதித்திருக்கிறார்.`இந்த வாழ்க்கை எங்களை எதிரெதிர் துருவங்களில் இப்போது நிறுத்தியிருக்கிறது. எங்களை எதிரெதிராக தனித்தனி திசைகளில் பயணிக்கச் சொல்கிறது. ஆனாலும் இந்த இளம்பெண் இனி என் வாழ்வின் மிகச்சிறந்த நண்பராக இருப்பார்...’ என்ற டுவீட்டுடன் இன்ஸ்டாகிராமில் ஸ்ருதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார்.
அதாவது தங்கள் லவ் பிரேக் ஆனதை நாசுக்காக தெரிவித்திருக்கிறார். நாட்டுக்கு முக்கியமான செய்தி என்பதால் இந்த இதழின் முதல் செய்தியாக இதுவே இடம்பெற்றிருக்கிறது!
வம்பன்
|