விக்ரம் இதில் போலீசா திருடனா..?கடாரம்கொண்டான் சீக்ரெட்ஸ்

‘‘‘தூங்காவனம்’ ரெடியானதும் கமல் சார் பார்த்தார். ஓபனிங் சீன்ல ரெண்டு பேர் கார்ல காத்திருப்பாங்க. எஃப்எம்ல ‘சிரிப்பு வருது... சிரிப்பு வருது...’  பாடல் ஒலிக்கும். ஆக்சுவலா ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்...’ பாட்டைத்தான் நான் பயன்படுத்தி இருந்தேன். கமல் சார்தான் ‘சிரிப்பு வருது...’ பாடலை வைச்சு இன்னும் பொருத்தமா இருக்கும்னு சொன்னார்.அதாவது மொத்த ‘தூங்கா வனம்’ படத்துலயும் அவர் சொன்ன ஒரே கரெக்‌ஷன் இதுதான். எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமா இதை நினைக்கறேன்.

இப்ப அடுத்ததா அதே ராஜ்கமல் புரொடக்‌ஷன் தயாரிப்பில் விக்ரம் சாரை வைச்சு ‘கடாரம் கொண்டான்’ இயக்கி முடிச்சிருக்கேன். இந்த முறையும் கமல் சாரோட பாராட்டுக்காக காத்திருக்கேன்..!’’திருப்தியும் உற்சாகமுமாக பேசுகிறார் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா. கமலின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர் இவர்.கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம்! காம்பினேஷனே அசத்துதே?

நன்றி. விக்ரம் சார் இதுல செம ஸ்டைலிஷா இருப்பார். ஃப்ர்ஸ்ட் லுக் பார்த்துட்டு அவரோட லுக்கை எல்லாருமே சிலாகிச்சாங்க. ‘கடாரம் கொண்டான்’ சந்திரஹாசன் சார் இருக்கும்போதே ரெடியான ஸ்கிரிப்ட். கமல் சார் நடிப்பில் கொண்டு வர அவர் ஆர்வமா இருந்தார். ஆக, இது சந்திரஹாசன் சாரோட ட்ரீம் புராஜெக்ட்.

அவரோட மறைவுக்குப் பிறகு படம் டேக் ஆஃப் ஆனதுக்கு அவரோட ஆசீர்வாதம்தான் காரணம்னு நம்பறேன். இந்த ஸ்கிரிப்ட்டையே கமல் சாருக்காகத்தான் எழுதினேன். ஆனா, அவர் அரசியல்ல பிசியாகிட்டார். அவரால நேரம் ஒதுக்க முடியலை.

‘நாம வேற ஹீரோவை வைச்சுப் பண்ணலாமா’னு அவர்கிட்ட ஒருநாள் கேட்டேன். சந்தோஷமா க்ரீன் சிக்னல் கொடுத்தார். இந்த நேரத்துல ராஜ்கமல் தயாரிப்புல ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவி சார் இணை தயாரிப்பாளரா இணைஞ்சார். ஸ்கிரிப்ட்டை படிச்ச அவர், ‘விக்ரம் சார் நடிச்சா சூப்பரா இருக்குமே’னு சொன்னார்.

கமல் சாரும் ஹேப்பியாகி, ‘விக்ரம் கிட்ட முறைப்படி அப்ரோச் பண்ணுங்க’னு மட்டும் சொன்னார். ஆரம்பத்துல ‘கேம்’, ‘கேங்’னு டைட்டில் வைக்க நினைச்சோம். அப்புறம் தமிழ்ல டைட்டில் வைக்க முடிவு செய்தப்ப இப்படி ஒரு கம்பீரமான தலைப்பு அமைஞ்சது. ஆக்‌ஷன் த்ரில்லருக்கும் பொருத்தமான டைட்டில்.

மலேசியாவுல தமிழர் ஒருத்தர் ஒரு பிரச்னையில் மாட்டிக்கிட்டு தவிக்கிறார். அவரால அதுல இருந்து மீள முடிஞ்சுதா என்பதுதான் ஒன்லைன்.
வரலாற்றுல நம்ம ராஜேந்திர சோழனும் கடல் கடந்து போரிட்டு வெற்றி பெற்றவர். இதையெல்லாம் மனசுல வைச்சுதான் ‘கடாரம் கொண்டான்’னு வைச்சிருக்கோம்.

விக்ரம் இதுல போலீஸா?
நிறையப் பேரு அப்படித்தான் கேட்கறாங்க. அவர் போலீஸ் அதிகாரியா இல்ல திருடனா என்பதை படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க.
விக்ரம் சார் தவிர அக்‌ஷரா ஹாசன் ஒரு டஃப் ரோல் பண்ணியிருக்காங்க. அக்‌ஷரா ஜோடியா நிறைய புதுமுகங்களைத் தேடினோம். சரியா அமையல. ஒருநாள் எதேச்சையா கமல் சார்தான் ‘நீங்க நாசர் சாரோட மூணாவது பையன் அபிஹாசனை ட்ரை பண்ணலாமே’னு சஜஸ்ட் பண்ணினார்.

ஆறேழு வருஷங்களாவே அபியை எனக்குத் தெரியும் என்பதால் சரியான சாய்ஸா தோணுச்சு. அப்படித்தான் அபி இந்தக் கதைக்குள் வந்தார்.
படத்துல நடிக்கற எல்லாருக்குமே ஒரு வாரம் ஒர்க்‌ஷாப் நடத்தினோம். இதுல நாசர் சார், பூஜா குமார்னு பலரும் கலந்துகிட்டாங்க. சிங்கப்பூர் நடிகர் புரவலன், மலேசியன் நடிகர் ஜாஸ்மின், மும்பையைச் சேர்ந்த ஷெர்ரி, பாலிவுட் நடிகர் விகாஸ், மலையாள நடிகை லெனா இப்படி நிறைய பேர் இருக்காங்க.

டெக்னீஷியன்ஸ் டீமும் ‘தூங்காவனம்’ டீம்தானா?

கிட்டத்தட்ட! ஒளிப்பதிவாளர் மட்டும் புதுசு. இண்டஸ்ட்ரில இருக்கும் பல கேமராமேன்ஸ் என் நண்பர்கள்தான். என் கூடப் படிச்ச மூணு பேர் ஒளிப்பதிவாளரா கலக்கறாங்க.

ஆனா, நான் அவங்க எல்லாரையும் விட்டுட்டு மும்பைக்காரர் னிவாஸ் ஆர்.குத்தாவை கமிட் பண்ணியிருக்கிறேன். ‘தூங்காவனம்’ கேமராமேன் சானு ஜான் வர்கீஸின் அசோசியேட் அவர். சானு தெலுங்கில் பிசியா இருந்ததால, னியை கூட்டிட்டு வந்துட்டோம்.
இசை ஜிப்ரான். அவர் எனக்கு நண்பரைத் தாண்டி ஒரு சகோதரராகவே ஆகிட்டார். டாக்கி போர்ஷன் முடிச்சுட்டோம். ஒரு பாடல் ஷூட் மட்டும் பேலன்ஸ் இருக்கு.

‘தூங்காவனம்’ பிரேம் நவாஸ், இதிலும் ஆர்ட் டைரக்‌ஷனை கவனிக்கறார். ஸ்டண்ட் சீக்குவென்ஸ் பேசப்படும். ‘தூங்கா வனம்’ ஜில்ஸ் கான்சில் பிரமாதமா ஆக்‌ஷன் ப்ளாக்ஸை அமைச்சிருக்கார். இவரோடு நரேனும் இந்தப் படத்துல இணைஞ்சிருக்கார். பிரவீன் கே.எல்., எடிட் பண்ணியிருக்கார்.
என்ன சொல்றார் விக்ரம்?

அவர் செம கூல் அண்ட் எனர்ஜி பர்சன். இந்தக் கதையை விக்ரம் சார்கிட்ட ஒரு மணிநேரம் சொல்லியிருப்பேன். மேற்கொண்டு ஸ்கிரிப்ட்டை சொல்றதுக்குள்ள மொதல்ல சொன்ன விஷயத்திலிருந்து அவர் டீடெயிலா ரெண்டு மணிநேரம் வேற வேற கோணத்துல டிஸ்கஸ் பண்ணினார். பிரமிச்சிட்டேன். ஆனா,அவர்   இந்தப்  படத்தை பண்றாரா இல்லையானு என்னால கணிக்கமுடியல. முழுக்கதையும் சொன்னபிறகு அவர்கிட்ட நானே, ‘இந்தப் படம் பண்றீங்களா’னு வாய்விட்டு கேட்டுட்டேன்!

அவர் சிரிச்சுக்கிட்டே, ‘யெஸ்’னு சொன்னதும்தான் நிம்மதியாச்சு. பொதுவா நான் யாரோட ஒர்க் பண்ணினாலும் அவங்களைப் பத்தி நிறையவே ஹோம் ஒர்க் பண்ணுவேன். விக்ரம் சார் கமிட் ஆனதும், அவரைப்பத்தி தெரிஞ்சுக்க விரும்பினேன். என் நண்பரான இயக்குநர் ஏ.எல்.விஜய்கிட்ட கேட்டேன். அவர் விக்ரம் சார் பத்தி ரொம்பவே ரசிச்சு சொன்னார். அந்த விஷயங்களை மனசுல வச்சுக்கிட்டேன்.

மலேசிய ஷூட்ல அவர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. அவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜி. கூட நடிக்கற ஆர்ட்டிஸ்ட்ஸ்ல இருந்து டெக்னீஷியன்ஸ் வரை எல்லாருமே அவரைப் பார்த்ததும் ஹேப்பி மூடுக்கு வந்துடுவாங்க. தவிர, முகத்தைப் பார்த்தே நாம சோகமா இருக்கோமா இல்ல மகிழ்ச்சியா இருக்கோமானு கண்டுபிடிச்சுடுவார். மூட் அவுட் ஆனவங்களை சுலபமா கூல் பண்ணிடுவார்! ஒருநாள் காலைல தொடங்கின ஷூட் பிரேக்கே இல்லாம நைட்டும் தொடர்ந்தது.

அப்ப திடீர்னு அவர்கிட்ட இருந்து போன். ‘உடனே இந்த ரெஸ்டாரன்ட் கிளம்பி வாங்க’னு கூப்பிட்டார்.  பதறியடிச்சு அவரைப் போய்ப் பார்த்தா... எனக்குப் பிடிச்ச டிஷ்ஷஸ்ஸை ஆர்டர் பண்ணி வச்சிருக்கார். ‘இடைவிடாம ஷூட் போகுது. நீங்க சாப்பிட்டிருக்க மாட்டீங்க. அதான் டின்னருக்கு கூப்பிட்டேன்’னு சொல்லி என்னை சாப்பிட வச்சார்.

இன்னொரு நாள் மலேசியாவிலிருந்து துரியன் பழம் வாங்கிட்டு வந்து மொத்த டீமுக்கும் கொடுத்தார். இப்படி அவர் என்னை மட்டுமில்ல, அத்தனை பேரையும் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டார்!

மை.பாரதிராஜா