ரத்த மகுடம்-44



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

எல்லா தருணங்களிலும் விழிப்புடன் இருப்பவன் என பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மராலும் பல்லவ இளவல் ராஜசிம்மனாலும் போற்றப்பட்ட கரிகாலன், உண்மையிலேயே அத்தருணத்தில் செயலிழந்துதான் போனான்.

கணத்துக்கும் குறைவான நேரம்தான். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.காதலும் காமமும் அவன் கண்களை மறைத்த அந்தப் பொழுதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிவகாமி, தன் கையிலிருந்த குறுவாளால் சரேலென சோழ மன்னரின் வயிற்றில் குத்தி விட்டாள்!

அவளைத் தடுக்கவோ குறுவாளைத் தட்டிவிடவோ அவனுக்கு நேரம் ஒதுக்கப்படவேயில்லை; அதற்கான அவகாசத்தை சிவகாமியும் தரவில்லை.
அதிர்ச்சியுடன் ‘அப்பா...’ என அலறியபடி அவரை நோக்கிப் பாய முற்பட்டவன் -நிதானித்தான். காரணம், புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்த சோழ மன்னர்தான்!

‘‘என்ன கரிகாலா... என் மருமகள் என்னைக் கொலை செய்து விடுவாள் என்று நினைத்தாயா..?’’ அலட்சியத்துடன் தன் மகனைப் பார்த்துக் கேட்டார்.
‘‘தந்தையே...’’ ஓரக்கண்ணால் கரிகாலனை ஏறிட்டபடியே உரையாடலில் சிவகாமி புகுந்தாள்.கரிகாலன் அமைதியாக இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.‘‘சொல் சிவகாமி...’’ கட்டளையிடும் தொனியில் பேசிய சோழ மன்னரின் உதட்டில் புன்னகை பூத்தது.
‘‘தங்கள் மகன் அப்படி நினைக்கவில்லை...’’‘‘அப்படியா..?’’

‘‘ஆமாம்... தீர்மானித்தே விட்டார்!’’ கலீரென்று சிரித்த சிவகாமி சட்டென்று தன் உதட்டைக் கடித்தாள்.‘‘வெளியில் கேட்காது! அஞ்சாதே...’’ தைரியம் சொன்ன சோழ மன்னர் தன் மகனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். ‘‘சிவகாமி என்னைக் கொலை செய்துவிடுவாள் என முடிவே கட்டி விட்டாயா..?’’கரிகாலனின் கண்கள் சுருங்கின. புரிபடாத மர்மங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. என்றாலும் அவர்கள் இருவருமே அதை சொற்களால் வெளிப்படுத்தட்டும் என முன்பு போலவே அமைதியாக தன் இரு கரங்களையும் மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி நின்றான்.

அவனது உடல்மொழியைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ இருவரும் அவனைப் பொருட்படுத்தாமல் உரையாடலைத் தொடர்ந்தார்கள்.
‘‘அவரைக் குற்றம் சொல்லாதீர்கள் தந்தையே! அவரும்தான் பாவம் என்ன செய்வார்... கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் அல்லவா சாளுக்கிய மன்னர் தங்கள் மகனிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார்..?’’

‘‘அட என்னம்மா நீ..? யார் சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவதா..? ஆராய்ந்து பார்க்க வேண்டாமா..? பகுத்தறியும் பக்குவத்துடன்தானே இவனை வளர்த்தேன்..?’’‘‘அவரும் அப்படித்தான் வளர்ந்திருக்கிறார் தந்தையே!’’‘‘எப்படி..?’’

‘‘இதோ இப்படித்தான்...’’ நிமிர்ந்து நின்று தன் நெஞ்சில் கை வைத்தாள். ‘‘ஆய்ந்து பார்க்கும் தெளிவு இருப்பதால்தானே இப்போது நான் உயிருடன் இருக்கிறேன்! அவசரக் குடுக்கையாக உங்கள் மகன் இருந்திருந்தால் இந்நேரம் என் மீது பாய்ந்து கழுத்தை நெரித்திருப்பாரே...’’

‘‘அப்படி அவன் செய்யாததற்காக வருத்தப்படுகிறாயா..?’’ கலகலவெனச் சிரித்த சோழ மன்னர், நகர்ந்து தன் மகனின் தோளில் கைபோட்டார். ‘‘பயந்துவிட்டாயா..?’’‘‘இல்லை...’’ எனத்  தலையசைத்த கரிகாலன் அவரிடம் ஒண்டினான்.

சோழ மன்னர் கனிவுடன் அவன் சிரசைக் கோதினார். தந்தைக்கு ஆபத்தோ என்ற எண்ணம் ஒரு பக்கம்... அந்த ஆபத்தை தன் மனம் கவர்ந்தவளே ஏற்படுத்துகிறாளோ என்ற சந்தேகம் மறுபக்கம்... பாவம் குழந்தை. போர்க்களத்தில் நேருக்கு நேராக நூற்றுக்கணக்கானவர்களுடன் மோதும் வல்லமைபடைத்தவன், காதலி குறித்த சந்தேகத்தில் அல்லாடுகிறான்.‘‘இப்போது தெளிவாகி விட்டதா..?’’ மகனை நேருக்கு நேராக நிறுத்தி அவன் கண்களை ஊடுருவினார்.

‘‘ம்...’’
‘‘அடுத்து செய்ய வேண்டியதையும் தீர்மானித்து விட்டாயா..?’’
நாண் விடுபட்டதும் வில் எப்படி நிமிருமோ அப்படி கரி
காலன் நிமிர்ந்தான். பழைய தோரணையும் விஷமத்தனமும் அவன் தேகமெங்கும் பரவின. ‘‘அதுதான் சிவகாமி சொல்லிவிட்டாளே..!’’ கண்சிமிட்டினான்.

‘‘நான் சொன்னேனா..?’’ உண்மையிலேயே சிவகாமிக்கு எதுவும் புரியவில்லை.
‘‘ம்... முடிவே செய்துவிட்டேன் என்றாய் அல்லவா..?’’
சோழ மன்னரையும் கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்தாள். ‘‘ஆமாம்!’’
‘‘அதைத்தான் தந்தையிடம் குறிப்பிட்டேன். உன்னிடம் இருக்கும் குறுவாள், உண்மையில் குறுவாளே அல்ல! அது உயிரையும் குடிக்காது; காயங்களையும் ஏற்படுத்தாது!’’

முகத்தில் படர்ந்த உச்சி முடியைக் கைகளால் ஒதுக்கியபடி
கரிகாலனைக் காதலுடன் சிவகாமி பார்த்தாள்.
‘‘தேகத்தில் வைத்து அழுத்தும்போது அது தன்னால் உள்ளே சென்றுவிடும்! இந்த பொறி அமைப்புடன் குறுவாளைத் தயாரிக்கும் வல்லமை சீனர்களிடம் மட்டுமே உண்டு! அவர்களிடம் இருந்து இதை நீ பெற்றிருக்கிறாய்!’’

‘‘அப்பாடா! இப்பொழுதாவது உங்களுக்குப் புரிந்ததே!’’ என்றபடி சோழ மன்னரை ஏறிட்டாள் சிவகாமி. ‘‘உங்கள் மகன் புத்திசாலிதான் என்று நான் சொன்னபோது நம்பாமல் இருந்தீர்களே!’’
‘‘இப்போது நம்புகிறேன் மருமகளே!’’
‘‘இருவரும் சேர்ந்து என்னைக் கிண்டல் செய்வது இருக்கட்டும்... இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்... எந்த நேரத்திலும் சாளுக்கிய வீரர்கள் இங்கு வந்துவிடுவார்கள்...’’ என்று சொன்ன கரிகாலன் தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து சிவகாமியை நோக்கி நீட்டினான்.
‘‘இது எதற்கு..?’’

‘‘என் தந்தையைக் கொலை செய்ய!’’
சிவகாமியின் கண்கள் விரிந்தன.
சோழ மன்னர் கேள்வியுடன் தன் மகனைப் பார்த்தார்.

‘‘இது சாளுக்கிய மன்னரின் யோசனை! பல்லவ மன்னரைச் சேர்ந்த யாரையும் சிறை செய்யும் எண்ணம் விக்கிரமாதித்தருக்கு இல்லை! ஆனால், அவரது போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் என் தந்தையை சிறையில் அடைத்து சோழர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார்!’’
சிவகாமியும் சோழ மன்னரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘சாளுக்கிய மன்னருக்கு இதில் உடன்பாடில்லை. போரில் நேருக்கு நேராக பல்லவ மன்னருடன் சோழப் படையையும் சந்திக்க விரும்பு
கிறார். அதனால்தான் இந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறார்...’’‘‘எது..? உங்கள் தந்தையை நான் கொலை செய்யவேண்டும் என்பதா..?’’ சிவகாமியின் முகத்தில் சீற்றம் வெடித்தது.  

‘‘ஆம்!’’
‘‘உங்களுக்கு என்ன சித்தம் கலங்கிவிட்டதா..? என் மீதுள்ள வெறுப்பில் விக்கிரமாதித்தன்...’’

‘‘விக்கிரமாதித்தர்..!’’ கரிகாலன் அழுத்திச் சொன்னான். ‘‘அவர் மன்னர்! மரியாதையுடன் அழைப்பதுதான் பல்லவ இளவரசிக்கு அழகு!’’
பெருமூச்சுகளால் சிவகாமி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றபடி தொடர்ந்தாள். ‘‘சாளுக்கிய மன்னர், நான் உங்கள் தந்தையைக் கொலை செய்யக்கூடும் எனச் சொல்லியிருப்பார்... அதை நீங்களும் நம்பியிருப்பீர்கள்... அந்தப் போக்கிலேயே சென்று ஒரு நாடகத்தை அரங்கேற்றலாம் என்றுதான் இந்தப் போலியான குறுவாளை தந்தை மீது பாய்ச்சுவதுபோல் நடித்தேன்... இப்போது பார்த்தால்...’’
‘‘நிஜமான குறுவாளைக் கொடுத்து என் தந்தையைக் குத்தச் சொல்கிறேன்!’’

‘‘அதுதான் ஏன்..?’’ வெடித்தாள் சிவகாமி.‘‘உன் நோக்கமே அதுதானே..!’’‘‘என்ன சொன்னீர்கள்...’’ சிவகாமி ஆக்ரோஷத்துடன் குறுவாளை ஓங்கியபடி கரிகாலன் மீது பாய்ந்தாள்.லாவகமாகக் குனிந்து அந்த வீச்சில் இருந்து விலகிய கரிகாலன், அவள் கரங்களை கெட்டியாகப் பிடித்தான். ‘‘இவ்வளவு நேரம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டவள் ஏன் சட்டென ஆத்திரப்பட்டு அறிவை இழக்கிறாய்..?’’
‘‘உன் மீதுள்ள காதல்தான்!’’ அப்பாவியாக சோழ மன்னர் பதில் சொன்னார்.

அவரை முறைத்துப் பார்க்க மனமில்லாமல் கரிகாலனைப் பார்வையால் எரித்தாள். ‘‘எந்தவகையில் அறிவை இழந்துவிட்டேன்..?’’
‘‘சற்றுமுன் என்மீது பாய்ந்தாயே... அந்த முறையில்தான்..!’’
‘‘இப்போது நான் என்ன செய்யவேண்டும்..?’’‘‘நிஜமான இந்தக் குறுவாளால் என் தந்தையைக் குத்த வேண்டும்!’’
‘‘ஏன்..?’’

‘‘அப்போதுதான் அவரால் இச்சிறையிலிருந்து வெளியேற முடியும்..!’’
‘‘ஏன்... நம்மால் இவரை அழைத்துச் செல்ல முடியாதா..?’’‘‘முடியாது!’’ அழுத்திச் சொன்னான் கரிகாலன். ‘‘நாம் வந்த சுரங்க வழியையும் இந்நேரம் ராமபுண்ய வல்லபர் அடைத்திருப்பார்!’’‘‘எனில், காவலுக்கு நிற்கும் சாளுக்கிய வீரர்களை வீழ்த்திவிட்டு செல்வோம்...’’
‘‘நம்மால் அது முடியும்! ஆனால், இப்போது அப்படி வேண்டாம் என்று நினைக்கிறார் சாளுக்கிய மன்னர்...’’
‘‘அவர் நினைப்பதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டுமா..?’’ சிவகாமியின் முகம் சிவந்தது.

‘‘இந்த விஷயத்தில்! கவனி சிவகாமி... பல்லவ மன்னர் படைகளைத் திரட்டி வருகிறார். அவருக்கு உதவியாக இப்போது தந்தை உடன் இருந்தாக வேண்டும். படை அணிவகுப்பதற்குள் பல்லவ இளவரசரை நாம் அழைத்து வரவேண்டும். இவை எல்லாம் நடக்க வேண்டுமென்றால் இங்கிருந்து நாம் எந்தப் பிரச்னையும் போரும் இன்றி அமைதியாக வெளியேற வேண்டும். இதற்கு சாளுக்கிய மன்னர் கூறும் யோசனையே சரி...’’
‘‘எது..? தந்தையை நான் கொலை செய்ய வேண்டும் என்பதா..?’’‘‘சின்ன திருத்தம். குத்த வேண்டும் என்பது!’’
‘‘அதனால் என்ன பயன்..?’’

‘‘சிறைச்சாலையிலிருந்து என்னை அப்போதுதானே சிகிச்சைக்காக ஆதுரச் சாலைக்கு அழைத்துச் செல்வார்கள்..?’’ அதுவரை அமைதியாக நின்றிருந்த சோழ மன்னர் உரையாடலில் புகுந்தார். ‘‘அங்கிருந்து நம்மை தப்பித்துப் போகச் சொல்கிறார் சாளுக்கிய மன்னர்... என்ன கரிகாலா... நான் சொல்வது சரிதானே..?’’ஆமோதிக்கும் வகையில் கரிகாலன் தலையசைத்தான்.‘‘இந்தக் காரியத்தை நான் ஏன் செய்யவேண்டும்..?’’ சிவகாமி
புருவத்தை உயர்த்தினாள்.

‘‘என்னால் செய்ய முடியாது என்பதால்!’’ கரிகாலன் நிதானமாக பதில் அளித்தான்.
‘‘என்னால் மட்டும் முடியுமா..?’’‘‘உன்னால் மட்டுமே முடியும்!
ஏனெனில் பல்லவர்களை வேரோடு அழிக்க வந்திருப்பவள் நீதான்!’’

கரிகாலன் இப்படிச் சொன்னதுமே மீண்டும் ஒருமுறை அவனை நோக்கி குறுவாளை ஓங்கினாள் சிவகாமி.‘‘போதும் உங்கள் விளையாட்டு...’’ தொண்டையைக் கனைத்த சோழ மன்னர், ‘‘என் இடுப்புப் பகுதியில் அக்குறுவாளால் குத்து சிவகாமி..!’’ என்றார்.

‘‘அந்த இடத்தை ஏன் தேர்வு செய்கிறீர்கள் தந்தையே..?’’ கரிகாலன் வியப்புடன் கேட்டான்.‘‘வயிற்றைக் கிழித்து சிறிது ரண சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என முன்பே காஞ்சியின் தலைமை மருத்துவர் கூறியிருந்தார்! வேலை நெருக்கடியில் அது இயலாமல் போனது. இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்..!’’சிவகாமி தர்மசங்கடத்துடன் இருவரையும் பார்த்தாள்.

‘‘தயங்காதே சிவகாமி... சொன்னதைச் செய்! தந்தையைக் குத்திவிட்டு, வளைந்து செல்லும் பாதை வழியே வாயிலுக்குச் சென்று சாளுக்கிய வீரர்களை அழைத்து வா!’’ கரிகாலன் கட்டளையிட்டான்.‘‘நீங்கள்..?’’

‘‘நான் இங்குதான் இருப்பேன்! ஆனால், வீரர்களின் பார்வையில் படமாட்டேன்! தாமதிக்காதே... சொன்னதைச் செய்..!’’ கரிகாலனின் கட்டளைக்கு அடிபணிந்து அதன்படியே சோழ மன்னரைக் குத்திவிட்டு வாயிலை நோக்கி சிவகாமி ஓடினாள். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ராமபுண்ய வல்லபரின் உதட்டில் குரூரம் பூத்தது!     
                                     
 (தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்