அதிக பெண் வாக்காளர்கள்...அச்சத்தில் அரசியல் கட்சிகள்!
தேர்தல் 2019 ஸ்பெஷல் கவரேஜ்
இன்னும் சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது. இந்தியா முழுதும் இப்போதே தேர்தல் ஜுரம் உச்சத்துக்குப் போய்விட்டது. அரசியல் கட்சிகளின் கூட்டணி பேரம், எந்தத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்ற விவாதங்கள், இந்த முறை யார் ஜெயிப்பார்கள் என்ற வாக்குவாதம்... என பரபரக்கிறது பாலிடிக்ஸ். மதம், சாதி, இனம், மொழி, கட்சிகள் என நூற்றுக்கணக்கான திரிகள் ஒன்றோடு ஒன்று ஊடுபாவாய் பின்னி நெய்யப்பட்டிருக்கும் மாபெரும் வலைப்பின்னல்தான் இந்திய அரசியல்.
 இவை ஒவ்வொன்றுமே மற்றொன்றை ஏதேனும் விதத்தில் பாதிப்பவை. அதனால் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று எந்த கொம்பனாலும் தெளிவாகக் கணிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம்.மறுபுறம் சில தரவுகளின் அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவை இவ்விஷயம்தான் தீர்மானிக்கும், இவர்கள் தீர்மானிப்பார்கள் என்று ஓரளவு சரியாகச் சொல்லும் அரசியல் நோக்கர்களும் இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள் இந்த முறை கவனிக்க வேண்டிய விஷயம் என்று சொல்வது பெண் வாக்காளர்களின் பங்களிப்பு!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் பொதுத் தேர்தல்களில் பெண்களின் வாக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக பெண்கள் வாக்களிப்பதில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். ‘சென்றம் ப்ரோக்கிங்’ என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பெண்களுக்கு அரசியல் மீதான ஆர்வம் மெல்ல அதிகரித்து வருகிறதென தெரிவித்துள்ளது. மேலும், அரசியலில் வாக்களிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களின் எண்ணிக்கையுமேகூட கணிசமாக அதிகரித்துள்ளதாம்.
இந்த எழுச்சி எதிர்வரும் தேர்தலில் யார் ஆட்சியமைப்பது என்பதைக்கூட தீர்மானிக்க வல்லதாக இருக்கும் என்கிறார்கள்.இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் 45% இருந்த பெண் வாக்காளர்கள் கடந்த 2014ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் 65% ஆக உயர்ந்துள்ளார்கள். ஆண்கள் அப்போது 65% இருந்து இப்போது 67%ஆக மட்டுமே உயர்ந்துள்ளார்கள். தேர்தலுக்குத் தேர்தல் இந்த மொத்த வாக்குவீதம் பொதுவாகக் குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்டே வந்திருக்கிறது. ஆனால், ஆண் பெண் விகிதாசாரங்களுக்கான இடைவெளி ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாகக் குறைந்து வந்திருக்கிறது. அதாவது, ஆண்கள் அளவுக்குப் பெண்களும் இப்போது வாக்களிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தலை ஒப்பிடும்போது இப்போது கணிசமாக வாக்களிக்கும் விகிதம் அதிகரித்திருக்கிறது அல்லவா? இந்த அதிகரிப்புக்குக் காரணமே பெண் வாக்காளர்கள் அதிகரித்திருப்பதுதான்!அநேகமாக வரும் பொதுத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆண்களின் வாக்குகளைவிட அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக ‘சென்றம் ப்ரோக்கிங்’ அறிக்கை தெரிவிக்கிறது.பீகாரில் 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் உத்தரப்பிரதேசத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பெண்கள் வாக்கு கணிசமான அளவு அதிகரித்து ஆட்சியையே தீர்மானிப்பதாக இருந்தது என்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெறும் 40% இருந்த பெண் வாக்காளர்கள் 2009ம் ஆண்டு 44% ஆக உயர்ந்து 2014ம் ஆண்டில் 56% ஆக உயர்ந்திருக்கிறார்கள். இதேபோல் அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் 2007ம் ஆண்டுத் தேர்தலில் 40% இருந்தவர்கள் 2012ல் 58%ஆக உயர்ந்து, 2017ல் 64% ஆக வளர்ந்திருக்கிறார்கள்.
பீகாரிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. 2009ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் 40% இருந்தவர்கள், 2014ல் 57% ஆக உயர்ந்துள்ளார்கள். இத்தேர்தலில் ஆண்கள் பெண்களை விடக் குறைவாக வாக்களித்துள்ளார்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். மாநிலத் தேர்தலிலும் 2005ம் ஆண்டு 40%லிருந்து 2010ல் 55% ஆக உயர்ந்து 2015ல் 60% தொட்டுள்ளார்கள். இதிலும் ஆண்களைவிட பெண்களே சுமார் 10% அதிகமாக வாக்களித்துள்ளார்கள்.
சரி, பீகார், உத்தரப்பிரதேசம் எல்லாம் பெரிதாக வளர்ச்சியில்லாத மாநிலங்கள். நம் தமிழ்நாட்டு நிலவரம் எப்படி? 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்கள் 64%மும் பெண்கள் 54%மும் வாக்களித்திருக்கிறார்கள். அதுவே 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்கள் 74%, பெண்கள் 72% என உயர்ந்தது. 2014ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலிலோ ஆண்கள் 72%ல் தேங்கிவிட, பெண்கள் 74% என்று எகிறிக் குத்தியிருக்கிறார்கள்.
நமது சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலைதான். 2001ம் ஆண்டு 54% பெண்கள், 60% ஆண்கள் என வாக்களித்தார்கள். 2006ம் ஆண்டில் பெண்கள் 68%, ஆண்கள் 72% என்று இருக்க, 2011ல் இருபாலருமே 78% தொட்டார்கள். கடந்த 2016ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் ஆண் - பெண் இருபாலரின் வாக்குகளுமே சரிவடைந்துள்ளன. அதாவது இருபாலருமே 72%தான் வாக்களித்துள்ளார்கள். பொது வாக்கு விகிதம் குறைந்தாலும், ஆண் - பெண் விகிதாச்சாரம் சமநிலை அடைந்திருப்பதைக் கவனியுங்கள்.
பெண் கல்வி அதிகரித்து வருவது, பெண்கள் பணிக்குச் சென்று சமூகத்துடன் உரையாடத் தொடங்கியிருப்பது, இணையதளங்கள் வழியே உருவாகியிருக்கும் சமூக ஊடகங்களின் தாக்கம், அமைதியான வாக்குப்பதிவுச் சூழல் ஆகியவையே பெண்களின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் என்று சொல்கிறார்கள்.
கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருவதில் தொடங்கி, பெட்ரோல் விலை உயர்வு, மளிகைப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை குறித்தெல்லாம் ஆண்களைவிட பெண்களே அதிக எரிச்சலில் இருக்கிறார்கள். மறுபுறம் இந்த அரசுகள் பெண்கள் நலத்திட்டங்கள் பலவற்றையும் ஏட்டளவில் மட்டுமே வைத்திருக்கின்றன. இவை எல்லாம் தேர்தலில் பிரதிபலிக்குமா என்று தெரியவில்லை.
பெண்கள் அதிகமாக வாக்களிப்பது நிச்சயம் இந்திய ஜனநாயகத்துக்கு மிகவும் நல்லது. தரித்திரம் துடைக்க வீட்டை விட்டு வெளியே வந்த பெண்கள், சரித்திரம் படைக்க வாக்குச் சாவடிக்கும் வரட்டும்!
இளங்கோ கிருஷ்ணன்
|