தலபுராணம் - அரசுஅச்சகம்!



கடந்த அத்தியாயத்தில் மெட்ராஸுக்கு அச்சகம் வந்த கதையையும், பழமையான டயோசீசன் அச்சகம் பற்றியும் பார்த்தோம். அத்துடன் அச்சகம் குறித்த ‘தலபுராணம்’ முடிந்தது எனக் கருதக் கூடாது. இன்னொரு பழமையான அச்சகமும் இதே காலத்தில் செயல்பட்டிருக்கிறது.
அதுதான், அரசு மைய அச்சகம்.மின்ட் ஸ்ட்ரீட் என அழைக்கப்படும் தங்க சாலையிலிருந்து இயங்கி வரும் இந்த அச்சகத்தின் வயது 188.

அதற்குமுன் 18 மற்றும் 19ம் நூற்றாண்டு களில் இயங்கிய வேறு சில அச்சகங்களையும் பார்க்க வேண்டியது அவசியம். முதலாவதாக, அனாதை இல்லத்துடன் இணைந்த அச்சகம். மெட்ராஸில் இயங்கிய ஆண்கள் அனாதை இல்ல மாணவர்களுக்காக ஓர் அறநிலைப் பள்ளி நடத்தப்பட்டு வந்தது. இதை உருவாக்கியவர் டாக்டர் ஆண்ட்ரூ பெல். இந்தப் பள்ளியுடன் இணைந்து ஓர் அச்சகமும் நிர்மாணிக்கப்பட்டது.

அனாதை இல்ல மாணவர்களுக்குப் பள்ளியில் படிப்புடன் இந்த அச்சகத்தில் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. மெட்ராஸ் மாகாண அரசின் செய்தி இதழான ‘Gazette’ இங்கே அச்சடிக்கப்பட்டது. இந்த அச்சகத்திலிருந்து மெட்ராஸின் விவரக்குறிப்புகள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டது. இதிலிருந்து வந்த வருமானத்தைக் கொண்டு அனாதை இல்லம் நடத்தப்பட்டது. பின்னர் ஊட்டியில் ஆரம்பிக்கப்பட்ட லாரன்ஸ் ராணுவ இல்லத்துடன் இந்த அச்சகம் இணைந்து, லாரன்ஸ் இல்ல அச்சகம் எனப் பெயர் மாற்றமானது.

சர் ஹென்றி லாரன்ஸ் என்பவர் இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக இந்தியாவில் பள்ளிகளைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு ஊட்டி லவ்டேலில் லாரன்ஸ் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.  இதைப் போலவே, 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இங்குள்ள நிர்வாகம், மொழி, சட்டம், மதம் மற்றும் சுங்கவரி பற்றி அறிந்து கொள்ள College of Fort St.George என்ற பெயரில் ஒரு கல்லூரியை நுங்கம்பாக்கத்திலுள்ள டிபிஐ வளாகத்தில் ஏற்படுத்தினர். தொடர்ந்து இதனுள்ளே மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி உருவாக்கப்பட்டது.

இந்த சொசைட்டியிலிருந்து ஓர் அச்சகமும், புத்தக விற்பனை நிலையமும், நூலகமும் நடத்தப்பட்டன. இந்த அச்சகத்திலிருந்து பல்வேறு தமிழ் நூல்களும், மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்பட்டன.இச்சங்கத்தில் தாண்டவராய முதலியார், முத்துச்சாமி பிள்ளை, தஞ்சை சரபோஜி மன்னரின் அவைப் புலவராக இருந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், மதுரைக் கந்தசாமிப் புலவர்  உள்ளிட்ட பல சிறந்த தமிழ்ப் புலவர்கள் தமிழாசிரியர்களாக இருந்ததால் பல்வேறு நூல்கள் அச்சுக் கண்டன.

‘‘1817ம் வருடம் திருவேற்காடு சுப்பராய முதலியாரால் எழுதப்பட்ட, ‘தமிழ் விளக்கம்’ நூல் மீண்டும் இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் உரைநடை இலக்கண நூலாகும்...’’ என ‘அச்சும் பதிப்பும்’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் மா.சு.சம்பந்தன்.
இப்படியாக அன்றைய மெட்ராஸில் அச்சகங்கள் இயங்கி வந்தன.

ஆனால், 1830கள் வரை ஐரோப்பியர் தவிர, மெட்ராஸைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் யாரும் அச்சகம் அமைக்க முன்வரவில்லை. காரணம், அன்று நடைமுறையில் இருந்த சட்டம். 1835ம் வருடம் கவர்னர் ெஜனரலாக இருந்த சார்லஸ் மெட்கஃப் இந்தச் சட்டத்தை நீக்கினார். இதன்பிறகே, உள்ளூர் மக்கள் அச்சமின்றி அச்சகத்தைத் தொடங்கினர். இதற்கிடையேதான் அரசு அச்சகமும் கோட்டையினுள்ளே 1831ம் வருடம் தொடங்கப்பட்டது. ஆனால், அரசு தன் அச்சக வேலைகளை 1800ம் வருடமே ஆண்கள் அனாதை இல்லப் பள்ளியுடன் இருந்த அச்சகத்தில் ஆரம்பித்துவிட்டது.

ஒருகட்டத்தில், அரசின் அச்சுப் பணிகள் எல்லாம் இந்த ஆண்கள் இல்ல அச்சகத்தில் குவிந்ததால், வேலையை விரைவாக முடிக்க வேண்டி மற்ற தனியார் அச்சகங்களுக்கும் பணிகள் கொடுக்கப்பட்டன. இந்த பின்புலத்தில்தான் அரசு அச்சகம் உதயமானது.
பிறகு, 1832ம் வருடம் ஜனவரி மாதம் கோட்டையிலிருந்த அரசு அச்சகத்தின் முதல் பணியாக பனிரெண்டு பக்கங்கள் அடங்கிய புனித ஜார்ஜ் கோட்டையின் Gazette அச்சடிக்கப்பட்டது.

இத்துடன், தலைமை கமாண்டரின் உத்தரவுகள், ராணியின் கட்டளைகள் மற்றும் சில வெளி வேலைகளும்கூட இந்த அச்சகத்தில் செய்யப்பட்டன.
1845ம் வருடம் ஆங்கிலேயர்கள் தயாரித்த மூன்று கொலம்பியன் அச்சு இயந்திரங்கள் மற்றும் சில மர அச்சு இயந்திரங்களுடன் புதிதாக ஓர் அச்சுக் கூடம் அரசு அச்சகத்தில் நிறுவப்பட்டது. நாற்பது பேர்களைக் கொண்டு இந்தக் கூடம் இயங்கியது.

பத்தாண்டுகள் கழித்து அரசின் செயற்பாடுகள் அனைத்தும் இந்த அச்சகத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. தவிர, நாற்பது பேர் என்பது 96 பேர்களானது. இந்நேரம், பைண்டிங் பிரிவும் சேர்க்கப்பட்டது. அத்துடன் புத்தகப் பணிகளும் தொடங்கப்பட்டன. 1859ம் வருடம் வருவாய் வாரியம் நடத்தி வந்த அச்சகம், அரசு அச்சகத்துடன் இணைந்தது. அதுமட்டுமில்லாமல், முன்பு தனியாரிடம் கொடுக்கப்பட்ட வேலைகள் எல்லாம் அரசு அச்சகத்திலேயே மேற்கொள்ளப்பட்டதால் செலவுகளும் குறைந்தன. இதனால், ஆங்கிலேயர்கள் உற்சாகமடைந்தனர்.

அதிகப்படியான பணிகள் குவிந்தால் மட்டும் அதை முன்பு குறிப்பிட்ட லாரன்ஸ் இல்ல அச்சகத்தில் கொடுத்து அச்சடித்தனர்.
1861ல் இந்தியாவிலிருந்த அரசு அச்சகத்திலேயே மெட்ராஸ் அச்சகம்தான் முதல்முறையாக அச்சுக் கோர்ப்பவர்களுக்கு Piece Work என்ற ஊதிய முறையை அறிமுகப்படுத்தியது. அதாவது, எத்தனை அச்சுக் கோர்த்திருக்கிறார்களோ அதற்கேற்ப ஊதியம். ஆயிரம் எழுத்துகளுக்கு இரண்டணா வழங்கப்பட்டது. பின்னர் ஒரு மணிநேரத்திற்கு இரண்டணா என மாற்றப்பட்டது. தவிர, மற்ற ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் அளிக்கப்பட்டது.

அன்று அரசு அச்சகத்தில், பொதுத்துறை, இராணுவம், வருவாய் வாரியம், புத்தகம், தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ரகசியக் கோப்புகள் போன்ற பணிகள் மட்டும் நடக்கவில்லை.ஆங்கிலம், தமிழ், ெதலுங்கு, கன்னடம், மலையாளம், லத்தீன், கிரேக்கம் எனப் பல்வேறு மொழிகளில் தேர்வுத் தாள்களும் அச்சடிக்கப்பட்டன.

1868ம் வருடம் சிறைக்குள் ஓர் அச்சகம் அமைக்கப்பட்டு, சிறைவாசிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் அச்சுக் கோர்க்கவும், கூடவே பிரஸ்மேனாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், நிறைய பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்ததால் இந்தப் பணி சிரமமாக இருந்தது.

‘‘1884ம் வருடம் வரை அரசு அச்சகத்தில் 740 பேர் வரை பிரிண்டிங் மற்றும் பைண்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். 27 அச்சு இயந்திரங்களும், 44 ஹேண்ட் பிரஸ்ஸும் இருந்தன. மூன்று லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பணிகள் அந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்டன...’’ என 1885ல் வெளியான ‘Manual of the Administration of the Madras Presidency-Vol I’ நூலில் குறிப்பிட்டுள்ளார் மெக்லீன்.

இந்த அரசு அச்சகம் 1888ம் வருடம் வரை கோட்டையிலிருந்த அரசு அலுவலகத்தின் தரைத் தளத்திலிருந்து செயல்பட்டு வந்தது. இந்நேரம் மின்ட் தெருவிலிருந்த இராணுவ ஆடைக் கிடங்கு வேறு இடத்திற்கு மாறியது. அந்த இடத்துக்கு அரசு அச்சகம் சென்றது. ஆனால், போதுமான வசதிகள் அங்கே இல்லாததால் 1912ல் புதிய அச்சகக் கட்டடம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனால் அதுவரை மவுண்ட் ரோட்டிலிருந்த லாரன்ஸ் இல்ல அச்சக வளாகத்திலிருந்து அரசு அச்சகம் செயல்பட்டது.

இதேநேரம் அரசு அச்சகம், அரசு அலுவலகங்களுக்கான ரப்பர் ஸ்டாம்புகளையும் தயாரித்து வழங்கியது. புதிய கட்டடம் முடிந்ததும் மின்ட் தெருவிற்கே அச்சகம் சென்றது. மவுண்ட் ரோடு கட்டடம் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகளுக்கான விற்பனை நிலையமாக மாறி இன்றுவரை செயல்பட்டு வருகிறது.  

‘‘1920ம் வருடம் அரசு அச்சகத்தில் பணிகள் அதிகரித்தன. காரணம், முதல் பொதுத் தேர்தலுக்காக சுமார் 15 ஆயிரத்து 500 பக்கங்கள் வரை முதல் வாக்காளர் பட்டியல் அச்சடிக்கப்பட்டதே...’’ என இந்த அரசு அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்ட, ‘The Madras Year Book 1923’ நூல் குறிப்பிடுகிறது.
அப்போது இந்த அரசு அச்சகத்தில் 1655 பேர் பணியாற்றினர். தவிர, 360 சிறைவாசிகளும் அங்குள்ள அச்சகத்தில் வேலை பார்த்துள்ளனர்.
இதன்பிறகு, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலிருந்து செயல்பட்ட அச்சகம், அரசு அச்சகத்துடன் இணைந்தது. உயர்நீதிமன்றத்திலுள்ள இந்த அரசு கிளை அச்சகம், 1862ம் வருடத்திலிருந்தே செயல்பட்டு வந்த ஒன்று. ஆரம்பத்தில் தனியார் ஒப்பந்தம் மூலம் இயக்கப்பட்டது.

இந்த உயர்நீதிமன்ற அச்சகத்தில் தினசரி வழக்குகளுக்கான பட்டியல், முக்கியமான படிவங்கள், தேவையான பதிவேடுகள் எல்லாம் அச்சடிக்கப்பட்டன. இன்றும், இந்த அச்சகம் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து இதே பணிகளைச் செய்து வருகிறது.இதனைத் தொடர்ந்து 1940களில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ‘போர் பிரிவு’ என்கிற புதிய பிரிவு அச்சகத்தில் தொடங்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் போர் பற்றிய பிரசாரமும், உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய விஷயங்களும் அச்சடிக்கப்பட்டன. குறிப்பாக, போர் பற்றின வார மற்றும் மாதப் பத்திரிகைகள், ‘Air Raid Precautions journal’ போன்றவை அச்சிடப்பட்டன.

இன்று தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் கீழ் அரசு அச்சகம் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 5.5 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த அச்சகத்திலிருந்து இப்போது தமிழக அரசின் கெஜட், சட்டமன்ற விவாதம், சட்டமன்றத்தின் பல்வேறு குழுக்களின் அறிக்கைகள், பட்ஜெட் ஆவணங்கள், டி.என்.பி.எஸ்.சி புல்லட்டின், தேர்தல் வாக்குச்சீட்டு, தலைமை கணக்காளர் அறிக்கைகள், மோட்டார் வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள், வணிகவரி படிவங்கள், கவர்னர், முதலமைச்சர், தலைமை நீதிபதி, சபாநாயகர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களுக்கான லெட்டர் ஹெட், கருவூல சலான்கள், அரசுத் துறைக்கான விடைத்தாள்கள் என அரசு சார்ந்த அனைத்தும் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட அச்சகம்

* மாவட்ட அச்சகம், மெட்ராஸ் மாகாணம் முழுவதும் 1855ம் வருடம் ஏற்படுத்தப்பட்டது.
* அப்போது மாவட்ட கெஜட் முதல்முறையாக வெளியிடப்பட்டது.
* ஆனால், பொருளாதாரக் காரணங்களால் இருபது மாவட்ட அச்சகங்கள் 1917ம் வருடம் மூடப்பட்டுவிட்டன.
* இன்று மதுரை, மதுரை ஐகோர்ட் வளாகம், திருச்சி, சேலம், புதுக்கோட்டை, விருத்தாசலம் போன்ற இடங்களில் அரசு கிளை அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பேராச்சி கண்ணன்

பால்துரை

ராஜா