சத்ருபோலீஸ் அதிகாரிக்கும், கிரிமினல்களின் தலைவனுக்கும் நடக்கும் பழிவாங்கும் விடாப்பிடி யுத்தமே ‘சத்ரு’.கதிர் துடிப்பான, அநீதிகளை வேரறுக்கும் அதிகாரி. கிரிமினல்களுடன் மோதும்போது சில அதிரடியான, சுயேச்சையான முடிவுகளை எடுத்து மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகிறார். இவ்விதமே ஒரு தடவை கடத்தப்பட்ட சிறுவனைப் பிடிக்கப் போய் ஒரு கிரிமினலைக் கொன்றுவிடுகிறார். மேலதிகாரியின் கோபத்தால் பணிஇடைநீக்கம் நடக்கிறது.

அதே நேரம் கொல்லப்பட்டவனின் கேங் கோபப்பட்டு கொதிக்கிறார்கள். அவர்களின் தலைவன் லகுபரன் வெறுப்பின் உச்சத்திற்குப் போய் கதிரின் மொத்தக் குடும்பத்தை ஒரே நாளில் கொலை செய்யத் துடிக்கிறார்.

கதிர் தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, கடத்தல் கும்பலைப்  பழிவாங்கினரா என்பதே படம்.ஒரே நாளில் நடந்து முடிகிற கதை. அதற்கேற்ப கதை அமைந்து விடுவதால் ஆரம்ப விறுவிறுப்பிற்கு ஏற்றமாதிரி பவர் ப்ளே ஏரியா அமைந்துவிட்டது. அதையே உள்வாங்கிக்கொண்டு விறைப்பு, முறைப்பு காட்சிகளால் திரைக்கதை சூடுபிடித்த வகையில் அதிரடி காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நவீன் நஞ்சுண்டன்.

யதார்த்தமான போலீஸ் வாழ்க்கை, உயர் அதிகாரிகளின் தொடரும் ஈகோ, குற்றவாளிகளின் மனநிலை எனத் திருத்தமாகக் காட்டிய விதத்திலும் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர்.குழந்தைக் கடத்தலின் போது குற்றவாளிகள் போடுகிற ஸ்கெட்ச் தலைக்குள்ளே போய் பயமுறுத்துவது உண்மை. சுதந்திரமாகப் பதவியைக் கையாளும் கதிர் உடல் அமைப்பில் பயமுறுத்தாமல், நடவடிக்கைகளில் பக்குவ நடிப்பைக் காட்டுகிறார். அதையே அவர் பரபரப்பிலும், ஆக்‌ஷனிலும் காட்டி திக்திக்… திடுக் திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

அந்தக் கன்னக்குழி சிருஷ்டி டாங்கேதான் கதாநாயகி. ஆனால், அவருக்கு கொஞ்சமாக காதல் சொல்லிவிட்டு மீண்டும் பரபர கதையோட்டத்திற்கு பயணப்படுகிறது. ‘ராட்டினம்’ படத்தின் ஹீரோவான லகுபரன்தான் கும்பலின் தலைவன். முகத்தில் தெரியும் வன்மம், கதிரை சரியான இடங்களில் போனில் பிடித்து டென்ஷன் ஏற்றுவது என நமக்கும் அதே டென்ஷனை ஏற்றிவிடுகிறார் லகுபரன். இனி வகையான வில்லன் வேடங்களில் அவரைப் பார்க்கலாம் போல.

பொன்வண்ணன், நீலிமா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பு. அந்தக் கடைசி 30 நிமிடமும் உடன் வருகிற சின்னப் பையன் இயல்பில் முதலிடம்.
இவ்வளவு பெரிய சம்பவங்கள் நடக்கும்போது போலீஸ் அதிகாரிகள் உதவிக்கு வராதது ஆச்சர்யப்படுத்துகிறது.

தன் தந்தையைக் கொலை செய்தபிறகும், தன் தேடுதல் வேட்டையை கதிர் தொடர்வது  உறுத்தினாலும் தொடர்ந்த பதைபதைப்பில் மறந்து விடுகிறது.சூர்ய பிரசாத்தின் பின்னணி இசை விறுவிறு. மகேஷ் முத்துஸ்வாமியின் கேமரா ஓட்டமும், நடையுமாக படம் முழுக்க மாரத்தான் ஓடி நெருக்கம் காட்டுகிறது. செம ஸ்பீட் த்ரில்லர்!  

குங்குமம் விமர்சனக் குழு