பகவான் - 20 மரணத்தை வரவேற்போம்!



“அவர் ஓர் எழுத்தாளர். இந்த உலகத்தில் நான் நடிக்க வேண்டிய வித்தியாசமான கதாபாத்திரத்தை அவர்தான் எழுதினார். நான் புல்லாங்குழலாக இருந்தேன். என்னை இசைத்த கலைஞர் அவர்தான்!” இவ்வாறாக இலக்கியத்தரமாக ஓஷோவை வர்ணித்தவர் மா ஆனந்த் ஷீலா.
ஓஷோவின் கதையை எழுதும்போது ஷீலாவைக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் பகவானுடைய செயலராகப் பணிபுரிந்தவர் இவர்தான். ஓஷோ ஆசிரமத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய சூப்பர் விஐபிக்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களைக்கூட இவருடன் ஓஷோ ஆலோசித்திருக்கிறார்.

ஓஷோவுடனான தன்னுடைய அனுபவங்களை ‘Don’t kill him! The story of my life with Bhagwan Rajneesh’ என்று மா ஆனந்த் ஷீலா நூலாக எழுதி, உலகம் முழுக்க பரபரப்பாக விற்பனையானது.ஷீலாவின் தந்தையாரும் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்திய அளவில் பிரபலமான விஐபிக்களை தன்னுடைய ஊருக்கு அழைத்து விருந்து அளிப்பது அவரது வழக்கம். அவ்வாறாகத்தான் ரஜனீஷும் ஷீலாவின் வீட்டுக்கு சிலமுறை வந்திருக்கிறார். முதல் சந்திப்பிலேயே பகவானின் தொடுகை, தன்னுடைய ஆத்மாவைத் தொட்டதாக ஷீலா குறிப்பிடுகிறார்.

அப்போது படிப்புக்காக ஷீலா அமெரிக்காவில் தங்கியிருந்தார். நியூஜெர்ஸியில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே திருமணமான மார்க் சில்வர்மேன் என்பவரோடு காதலில் விழுந்தார். மார்க், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தான், உலகில் இருக்கப்போவதே சில காலம்தான் என்று உணர்ந்திருந்தவர், ஷீலாவின் காதலை மறுத்தார். எனினும் உண்மையான அன்பே வென்றது.

மார்க்கை தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு அழைத்து வந்தார் ஷீலா. அப்போது ஷீலாவின் அம்மாவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. உடனிருந்து கவனித்துக் கொள்ளவும் தன்னுடைய இந்தியப் பயணம் பயன்படும் என்று நினைத்தார்.
இந்தியாவில் தங்கியிருந்தபோது அப்பாவுடன் ஒரு பிசினஸ் டிரிப்பாக பம்பாய்க்கு செல்ல வேண்டியிருந்தது.

ஷீலாவின் அப்பா எப்போதுமே பயணங்களின்போது தன்னுடைய மனைவியையும் உடன் அழைத்துச் செல்வார். கண் அறுவை சிகிச்சை செய்திருந்த மனைவிக்கு பதிலாக அம்முறை தன்னுடைய மகளை அழைத்துச் சென்றார்.ஷீலாவின் வாழ்வில் திருப்பம் ஏற்படுத்திய பயணம் அது.
ஷீலாவும், அவருடைய தந்தையும் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரில்தான் அப்போது ஓஷோ முகாமிட்டிருந்தார். மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்க ஷீலாவும், அவரது தந்தையும் அப்பாயின்ட்மென்ட் எதுவுமின்றி போய் நின்றார்கள். பொதுவாக முன்னறிவிப்பு ஏதுமின்றி யாரையும் ஓஷோ சந்திக்க மாட்டார்.

ஆனால் - மா யோகலட்சுமி, ஷீலாவின் தந்தைக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். அவரது சிபாரிசின் பேரில் இவர்களைச் சந்திக்க அவர் அனுமதித்தார்.ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடங்கியிருந்த பெரிய அறை அது. ஜன்னலில் இருந்து குளிர்ந்த கடற்காற்று வீசிக்கொண்டிருந்தது.
இயற்கையான வெளிச்சத்தில் ஒளி பொருந்திய பகவான் சம்மணமிட்டு அமர்ந்து ஏதோ நூலை வாசித்துக்கொண்டிருந்தார். தூய வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்தார். அவருடைய இருக்கைக்கு முன்பாக இருவர் அமரக்கூடிய சோபா இருந்தது.

அறைக்குள் நுழைந்த இவர்களை அங்கே அமருமாறு மா யோகலட்சுமி கேட்டுக் கொண்டார்.பகவான் நிமிர்ந்து இவர்களைக்  கண்டார். அவரது முகத்தில் புன்முறுவல் வீற்றிருந்தது. ஆதரவாக இரண்டு கரங்களையும் நீட்டினார். இளம்பெண்ணான ஷீலாவுக்கு கொஞ்சம் கூச்சமாயிருந்தாலும், சட்டென்று ஓடிப்போய் பகவானின் மார்பில் தஞ்சமடைந்தார்.

ஆதுரமான அந்த அணைப்பு, ஷீலாவுக்கு வாழ்வின் திறவுகோலாக அமைந்தது. பகவானின் அணைப்பிலிருந்து வெளிவர மனமில்லாது சில நிமிடங்கள் அப்படியே இருந்தார். விவரிக்க இயலாத உணர்வு காரணமாக கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்பியது.பின்னர் ஓஷோ, ஷீலாவின் தந்தையாரோடு பேசத் தொடங்கினார். குஜராத்தைச் சார்ந்தவர்கள் என்றாலே அவருக்கு தனி அபிமானம். சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஷீலா என்ன படிக்கிறார், எதிர்காலத் திட்டங்கள் என்னவென்றெல்லாம் பகவான் கேட்க, ஷீலாவோ மவுனமாக அவரது முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் அவரது தந்தைதான் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தன்னுடைய எதிர்காலம் பகவானின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறது என்கிற எண்ணம் திடீரென்று ஷீலாவுக்கு ஏற்பட்டது. தன்னுடைய குடும்பப் பின்னணி, கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் செல்வம், வெளிநாட்டுப் படிப்பு, அமெரிக்கக் காதலர் அத்தனையையும் மறந்தார். பகவானின் திருவடிதான் தன்னுடைய பயணத்தின் இலக்கு என்பதாக உணர்ந்தார்.

அன்று இரவு முழுக்க ஷீலாவுக்கு தூக்கமே வரவில்லை. தன்னுடைய காதலர் மார்க்கை அழைத்து பகவானிடம் அறி
முகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. உடல்ரீதியாக மார்க் அனுபவித்து வரும் துன்பங்களுக்கெல்லாம் ஓஷோவிடம்தான் தீர்வு இருக்கிறது என்கிற முடிவுக்கு வந்தார்.

மறுநாள் ஓஷோவின் இருப்பிடத்தில் நிகழவிருந்த நிகழ்வு ஒன்றுக்கு ஷீலாவுக்கு அழைப்பு வந்திருந்தது. மாலைதான் நிகழ்ச்சி என்றாலும் காலையிலிருந்தே அதற்காகக் காத்திருந்தார் ஷீலா. ஒருவழியாக அன்றைய நாளின் பகற்பொழுது கழிந்தது.மாலை தயங்கித் தயங்கி ஓஷோவின் அப்பார்ட்மென்டுக்கு வந்தார். அங்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தார்கள். கடைசி வரிசையில் ஷீலா அமர்ந்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் பகவானின் தரிசனம் கிடைத்தது. பவுத்த சன்னியாசிகள் பாணியில் கைகளைக் குறுக்கே வைத்து அனைவருக்கும் ‘நமஸ்தே’ சொன்னார் பகவான். அவ்வாறு வணக்கம் தெரிவிக்கும்போதே ஒட்டுமொத்த கூட்டத்தையும் அவரது கண்கள் பார்வையிட்டன. கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஷீலாவைக் கண்டதுமே, கைகளை நீட்டி அருகில் வரச்சொல்லி அழைப்பு விடுத்தார்.ஓடிவந்து ஓஷோவின் காலடியில் அமர்ந்தார் ஷீலா. கண்களால் பகவானைச் சிறைப்பிடிக்க முனைந்தார்.

ஓஷோ உரையாற்ற ஆரம்பித்தார். கண்களை இமைக்க மறந்து அதையே கேட்டுக் கொண்டிருந்தார் ஷீலா.“இன்றைக்கு இவ்வளவு போதும். மீண்டும் ஒருமுறை சந்திப்போம்...” என்று பகவான் உரையை முடித்தபிறகும், கனவில் வாழ்வதைப் போல அவரது காலடியே சரணம் என்று கிடந்தார் ஷீலா. மற்றவர்கள் எழுந்து அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். சிலர் ஓஷோவை அருகில் வந்து சந்தித்தார்கள். அவரது கையைப் பிடித்து ஆனந்தக் கண்ணீரில் நனைத்தார்கள்.

மெல்லிய பஜனை இசை அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது.ஓஷோ மெதுவாக எழுந்து தன்னுடைய அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அறைக்கு முன்பாகச் சென்றவர், சட்டென்று திரும்பினார். ஷீலாவை உற்று நோக்கினார். அந்தப் பார்வையின் தீட்சண்யத்தை ஷீலாவால் தாங்கமுடியவில்லை.

“ஷீலா..? அதுதானே உன் பெயர்? நாளை மதியம் இரண்டரை மணிக்கு என்னை வந்து பார்...” என்று கூறியவர், மா யோகலட்சுமியிடம், “லட்சுமி, ஷீலா என்னை வந்து பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்!” என்று கூறிவிட்டுச் சென்றார்.பம்பாய் மாநகரத்தின் பெரும் செல்வந்தர்கள் அங்கே கூடியிருந்தார்கள். தங்களுக்கெல்லாம் கிடைக்காத மரியாதை, ஒரு சிறு பெண்ணுக்கு கிடைக்கிறதே என்கிற ஆச்சரியத்தில் அத்தனை கண்களும் ஷீலாவை நோக்கித் திரும்பின.

மறுநாள் சந்திப்புக்காக அந்த நொடியில் இருந்து ஷீலா காத்திருந்தார். அன்றைய நீண்ட இரவையும், மறுநாள் பகல் பொழுதையும் கடக்க மிகவும் சிரமப்பட்டார்.பகவான் குறிப்பிட்ட நேரம் வந்தது. அந்தச் சந்திப்பும் நிகழ்ந்தது.“ஷீலா, என்னை நீ மிகவும் நேசிக்கிறாய். அதே அளவிலான நேசிப்பு உன்மீது எனக்கும் உண்டு...” என்று சொல்லிவிட்டு ஆதரவாக தலையைத் தடவிக் கொடுத்தார்.

“சொல்... என்னிடம் கேட்பதற்கு உனக்கு கேள்வியொன்று இருப்பது எனக்குத் தெரியும். என்னால் முடிந்த விளக்கத்தைத் தருகிறேன். அது கொந்தளித்துக் கொண்டிருக்கும் உன்னுடைய உள்ளத்தை சமநிலைப்படுத்தும்.”இதை பகவான் சொன்னதுமே, மடை திறந்த வெள்ளமாக ஷீலா கொட்ட ஆரம்பித்தார்.

தன்னுடைய காதலர் மார்க் சில்வர்மேன் பற்றியும், அவரைக் கொன்றுகொண்டிருந்த கேன்சர் நோயைப் பற்றியும் விலாவரியாக ஷீலா விவரிக்கத் தொடங்கினார்.பகவான், கருணை ததும்பும் பார்வையோடு சொன்னார்.“மகளே! மரணத்தை நாம் வரவேற்க வேண்டும். மரணம் என்பது முடிவல்ல…”

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்