தேர்தல் வந்தாச்சு..!மகளிருக்கு 33% கிடைக்குமா?4,865 எம்பி, எம்எல்ஏக்களில் 9% பேர் மட்டுமே பெண்கள்

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19ம் தேதி வரை நடைபெறப் போகிறது. மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை. இதனைத் தொடர்ந்து புதியதாக மத்திய அரசு அமையப் போகிறது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளராக பெண்களை மிகக் குறைந்தளவே நிறுத்துவதால் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. அவர்களுக்கு எப்போதுதான் 33% இடஒதுக்கீடு கிடைக்கும்? காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். என்றாலும் முன்னதாக மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டில் உள்ள பிரச்னைகளைப் பார்ப்போம்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிவிட்டால், நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 33% உயர்ந்துவிடும். ஆனால், அதை நிறைவேற்ற ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருபவர்கள் முயற்சி செய்தாலும் கூட எப்படியோ முட்டுக்கட்டை ஏற்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போகிறது.கடந்த 1996ல் அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான மத்திய அரசு, மகளிர் இட
ஒதுக்கீடு மசோதாவை சமர்ப் பித்தபோது, லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் போன்ற தலைவர்கள் சமூகநீதி நெரிக்கப்படுவதாகக் கூறி கடுமையாக அதை எதிர்த்து முடக்கினர்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து முதன்முதலாக விவாதிக்கப்பட்டதால் காங்கிரஸ் ஆதரவு தரும் என்ற நம்பிக்கையில் 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், வேறு சில காரணங்களுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்ததால் அந்த மசோதா அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

முன்னதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நாடாளுமன்றக் குழு அறிக்கை சமர்ப்பித்தபோது, ‘பெண்களுக்கான 33%ல் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின பெண்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்’ என்ற பரிந்துரை நீக்கப்பட்டதால் எதிர்ப்புகள் தொடர்கின்றன.

சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை போன்றவை கிடைத்தாலும் கூட அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவ உரிமை கிடைக்காத நிலையே நீடிக்கிறது. சாமான்ய பெண்கள் முதல் அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் வரை தாங்கள் கால்பதிக்கும் துறைகளில் வெற்றி பெற்று நிலைத்து நிற்கும்போது, அரசியல் களத்தில் மட்டும் ஏன் அவர்களால் காலூன்ற முடியவில்லை என்ற கேள்வி பதில் காணாமல் அப்படியே நிற்கிறது.  

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்
களில் பெண்களின் பிரதிநிதித்துவம் எப்படி உள்ளது என ஆராய்ந்தால், அதிர்ச்சியான புள்ளிவிவரங்களே கிடைக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் 51,143 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள ‘அபிடவிட்’ அடிப்படையில் பார்த்தால், 46,970 பேர் (92%) ஆண்கள்; 4,173 பேர் (8%) மட்டுமே பெண்கள். இந்தப் பெண்களிலும் 416 வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகள் (10%) உள்ளன; 1,190 பெண் வேட்பாளர்கள் கோடீஸ்வர வேட்பாளர்களாக (29%) வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இப்போது பதவியில் உள்ள 4,865 எம்பி, எம்எல்ஏக்களில் 4,425 பேர் ஆண்கள் (91%), 440 பேர் பெண்கள் (9%). இப்பெண்களில் 94 பேர் மீது குற்ற வழக்குகள் (21%) உள்ளன. மேலும், 440 பெண்களில் 310 பேர் (70%) கோடீஸ்வரராக தங்களது வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மக்களவையில் 542 பேரில் 62 பெண்களும் (12%), மாநிலங்களவையில் 228 பேரில் 25 பெண்களும் (11%) பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
கடந்த பல மக்களவைத் தேர்தல்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை சில கட்சிகள் கொடுத்து வந்தாலும் கூட, பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த 2004ல் 5,435 ஆண்கள் - 355 பெண்கள்; 2009ல் 8,070 ஆண்கள் - 556 பெண்கள்; 2014ல் 8,251 ஆண்கள் - 668 பெண்கள் வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தப்பட்டனர்.

பொதுவாக பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கும் மாநிலங்களில் சட்டமன்றத்தில் சட்டீஸ்கரும் அரியானாவும் அதிகபட்சமாக தலா 14.44 சதவீதமும், குறைந்தபட்சமாக மணிப்பூர் 3.30 சதவீதமும் கொடுத்துள்ளன.இதில் வேடிக்கை என்னவென்றால் நாகலாந்து, மிசோரம் மாநிலங்களில் பெண் பிரதிநிதிகளே அம்மாநில சட்டமன்றத்தில் இல்லை என்பதுதான்!தமிழகத்தைப் பொறுத்தவரை 8% என்ற அளவில் உள்ளது.

மக்களவையைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசத்தின் 80 எம்பிக்களில் 14 பேர் அதிகபட்சமாக பெண் எம்பிக்களாக உள்ளனர். அந்தமான் - நிக்கோபார், அருணாச்சலப்பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் பெண் எம்பிக்களே தேர்வு செய்யப்படவில்லை!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவில் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது நவீன அரசியலின் பிற்போக்குத்தனமாகவே உலகளவில் பார்க்கப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும் என்பதே அனைவரது எதிர்

பார்ப்பும்!                   

பெண்களுக்கு எதிரான பிரதிநிதிகள்

*நாடு முழுவதும் 1,642 எம்பி, எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 52 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.

*சுயேட்சைகளைப் பொறுத்தவரை 125 பேர் மீது கிரிமினல் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

*மாநில அளவில் எடுத்துக்கொண்டால் மகாராஷ்டிராவில் 11, மேற்குவங்கத்தில் 10, ஒடிசா மற்றும் ஆந்திராவில் தலா 5 எம்பி, எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதில், பாஜ - 12; காங்கிரஸ் - 7; சிவசேனா - 6 ஆகிய எம்பி, எம்எல்ஏக்கள் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் சிக்கியவர்கள்.

*ஆந்திரப் பிரதேசம் தர்மாவரம் தொகுதி தெலுங்கு தேசம் எம்எல்ஏ (2014) சூரியநாராயணா, குஜராத் மாநிலம் ஷீக்ரா தொகுதி பாஜ எம்எல்ஏ (2017) ஜெதாம்பை ஜி.அகிர், பீகார் மாநிலம் ஜானிகர்பூர் தொகுதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏ குலாப் யாதவ் ஆகியோர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

*கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய 44 வேட்பாளர்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தியுள்ளன. அதேபோல், 14 சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

சபாஷ்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கடந்த 10ம் தேதி மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்த நாளில், அம்மாநிலத்தில் அவரது கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 33% பேர் பெண்களே நிறுத்தப்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்தார்.
இதேபோல், மற்ற அரசியல் கட்சிகளும் தாமாக முன்வந்து 33% இடஒதுக்கீடு பெண் வேட்பாளர்களுக்கு அளிக்கும்பட்சத்தில், புதியதோர் மாற்றத்தைக் காணமுடியும்.

செ.அமிர்தலிங்கம்