கூகுள் இனி கல்வியும் கற்றுத் தரும்!குழந்தைகளுக்கு இன்று கிடைக்கும் முறையான, முழுமையான கல்வி அடுத்த தலைமுறையின் பாதையை மாற்றி அமைக்கும்.

அதன் ஒரு முயற்சியாக கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் செயலி ‘போலோ’வை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் குழந்தைகள் தங்களின் கற்றல் திறனையும், உச்சரிப்பு திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும். இந்தச் செயலி இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் செயல்படுகிறது. குழந்தைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் படிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு படிக்கும் நேரத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அதனைத் தீர்க்கவும், சில யோசனைகளைக் கொடுக்கவும், வார்த்தை உச்சரிப்பை முறைப்படுத்தவும் அந்தச் செயலியில் ‘தியா’ எனும் பெயர் கொண்ட ஒரு கார்ட்டூனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தி வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் தருகிறது.

கிராமப்புறங்களில் இணையதள சேவை தடையில்லாமல் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதால், அதனை ஈடுசெய்யும் வகையில் இந்தச் செயலி ஆஃப்லைனிலும் இயங்கும் வகையில் கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. போலோ செயலி கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தச்  செயலி, இந்தியா முழுக்க 200 கிராமங்களில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களிடையே சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 920 மாணவர்களில் 64 சதவீதம் பேருக்கு இந்தச் செயலி கற்றல் ஆற்றலை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தி மொழியில் ‘போலோ’ என்றால், பேசு என்று பொருள். இந்தச் செயலி இப்போது இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் இச்செயலி உருவாகும்.            

சுப்புலட்சுமி