சீரழியும் CBI ஒரு புலனாய்வு அமைப்பின் குற்றக் கதைசிபிஐ என்றால் இந்தியாவில் ஒரு கெத்து இருந்தது. எந்த ஒரு வழக்கிலும் உள்ளூர் காவல்துறையும் மாநில அரசின் சிபிசிஐடி அமைப்பும் முறையாகக் கையாளவில்லை என்ற எண்ணம் மேலோங்கினால் மக்கள் ‘வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்று கோருவார்கள். அந்த அளவுக்கு நேர்மையானது, மேன்மையானது என சிபிஐ கருதப்பட்டது.

நமது சிவில் அமைப்பின் உள்ளார்ந்த ஜனநாயக மாண்புகளை எல்லாம் காத்து நிற்பதாக சிபிஐ இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. தலைவர்களின் படுகொலை முதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் வழக்குகள் வரை பல்வேறு வழக்குகளை முற்காலங்களில் சிறப்பாகவே கையாண்டது.

ஆனால், அதெல்லாம் ஒரு காலம். சமீபமாக சிபிஐ-யில் நிகழ்ந்து வரும் குளறுபடிகள் அவ்வமைப்பின் நேர்மையின் மீதே பலத்த சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது.இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குநர் ஆர்.கே.அஸ்தானாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் காரணமாக சிபிஐ அமைப்பே இரண்டுபட்டு நிற்கிறது. பல நடு நிலை அதிகாரிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவ்விரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் எதுவும் இந்த அமைப்பின் ஆரோக்கியத்தைப் பற்றி நல்லவிதமாகக் கருதச் செய்வன அல்ல.

பிரதமர் அலுவலக அதிகாரிகள், காபினட் அமைச்சர்கள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் போன்ற பெரிய தலைகளை எல்லாம் நீதி மன்றத்துக்கு இழுத்து சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது நிலைமை. இந்நிறுவனம் ஆளும் அரசுகளால் எவ்வளவு மோசமாக சீரழிந்து உள்ளுக்குள் ஈரல் அழுகிக்கிடக்கிறது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. உண்மையில் சிபிஐயின் இந்தச் சீரழிவுக்கு எல்லாம் காரணம் அலோக் வர்மா
மற்றும் ஆர்.கே.அஸ்தானா ஆகியோருக்கு இடையிலான பஞ்சாயத்து மட்டுமல்ல. சரியாகச் சொன்னால், இன்றைய ஆளும் மத்திய அரசின் செயல்பாடு
களுமல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்பே இவை எல்லாம் தொடங்கிவிட்டன. நவேந்திரகுமாருக்கும் மத்திய அரசுக்குமான கவுகாத்தி வழக்கு 2013ம் ஆண்டு நடந்தபோதே உயர்நீதிமன்றம் இதைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரவர்க்கத்தின் நிழல் உலகச் செயல்பாடுகள் எப்படி மறைமுகமாக சிபிஐயின் கரங்களைக் கட்டிப்போட்டிருக்கின்றன... சிபிஐ எப்படி எடுப்பார் கைப்பாவையாக மாறி நிற்கிறது என்பதை எல்லாம் அப்போதே சில சமூக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

சிபிஐ எனும் மத்தியப் புலனாய்வுக் குழு 1946ம் ஆண்டின் சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது. அதன் பிறகு நீதிமன்றங்கள் அடிக்கடி தலையிட்டு இதன் சட்டத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்திருக்கின்றன. பல சமயங்களில் நீதிமன்றங்கள் சொன்ன உருப்படியான சீர்திருத்தங்கள் எளிதில் செய்யப்படவில்லை. மீண்டும் மீண்டும் அரசுக்கு அழுத்தம் தரப்பட்டபிறகே செய்யப்பட்டன என்கிறார்கள். அதுவுமேகூட மிகவும் அரைமனதாக அரையும் குறையுமாகத்தான் செய்யப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, உயர் அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனில் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒரு நடைமுறை உள்ளது. உண்மையில் இந்த விதி எந்த அளவு சிபிஐயின் கரங்களைக் கட்டியிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இப்படி, மேல்மட்ட அளவில் குற்றங்கள் நடக்கும்போது அதை முறையாக விசாரிக்க ஏகப்பட்ட நடைமுறை சார்ந்த முட்டுக்கட்டைகளை இவ்வமைப்பு சந்திக்க வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் தரப்பு சிபிஐயின் செயல்பாடுகளில் எப்போதுமே தலையிட்டு வந்திருக்கின்றன. இதிலிருந்து இவ்வமைப்பைக் காப்பாற்ற நீதிமன்றங்கள் அடிக்கடி முயலும். ஆனால், இதற்கு பலன்தான் எப்போதும் கிடைத்ததில்லை. சிபிஐயை கண்காணிக்க மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு (Central Vigilance Commission) அதிகாரம் அளிப்பது என்ற முடிவாகட்டும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற பரிசீலனையாகட்டும், இவை எதையுமே அடுத்தடுத்து வந்த அரசுகள் கண்டுகொண்டதே இல்லை.
ஒவ்வொரு அரசுமே சிபிஐயை தங்கள் கைப்பாவையாக, எதிரிகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த விரும்பினவே தவிர அதனை ஒரு சுயாதீனமான அமைப்பாக இயங்க அனுமதிக்கவில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, தங்களது கட்சியின் நலனுக்காக, பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக,
சிபிஐயை ஆளுங்கட்சி தவறாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டும். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் இதே நடைமுறையைத்தான் செய்வார்கள்.

கடந்த ஆண்டின் இறுதியில் ஆந்திராவில் நடந்ததே இதற்கு உதாரணம். மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணிக் கட்சியாக இருந்தபோது, சிபிஐயின் எதிர்க்கட்சிகள் மீதான நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியதாகத் தெரிந்த அக்கட்சிக்கு, கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தவுடன் தங்கள் மீது சிபிஐ கொடுக்கும் நெருக்கடி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தெரிகிறது.

உண்மையில் இந்தச் சம்பவம் ஒன்றும் முன் உதாரணம் இல்லாததல்ல. முதலமைச்சர்கள், காபினட் அமைச்சர்கள் போன்றவர்களுக்குத் தொடர்பிருக்கக்கூடிய பல வழக்குகளில் ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறியதும் சிபிஐ விசாரிப்பதற்கான அனுமதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மாநிலக் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரவும், அரசு அமைக்க ஆதரவு தரவும், மாநில அரசில் தங்கள் தேசிய கட்சியின் அதிகாரத்தை வலுவாக்கவும் பல சமயங்களில் சிபிஐ ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இடத்தில் நமது மாநிலக் காவல்துறை மற்றும் சிபிசிஐடி போன்ற விசாரணை அமைப்பின் லட்சணத்தையும் சொல்ல வேண்டும். சிபிஐயை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று சொல்லும் அதே எதிர்க்கட்சிகள்தான் சில வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றன!

நாடு முழுதும் உள்ள நமது மாநிலக் காவல்துறைகளின் போதாமையும், சிபிஐ, மத்திய அரசின் தலையீட்டுக்கு ஒரு காரணம். மாநிலக் கட்சிகள் தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் - தங்களது காவல் அமைப்பையும் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் - ஏதோ மத்திய அரசுதான் சுத்தமில்லை என்பது போலப் பேசுவதையும் இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு முழுதும் காவல்துறையில் உள்ள பிரச்னைகள் சரியான முறையில் அடையாளம் காணப்பட்டு, சரி செய்யப்பட வேண்டியது அவசியம். போதுமான வசதிகள் இல்லாமை, ஊழியர்கள் பற்றாக்குறை... என நிறைய உள்ளன. அரசியல் தலையீடற்ற சுயாதீனமான செயல்பாடு கிடையாது என்பது சிபிஐக்கு மட்டுமல்ல,மாநிலக் காவல்துறைக்குமே பெரும் முட்டுக்கட்டைகள்.

சிபிஐயில் போதுமான ஊழியர்கள் கிடையாது. இதற்கு என தனியாக அதிகாரிகளும் பெரிய அளவில் இல்லை. மாநில அதிகாரிகளையே பல சமயங்களில் சார்ந்திருக்க வேண்டிய நிலை.மாநில அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சிபிஐயில் பணிபுரிகிறார்கள். இன்னமும்கூட தேவையான தடயவியல் திறன்களோ, ஒவ்வொரு வழக்குக்கும் தேவையான வழக்குகள் சார்ந்த  நிபுணத்துவமோ சிபிஐக்கு இல்லை என்பது கசப்பான உண்மை.
மிக உயர் மட்டங்களில் நடக்கும் வழக்குகளை,  இரு மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் தொடர்புடைய வழக்குகளை எல்லாம் பாரபட்சமின்றி விசாரிக்க நமக்கு ஒரு நியாயமான புலனாய்வு அமைப்பு வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது.

கடந்த காலங்களில் சிபிஐ செயல்பட்ட விதம் நிஜமாகவே பாராட்டும், விமர்சனமும் கலந்த கலவையான ஒன்றுதான். ஆனால், விரைவில் இப்படியான அரசியல் தலையீடுகளில் இருந்து அது வெளியேறாவிட்டால் நிச்சயம் அது அந்த அமைப்புக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல.

இளங்கோ கிருஷ்ணன்