மக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்!வெளுத்து வாங்குகிறார் சீர்காழி சிவசிதம்பரம்

அந்த வெண்கலக் குரல் அவர்களது குடும்பச் சொத்து. காலஞ்சென்ற சீர்காழி கோவிந்தராஜன் தனது கம்பீரக் குரல் மூலம் தமிழிசையை குக்கிராமங்களுக்கும் கொண்டு போனவர். தந்தையைப் போலவே மகன் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரமும் தமிழை வாயாரப் பாடுகிறார். அவரது குரலிலும், இசையிலும் மயக்கமான ரசிகர்கள் ஏராளம்! அன்று தந்தை சென்னை சபாக்களில் தமிழ் முழங்க போராடினார் என்றால் இன்று மகன் அந்த ஜோதியை அணையாமல் பார்த்துக் கொள்கிறார்!

முதன் முதலில் எப்போது கச்சேரி மேடையில் உட்கார்ந்தீர்கள்..?

ஆறாவது படிக்கிற காலத்தில் முதன் முதலில் மேடை ஏறிய போது கதாகாலட்சேபம்தான் செய்தேன். அதாவது கதை சொல்லி அவ்வப்போது பாடுவேன். பள்ளிக்கூட மேடையில் துளிகூட பயமில்லாமல் பேசிப் பாடினதெல்லாம் பசுமையாக நினைவிருக்கு. ‘சீர்காழி பையன் அசத்தறான்’ என்று பலபேர் பேசிக் கொண்டதையெல்லாம் கேட்டு பெருமையா இருக்கும். அப்புறம் பக்திப் பாடல்களைப் பாடி எல்.பி. ரிக்கார்டாக வந்தது. அவை எல்லாம் டி.ஆர்.பாப்பாவின் பாடல்கள். 1975ம் வருட வாக்கில் அப்பாவோடு மேடை ஏறியதுதான் சீரியஸான கச்சேரி அறிமுகம். அப்புறம் பாடாத பாட்டில்லை. போகாத ஊரில்லை.

43 வருடங்கள் ஓடிவிட்டன... திருப்தியாக உள்ளதா?

என் குறிக்கோள் ரொம்ப சிம்பிள். ‘நல்லா பாடணும்... தந்தையின் பெயரைக் காப்பாற்றணும்...’ அவ்வளவுதான். எனக்கு எப்பவுமே பேராசையெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் என் அப்பாவுக்கு விருப்பமில்லாமல்தான் பாடினேன். என்னை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ‘நீ டாக்டராக வரணும்’ என்றுதான் ஆசைப்பட்டார். காரணம் அவர் இந்த சங்கீதத் துறையில் மிகவும் கஷ்டப்பட்டவர். எதிர்நீச்சல் போட்டவர். தன் பிள்ளைக்கு அதெல்லாம் வேண்டாம் என்று ஒரு தந்தைக்கேயுரிய கரிசனத்துடன் எண்ணியிருக்கலாம்.

ஆனால், என் இசை ஆர்வத்தை ஒரு கட்டத்தில் அவர் புரிந்து கொண்டார். என்னைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு உணர்வோடு தரமாகப் பாடவேண்டும் என்பதில் தம்பூராவோடு முதல் நாள் உட்கார்ந்ததிலிருந்து இன்று வரை உறுதியாக இருக்கிறேன். இறைவன் விதித்தது யோகத்தால் வரலாம்... திறமையால் வரலாம்... அதற்கான யோக்கியதையை நாம்தான் முயன்று பெறணும்.

சிறிய அமைப்பு, பெரிய அமைப்பு, சிறிய பணம், பெரிய பணம் என எதைப்பற்றியும் யோசிக்காமல் முழுமையான உழைப்பைக் காட்டணும் என்பதில் தெளிவாக இருக்கிறேன் - இன்று வரை!தமிழையே பிரதானமாகப்பாடும் உங்களுக்கு சபாக்களில் உரிய அங்கீகாரம் உள்ளதா?
மக்களைச் சார்ந்ததுதானே சபாக்கள். சபா என்ற பெயரில் நாலு பேர் சேர்ந்து உட்கார்ந்துகொண்டு சந்தர்ப்பங்களை பகடைக்காய்
களாக வைத்துக்கொண்டு கலைஞர்களை ஆட்டுவிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதெல்லாம் காலத்தால் நிலைக்கக் கூடியதல்ல.

சங்கீதமே நிற்கும். அந்தக் காலத்திலேயே என் தந்தை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தமிழிசை மரபு மாறாமல் பாடி ஜெயித்துக் காட்டியுள்ளார். அதை எனக்கு விட்டுச் சென்றுள்ளார். என்னைப் பொறுத்தவரை, அவர் விட்டுச் சென்றதைப் பின்பற்றினாலே போதும். மற்றபடி என்னைச் சுற்றி நடக்கும் கூத்துக்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. சபாக்களுக்கு கர்நாடக சங்கீதம் என்பது டிசம்பரில் மட்டும்தான். மீதி நாள் டிராமா, மெல்லிசை என்று வேறு சமாச்சாரங்கள். எங்கள் தமிழிசை மரபுக்கு வருடம் 365 நாளும் சீசன்!

தெலுங்கு மற்றும் சமஸ்கிருத கீர்த்தனைகளை அதிகம் பாடவில்லை என்று ஒதுக்கி வைக்கப்படுகிறீர்களா?

எந்த சபாவும் தமிழ் கீர்த்தனைகளைப் பாடக் கூடாது என்று நேரிடையாக என்னிடம் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் மூத்த இசையான தமிழைப் புறக்கணித்துவிட்டு அப்படியொரு அங்கீகாரம் தேவையில்லை. எங்கள் குடும்பம் திருப்பாம்பரம் சுவாமிநாதப் பிள்ளையிடம் இசை பாடாந்திரம் செய்த குடும்பம்!

திருப்பாம்பரத்தார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரின் பரம்பரையில் வந்தவர்களிடம் பாடம் பண்ணியவர். அது மட்டுமா? தமிழ் மூவர்களில் ஒருவரான முத்துத் தாண்டவரின் மெட்டில்லாத கீர்த்தனைகளை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் கண்டு
பிடித்து எங்கள் தந்தையின் குருநாதர் திருப்பாம்பரம் பிள்ளையிடம் ஒப்படைக்கிறார். ஆக. தமிழிசைக்கும், தீட்சதர் கீர்த்தனைகளுக்கும் ‘அத்தாரிட்டி’
எங்கள் பாரம்பரியம்!

கர்நாடக சங்கீத மேடைகளில் இப்போதாவது தமிழுக்கு மரியாதை உள்ளதா?

எங்கள் அப்பா ஏற்றிவைத்த தீபம் இப்போது பிரமாதமாக ஜொலிக்கிறது. பாமரனை கர்நாடிக் பக்கம் திருப்பியதில் என் தந்தையின் பங்கு முக்கியமானது. கச்சேரி ஆரம்பத்திலேயே திருப்புகழைப் பாடினார் என் அப்பா. திரைப் படங்களிலும் நல்ல தமிழைப் பாடினார்.
இன்று பல கலைஞர்கள் தமிழர்களாக இருப்பதால் அல்லது வசிக்கும் இடம் தமிழகமாக இருப்பதால் மொழியைப் புரிந்து கொண்டு பாடுகிறார்கள். மக்கள் மெய்மறக்கிறார்கள். தமிழை நம்பியவர்கள் கெட்டுப் போனதில்லை. ‘மாடு மேய்க்கும் கண்ணா...’, ‘என்ன கவி பாடினாலும்...’, ‘என்ன தவம் செய்தனை...’ என்று நிறைய தமிழ்ப் பாடல்கள் கேட்கிறது.

நித்ய, அருணாசாய்ராம், சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்ரமணியம் போன்றவர்கள் தமிழ்ப் பாடல்களை அதிகம் பாடுகின்றனர். டி.எம்.கிருஷ்ணா வட்டாரத் தமிழிலேயே பாடுகிறார். எனக்கு ஆத்ம திருப்தி... அப்பா ஏற்றி வைத்த ஜோதி பிரகாசிக்கிறது! அதே சமயம், ராஜாஜி, ரசிகமணி, கல்கி ஆகியோர் அந்தக் காலத்தில் மேடையில் தமிழ் ஒலிக்க பாடுபட்டதையும் நன்றியோடு நினைக்க வேண்டும்!

நியாயமான ஒரு விஷயம் நடப்பதற்கே இத்தனை வருடங்கள் போராட வேண்டியுள்ளதே?

ஆமாம்... என்ன செய்வது? மியூஸிக் அகாடமியில் மதுரை சோமு தமிழ்ப் பாடல்களை அதிகம் பாடிவிட்டார் என்று அவருக்கு அப்புறம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும் இங்கு நடந்துள்ளதே! இசை விமரிசகர் சுப்புடு ‘அகாடமி என்ன அக்ரஹாரமா?’ என்று எழுதினார். முதலில் எம்.எஸ். அம்மாவுக்கும் அதே நிலைமை ஏற்பட்டது. அப்படி ஒரு காலம்.

இன்று அதே அகாடமியில் சஞ்சய், அருணா போன்றவர்கள் தமிழை வாய் நிறைய பாடுகிறார்களே... இன்று புரியிற மொழியில் பாடினால்தான் தலைகளும், மனங்களும் அசைகிறது. ஆக,மக்கள் மன்றத்தில் தமிழ் ஜெயித்துள்ளது. கடந்த கால சூழ்நிலை மாறியுள்ளது.நமது கர்நாடக  இசைப் பாடகர்கள் கிறிஸ்துவமதப் பாடல்களைப் பாடுவதற்கு இங்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

அர்த்தமற்ற எதிர்ப்பு. நான் பல இசை நிகழ்ச்சிகளில் மேரி மாதாவைப் பற்றியும், ஏசுவைப்பற்றியும், பாடுகிறேன். சீறாப்
புராண பாடல்களையும், அல்லா பற்றிய கீர்த்தனைகளையும் தொடர்ந்து பாடறேன். என்னை யாரும் தவறாக எடுத்துக் கொண்டதில்லை.
மனசு சுத்தமாக இருந்தால், சங்கீதத்தை சங்கீதமா முழங்கலாம். இசைக்கு சாதி, மொழி, இன வேறுபாடு ஏது? எந்த ஒரு செயலும் விகல்பம், உள் அர்த்தம் இல்லாமல் வெளிப்படையாக இருந்தால் பிரச்னை இல்லை.

உங்களது சமீபத்திய மகிழ்ச்சி?

இசைப் பேரறிஞர், பத்ம, கலைமாமணி என்று பல பெருமைகள் எனக்கு வந்துவிட்டாலும், அண்மையில், பிரிட்டிஷ் பாராளுமன்றம் எனக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளித்து கவுரவித்தது சந்தோஷமான தருணம்! இசையோடு நான் மருத்துவமும் செய்வதால் இந்த அங்கீகாரம் என்று சொன்னார்கள்.

உங்கள் வாரிசுகள் இசைக்கு வருகிறார்களா?

தெரியவில்லை. வரலாம். என் மகன்கள் சந்தோஷ் முருகன், வருண் கோவிந்த், மகள் வைஷ்ணவி மூவருக்கும் இசையில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால், மூன்று பேருமே பயிற்சி பெற்றுள்ளார்கள். வருண் கோவிந்த் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் படிக்கிறான். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக ரஹ்மானின் இசைக் குழுவோடு லண்டன் போய் பாடினான். கீ போர்டு வாசிப்பான்.

மகள் வைஷ்ணவி பத்மா சுப்பிரமணியத்திடம் பரதம் கற்றாள்! என் மனைவி சாந்தி மீனாட்சிக்கு முறையான இசைப்பயிற்சி இல்லாவிட்டாலும் நல்ல ரசிகை. கருத்துக்களை தெளிவாகச் சொல்வார்!

வி.சந்திரசேகரன்

ஆ.வின்சென்ட் பால்