இது பக்கா ரஜினி படம்!



மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இளமையும் இனிமையும் மரணமாஸில் அள்ளும் யூத்ஃபுல் லுக்கில் அசரடிக்கிறார் ரஜினி. அவரது ஸ்டைலீஷ் லுக்கில் கோலிவுட்டே வியந்து கலர்ஃபுல் பொக்கே நீட்டுவதில் அதிரிபுதிரி உற்சாகத்தில மிதக்கிறது ‘பேட்ட’யின் டோட்டல் டீம். ரஜினி ரசிகர்களுக்கு ஸ்வீட் பொங்கல் ட்ரீட் வைத்த மகிழ்ச்சியில் களைகட்டுகிறது படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஏரியா.

‘‘இது எனக்கு லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்ச படம். சந்தோஷமா இருக்கு. சின்னவயசுல இருந்து ரசிச்ச தலைவரையே இப்ப டைரக்ட் பண்ணிட்டேன். இந்தப் படத்துல நடிச்ச யாருமே நான் சொல்லிக் கொடுத்து நடிக்கக் கூடியவங்க இல்ல. அத்தனை பேருமே கிரேட் பர்ஃபார்மெர்ஸ்! அவங்ககிட்ட சீனை சொன்னாலே போதும். வியக்க வச்சிடுவாங்க.

ஸோ, நான் ஒர்க் பண்ணியிருக்கேன்னு சொன்னதை விட, மானிட்டர்ல உட்கார்ந்து அத்தனை நொடிகளையும் ரசிச்சுக்கிட்டே இருந்தேன்னு சொல்றதுதான் சரி.ரஜினி சாரின் எனர்ஜியும் தயாரிப்பாளரா சன் பிக்சர்ஸ் அமைஞ்சதும் என் பாக்கியம். அதனாலதான் இந்தியா முழுக்க ஷூட் நடத்தினாலும் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னாடியே படப்பிடிப்பை முடிக்க முடிஞ்சது.

கலாநிதிமாறன் சார்கிட்ட இந்தக் கதையை சொன்னதுமே ‘ப்ரொசீட்’னு சொல்லிட்டார். ‘ரஜினி சார் ஃபேன்ஸ் விசில் அடிச்சு, கொண்டாடற படமா எதிர்பார்த்தேன். அதை அப்படியே கொண்டு வந்திருக்கீங்க’னு சந்தோஷப்பட்டார்.எங்க டீமே ரஜினி சாரோட fan boys ஆக இருந்ததால ரசிச்சு என்ஜாய் பண்ணி வேலை பார்த்தோம். இதை அவுட்புட்ல நீங்க பார்க்கலாம். தலைவருக்கு படம் பிடிச்சிருக்கு! ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவாங்கனு நம்பறேன்...’’ உற்சாகம் குறையாமல் பேசுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

‘பேட்ட’ டேக்ஆஃப் ஆனது எப்படி?

கிட்டத்தட்ட மூணு வருஷங்களுக்கு முன்னாடியே ரஜினி சார்கிட்ட இந்தக் கதையை சொல்லிட்டேன். அப்ப ‘கபாலி’யை அறிவிச்சாங்க. ஆனா, ‘எனக்கான கதையை சொல்லியிருக்க. உறுதியா நாம பண்ணுவோம்’னு சார் நம்பிக்கை கொடுத்தார். காத்திருந்தேன்.

அப்புறம் ‘காலா’ அறிவிச்சாங்க. தலைவர் படம் டேக் ஆஃப் ஆகுமா... ஆகாதானு குழம்பினேன். அப்ப ‘கண்டிப்பா தலைவர் படம் பண்ணுவே’னு எனக்கு நம்பிக்கை கொடுத்தது நண்பன் பாபி சிம்ஹாதான்.

ரஜினி சார் சொன்ன மாதிரியே போன வருஷம் தொடக்கத்துல என்னைக் கூப்பிட்டு மறுபடியும் அந்தக் கதையைக் கேட்டார். அந்த நொடிலயே ‘பேட்ட’ டேக் ஆஃப் ஆகிடுச்சு! இந்தக் கதைல ஒவ்வொரு கேரக்டருக்குமே பர்ஃபார்ம் பண்ற ஸ்டார் காஸ்ட் இருந்தா சிறப்புனு நினைச்சோம். ரஜினி சார் படம்னதும் மல்டி ஸ்டார் காஸ்ட், தானா அமைஞ்சிடுச்சு. எல்லாருக்குமே முக்கிய ரோல். இன்வால்வாகி நடிச்சிருக்காங்க. விஜய் சேதுபதி, நவாசுதீன், சிம்ரன், த்ரிஷா, சசிகுமார்னு கலக்கியிருக்காங்க. இது கம்ப்ளீட் என்டர்டெயினர். ‘தலைவரிசம்’ ஸ்பெஷலா இருக்கும்!

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கை தமிழுக்கு கொண்டு வந்தது ஏன்?

இந்தியாவின் டாப் ஸ்டார்ஸான ரஜினி சார், நவாசுதீன் சித்திக் சார், விஜய் சேதிபதி ஆகிய மூணு பேரையும் ஒரே ஃப்ரேம்ல கொண்டு வரணும்னு கனவு கண்டேன். ‘பேட்ட’ கதை அதை நிறைவேற்றியிருக்கு.நவாசுதீன் சார் பிரமாதமான நடிகர். அவர் முகத்துல நம்ம ஊர் சாயல் தூக்கலா இருக்கும். கதையையும் அவர் ரோலையும் சொன்னதுமே ‘பண்றேன்’னு சொல்லிட்டார்.

அதோடு இயக்குநர் அனுராக் காஷ்யப் கிட்ட என்னைப் பத்தி விசாரிச்சிருக்கார். ஏற்கனவே ‘ஜிகர்தண்டா’ பார்த்து தன் நண்பர்கள்ல ஒருத்தரா என்னையும் காஷ்யப் வைச்சிருக்கிறதால நல்லவிதமா சொல்லியிருக்கார்!

நீங்க கேள்வி கேட்பதற்கு முன்பே மத்த ஸ்டார்ஸ் பத்தியும் சொல்லிடறேன். ஒரு டைம்ல தலைவர் படங்கள்ல ரொமான்ஸ் சூப்பரா இருக்கும். ‘ஜானி’யில் அவரும் தேவி மேமும் பர்ஃபாமென்ஸ்ல பிச்சு உதறியிருப்பாங்க. அப்படி ஒரு காம்பினேஷனா தலைவரும் சிம்ரனும் இருப்பாங்க. த்ரிஷா ‘96’ல அசத்தியிருப்பாங்க. அவங்களுக்கு இதுல ரொம்பவே சின்ன போர்ஷன்தான்.

அதைச் சொல்லி, அவங்க விருப்பப்பட்டுதான் நடிக்க வந்தாங்க.என்னை மாதிரியே பாபி சிம்ஹாவும் தலைவர் வெறியர்! ‘பேட்ட’ உறுதியானதும் ‘எனக்கு என்ன ரோல் கொடுக்கப் போறே’ன்னு நேரடியாவே கேட்டுட்டார்! அதே மாதிரி எங்கப்பாவும் தீவிர ரஜினி ஃபேன். ‘எனக்கு என்னப்பா ரோல்’னு அப்பாவும் கேட்டார்!முன்னாடியே, ‘கண்டிப்பா நீங்க ரஜினி சார் படம் பண்ணுவீங்க. அப்ப எனக்கு வில்லன் ரோல் கொடுங்க’னு விஜய் சேதுபதி கோரிக்கை வைச்சிருந்தார்!

இப்படி எல்லாமே மனசுக்கு உகந்ததா அமைஞ்சிருக்கு.டெக்னீஷியன் டீமும் செம ஸ்டிராங் போல..?

யெஸ். ‘பேட்ட’யைப் பொறுத்தவரை எல்லா விஷயத்துலயும் நான் லக்கி! ‘நல்ல கமர்ஷியல் கன்டன்ட். ஒளிப்பதிவு கிளாஸிக்கா இருந்தா சூப்பரா வரும். உதாரணத்துக்கு ‘தளபதி’யின் விஷுவல் இப்பவும் பிரமிப்பூட்டும்’னு ரஜினி சார் சொன்னதுமே எனக்கு திருநாவுக்கரசு சார்தான் மைண்ட்ல வந்தார். ‘மெர்க்குரி’ல நாங்க ஏற்கனவே இணைஞ்சு பணிபுரிஞ்சிருந்தோம்.

திரு சார் பிரமாதப்படுத்தி இருக்கார். ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் முதல் மாஸ் சீன்ஸ் வரை அவரோட முத்திரை இருக்கும். சுரேஷ் செல்வராஜ் சார் ஆர்ட் டைரக்‌ஷன் கண்டிப்பா பேசப்படும். எங்களை மாதிரியே அனிருத்தும் தலைவர் ஃபேன்! இறங்கி அடிச்சிருக்கார்.

சவுண்ட் டிசைனர் குணாலும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினும் தங்களோட பெஸ்ட்டை கொடுத்திருக்காங்க. என்னோட எல்லா படங்களிலும் பணிபுரிந்த விவேக் ஹர்சன் எடிட்டிங், இதுல ஷார்ப் அண்ட் ஸ்வீட்டா இருக்கும்.

என்ன சொல்றார்  உங்க தலைவர்..?

இன்னமும் ஹேப்பி மொமன்ட்ல சிலிர்ப்பா இருக்கேன். டார்லிஜிங்கில் முதல் நாள் ஷூட்டிங் அப்ப சின்னச் சின்ன மான்டேஜ் சீன்ஸ்தான் ஷூட் பண்ணினோம். எனக்கு பெருசா வேலை இல்ல. அடுத்த நாள் ‘மரண மாஸ்’ பாடல் எடுத்தோம். ஷெரிஃப் மாஸ்டர் பண்ணினார். அதை முடிச்சுட்டு தலைவர் பர்ஃபார்ம் பண்ற ஒரு பெரிய சீனை எடுத்தோம். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தில அவர் நடிக்கிற சீன்.

இதுக்காக 150 கல்லூரி மாணவர்களை இங்க இருந்து டார்ஜிலிங் கூட்டிட்டுப் போனோம். நீளமான டயலாக். தலைவர் அதை ஒரு பார்வை பார்த்தார். புரிஞ்சுது! பிரமாண்டமான லைவ் மேட்ச்சை ரசிக்கிற ஃபீலோடு மானிட்டர் முன்னாடி உட்கார்ந்தேன்! ஏ... அப்பா! பின்னி எடுத்துட்டார்! இதுக்கு மேல நான் சொல்றதை விட நீங்களே படம் பார்த்து ரசிங்க.ஏன்னா, இது ரஜினி படம். நம்ம தலைவர் படம்!

மை.பாரதிராஜா