ரத்த மகுடம்-35பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்

‘‘உன்னை இங்கு எதிர்பார்க்கவில்லை..!’’ மனதில் பூத்ததை வார்த்தைகளாக கரிகாலன் உதிர்த்தான். ‘‘ஆனால், நான் தங்களை எதிர்பார்த்தேன்!’’ மலர்ச்சியை அந்தப் பாலகன் கசியவிட்டான்.ஆச்சர்யத்தில் கரிகாலன் உறைந்து நின்றான். காரணம், கடிகையில், தான் சந்தித்த பாலகனை அந்த மாளிகையில் பார்க்க நேர்ந்தது மட்டுமல்ல. தன் முன்னால் அவன் வந்து நின்ற கோலமும்தான்.

குறிப்பாக சாளரத்தில் இருந்து அவன் குதித்த விதம் கரிகாலனை திகைப்பின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.பல்லவ இளவரசர் ராஜசிம்மனும், தானும் மட்டுமே அறிந்த சீனர்களின் பாணியில் அல்லவா ஒலியெழுப்பாமலும் கால்கள் பிசகாமலும் அவ்வளவு உயரத்திலிருந்து குதித்திருக்கிறான்! இது எப்படி சாத்தியம்..? கடிகையில் வாள் பயிற்சி, போர் வியூகம் முதல் சகலத்தையும் கற்பிக்கிறார்கள்தான்.

ஆனால், இந்தப் பாணி..? வாய்ப்பேயில்லை. அது சீனர்களின் ரகசியம். முழுமையாக தாங்கள் நம்புபவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சியை அதுவும் ரகசியமாக கற்றுத் தருவார்கள். எனில் இந்தப் பாலகன் சீனர்களுக்கு நெருக்கமானவனா..? அப்படியானால் பல்லவ இளவல் குறித்தும் இவன் அறிந்திருக்க வேண்டுமே..!

கிளை பரப்பிய வினாக்களுக்கு எல்லாம் பதில் காணும் விதமாக மெல்ல அந்த பாலகனிடம் பேச்சுக் கொடுக்க முற்பட்டான். ‘‘என்ன... என்னை இங்கு எதிர்பார்த்தாயா..?’’‘‘ஆம் வணிகரே..!’’ வேண்டுமென்றே ‘வணிகரே’ என்பதற்கு அந்த பாலகன் அழுத்தம் கொடுத்தான்.
கரிகாலனின் உதட்டில் புன்னகை விரிந்தது.

தான், சோழ வம்சத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மையை அறிந்திருக்கிறான். என்றாலும் தெரியாததுபோல் கடிகையில் உரையாடியது போலவே பேச்சுக் கொடுக்கிறான். விஷமக்காரன்தான். தந்திரசாலியுமா என அறிய வேண்டும். அதற்கு அவன் போக்கிலேயே செல்வதுதான் நல்லது.

‘‘அதனால்தான் சிவகாமியை சத்திரத்திலிருந்து இந்த வீதிக்கும் மாளிகைக்கும் அழைத்து வந்தாயா..?’’
‘‘இல்லை வணிகரே!’’கரிகாலனின் புருவங்கள் ஏறி இறங்கின. ‘‘ஆனால்...’’‘‘இந்த மாளிகைக்கு வெளியே நந்தவனத்தில் சிவகாமி உங்களிடம் கூறியது அனைத்தும் பொய்!’’ கரிகாலனின் பேச்சை இடைமறித்து சொன்ன பாலகன், தொடர்ந்தான். ‘‘உங்களைக் கண்காணிக்கவும் பின்தொடரவும்தான் எனக்கு உத்தரவு. எனவே வேறு யாரையும் நான் சந்திக்கவும் இல்லை. எச்சரிக்கவும் இல்லை...’’

‘‘யார் இட்ட கட்டளை..?’’
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்!’’ சிரசையும் நெஞ்சையும் நிமிர்த்தி அந்த பாலகன் மரியாதையுடன் சொன்னான்.‘‘எதற்காக அப்படிச் சொன்னார்..?’’‘‘தெரியாது. ஆனால், காஞ்சியை விட்டு நீங்கள் வெளியேறும் வரை உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்!’’
‘‘தனது வீரர்கள், படைகளை விட உன்னை அவர் அதிகம் நம்புகிறாரா..?’’

‘‘அவரிடம்தான் கேட்க வேண்டும் வணிகரே!’’‘‘கேட்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், ஒரே ஆணையின் மூலம் என்னைக் கைது செய்ய வேண்டாம் என்று உத்தரவிடுவதற்குப் பதிலாக கடிகையில் பயிலும் ஒரு பா... மாணவனிடம் என் பாதுகாப்பை அவர் ஒப்படைக்கக் காரணம்..? நீ சொல்வது நம்பும்படியாக இல்லையே..!’’ ‘‘நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஆனால், உங்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக மன்னரும் நீங்களும் தனித்து சந்திக்கையில் அவர் உங்களிடம் கொடுத்த தனது அந்தரங்க முத்திரை மோதிரத்தை நினைவுபடுத்தச் சொன்னார்...’’
‘‘இதுகுறித்து சிவகாமியும்...’’

‘‘...வனத்தில் உங்களிடம் குறிப்பால் உணர்த்தினார். கிளைகளில் மறைந்திருந்த எனது செவியிலும் அது விழுந்தது. ஆனால், அது குறித்து எனக்கு அக்கறையில்லை...’’ ‘‘என்ன சொல்கிறாய்..? மன்னரும் நானும் தனித்துப் பேசியதை அப்படியே சிவகாமி சொல்கிறாள். உன்னிடமாவது மன்னர் குறிப்பிட்டார். அதாவது நீ அப்படிச் சொல்கிறாய். அவளுக்கு யார் சொன்னது..? இந்த ஐயம் உனக்கு எழவில்லையா..?’’ கரிகாலன் உண்மையாகவே ஆச்சர்யப்பட்டான்.‘‘இல்லை!’’

‘‘ஏன்..? ஒருவேளை உன்னிடம் தெரிவித்தது போலவே அவளிடமும் சொல்லியிருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டாயா..?’’
‘‘இல்லை... அப்படி நடக்க வாய்ப்பேயில்லை!’’‘‘எதை வைத்து அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’‘‘கடிகைக்கு உங்களை மன்னர் அனுப்பி வைத்ததை வைத்து..!’’பதில் சொன்னவனை உற்றுப் பார்த்தான் கரிகாலன்.

பாலகன் என்ன சொல்ல வருகிறான்... குறிப்பால் எதை உணர்த்துகிறான் என்பது நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அவன் உதடுகளில் இருந்தே அது வெளிப்படட்டும் என பேச்சை நீட்டித்தான். ‘‘புரியவில்லையே... கடிகைக்கு என்னை அவர் அனுப்பியதற்கும் இதற்கும் என்ன தொடர்பு..?’’‘‘சிவகாமி!’’ பட்டென்று பாலகன் பதிலளித்தான்.

‘‘விளக்கமாகச் சொல்..!’’‘‘அறிந்துகொண்டே கேட்கிறீர்கள் என்பது புரிகிறது வணிகரே! பரவாயில்லை. தேங்காயை உடைத்து விடுகிறேன். சிவகாமி யார்... அவள் சபதம் என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டும் என சாளுக்கிய மன்னர் விரும்பியதாலேயே காபாலிகன் வழியாக...’’‘‘எந்த காபாலிகன்..?’’‘‘புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றர்! அவர் மூலமாகத்தான் மன்னர் உங்களை காஞ்சிக்கு வரவழைத்தார்.

எதனால் காபாலிகர் இதற்கு ஒப்புக்கொண்டார் என்பதை காஞ்சிக்கு வெளியே தெரிந்து கொள்ளுங்கள். சொல்ல வந்ததை முடித்துவிடுகிறேன். காஞ்சி அரண்மனையில் உங்கள் பார்வையில் படும்படி சிவகாமியின் ஓவியத்தை விக்கிரமாதித்த மாமன்னர் வைத்ததும்... கடிகைக்கு தங்களை அனுப்பி என் வழியாக அர்த்தசாஸ்திர சுவடிகளின் பகுதியை எடுக்கவைத்ததும் ஒரே விஷயத்துக்காகத்தான்.

 அது சிவகாமி குறித்த ரகசியம். இதை மற்றவர் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்வதைவிட தகுந்த ஆதாரத்துடன் நீங்களே அறியவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகளை தன் வீரர்களுக்கோ படைகளுக்கோ தெரியாதபடி ரகசியமாகச் செய்திருக்கிறார். அப்படியிருக்க,
உங்களுடன் தனிப்பட்ட முறையில் அவர் உரையாடியது குறித்து எப்படி சிவகாமியிடம் சொல்லியிருப்பார்..?’’

பதிலேதும் சொல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக கரிகாலன் நடந்தான். பாலகன் சொல்வது அனைத்தும் உண்மை. தனது முத்திரை மோதிரத்தை என்னிடம் கொடுத்ததை சாளுக்கிய மன்னர் கண்டிப்பாக சிவகாமியிடம் சொல்லியிருக்க மாட்டார். அப்படியானால் அவளுக்கு எப்படி இது தெரிய வந்தது..?

திரும்பி பாலகனை ஏறிட்டான். ‘‘மன்னர் என்னிடம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தது சிவகாமிக்கு எப்படித் தெரிய வந்தது என்ற சந்தேகம் உனக்கு எழவில்லையா..?’’
‘‘இல்லை!’’‘‘ஏன்..?’’

‘‘உண்மை தெரியும் என்பதால்..!’’
‘‘என்ன உண்மையோ..?’’
‘‘அப்படியே உப்பரிகைக்குச் சென்று வெளியில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் வணிகரே! உங்களுக்கே தெரியும்!’’ புன்முறுவலுடன் பாலகன் பதிலளித்தான்.ஒரு கணம் அவனைப் பார்த்துவிட்டு உப்பரிகை பக்கம் கரிகாலன் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சி விவரணைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

மூங்கில் கழியின் துணை கொண்டு மகேந்திரவர்மன் வீதி, நரசிம்மவர்மன் வீதி ஆகியவற்றை தாவித் தாவி அந்தரத்தில் கடந்துகொண்டிருந்தாள் சிவகாமி! எங்கு செல்கிறாள்... எதற்காக இப்படிச் செய்கிறாள்... அதற்கும், பாலகனிடம், தான் தொடுத்த வினாவுக்கும் என்ன தொடர்பு..?

கேள்விகளை தன் கண்களில் தேக்கியபடி பாலகனை ஏறிட்டான்.அதற்கு அவன் கூறிய பதில் கரிகாலனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது! சிவகாமி குறித்த மர்மமும் அதிகரித்தது!

(தொடரும்)