பேட்ட ஃபெஸ்டிவல் ட்ரீட்!மகிழும் ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு

‘‘முதல்முறையா ரஜினி சாரோட ஒர்க் பண்ணியிருக்கேன். நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. ‘பேட்ட’யில் கமிட் ஆனதும் ஒரு ஒளிப்பதிவாளரா அதில் புதுசுபுதுசா என்ன டெக்னிக்ஸ் பயன்படுத்தலாம்னு என் மைண்ட்ல ஓடிக்கிட்டே இருந்தது. முதல்நாள் ஷூட்டிங் போற வரைக்கும்தான் அந்த படபடப்பு. ஸ்பாட்ல ரஜினி சாரின் ஸ்டைல், கரிஸ்மா, ஸ்மைல், எனர்ஜினு அத்தனையையும் வியக்க வைச்சுடுச்சு.

அந்த நொடில அவரை விட மத்த டெக்னிக்ஸ் முக்கியமில்லனு தோணிடுச்சு. அவர்கிட்ட நான் ரசிச்சதை அப்படியே அள்ளினாலே போதுமானதுனு புரிஞ்சுகிட்டேன்...!’’ திருப்தியாகப் புன்னகைக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு. பாலிவுட்டில் டாப் ஹீரோக்களின் படங்களின் கேமராமேன்... ‘24’க்காக தேசிய விருதை வென்றவர்... கமலுடன் பல படங்கள் கைகோர்த்தவர்... மோகன்லாலுக்கு பிரியமானவர்... என திருவைப் பற்றி நிறையவே சொல்லலாம்.

‘பேட்ட’யில நீங்க எப்படி பராக்..?
கார்த்திக் சுப்புராஜுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். யூனிட்ல உள்ள அத்தனை பேருமே தலைவரின் ரசிகர்களா என்ஜாய் பண்ணி ஒர்க் பண்ணினோம். படமும் செம மாஸா சூப்பரா பொங்கல் ஃபெஸ்டிவல் ட்ரீட்டா வந்திருக்கு.டப்பிங்கின்போதே ரஜினி சார் முழுப்படமும் பார்த்துட்டார். சாரும் ஹேப்பி. ஆக்‌சுவலா ‘எந்திரன்’லயே நான் ஒர்க் பண்ணியிருக்க வேண்டியது. மேக்கப் டெஸ்ட் வரை இருந்தேன். அந்த டைம்ல ஆல்ரெடி கமிட்டான படங்களின் ஒளிப்பதிவை கவனிக்க வேண்டியிருந்ததால் தொடர முடியாமப் போயிடுச்சு.

அந்த வருத்தத்தை ‘பேட்ட’ போக்கியிருக்கு. கார்த்திக் சுப்புராஜ் இயக்கின ‘மெர்க்குரி’க்கு நான் ஒளிப்பதிவு பண்ணியிருந்தேன். அந்த நட்பில் ‘பேட்ட’ கிடைச்சது. இதோட படப்பிடிப்பு டார்ஜிலிங், வாரணாசி, லக்னோ, டேராடூன், சென்னைனு பல இடங்கள்ல நடந்தது.

அத்தனை இடங்கள்லயும் குறுகிய நாட்கள்ல வேகமா, குவாலிட்டியா படத்தை கொண்டுவந்திருக்கோம். காரணம், ரஜினி சார் கொடுத்த அபரிமிதமான ஒத்துழைப்பு... இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பக்காவான ப்ளானிங்... அதைச் செயல்படுத்திய சன் பிக்சர்ஸ்!  
ரஜினி சார் செம ஸ்டைலீஷா, மாஸா இருக்காரே..?

‘பேட்ட’ டிரெயிலரைப் பார்த்துட்டு நிறைய பேர் பிரமிச்சு சொன்னதும் அதான்! படத்துல இன்னும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கு. இதுல ரஜினி சார் காளி கேரக்டர்ல மிரட்டியிருக்கார். வேற யாராவது சொதப்பினா அவர்கிட்ட ஒன்ஸ்மோர் எப்படி கேட்கறதுனு முதல் நாள் தயங்கினோம். ஆனா, அஞ்சு டேக்னாலும் அதே எனர்ஜியோடு தயாரா இருந்தார்!  

ஒருநாள் நாங்க ஷூட் கிளம்புறப்ப சரியான மழை. அந்த மழைல ஷூட் பண்ணலாம்னு முடிவாச்சு. அதை ரஜினி சார்கிட்ட சொன்னதும், ‘உங்களுக்கு சிரமம் இருக்காதுல்ல... மழையில எந்த இடத்துல லைட் வைக்கப் போறீங்க? லைட்மேன்ஸுக்கு ஓகேதானா’னு மனிதாபிமானத்தோடு கேட்டார். நெகிழ்ந்துட்டேன்!

அதேமாதிரி ஒவ்வொரு ஷாட் அப்பவும் ‘எப்படி பண்ணப்போறீங்க? என்ன லென்ஸ் பயன்படுத்துறீங்க? என்ன லைட்டிங்...’னு கேட்டு தெரிஞ்சுப்பார்.

லக்னோல ஷூட் முடிச்சுட்டு டேராடூன் போனோம். அங்கிருந்து சென்னைல ஷெட்யூல். எல்லா இடங்கள்லயும் ரஜினி சார் உண்டு. முகம் சுளிக்கவும் இல்ல. பிரேக் கேட்கவும் இல்ல!

டார்ஜிலிங்குல கடுங்குளிர். அதுல நைட் ஷூட். மழை வேற தூறிட்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாம நடிச்சுக் கொடுத்தார். அவ்வளவு ஏன், ரொம்ப சாதாரண ஹோட்டல்லதான் தங்கினார்.இவ்வளவு உயரத்துல இருந்தும் அவ்வளவு சாதாரணமா இருப்பது பெரிய விஷயம். அதனாலதான் அவர் ரஜினி சார்! சூப்பர் ஸ்டார்! என்ன சொல்றார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்?

ரசிச்சு ஒர்க் பண்றார். ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா வேலை வாங்கறார். ‘பேட்ட’ல ரஜினி சார், நவாசுதீன், விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ்னு ஸ்டார் காஸ்ட் அதிகம். அத்தனை பேருமே பிசியான ஆர்ட்டிஸ்ட்ஸ்.

எல்லாரையும் இந்தியாவுல ஒவ்வொரு பகுதிக்கும் கூட்டிட்டுப் போனோம். திட்டமிட்ட நாட்களை விட படம் வேகமா முடிஞ்சதுக்கு கார்த்திக்கோட பிளானிங்தான் காரணம்.

உதாரணத்துக்கு முதல்நாள் லக்னோல ஷூட். அடுத்தநாள் வாரணாசில லொகேஷன். ஆனா, எல்லாருமே காலை ஏழு மணிக்கு வாரணாசில அசெம்பிள் ஆகிட்டோம். அதே போல டார்ஜிலிங் முடிச்சுட்டு அடுத்த நாளே சென்னைல ஷூட். இதெல்லாம் சாத்தியமானதுக்கு காரணம், கார்த்திக் சுப்புராஜின் திட்டமிடல்!

பாலிவுட் ஆக்டர் நவாசுதீன் சித்திக் மிரட்டியிருக்காராமே?

ஆமா. நான் பாலிவுட்ல ஒர்க் பண்ணும்போது நவாசுதீன் எனக்கு அறிமுகம் கிடையாது. ஆனா, அவர் என்னை தெரிஞ்சு வச்சிருந்தார். அதுவே சந்தோஷமா இருந்துச்சு. ‘பேட்ட’ல நடிப்பில் பிச்சு உதறக்கூடிய ரஜினி சார், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹானு நிறைய பேர் இருக்காங்க. நவாசுதீன் சும்மா வந்துட்டு போவார்னு நினைச்சேன்.

ஆனா, அவர் நடிப்பு அசுரன்! பிரமாதமான பர்ஃபாமெர்னு ஒவ்வொரு ஷாட்லயும் புரிய வச்சார். கடைசி நாள் ஷூட்டப்ப ‘தமிழ் இண்டஸ்ட்ரி ஒர்க்கிங் ஸ்டைல் அமேஸிங்’னு சொல்லி ஆச்சரியப்பட்டார். ஷாட் முடிச்சதும் கூட லொக்கேஷனுக்கு பக்கத்துலயே வெயிட் பண்ணுவார். டக்னு ஷாட்டுக்கு ரெடியாகி நிற்பார்.

அவரைப் போலவே விஜய் சேதுபதியும். இந்தப் படத்திலிருந்து அவரோட நிறைய ஒர்க் பண்ணணும்னு ஒரு ஆசை வந்திடுச்சு. விஜய் சேதுபதிகிட்ட ஒரு சீனை கார்த்திக் சொல்லும்போதே, அதை வெவ்வேறு ஆங்கிள்கள்ல விவாதிக்கறார். நாலு விதமாக நடிச்சுக் காட்டறார். அதுல பெஸ்ட்டை ஸ்கிரீன்ல கொண்டு வர்றார். விஜய் சேதுபதியின் சக்சஸ் சீக்ரெட் அதான் போல.  

சினிமாவில் இது உங்களுக்கு 25வது ஆண்டு..?
அப்படியா! ஆச்சர்யமா இருக்கு. பேசிக்கா இப்படி நான் எப்பவும் நினைக்கறதில்ல. இப்பதான் ஃபீல்டுக்கு வந்திருக்கோம்னுதான் நினைக்கறேன். கிரியேட்டிவிட்டிக்கு எக்ஸ்பீரியன்ஸ் எப்பவும் உதவாது.

ஒரு போட்டோகிராபரா என் கேரியரைத் தொடங்கினேன். இன்னும் கத்துக்க வேண்டியது நிறையவே இருக்கு. டெக்னிக்கலா நாம எவ்வளவோ மாறியிருக்கோம். நிறைய இளைஞர்களை கவனிக்கறேன். புதுசு புதுசா வர்றாங்க. அசத்தறாங்க. அவங்ககிட்ட இருந்து கத்துக்க நிறைய இருக்கு. அடுத்து மோகன்லால் நடிக்கும் ‘மரக்கார்’ல ஒளிப்பதிவு பண்றேன். இது பீரியட் ஃபிலிம்.  

மை.பாரதிராஜா