அம்பேத்கரின் பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை..!தரவுகளின் வழியே அழுத்தம்திருத்தமாக விளக்குகிறார் வசுமித்ர

வசுமித்ர எழுதிய ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ நூல் பெரும் கவனிப்பு அடைந்திருக்கிறது. அம்பேத்கரின் ஆய்வில் இது புதுத்தடம். எதிர்வரும் ஆய்வுகளுக்கு வழிகாட்டி. நவீன மடை திறப்பு. திசை திருப்பும் கண்கட்டி வித்தைகளுக்கு இடையில் வசுமித்ர நம் உள்முகம் திறக்கிறார். நனைத்தாலும் சரி, நகர்ந்தாலும் சரி, மழை பெய்துகொண்டுதான் இருக்கும். இந்த உரையாடலில் ஆரவார நதிகளின் இடையில், அமைதியான ஓடையாக அவரது கருத்துலகத்தைப் பதிவு செய்கிறார்.

இந்திய வரலாற்றில் புதிய புயலாக புத்தரும், இந்திய அரசியல் வரலாற்றில் எரிமலையாக வெடித்த தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தவிர்க்க முடியாத ஆளுமைகள். அடிப்படையில் இவர்கள் இருவரையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தவிர்க்க முடியாத ஆளுமைகள் என்பது மட்டுமல்ல, கலகக்காரர்களும்கூட! மூவரையும் மதிக்கிறேன். அதேசமயம் அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வேதாந்த உபநிடத மரபு ஒரு சாதிய மரபு. சமண, பவுத்த மரபு ஒரு சமத்துவ மரபு. இதுவரை இவை சாதியத்தை வென்றதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் அம்பேத்கரையும், புத்தரையும் இணைப்பது சாத்தியமா?

வேதாந்த உபநிடத மரபு ஒரு சாதிய மரபு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம் சமணமும், பவுத்தமும்கூட சாதி முறையை ஏற்றுக் கொண்டவைதானே! சமணமோ பவுத்தமோ சாதியை ஒழிப்பதை தங்களது அடிப்படைகளாகக் கொண்டதில்லை. அதிலும் பவுத்தம் துக்கத்தை ஒழிக்க வந்ததுதானே தவிர சாதியை ஒழிக்க அல்ல! அவற்றால் சாதியை ஒழிக்க முடியாது.

பண்பாட்டுத் தளத்தில் ஒரு மேலாதிக்கத்தைத் தருவதற்கு அது உதவும். ஆனால், சுய ஏமாற்றுதலில் போய் விட்டுவிடும். சாதி அன்றிலிருந்து இன்றுவரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் அப்படியே இருந்திருக்கும் பட்சத்தில் அது என்றைக்கோ உடைந்து போயிருக்கும். சாதி இத்தனை வருடங்களாக இருக்கிறது என்றால் அது நெகிழ்ந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சார்வாகர்கள், புத்தர், தமிழ் சித்தர்கள், அயோத்திதாசர், நாராயண குரு, பெரியார், அம்பேத்கர் என்ற எதிர்மரபே செயல்பட்டு வந்திருக்க, மார்க்சியம் என்னும் புதிய ஒளி இன்னும் எழுச்சி பெறாததற்கு என்ன காரணம்?

நீங்கள் சொல்கிற சமூக சீர்திருத்தவாதிகளோடு மார்க்சியர்களுக்கு எந்தப் பிணக்கும் இல்லை. சொல்லப்போனால் இவர்களின் முற்போக்கான சமூகப் பாத்திரத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்லி வருவதும் மார்க்சியர்களே!அவ்வாறு இருக்கும்போது நீங்கள் சொல்வதுபோல இவை அனைத்தும் எதிர்மரபுகள்தான் என்றால் இவற்றை ஏற்றுக்கொண்டு மார்க்சியம் கிளைபரப்புவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், இந்த சமூகசீர்திருத்தவாதிகளின் கருத்தியல்களை தங்கள் சொந்த லாபங்களுக்காகப் பயன்படுத்த முனைகின்ற அடையாளக் குழுக்கள் மார்க்சியத்திடம் இவர்களைக் கொண்டு சேர்ப்பதைத் தடுக்கின்றன என்பதுதான் பிரச்னையே.

உங்கள் வாழ்நாள் தோழர் கொற்றவை ரங்கநாயகம்மாவின் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார். அதில், ‘புத்தரும், அம்பேத்கரும் போதாது. மார்க்ஸ் தேவை’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இது விளிம்பு நிலை மக்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியா?

உங்களின் முந்தைய கேள்வி மார்க்சியம் எனும் புதிய ஒளி ஏன் இன்னும் எழுச்சி பெறவில்லை என்ற ஆதங்கம் வெளிப்படுவது மாதிரி தோன்றியது. ஆனால், இப்போதோ மார்க்ஸ் தேவை என்று சொன்னாலே சாதி அடையாளத்தை, விளிம்புநிலை அடையாளத்தை அது அழித்து
விடுமோ என்ற சந்தேகத்தை முன்வைக்கிறீர்கள்!

ஒரு பக்கம் மார்க்சியம் தோல்வியடைந்து விட்டது என்ற ஒரு கருத்தைப் பரப்புவது, மறுபக்கம் மார்க்ஸ் என்றாலே அபாயம் என்ற ஒரு பீதியைக் கிளப்புவது. இந்த குழப்பமான போக்கு தமிழகத்தில் பலபேரிடம் இருக்கிறது. பல்வேறு மக்களின் அடையாளங்களை அழிப்பதல்ல மார்க்சியம். அவ்வடையாளங்களை ஜனநாயக ரீதியாக மதிப்பதே மார்க்சியம். பெண்ணியமோ, தலித்தியமோ தோன்றாத காலத்திலேயே இப்பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் விடுதலைக்காக மார்க்சியம் குரல் கொடுத்திருக்கிறது!

சாதியம் முற்றும் அழியாத சமூகத்தில் வர்க்கம் பற்றி பேசுவது ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானது என பெரியாரும், அம்பேத்கரும் பார்த்தார்கள். இவர்கள் மார்க்ஸுக்கு எதிரானவர்களாக ஆகிவிடுவார்களா?

சாதி ஏற்றத்தாழ்வு நிலவி வருகின்ற சமூகத்தில் வர்க்கம் பற்றிப் பேசக்கூடாது என்று அம்பேத்கரும், பெரியாரும் சொல்லவில்லை. மேலும், அவர்களே வர்க்கம் குறித்து பல இடங்களில் பேசியிருக்கிறார்கள். நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சாதி எதிர்ப்புபோராட்டத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் ஒரே போராட்டமாக இணைப்பதற்கு இவர்கள் இருவருமே விரும்பவில்லை என்பதுதான்.

வர்க்கம் பற்றிய ஒரு விவாதத்தை நடத்துவதாலேயே அது ஆளும் வர்க்கத்துக்கு எப்படி சாதகமாக இருக்க முடியும்? ஆளும் வர்க்கத்திற்கு சாதகமானவை, பாதகமானவை என்று பகுப்பாய்வு செய்வதுகூட ஒரு வர்க்கக் கண்ணோட்டம்தானே!

அவ்வர்க்கக் கண்ணோட்டம் அவர்களுக்கு இருந்தது என்று உங்கள் கேள்வியின் மூலம் கூறுவதுபோல் தோன்றுகிறது. அவ்வாறு இருப்பின் அவர்கள் வர்க்கம் என்ற பேச்சைவெறுப்பவர்களாக இருந்திருக்க முடியாது. அதேசமயம் வர்க்கம் என்ற வார்த்தைக்கு அவர்கள் கொண்டுள்ள பொருள் விவாதிக்கப்பட வேண்டியது.

இன்றைய பார்வையில் அம்பேத்கரிடமிருந்தும், அவர் மாறிய பவுத்தத்திலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியது அல்லது விட்டுவிட வேண்டியது என்ன?

அம்பேத்கரிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதும், பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதும் நிறைய உண்டு. ஆனால், அம்பேத்கரின் பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை!

இவ்வளவு பெரிய ஆய்வு நூலை எழுதிய நீங்கள் சினிமாவில் எப்படி?

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே வாசிக்கத் தொடங்கி விட்டேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 19 - 20 வயதில் உறுப்பினர் ஆனேன். இப்போது எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. பல்வேறு மார்க்சிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களோடும் கற்றேன். விவாதித்தேன். வேறுபட்டேன்.

நான்கைந்து வருடங்கள் பல ஊர்களில் பிழைப்பின் நிமித்தம் கூலித்தொழிலாளியாக இருந்தேன். வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். இன்னும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இப்போது புதிதாக நடிக்கிறேன்.

அந்த வகையிலும் என்னை ஒரு தொழிலாளியாகத்தான் பார்க்கிறேன். சினிமா எனக்குத் தொழில். அதில் குழப்பங்கள் இல்லையென்பதால் எழுதுகிறேன். சசிகுமாருக்கும் உங்களுக்குமான நட்பு எப்படி?

அனைத்தையும் விவாதிப்பதும், கடந்தும் போவதுமான உறவு. எந்த அலட்டலும் இல்லாத மனிதர். விமர்சனத்தை விமர்சனமாகப் பார்ப்பதால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தோளில் கை போட்டபடி நீங்கள் அவரை விமர்சிக்கலாம். சினிமா குறித்து அவரிடம் நான் கற்றிருக்கிறேன்.

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்