பகவான்-11நீ கம்யூனிஸ்ட்டா?

ஒரு பயணத்துக்காக ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார் ரஜனீஷ்.எந்த ரயில்தான் நேரத்துக்கு வந்திருக்கிறது? நேரத்தைப் போக்க தியானம் செய்தார்.தியானம் முடிந்ததும் சுற்றியுள்ள மனிதர்களை நிதானமாக கவனித்தார்.அவருக்கு அருகே அறுபதுகளைக் கடந்த ஒரு மனிதர் அமைதியாக அமர்ந்திருந்தார். கண்ணாடிக்கு உள்ளே இருந்த கண்கள் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தின. அவரிடம் ஏதாவது பேசலாம் என்று ரஜனீஷுக்குத் தோன்றியது. எனவே, அவரைக் கண்டு அளவாகப் புன்னகைத்தார்.

அந்த மனிதரும் பதிலுக்கு புன்னகைத்தாரே தவிர, பேச்சுவார்த்தைக்கு முயலவில்லை.வேறு வழியில்லாமல் தன் பயணப் பெட்டியில் இருந்த நூல்களில் ஒன்றை எடுத்து ரஜனீஷ் வாசிக்கத் தொடங்கினார்.யதேச்சையாக ரஜனீஷைப் பார்த்த அந்தப் பெரியவர், ரஜனீஷின் கையில் இருந்த நூலைக் கண்டதுமே பரவசமானார்!இவரிடம் பேசுவதற்காக லேசாக செருமினார்.

ரஜனீஷோ அதற்குள் நூலுக்குள் ஆழ்ந்து போனார்.ரயில் வந்தது. இருவரும் ரயிலில் ஏறினார்கள்.வசதியான ஓர் இடத்தைப் பிடித்து தனது பெட்டியை பத்திரப்படுத்திவிட்டு, ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து நூலை மீண்டும் வாசிக்கத் தொடங்கினார் ரஜனீஷ்.அந்தப் பெரியவர் எங்கெங்கோ அலைந்துவிட்டு, சரியாக ரஜனீஷுக்கு எதிரில் காலியாக இருந்த இருக்கையை ஆக்கிரமித்தார்.அவரைக் கண்டதுமே மீண்டும் ரஜனீஷ் புன்னகைத்தார்.

அவர், “இந்த வயதில் இந்த நூலைப் படிக்கிறாயே, நீ யார்?” என்று கேட்டார்.ரஜனீஷின் கையில் இருந்தது ரஷ்யப் புரட்சியாளர் லெனின் எழுதிய கட்டுரைத் தொகுப்பு!“என் பெயர் ரஜனீஷ். ஜபல்பூரில் கல்லூரியில் படிக்கிறேன். லெனினுடைய நூல்கள் மட்டுமல்ல, பேராசான் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஸ்டாலின் ஆகியோருடைய நூல்களும் என் சேகரிப்பில் இருக்கின்றன.“ரயிலில் கம்யூனிஸம் வாசிக்கும் முதல் இளைஞனை இந்தியாவில் இப்போதுதான் பார்க்கிறேன். நீ கம்யூனிஸ்ட்டா?”

“இப்போது வரை நான் யாருமில்லை. யாருக்குத் தெரியும், ஒருவேளை நாளையே நான் கம்யூனிஸ்ட் ஆகலாம். என் காதுகளைத் தயாராக வைத்திருக்கிறேன். எல்லாத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்கிறேன். எது என்னை ஆக்கிரமிக்கிறதோ, நான் அதுவாக மாறுவேன்! இப்போதைக்கு கம்யூனிஸம் எனக்குப் படிப்பு.

கம்யூனிஸம் மட்டுமல்ல. ஆன்மிகம், அனார்க்கிஸம், சோஷலிஸம், கேப்பிடலிஸம் என்று எல்லாவற்றையும் உற்றுக் கவனிக்கிறேன். நிறைய வாசிக்கிறேன். எதுவாகவும் மாறுவதற்கு முன்பாக எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இப்போதைக்கு தேடலில் மட்டும்தான் இருக்கிறேன்!”

ரஜனீஷின் நீண்ட விளக்கம் அவரைக் கவர்ந்தது. அருகில் வந்து அமர்ந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.“நான் எம்.என்.ராய்!”அந்தப் பெயரைக் கேட்டதுமே ரஜனீஷுக்கு சிலிர்த்துவிட்டது. இந்தியாவின் மகத்தான ஒரு தலைவரை, சாதாரண ரயில் பயணத்தில் சந்திக்க முடியுமென அவர் கனவிலும் நினைத்ததில்லை.

அவரிடம் கம்யூனிஸம் குறித்த தன் சந்தேகங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார். எம்.என்.ராயும் ரஷ்யப் புரட்சியின் போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை எல்லாம் சுவைபட சொல்ல ஆரம்பித்தார். இருபது வயதை எட்டிய ரஜனீஷுக்கும், அறுபது வயதைக் கடந்த எம்.என்.ராய்க்கும் அன்றிலிருந்து நட்பு மலர்ந்தது.

எம்.என்.ராய் மட்டுமல்ல, இன்னொரு ராயும், ரஜனீஷின் வாழ்வில் முக்கியமானவர். அவர், எஸ்.எஸ்.ராய்!சாகர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தத்துவப் பேராசிரியர். அப்போது நாடு முழுக்கவே மாணவர்கள் மத்தியில் எஸ்.எஸ்.ராய்க்கு நல்ல மதிப்பு இருந்தது.
சாகர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கங்கள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள ரஜனீஷ் செல்வார். இவருடைய கூர்மையான கேள்விகளும், தத்துவங்களை கிரகிக்கும் திறனும் ராயை மிகவும் கவர்ந்தது.

“இந்தப் பல்கலைக்கழகத்தில் வந்து படிக்கலாமே? நாம் அடிக்கடி சந்திக்க முடியும் இல்லையா?” என்று அடிக்கடி கேட்பார்.ரஜனீஷ், பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைப்பார்.“ஒன்று நீ இங்கே வா. அல்லது நான் நீ படிக்கும் இடத்துக்கு வந்துவிடுகிறேன்!” என்று ஜோக் அடிப்பார்.
அப்போது சாகர் பல்கலைக்கழகத்தில் ஆயிரம் மாணவர்கள்தான் இருந்தனர். ஆனால், முன்னூறு பேராசிரியர்கள்!

ஆசிரியர்,  மாணவர் விகிதம் மிகவும் குறைவாக இருந்ததால், ஒவ்வொரு மாணவனையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, அவர்களை பட்டை தீட்டிய வைரங்களாக உருவாக்கிக் கொண்டிருந்தது சாகர் பல்கலைக்கழகம்.பேராசிரியர் ராயின் வற்புறுத்தலால் அங்கே மேற்படிப்புக்காக சேர்ந்தார் ரஜனீஷ்.ராய், ரஜனீஷுக்கு எடுத்த முதல் வகுப்பு இறைவன் தொடர்பானது.

“முழுமையான ஒன்றையே நாம் இறைவன் என்கிறோம்...” என ஆதிசங்கரரை மேற்கோளிட்டு ராய் சொன்னார்.உடனே அதை ஆட்சேபித்து கேள்வி எழுப்பினார் ரஜனீஷ்.“முழுமை என்றால் முடிந்துவிட்டது என்று அர்த்தம். அதற்கு மேல் வளர்ச்சி பெறமுடியாத ஒன்றே முழுமை பெறுகிறது. வளர்ச்சியோ மாற்றமோ அடைய இயலாத ஒன்று இறந்துவிட்டது என்று அர்த்தம். உங்கள் இறைவன் எப்படி?”

ஒரு மாணவனிடமிருந்து இப்படியொரு இடியை எந்தப் பேராசிரியரும் எதிர்பார்க்க மாட்டார்.

ஆதிசங்கரர், மேற்கத்திய அறிஞர் பிராட்லி போன்றோர் சொன்ன ‘முழுமை’ தத்துவத்தை ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர் எஸ்.எஸ்.ராய். தான், பட்டம் பெற்ற சப்ஜெக்ட்டின் அடிமடியிலேயே ரஜனீஷ் கைவைத்தது அவரை கோபப்படுத்தவில்லை. மாறாக மகிழ்ச்சிக்கு உள்ளானார்.

“உன் கேள்விக்கு விடை கொடுக்க எனக்கு அவகாசம் கொடுப்பாயா?” என்று அன்புடன் கேட்டார். ஏனெனில், முழுமை என்றால் முடிந்துவிட்ட ஒன்று என்கிற அர்த்தத்தை ராய் ஒப்புக்கொண்டார். ஆனால், கடவுளை முழுமையற்றவர் என்றோ, முடிந்துவிட்டவர் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

அன்றிலிருந்து ரஜனீஷை தன்னுடனேயே ராய் தங்க வைத்துக் கொண்டார். தனக்கு சமமாக அவரை மதித்து விவாதங்கள் நடத்தினார். அவரும் நிறைய தெளிவுற்றார். ரஜனீஷின் பல சந்தேகங்களுக்கும் தன்னால் முடிந்த விளக்கங்களைக் கொடுத்தார்.

சாகர் பல்கலைக்கழகத்திலிருந்து வேறொரு பல்கலைக்கழகப் பணிக்கு சேர்ந்தபோது ராய், தன்னுடனேயே ரஜனீஷை வருமாறு அழைத்தார். எனினும் சாகர் பல்கலைக்கழகம், தன்னுடைய திறமையான மாணவனை விட்டுத்தர முடியாது என்று மறுத்தது.
ராய், வேறு பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவிட்ட போதிலும் மாதாமாதம் ரஜனீஷை சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்!

ரமணர் பற்றி ரஜனீஷ்!

ரஜனீஷ் படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எல்லாம் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். ஒருநாள் அவர், விழா ஒன்றில் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.“புத்தர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே என்று ஏங்குகிறேன். அவ்வாறு இருந்திருந்தால் நான் அவரது சீடனாக இருந்திருப்பேன்...” என்றார்.வழக்கம்போல ரஜனீஷ் குறுக்கிட்டார். “நான் அப்படி நினைக்கவில்லை…”“ஏன்?”

“புத்தரைப் போன்ற ஞானம் கொண்ட மகான் ஒருவர், இதே தேசத்தில்தான் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்தார். தென் மாநிலத்தில் திருவண்ணாமலை என்கிற சிறுநகரில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த ரமண மகரிஷிதான் அவர். அவரை நீங்கள் இதுவரை நேரில் போய் தரிசித்ததுகூட கிடையாது. அவரிடம் சீடராக முயற்சித்ததும் இல்லை. அப்படியிருக்க புத்தர் இருந்திருந்தால் மட்டும் அவரிடம் நீங்கள் எப்படி சீடர் ஆகியிருப்பீர்கள்?”
ரஜனீஷ், சூடாக இதுபோல சொன்னதும் சுற்றியிருந்த பேராசிரியர்களும், மற்ற மாணவர்களும் பதறிவிட்டனர்.

ஆனால், துணைவேந்தரோ, “என் வயது அறுபத்தெட்டு. என் முகத்துக்கு நேராக இதுவரையில் எவரும் இதுபோல உண்மையை பட்டென்று போட்டு உடைத்தது இல்லை. இனி நீ என் மாணவன் அல்ல. நண்பன்!” என்று கூறி ரஜனீஷை அணைத்துக் கொண்டார்.
அன்றிலிருந்து ரஜனீஷை நண்பராகவே கருதிப் பழகத் தொடங்கினார். அப்போது ரஜனீஷுக்கு வயது இருபத்தி நான்குதான்!

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்