48 வயதில் Mr. World!



தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கும் சென்னை பாடி பில்டர்

அரசு... சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த உலக ஆணழகன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கும் சென்னைக்காரர். மட்டுமல்ல. இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் பதக்கங்களை வென்று உற்சாகமாகத் திரும்பியுள்ளனர்! இதில் அரசு, தமிழக பாடி பில்டர்ஸ் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம்தான் உலகளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழகத்திலிருந்து 14 பேர் போனோம். இதுல என்னோட சேர்த்து ஐந்து பேருக்கு பதக்கமும், ஆறு பேருக்கு இடமும் கிடைச்சிருக்கு! அதாவது பதினோரு பேர் டாப் 5ல வந்திருக்கோம்! இதுல ஒரு பொண்ணும் உண்டு.

தமிழகத்திலிருந்து இவ்வளவு பேர் கலந்துகிட்டு பதக்கமும், இடமும் வாங்கினது இதுவே முதல்முறை...’’ என நெகிழும் அரசுக்கு வயது 48. இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாகக்காட்டி பதக்கம் தட்டியிருக்கிறார்.

‘‘ஆலந்தூர்தான் சொந்த ஊர். அப்பா மௌனகுருதான் என் முதல் குரு. அவர் தினமும் காலைல தவறாம உடற்பயிற்சி செய்வார். அவரைப் பார்த்து நானும் ஆறாவது படிக்கும் போதே பயிற்சியை ஆரம்பிச்சேன். தவிர, எங்க வீட்டுக்குப் பக்கத்துலயும் ஒரு ஜிம் இருந்தது. பார் கம்பிகள் மட்டும் இருக்குற சின்ன ஜிம் அது. இங்க விளையாட வர்றவங்கள பார்த்து நாமும் இதுமாதிரி உடம்பை வச்சிக்கணும்னு தோணும்.

அப்ப சதீஷ்ராஜானு ஒருத்தர் அந்த ஜிம்முக்கு வருவார். அவருடன் சேர்ந்து ஜிம்ல விளையாடத் தொடங்கினேன். கொஞ்ச நாள்ல அந்த ஜிம்மை எடுத்திட்டாங்க. ஆனா, உடற்பயிற்சியை விடாம தொடர்ந்தேன். பிறகு, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில பி.ஏ. எகனாமிக்ஸ் சேர்ந்தேன். இங்கதான் பாடி பில்டர்ஸுக்கு ஆணழகன்னு ஒரு விளையாட்டு இருக்குனே தெரிஞ்சது...’’ எனச் சிரித்தபடியே தொடர்ந்தார்.

‘‘காலேஜ்ல பி.டி. சாரா இருந்த சுகுமாரன்தான் இந்த விளையாட்டுல கலந்துக்க என்னை ஊக்கப்படுத்தினார். 75 கிலோ பிரிவுல கலந்துக்கிட்டேன். முதல் வருஷமே சென்னைப் பல்கலைக்கழக அளவுல ஃபர்ஸ்ட்டா வந்தேன். அதனால, அகில இந்திய பல்கலைக்கழக அளவுல கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சது. இதுல பதக்கம் வெல்ல முடியல. நான்காவதா வந்தேன்.

பிறகு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டுகள்ல இங்கே தங்கமும், அகில இந்திய அளவுல வெள்ளியும் அடிச்சேன். அப்புறம் ஜூனியர் பிரிவுல மிஸ்டர் தமிழ்நாடு ஆனேன். பிறகு, ஜூனியர் பிரிவுல மிஸ்டர் இந்தியாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்புறம், மிஸ்டர் சவுத் இந்தியாவுல வெண்கலம் கிடைச்சது.

அடுத்து, எல்லாப் பிரிவிலும் தங்கம் வாங்கினவங்களுக்கு இடையே சாம்பியன் போட்டி நடத்தினாங்க. அதிலும் சாம்பியனானேன். இதனால, ஆசிய போட்டிக்கு தேர்வானேன். ஆனா, என்னால கலந்துக்க முடியாம போச்சு. இதெல்லாம் 1994ம் வருஷம் நடந்த சம்பவங்கள். இந்திய அளவில் பதக்கங்கள் வாங்கினதால எனக்கு ஐ.சி.எஃப்ல வேலை கிடைச்சது. இங்கிருந்தே என் கேரியரும் ஆரம்பிச்சது...’’ என்றவர் அடுத்தடுத்த வருடங்களில் பதக்கங்கள் வாங்கிக்குவித்து தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்துள்ளார்.

‘‘2005ம் வருடம் ஏற்பட்ட தசைப்பிடிப்புக்குப் பிறகு விளையாடறதை நிறுத்திட்டேன். ஒட்டுமொத்த ரயில்வே டீமிற்கும் கோச்சாக நியமிக்கப்பட்டேன். இதனால, விளையாடாம பயிற்சி மட்டும் கொடுத்தேன். ஆனா, இப்ப பதிமூன்று வருஷத்துக்கு அப்புறம் பதக்கம் வாங்கினதுக்குக் காரணம் என் குடும்பம்தான். குறிப்பா, என் மகன்...’’ நெகிழ்ந்தவர், சில நிமிட இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.

‘‘எனக்கு ரெண்டு பொண்ணு,ஒரு பையன். இவங்கதான் என்னை உற்சாகப்படுத்தி ‘மறுபடியும் ஆணழகன் போட்டியில ஜெயிக்கணும்ப்பா’னு சொல்லிட்டே இருந்தாங்க. இதனால, 2016ல் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினேன். இப்ப நாற்பது வயதுக்கு மேற்பட்டோர்ல 85 கிலோ பிரிவுல கலந்துகிட்டு வெண்கலம் பெற்றேன்.

என்னுடன் சக தோழர்கள் பாஸ்கரன் 65 கிலோ பிரிவுல தங்கம் அடிச்சார். அதே பிரிவுல ஹரிபாபு என்பவர் வெண்கலம் வாங்கினார். 75 கிலோவுல ஜெயப் பிரகாஷ் வெள்ளியும், 85 கிலோ பிரிவுல மோகன சுப்ரமணியம் வெண்கலமும், 100 கிலோ பிரிவுல ராஜேந்திரமணி
வெள்ளியும் வென்றாங்க.

தவிர, இந்த விளையாட்டுல முதல் மூன்று இடங்கள் தவிர்த்து நான்காவது, ஐந்தாவது பிடிக்கிறவங்களும் கவுரவிக்கப்படுவாங்க. அப்படி செந்தில்குமரனும், கலைச்செல்வனும் நான்காவதாகவும், ஜெரால்டு, னிவாசன் ஆகியோர் ஐந்தாவதாகவும் வந்தாங்க.
பெண்கள் ஃபிட்னஸ் பிரிவுல சுஜாதா ஐந்தாவது இடம் பிடிச்சாங்க.

பொதுவா, பாடி பில்டர்ஸ்னா வெளியிலிருந்து பார்க்கறவங்க நல்லா சாப்பிடுவாங்கனு நினைப்பாங்க. ஆனா, அப்படியில்ல. இந்த ஸ்போர்ட்ஸுக்கு உணவை சரியாகவும், அளவாகவும் எடுத்துக்கணும். அவரவர் எடைப் பிரிவுக்கு ஏற்றவாறு சாப்பிடணும்.

அதேமாதிரி ஒவ்வொரு தசைக்கும் தனித்தனியான பயிற்சி இருக்கு. அப்பதான் தசையைப் போட்டியின் போது அழகாகக் காட்ட முடியும். இதுல ஏழுவிதமான போஸ் கட்டாயமானது. அதை எப்படி காட்டுறோம்னு பார்த்து பதக்கம் கொடுப்பாங்க.
அதுக்கு சரியான புரோட்டீன் நிறைந்த உணவு அவசியம்.

அப்படியில்லன்னா தசை அழகாக வராது. நாங்க போட்டிக்கு ஒரு மாசத்திற்கு முன்னாடியே சாப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிடுவோம். பிறகு, 21 நாட்கள் உப்பு இல்லாம சாப்பிடுவோம். மட்டுமல்ல. போட்டிக்கு 48 மணி நேரத்திற்கு முன்னாடியே தண்ணீர் குடிக்கிறதையும் நிறுத்திடுவோம்.

அதாவது இரண்டு நாட்கள் தண்ணீரே குடிக்க மாட்டோம்! இந்த முறைகளாலயே தசைகள் கட்டுக்கோப்பாக மிளிரும். சாப்பாடு தவிர மனசையும் கட்டுப்பாடுடன் வச்சிக்கணும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இதை நாங்க விரும்பியே செய்றோம். அப்பதானே பதக்கம் வெல்ல முடியும்...’’ என விவரித்தவரிடம் அடுத்த டார்கெட் என்ன என்றோம்.

‘‘பொதுவா, எல்லா ஆணழகன்களின் நோக்கமும் ஒலிம்பியா போட்டியில தங்கம் வாங்கணும் என்பதாகவே இருக்கும். இதுக்குத் தேர்வாக உலக ஆணழகன் போட்டியில தங்கம் வாங்கணும். இந்த வருஷம் வெண்கலம் அடிச்சிருக்கேன். அடுத்து, தங்கம் வாங்கி, ஒலிம்பியாவுலயும் தங்கம் வாங்கணும். அதுதான் என் லட்சியம். நிச்சயம் வெல்வேன்...’’ நம்பிக்கையாக தம்ப் உயர்த்திக்காட்டுகிறார் அரசு!

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்