எப்படி உருவானோம்னு எல்லார்கிட்டேயும் ஒரு கதை இருக்கு!தேவ் ரகசியங்கள்
 
‘‘அருமையா வந்திருக்கு, ‘தேவ்’. நிஜமாகவே மனசுக்கு அவ்வளவு சந்தோஷம். கார்த்தி சாரோட சேர்ந்தது அற்புதம்னா ‘தேவ்’ இனிதாக முடிந்திருப்பது இன்னும் பெருமிதம்.

கதையையே சொல்லிவிடலாம். ஆனால், இப்போ இல்லை. எல்லோரையும் கூப்பிட்டு கலர்ஃபுல்லா கதை சொல்றேன். உண்மையாக வேலை பார்க்கிறவர்களுக்கு அதனோட பலன் நிச்சயமாக கிடைக்கும். கார்த்தி ரொம்பவும் அருமையாக செய்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலங்கரிக்கிறார்.

இந்தப் படத்தில் அவரின் இடத்தை வேறு யாராவது நிரப்ப முடியுமானு யோசித்தால், கார்த்தியின் இடத்தை அவர்தான் நிரப்ப முடியும்னு தோணுது. எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து பார்க்கும்போது நிறைவாக இருப்பதுதான் பெரிய திருப்தி...’’ ரிலாக்ஸாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர். மிக இளைஞர்.

ஸ்டில்கள் பார்க்க, இளமையா குளுமையா இருக்கு...கார்த்தி சார் அருமையாக ஒரு நட்புணர்வை ஏற்படுத்தித் தந்தார். அறிமுக இயக்குநராக இருந்த எனக்கு இறுக்கம் விட்டுப்போச்சு. எல்லோருக்குள்ளேயும் வெளியே தெரியாத ஒரு போட்டி இருக்கணும்னு நினைச்சோம். அப்படி யோசிச்சு யோசிச்சு அடுத்த லெவலுக்குப் போனோம்.

எங்களோட டிஸிப்ளின், ஈடுபாடு, கடின உழைப்பு எல்லாம் படம் ரிலீசானதும் புரியும். ‘தேவ்’வில் உங்களுக்கு என்ன வேணும்னாலும் கிடைக்கும். அதுதான் விசேஷம். ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு கதை இருக்கும். ஒருத்தனை ஆழமாப் பார்த்தீங்கன்னா ஒரு கதை. அவனோட வீடு வரைக்கும் தேடிப்போனா களம். இங்கே கதைக்காகவோ, களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் சொல்லிக்கிற கதையாகத்தான் இருக்கும்.

‘தேவ்’வின் ஐடியாலஜி, அவர் என்ன விரும்புகிறார்,மற்றும் ஃப்ரெண்ட்ஷிப், லவ், எமோஷன், சென்டிமென்ட், ஆக்‌ஷன்னு எல்லாம் கலந்ததுதான் படம். தேவ்வின் பயணம்தான் கதை. நாம் எப்படி உருவானோம்னு ஒரு கதை எல்லார்கிட்டேயும் இருக்கு இல்லையா, அதுதான்! இளமை ததும்ப றெக்கை விரிச்சு பறக்கிற ஒரு காதலும் இதுல இருக்கு.

இப்படி ஒரு கதை செய்ய கார்த்தி இன்னிக்கு அவ்வளவு பொருத்தமானவர். அவருக்கு இதில் ஓர் இழப்பு, ப்ரேக் டவுன் வருது. அதை அவர் மீறி எப்படி அடுத்த ஸ்டெப்புக்கு போகிறார்னு கதை இன்னும் போகும்.இதில் கார்த்தி எப்படி வந்தார்?அவரே அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தவர். நிறைய கதை கேட்டிருக்கார்.

அதில் அபாரமான நாலெட்ஜ் அவருக்கு இருக்கு. பக்கத்து வீட்டு அண்ணன் மாதிரி இருக்கார். ஒருசமயம் ஒரு படம்தான் பண்றார். அதிலேயே முழுக் கவனமும் வைக்கிறார். எப்படி ஒரு படத்திற்கு தயாராகணும்னு தெரிஞ்சு அதற்கு முழுதாக உழைப்பைத் தருகிறார்.

அவரோட கடந்த ஒன்றரை வருஷங்களாக பேசிட்டு இருக்கேன். ஆனால், ஒரு தடவை கூட சினிமாவுக்கு வெளியே போய் அவர் பேசினதில்லை. ஒரு ஸ்கிரிட்டில் இறங்கி உள்ளே போகிற ஆர்வம் அவர்கிட்டே அவ்வளவு நிறைவா இருக்கு. ‘என் கேரக்டருக்கான ஸ்டைல் உங்க மனசில எப்படியிருக்கு’ன்னு கேள்விகள் கேட்டு தெரிஞ்சுக்குவார். அவரோட அக்கறைதான் அவரோட வெற்றி. அவர் இந்தக் கதையை ரசித்துவிட்டார். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

ரகுல் ப்ரீத் சிங் அழகு...
இந்த நூற்றாண்டு பெண்ணின் சாயல், மனது, பழக்கவழக்கங்கள், ஸ்டைல், பாவனை இருக்கணும். அதற்கு ரகுல் ப்ரீத்தான் அருமையான சாய்ஸ். இப்ப இருக்கிற பெண்களின் மனநிலையை அவ்வளவு சரியாக பிரதிபலிக்கிறாங்க. அப்புறம் இந்த ஜோடியே ரொம்ப நல்லாயிருக்கும். கார்த்தியும், ரகுலும் போட்டோசெஷன், ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நின்னபோது, இந்த ஜோடியைப் பார்க்கவே அட்டகாசமா இருந்தது. இந்த வண்டியில் யார் ஏறிப்போகணும்னு நினைச்சமோ அவங்க ஏறிட்டாங்க. வண்டி ஜோரா கிளம்பிவிட்டது.

அவங்க இரண்டு பேரும் இந்தப் படத்தில் உங்களை வசீகரிப்பாங்க. இது 100% சாத்தியம்.இதில், கார்த்தி மதுரைக்காரப் பையன். நாமளே இப்ப எவ்வளவு மாறி இருக்கோம் பாருங்க. டிரெஸ், ஹேர்ஸ்டைல், போடுற சட்டை, பேண்ட் எல்லாம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்க. அதெல்லாம் கார்த்திக்கு அருமையாக வந்திருக்கு.

முதல் தடவையாக கார்த்தி படத்தில் ஹாரிஸ் இசை...

என்னை மாதிரி புதியவன் செய்கிற படத்திற்கு கார்த்தி, ஹாரிஸ் இப்படி அமைவதெல்லாம் பெரிய விஷயம். திருவிழா மாதிரி இருக்கிற படத்தில் ஐந்து பாடல்கள். அவ்வளவு அருமையாக வந்திருக்கு. என்ன சொன்னாலும், ஹாரிஸ்க்கு முழு திருப்தி அமைஞ்சால்தான் பாட்டு வெளியே வரும். நானும் அவரும் வெளியூர் போய் திரும்பினோம். ‘அடடா, அடடா’னு உற்சாகப் பெருவெள்ளம் பாய்கிற மாதிரி ட்யூன்கள்.

பாடல்கள் தந்த குளிர்ச்சியில குலுமணாலி, பஞ்சகனி,  குல்மார்க், இமாச்சலப்பிரதேசம், உக்ரைன் வரைக்கும் போய் ஷூட் பண்ணினோம். உக்ரைனில் 1500 கி.மீ. வரைக்கும் உள்ளே போய் படமெடுத்திருக்கோம். பாடல்களில் ஹாரிஸ் வைரங்களை சேகரிக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அழகாக படம் பிடித்துத் தருவது மட்டுமல்ல, என்னை ஒரு தம்பி மாதிரி அழகா பார்த்துப்பார்.

ஹாரிஸின் பெஸ்ட் பாடல்கள், வேல்ராஜ் அண்ணனின் கண்ணில் ஒற்றிக்கிற ஒளிப்பதிவு, ரகுல், பிரகாஷ்ராஜ், கார்த்தி. ஒரு அருமையான இடத்தில் கார்த்திக் சார், நிக்கி கல்ராணி, ரம்யா கிருஷ்ணன்... இதுக்கு மேல வேற எதுவும் கேட்பீங்களா நீங்க?               

நா.கதிர்வேலன்