திண்டுக்கல் சாலைப்புதூர் மண் பானை உணவகம்



லன்ச் மேப்

மண் சட்டியில் வைத்த மீன் குழம்புக்கும் மண்பானையில் செய்த பொங்கல் சோற்றுக்கும் ஈடாக வேறெதுவும் இல்லை என்பது கிராமத்து  வழக்கு. மண்ணின் முழுச் சுவையையும் அதன் தன்மையையும் உணர இந்த இரண்டு உணவுகளையும் சாப்பிட்டால் போதும்.  அடிமையாகிவிடுவீர்கள். மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவுக்கு சமமானது!உணவு சமைப்பதற்கு மண்  பாண்டமே சிறந்தது. அது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல் சுவையை அதிகரிக்கவும் கூடியது. எளிதில் ஜீரணமாகும். நீண்ட  நேரம் கெடாமல் இருக்கும். அந்த வகையில் திண்டுக்கல் சுற்றுவட்டரத்தில் உள்ள அசைவப் பிரியர்களை, ‘சாலைப்புதூர் சந்தியா  மண்பானை உணவகம்’ சுவைக்கு அடிமை ஆக்கி வைத்திருக்கிறது!

வத்தலக்குண்டு வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 25வது கிலோமீட்டரில், சாலைப்புதூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே  இந்த உணவகம் உள்ளது. திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி பகுதிகளுக்கு வாகனத்தில் செல்பவர்கள், ‘சட்டிச் சோறு  சாப்பிட்டுப் போகலாம்’ என்றபடி மதிய உணவுக்கு இங்கே கை நனைப்பார்கள்.மதிய உணவு மட்டும்தான். 11 மணிக்குத் தொடங்கி மாலை 4  மணி வரைதான் கடை. கூட்டம் அலைமோதுகிறது. இந்த உணவகத்தின் ஸ்பெஷல் மட்டன் குழம்பும், கரண்டி ஆம்லெட்டும்! மரங்கள்  சூழ்ந்த கூரை வேய்ந்த கடைதான். ஆனால், மணக்கிறது!

‘‘1970ல எங்க மாமனார் முத்துசாமி இந்தக் கடையை ஆரம்பிச்சார். அப்ப இருந்தே மண் பானைகள்லதான் சமைக்கறோம். குறிப்பா கருப்பு  மண் பானை. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த மண்ணைக் கொண்டு நெருப்புல சுட்டு உருவாக்கறாங்க. கருப்புச் சட்டினு சொல்ற இதுதான்  சமையலுக்கு ஏற்றது.இட்லிச் சட்டி, தோசைச் சட்டி, பணியாரச் சட்டினு மண்ணுல செஞ்சதைத்தான் பயன்படுத்தறோம். அலுமினியம்,  சில்வர் பாத்திரங்கள் வந்தபிறகும் நாங்க மாறலை! இதுதான் எங்க கடையின் வெற்றி...’’ என்கிறார் சகுந்தலா‘‘மாமனாருக்கு அப்புறம் என்  கணவரும் நானும் நடத்தினோம். சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு விபத்துல அவர் தவறிட்டார். ரெண்டு குழந்தைகளை வைச்சுக்கிட்டு  தவிச்சு நின்ன எனக்கு இந்தக் கடைதான் கைகொடுத்தது...’’ நெகிழும் சகுந்தலா, ஏழாவது படிக்கும்போதே தன் கணவர் கடையில் வேலை  பார்க்க ஆரம்பித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘அவருக்கு மொத்த சமையலும் அத்துப்படி. வீட்ல நான் சமைச்சாலும் அவர் அளவுக்கு வியாபாரம் பண்ணத் தெரியாது. பயத்தோடதான்  கடையை நடத்த ஆரம்பிச்சேன்.மண் பானை ருசிக்காகத்தான் மக்கள் கடைக்கு வர்றாங்க. அதனால அதுல கவனம் செலுத்தினேன்.  சாதத்தை பொங்க விடாம இதுல வடிக்கறதால சீக்கிரமே ஜீரணமாகும். கறி, பஞ்சு மாதிரி வெந்துடும். அதிகம் மசாலா பயன்படுத்தாம  இஞ்சி, பூண்டை அம்மில அரைச்சு சமைக்கறோம். கல் உப்பைத்தான் பயன்படுத்தறோம். எவ்வளவு தட்டுப்பாடு வந்தாலும் மண்ணச்சநல்லூர்  பொன்னிலதான் சோறு...’’ புன்னகைக்கும் சகுந்தலா, கல்லாவில் நிற்கிறார், சமையல் செய்கிறார், சப்ளை பண்ணுகிறார், டேபிளைச் சுத்தம்  செய்கிறார். உதவிக்கு இரு ஊர்க்காரர்கள்.

‘‘8வது வரைதான் படிச்சேன். ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ ஆட்டுக்கறி எடுத்து நேரம் கடத்தாம ஒரே தடவைல குழம்பு  வைச்சுடுவோம். கடை எவ்வளவு ஓடினாலும் ஒன்றரை கிலோவுக்கு மேல கறி எடுக்கறதில்ல. மண் பானைல 3 கிலோ அரிசியைத்தான்  வேகவைக்க முடியும். அதனால தேவைக்கு ஏற்ப மூணு, நாலு முறை வடிச்சுக்குவோம்.விறகை மிச்சப்படுத்த ஒருபோதும் பானை அளவை  கூட்ட மாட்டோம். இப்படி செஞ்சா சாதத்தோட மணம் மாறிடும்.இத்தனை வருஷங்களா ஆட்டுக்கறிக் குழம்பும் கரண்டி ஆம்லெட்டும்  மட்டும்தான் சமைச்சுட்டு இருந்தோம். இப்ப கோழிக் குழம்பும், மீன் குழம்பும் கூட செய்யறோம். இது தவிர சாம்பார், ரசம், புளிக்குழம்புனு  சைவமும் இருக்கு. சகலமும் மண்பானைலதான்!எங்க சமையலறை பின்னாடி இல்ல. கடை முகப்புலயே இருக்கு! திறந்த வெளிதான்.  சாப்பிட வர்றவங்க எப்படி நாங்க சமைக்கிறோம்னு பார்த்துட்டுதான் கடைக்குள்ளயே நுழைய முடியும். எல்லாமே சுத்தமா இருக்கிறதால  யாரும் குறை சொல்றதில்ல!’’ பெருமையாகச் சொல்கிறார் சகுந்தலா.

             
-திலீபன் புகழ்
படங்கள் : சங்கர் சபரி


பள்ளிப்பாளையம் கோழி வறுவல்

நாட்டுக் கோழி - 1 கிலோ.
வர மிளகாய் - 20.
சின்ன வெங்காயம் - 12.
பூண்டு - 10 பல்லு.
கறிவேப்பிலை - சிறிது.
எண்ணெய் - சிறிதளவு.
கடுகு - 1/2 ஸ்பூன்.
கொத்துமல்லி, உப்பு, மஞ்சள் - தேவையான அளவு.

பக்குவம்: இது ஒரு வகையான தாளிப்பு முறையில் தயாராகும் அசைவம்! வடை சட்டியில் எண்ணெய், கடுகு சேர்த்து தாளித்து, சின்ன  வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி பொன்நிறமாக வதக்க வேண்டும்.வர மிளகாயில் விதைகளை எடுத்துட்டு எல்லா மிளகாயையும்  கிள்ளிப் போட்டு பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலக்கி, கோழிக் கறியை தாளிக்கும் சட்டியில் போட்டு நன்கு கிளறவேண்டும்.  மஞ்சளையும் கல் உப்பையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும்தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இதன் சுவையே தாளிப்பு  முறையில்தான் அடங்கியிருக்கிறது! .

ஆட்டுக்கறி பிரட்டல்


ஆட்டுக்கறி - அரைக் கிலோ.
சின்ன வெங்காயம் - 1/4 கப்.
பூண்டு - 10 பல்.
தக்காளி - 50 கிராம்.
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்.
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்.
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்.
கெட்டி தேங்காய் பால் - 2 ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
தாளிப்பதற்கு:
சோம்பு - 1/2 டீஸ்பூன்.
பட்டை - 1/4 இன்ச்.
கிராம்பு - 2.
பிரியாணி இலை - 1.
கறிவேப்பிலை - சிறிது.
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

பக்குவம்:  மண் பானையில்தான் சமைக்க வேண்டும். ஆட்டுக்கறியை சுத்தமாகக் கழுவி தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு மண்  சட்டியில் கறித் துண்டுகளைப் போட்டு,  சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகக் கிளறவும்.  பின்னர் தனியாக மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களைச் சேர்த்து தாளித்து வெங்காயம், பூண்டை போட்டு  பொன்நிறமாக வதக்கவும். பிறகு இதில் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மீதமுள்ள மிளகாய்த் தூள், மல்லித்தூள்  சேர்த்துக் கிளறவும்.இதன் பின் வேக வைத்த மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறவும். ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் வற்றியதும்  அதில் தேங்காய்ப் பால் சேர்த்து சில நொடிகளில் இறக்கி விடவும்.சாதாரண பாத்திரங்களில் சமைக்கும் போது அனல் நேரடியாக கறியின்  மீது படும். ஆனால், மண் சட்டியில் மிதமாக வெந்து பஞ்சு போல மாறும்!