இது A படம்தான்! ஆனா ஆஸ்காருக்கு அனுப்புவேன்!



காதலை தேடி நித்யா நந்தா

இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன் சபதம்


‘‘இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் ஆன அன்னிக்கே, ‘இதுவும் அடல்ட் படமா’னு நிறைய பேர் ஆர்வமாகக் கேட்டாங்க! ‘அடல்ட்  கன்டன்ட்’னு அவங்க எதை மனசுல நினைச்சு கேட்குறாங்கனு புரியல.ஆனா, கண்டிப்பா இதுவும் ‘ஏ’ சர்டிபிகேட் படமாதான் இருக்கும்! என்  படங்கள்ல எப்பவும் பெண்களுக்கு கேவலமான ஷாட் வச்சு, வல்கரா காண்பிப்பது கிடையாது. அதுல எனக்கு உடன்பாடும் இல்ல.இது இளைஞர்களுக்கான படம். தியேட்டருக்கு பசங்களும் பொண்ணுங்களும் (நோட் திஸ் பாயின்ட். பொண்ணுங்கதான். நாட்,  பொம்பளைங்க!) மட்டும் வந்தா போதும். ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் வர வேண்டாம்! குடும்பத்தோட பார்க்கிற மாதிரி வருங்காலத்துல  படம் இயக்குவேன்னு நம்பிக்கை இருக்கு!’’

வெளிப்படையாகப் பேசுகிறார் ஆதிக் இரவிச்சந்திரன். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வுக்குப் பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷோடு ‘காதலை  தேடி நித்யா நந்தா’வாக வந்திருக்கிறார்!‘‘இந்தப் படம் இதுவரை நீங்க பார்த்திராத காவியம்... தமிழ் சினிமாவில் புது முயற்சி... இப்படி  எந்த பில்டப்பும் பண்ண விரும்பலை. ஒரு க்யூட்டான காதலுக்குள்ள ஃபேன்டஸியும் ஹாரரும் கலந்து கொடுத்திருக்கேன். சில  ஃப்ரெஷ்ஷான விஷயங்களும் படத்துல இருக்கு.‘ஏ’ சர்ட்டிபிகேட் படம்னாலும் கண்டிப்பா இதை ஆஸ்காருக்கு அனுப்புவேன்! அங்க இது  செலக்ட் ஆகுதா... ஆகலையானு எனக்குக் கவலை இல்ல! ஆஸ்கருக்கு அனுப்பப் போவது மட்டும் உறுதி!’’ சீரியசாக சொல்கிறார் ஆதிக்  இரவிச்சந்திரன்.

இந்த படம் டேக் ஆஃப் ஆனது எப்படி..?

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தோட செகண்ட் ஷெட்யூல் அப்பவே ஜி.வி. சாருக்கு என் மேல பெரிய நம்பிக்கை வந்திடுச்சு. ‘அடுத்து  என்ன கதை வச்சிருக்கீங்க’னு உரிமையா கேட்டார். சட்டுனு அவர்கிட்ட ஒரு ஒன்லைனை சொன்னேன். ‘சூப்பர். அதையும் நம்ம  காம்பினேஷன்லயே பண்ணுவோம்’னு சொன்னார்!‘த் இ ந’ பெரிய ஹிட் ஆனதும் அந்த ஸ்கிரிப்டை ரெடி பண்ண ஆரம்பிச்சேன். அதுக்குள்ள  அவர் நிறைய படங்கள்ல கமிட் ஆகிட்டார். பிடிக்க முடியல! வெயிட் பண்ணினேன். அப்படியும் அவர்  கால்ஷீட் கிடைக்கிற மாதிரி  தெரியல. அவ்வளவு டைட் பிசில இருந்தார்.

அந்த இடைவெளில வேற ஒரு ஹீரோவுக்கான படம் செய்துட்டு வரலாம்னு தோணுச்சு. அப்படி தொடங்கினதுதான் சிம்பு சாருக்கான  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. அதோட கிளைமேக்ஸ்ல ஜி.வி. சார் சின்னதா ஒரு கேமியோ பண்ணியிருப்பார். அதோட  ஷூட்டிங் நடந்த அன்னிக்கே ‘அடுத்து நம்ம படத்தை தொடங்கிடலாம் ஆதிக்’னு நம்பிக்கை கொடுத்துட்டு போனார். ‘டிரிப்பிள் ஏ’ ரிலீஸ்  ஆச்சு. படம், மாபெரும் ரிசல்ட்! கண் கலங்கிட்டேன். கரெக்ட்டா அந்த டைம்ல ஜி.வி. சார் போன் செஞ்சார். ‘என்ன பண்றீங்க... ஃப்ரீயா  இருந்தா நம்ம ஆபீஸ் பக்கம் வாங்க’ன்னார். ‘ஃப்ரீயாகத்தான் இருக்கேன் செல்லக்குட்டி!’னு செல்லமா சொல்லி ஆரம்பிச்ச படம்தான் இது!  அறுபது பர்சன்ட் படப்பிடிப்பு ஊட்டிலயும் சென்னைலயும் நடந்திருக்கு. மீதமுள்ள படப்பிடிப்பை காரைக்குடியில் ஆரம்பிக்கிறோம்.

பெண்களுக்குப் பிடிச்ச படமா இருக்கும்னா... கதை பத்தி ஒரு லைனாவது சொல்லுங்க..?


இதையேதான் புரொட்யூசரும் ‘ஒன்லைனாவது சொல்லு’னு இப்ப வரை கேட்டுக்கிட்டிருக்கார்! ‘சீக்கிரம் சொல்லிடறேன்... அதுக்குள்ள  படத்தையும் எடுத்து முடிச்சிடறேன் சார்’னு அவர்கிட்ட சொல்லியிருக்கேன்!ஜி.வி. சாரும் ‘என்ன கதைடா பண்ணியிருக்கே... ப்ளீஸ்  சொல்லுடா!’னு கேட்டுக்கிட்டிருக்கார். ‘அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்!’னு சொன்னேன். இப்படி விளையாட்டா நான் சொன்னா கூட,  தயாரிப்பாளரும், ஹீரோவும் என் மேல அப்படி ஒரு நம்பிக்கையை வைச்சிருக்காங்க. அதைக் காப்பாத்தற பொறுப்பு எனக்கு இருக்கு.‘த்  இ ந’ படத்தை பசங்களோட பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து சொல்லியிருப்பேன். இதுல பசங்க சொல்றதும் கரெக்ட்டு, பொண்ணுங்க  சொல்றதும் கரெக்ட்டுனு ரெண்டு கோணத்துல இருந்தும் பேசியிருக்கேன்.டெக்னாலஜி மாறி இருக்கிற மாதிரி நம்ம கல்ச்சரும் காதலும்  மாறியிருக்கு. அதை இப்ப உள்ள தலைமுறைக்குத் தகுந்த மாதிரி சொல்லியிருக்கேன்.

மிலிட்டரி ஸ்கூல்ல படிச்சுட்டு அப்பாவோட பிசினஸை கவனிப்பவரா ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடி அமைரா தஸ்தூர். ‘அனேகன்’ல  அமைராவின் நடிப்பைப் பார்த்து இதுல கமிட் பண்ணினோம். காலேஜ் படிக்கிற பொண்ணா இதுல வர்றாங்க. சஞ்சிதா ஷெட்டிக்கு நல்ல  ரோல். சோனியா அகர்வாலுக்கு குத்துப்பாட்டும் லவ் சீன்ஸும் இருக்கு! அப்புறம், வேதானு ஒரு புதுப் பெண் அறிமுகமாகறாங்க. தில்லில  அவங்க சோஷியல் ஆக்டிவிஸ்ட். தைரியசாலி. படத்துலயும் தைரியமான சில விஷயங்களைப் பண்ணியிருக்காங்க.‘கவண்’, ‘கவலை  வேண்டாம்’ அபிநந்தன் இராமானுஜம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். விஷுவல்ஸ் பிரமாதமா வந்திருக்கு. லால்குடி இளையராஜாவின்  செட்ஸ் பேசப்படும். ஜி.வி.பிரகாஷ் இசையமைச்சிருக்கார். பாடல்கள் பிரமாதமா வந்திருக்கு.

ஜி.வி.பிரகாஷை டுவிட்டர்ல செல்லக்குட்டினு கொஞ்சறீங்க..?

முதல்ல அவரை ‘குட்டிம்மா’னுதான் கூப்பிட ஆரம்பிச்சேன்! அப்புறம்தான் அது செல்லக்குட்டியாச்சு. சந்தோஷத்துல பங்கெடுத்துக்கற  நண்பர்கள் நிறைய இருக்காங்க. ஆனா, கஷ்டத்துல பங்கெடுப்பவர்கள் சிலர்தான். இந்த சிலர்ல ஜி.வி. முதலிடத்தில் இருக்கார்.‘தெனாலி’ல கமல் சார் ‘நீ தெய்வ மச்சான்’னு ஒரு டயலாக் சொல்வார். அந்த மாதிரி அவர். ஏன்னா, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’  கதையை எந்த ஹீரோவுக்கு சொன்னாலும் அதுல நடிச்சிருப்பாங்க. ஆனா, ஹீரோவாகும் முயற்சில இருக்கறவங்க கண்டிப்பா அதை  பண்ணியிருக்க மாட்டாங்க.  கேரியர் நெகட்டிவ்வா போயிடுச்சுனா என்ன ஆகும்னு பயந்திருப்பாங்க.
 
ஜி.வி.க்கு தன்னம்பிக்கை அதிகம். அவர் வயசுல அப்படி ஒரு கான்ஃபிடன்ஸ் ரொம்ப பெரிய விஷயம். நிஜத்துல அவர் நான் படத்துல  காட்டினதுக்கு நேர் எதிரானவர். சமூக நலன்ல அக்கறையுள்ளவர். யார்கூடவும் பெருசா பேசமாட்டார். நாலு சுவத்துக்குள்ள இசைதான்  உலகம்னு வாழ்றவர்.அந்தப் படத்துல கிஸ்ஸிங் சீனுக்கு அவர் கொடுத்த டார்ச்சர் இருக்கே... லிப் லாக்ல நடிக்கவே மாட்டேன்னு  சொல்லிட்டார். ‘இந்த மாதிரி சீனெல்லாம் நீ ஏன் எடுக்கறே? எங்க வீட்டுல என்னைத் தப்பா நினைப்பாங்க...’னு சொன்னார்.அதாவது ஒரு  ஹீரோயின் மறுக்கிற டயலாக்கை எல்லாம் சொல்லி பிடிவாதம் பிடிச்சார்! கன்வின்ஸ் பண்ணி நடிக்க வைச்சேன்!

என்ன சொல்றார் உங்க சிம்பு?


சில சூழல்களால ‘டிரிப்பிள் ஏ’ அப்படி ஆகிடுச்சு. நினைச்ச மாதிரி படம் எடுக்க முடியல. இப்பகூட சிம்பு அண்ணா மேல கோபமோ,  வருத்தமோ இல்ல. அதே மாதிரிதான் என் மேல அவருக்கும். அந்த ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு அவரே போன் பண்ணி பேசினார். நானும்  பேசினேன். ‘நாயகன்’ கேரக்டர்தான் சிம்புவும். அவரை யாராலயும் கரெக்ட்டா புரிஞ்சுக்கவே முடியாது!

-மை.பாரதிராஜா