வீடு தேடிவரும் அரசு சேவை



அண்மையில் தில்லி மாநில அரசு, 40 அரசு சேவைகளை மக்களின் வீடு தேடி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி யுள்ளது. ரூ.10 கோடி  ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் சமூகநலத்திட்டங்கள், வருவாய், போக்குவரத்து, உணவுப்பொருட்கள், தொழிலாளர் துறை, குடிநீர் வாரியம்  ஆகியவற்றுடன் நூறுவித அரசு சேவைகளை இவ்வாண்டுக்குள் வழங்க முயற்சித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் பெயர் சொல்லும்  திட்டத்தின் ஐடியா, மக்களிடமிருந்து பிறந்திருக்கிறது.  அரசு அலுவலகங்களுக்கு கையெழுத்து வாங்க, பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு என  அலைந்து, லஞ்சம் கொடுத்த நொந்துபோன 20 லட்சம் மக்கள் அரசுக்கு கொடுத்த புகார் மனுக்கள்தான் ஹோம்சர்வீஸ் சேவைகள்  தொடங்கப்பட காரணம்.

பிறப்பு சான்றிதழ்கள் தேவையெனில், 1076 என்ற ஹெல்ப்லைனுக்கு அழைத்து எந்தத் துறையில் உதவி வேண்டுமோ அதனைக்  கூறவேண்டும். உங்களுக்கு தனி எண் செயல்படுத்தப்பட்டு உடனே மொபைல் உதவியாளர்களுக்கு (சகாயக்) முகவரி, சேவை விவரம்  சென்றுவிடும். அவர்கள் டேப்லட்டுடன் உங்கள் வீட்டுக்கு வந்து ஆவணங்களை புகைப்படம் எடுத்து சரிபார்த்து அடுத்தடுத்த அலுவலக  விசிட்களுக்கான நேர்முகங்களை பதிவு செய்துவிட்டு சென்றுவிடுவர். அரசு சேவைகளுக்கான கட்டணத்தை நீங்கள் டெபிட் / கிரடிட் கார்டு  மூலம் மட்டுமே கட்டவேண்டும் என்பது இச்சேவையின் முக்கிய விதி!

அரசு சேவைகளை தாமதமின்றி பெறவும், ஊழலைத் தவிர்க்கவும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இத்திட்டத்தை  அமுல்படுத்தியுள்ளார். அறிமுகமான முதல் நாளில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. உதவிகளை வழங்குவதற்கு மாநிலமெங்கும்  600 கால்சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு கூடுதலாக 300 தொலைபேசி இணைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொபைல்  உதவியாளர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிப்பும் கணினி இயக்கும் திறனும் அவசியம்.

ஓட்டுநர் உரிமமுள்ள டூவீலர்களுடன் மொபைல்  உதவியாளர்களாக விரும்புபவர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி உண்டு. விஹெச்எஸ் குளோபல் என்ற தனியார் அமைப்பும் தில்லி அரசும்  செய்யும் இச்சேவைக்கு மக்கள் தரும் சேவைக்கட்டணம் ரூ.50; மீதித் தொகையை மாநில அரசு வழங்குகிறது. “முன்பு அரசு  அலுவலகங்களைத் தேடி மக்கள் வந்தனர். இன்று அரசு மக்களைத் தேடிச்சென்று பிரச்னைகளைத் தீர்க்கிறது!” என்கிறார் போக்குவரத்து  மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்.  

-ச.அன்பரசு