ஆதார் தீர்ப்பு மக்களுக்கு சாதகமானதா..?



செனகா

செப்டம்பர் 26 அன்று ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்றக் குழு அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள். ஆதார்  சட்டரீதியாகச் செல்லும் என்பதும், தனியார்கள் ஆதாரைப் பயன்படுத்த தடை என்பதும்தான் தீர்ப்பில் வெளி வந்த முக்கியமான  சாராம்சங்கள். இதன் மூலம் வங்கிகள், செல்பேசி நிறுவனங்கள், பள்ளி தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் என்கிற தேவை முழுமையாக  ஒழிக்கப்படுகிறது. ஐவர் குழுவில், ஒரே ஒரு நீதியரசரான திரு. சந்திரசூட் மட்டுமே ஆதார் சட்டத்துக்குப் புறம்பானது என்றும், அடிப்படை  கேள்வியான ஆதார் தனிமனித உரிமையைப் பாதிக்கிறது என்பது உண்மை என்பதையும் சொல்லி இருந்தார்.

அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் ‘‘அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஃப்ராடுத்தனம்தான் ஆதார்!” என்று  அழுத்தம் திருத்தமாக தன் தீர்ப்பில் எழுதியிருக்கிறார். இந்தத் தீர்ப்பு நியாயமானதா என்பதுதான் கேள்வி.பொருளியல் வல்லுனரும்,  ஆதாரை தொடர்ச்சியாக எதிர்த்தவருமான திரு. ஜீன் ட்ரேஸ், ஏன் இந்த தீர்ப்பு வலுவானதாகவும், மக்களுக்கானதாகவும் இல்லை  என்பதற்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறார்.

1) அரசு மான்யங்கள் பெறுவதற்கும், வருமானவரி கட்டுபவர்களும் நிரந்தர கணக்கு எண் வைத்திருப்பவர்களும் கட்டாயமாக ஆதாரைப்  பெற்றிருக்க வேண்டும். இது புறவாசல் வழியாக ஆதாரை கட்டாயமாக்கி இருக்கிறது. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் மற்றும்  சம்பளவாசிகளுக்கு வருமான வரி உண்டு. அவர்கள் ஆதாரை எடுத்தே ஆகவேண்டும். நகரம் தாண்டிய அத்தனை மாவட்டங்களிலும் மக்கள்  ஏதேனும் ஒரு வகையில் அரசு மான்யம் பெறும் வகையில் இருக்கிறார்கள் - ரேஷன் கார்டு, கேஸ் சிலிண்டர், உழவு சார்ந்த மான்யங்கள்  இன்னபிற. ஆக, வாய் வார்த்தையாக ஆதார் கட்டாயமில்லை என்கிற பிரமையை உருவாக்கிவிட்டு, யதார்த்தத்தில் ஆதார் இல்லாமல்  வாழமுடியாது என்கிற சூழலை இந்தத் தீர்ப்பு உருவாக்கி இருக்கிறது.

2) ஆதார் இல்லாமல் அரசு மான்யங்கள் பெற முடியாது என்கிற தீர்ப்பு ‘தவிர்க்கப்படல்’ என்கிற சூழலை உருவாக்கி இருக்கிறது. ஆதார்  உருவாக்கிய போது சொல்லப்பட்ட நோக்கமே, அரசு மான்யங்களில் நடக்கும் ஊழல்களையும், குறைபாடுகளையும் தவிர்ப்பதுதான். ஆனால்,  இணைய வசதி இல்லாத, தொழில்நுட்ப சிக்கல்கள் நிறைந்திருக்கக்கூடிய, முழுமையாக நம்பகத்தன்மையோடு நிறுவ முடியாத கைரேகை  தொழில் நுட்பத்தினால் ஏகப்பட்ட கிராமங்களில் மக்களால் அரசு உதவி பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப சிக்கல்கள்,  தொலைதூரம் என ‘தவிர்க்கப்பட்ட’ மக்கள் பசியாலும், பட்டினியாலும் இறப்பது என்பது ஆதாரால் நிகழ்ந்திருக்கிறது.

ஜார்கண்டில் 11 வயதான சந்தோஷ்குமாரி என்கிற சிறுமி பத்து நாட்களுக்கும் மேலாக உணவில்லாமல் இறந்ததும், அந்த குடும்பத்தின்  ஆதார் உள்ளீட்டில் சிக்கல்கள் இருந்ததால் அவர்களுக்கு ரேஷன் மறுக்கப்பட்டதும் முக்கிய காரணம். ஆதார் மரணங்கள் மத்தியப் பிரதேசம்,  ஜார்கண்ட், பீகார், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. வாழ்தலுக்கான உரிமையை அரசியல் சாசனம் கொடுத்தும்,  வாழ முடியாத நிலையை தொழில்நுட்பம் சார்ந்த ஆதார் உருவாக்கி இருக்கிறது. இந்தக் குறைபாட்டினை நீதியரசர்கள் கண்டுகொள்ளவே  இல்லை.

3) ஆதாருக்கு எதிரான முதல் குற்றச்சாட்டே அரசு இதை தன் குடிமக்களின் மீது வேவு பார்க்கும் கருவியாகப் பயன்படுத்தப் பார்க்கும்  என்பதுதான். ஆனால், மாண்புமிகு நீதிமன்றம், வெறும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே டேட்டாவை வைத்துக் கொள்ளலாம், மற்றவை  அழிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பது, மேற்சொன்ன குற்றச்சாட்டினை இன்னும் பலப்படுத்தவே செய்கிறது. மேலும்,  இதுவரை ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், செல்பேசி எண்கள், இன்னபிற தனியார் நிறுவனங்கள் அந்த இணைப்பினை  முழுமையாக அழிப்பதற்கும், அதை ஆதாரை நிர்வகிக்கும் அமைப்போடு துண்டிக்கவும் இந்தத் தீர்ப்பில் எதுவுமே சொல்லப்படவில்லை. ஆக, ஆதாரை தனிமனித உரிமைக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற விவாதம் இந்தத் தீர்ப்பினால் மாறவில்லை.  மாறாக, இது அரசின் கரங்களை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆதார் சட்டத்தின் அடிப்படையே அவை வாலண்டரியாக யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான். ஆனால், முந்தைய  காங்கிரஸ் அரசும், இப்போதைய பாஜக அரசும் ஆதாரை எல்லா விஷயங்களுக்கும் விரிவுபடுத்திவிட்டதால், பிடிக்கிறதோ, இல்லையோ,  அதை எடுத்தாக வேண்டிய கட்டாய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  இந்தத் தீர்ப்பு சில விஷயங்களில் சரியாக இருந்தாலும்,  பல ஷரத்துகளில் இன்னமும் அரசின் பார்வையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதாரை  நிர்ப்பந்தப்படுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் பொய் சொன்னோம் என்பதையும் பதிந்திருக்கிறது.

இத்தகைய சூழலில், அரசு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு நியாயற்றது  என்கிற வாதங்களில் உண்மை இல்லாமல் இல்லை. மொத்தத்தில் இது மோசமான தீர்ப்பல்ல. அதே சமயத்தில் முழுமையான தீர்ப்பும்  அல்ல. நீதியரசர் சந்திரசூட் முன்வைத்திருக்கக்கூடிய வாதங்களை எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் ஆதாரின் மற்ற ஷரத்துக்களும்  கேள்விக்குறியாக்கப்படலாம். அதுவரை ஆதார் என்கிற 12 எண்கள்தான் சராசரி இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும்!