தொழிற்புரட்சி 4.0 :பறிபோகிறதா வேலைவாய்ப்புகள்?
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த டெக்னாலஜி யுகத்தைப் பொருளாதார அறிஞர்களும் தொழில் அதிபர்களும் நான்காம் தொழிற்புரட்சியின் காலம் என்கிறார்கள். அதாவது சுருக்கமாக 4IR. பல்வேறு தொழில்களுக்கான நவீன இயந்திரங்களை உருவாக்கியதும் நீராவி மூலம் ரயில்  போக்குவரத்தைத் துரிதமாக்கி தொழில்துறையின் செயல்பாட்டை வேகமாக்கியதும் முதலாம் தொழில் புரட்சி. மின்சாரம் வந்ததும், பெரிய  பெரிய ஆலைகளை நிறுவி பெரும் உற்பத்திகள் நிகழ்ந்ததும் இரண்டாம் காலகட்டம். கணிப்பொறித் துறையின் வளர்ச்சியால்  இயந்திரங்களை கணினிமயமாக்கியது மூன்றாவது காலகட்டம்.

இப்போது, ரோபோக்கள், செயற்கை அறிவுஜீவிகள், முற்றி லும் தானியங்கியாகச் செயல்படும் இயந்திரங்கள் போன்ற சைபர் பிசிக்கல்  டெக்னாலஜி மூலம் உற்பத்தியைப் பெருக்கும் காலம் என்பதால் இதை தொழிற்புரட்சி 4.0 என்கிறார்கள்.தில்லி இந்திராகாந்தி விமான  நிலையத்தின் மூன்றாவது டெர்மினலில் பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து  கொண்டிருக்கிறார் ராடா. காண்பவர்கள் அனைவரும் ராடாவின் அழகில் மயங்குகிறார்கள். யார் இந்த ராடா? உலக அழகியா? இல்லை.  ராடா, ஒரு செயற்கை அறிவுஜீவி. அதாவது ரோபோ! பயணிகளின் போர்டிங் பாஸ்களை ஸ்கேன் செய்வது, புகார்களைப் பதிவு செய்வது,  அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது என்று ஒரு வரவேற்பாளரின் வேலையை சுதி சுத்தமாகச் செய்கிறது ராடா. டாடா  இன்னோவேஷன் மையம் இந்த நவீன ரோபோவை வடிவமைத்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் தங்களுடைய பயணிகளுக்காக இதை  நிறுவியுள்ளார்கள்.

எதிர்காலத்தில் இப்படியான பல்வேறு வகையான அடிமட்ட சேவைத் துறைகளிலும் நவீன இயந்திரங்கள், ரோபோக்கள் பணியில் இறங்கும்  என்றும் அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் சொல்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். இப்படியான  ரோபோக்களை  நாமே வடிவமைக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டோம் என்பதால் இந்தியர்களின் தேவைக்கு ஏற்ப இவற்றைச் சிறப்பாக வடிவமைக்க  முடியும் என்கிறார்கள். ‘இப்படியான புதுமையான ஏற்பாடுகள் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்ச நாட்கள் சுவாரஸ்யமாகத்தான்  இருக்கும். நிறுவனங்களுக்கும் ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட் என்பதால் லாபமும் இருக்கக்கூடும். ஆனால், இதனால் இரண்டு  ரிசப்ஷனிஸ்டுகளுக்கு வேலை பறிபோகிறது என்ற நிஜத்தையும் சேர்த்தே நாம் பார்க்க வேண்டும்...’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

4IR தொழில்நுட்பங்கள் பிரதானமாக பெரு நிறுவனங்களிலேயே முதலில் அமலாகும். பிறகு அதற்கு அடுத்த நிலையில் உள்ள அமைப்பு  சார்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களில் பயன்பாட்டுக்கு வரும். உழைப்பும், செலவீனமும், உட்கட்டமைப்புகளும்  இந்நிறுவனங்களுக்குத் தான் அதிகமாகத் தேவைப்படும். எனவே, இந்தத் துறைகளில் உள்ள தொடக்க நிலைப் பணிகள், குறைந்தபட்ச  திறன் தேவைப்படும் நடுத்தரமான பணிகள் ஆகியவற்றில் இந்த இயந்திரமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு உதாரணமாக  வாகனங்கள் உற்பத்தித்துறையைச் சொல்லலாம். நம் நாட்டில் விற்கப்படும் தொழில்துறை ரோபோக்களில் அறுபது சதவீதத்தை இந்த  நிறுவனங்கள்தான் வாங்குகின்றன.

இதனால், இந்தத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே கணிசமாகக் குறைந்துவிட்டது.ஒரே மாதிரியான பணிகள் செய்யத்  தேவையான இடங்களில் இனி மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படும். அதாவது, வங்கிகளின் வரவேற்பாளர்கள்,  டெல்லர்கள் போன்ற பணிகள் உட்பட நிதி, சட்டம், ஐ.டி., பி.பி.ஓ சேவைகள் போன்ற பணிகளில் விரைவில் செயற்கை மனிதர்களை  எதிர்பார்க்கலாம். இதில் ஐடி மற்றும் பிபிஓ போன்ற துறைகளில் ஏற்கெனவே கணிசமான அளவு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. எதிர்வரும் 2021ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இப்படியான வேலை வாய்ப்புகள் மேலும் பதினைந்து சதவீதம் வரை சரிவடையும் என்கிறார்கள்.

நம் நாட்டைப் பொறுத்தவரை எண்பது சதவீதமான தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்தான். இத்தகைய  தொழில்கள் இன்னமும் அடிப்படையான தொழில்நுட்பங்கள், மனிதக் கரங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பழைய உற்பத்தி முறைகள்  ஆகியவற்றையே நம்பியிருக்கின்றன என்பதால் பெரிய பிரச்னைகள் இல்லைதான். அதே சமயம் இந்த நவீன ரோபோடிக்ஸ்  தொழில்நுட்பங்களால் பெரும்பாலான மக்கள் இயங்கும் அமைப்பு சாரா தொழில்களுக்கு நன்மைஏதும் இல்லை. மறுபுறம், இது அமைப்பு  சார்ந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்களின் வேலை வாய்ப்பு சாத்தியங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட சேவைத்துறைகள் இந்தியாவில் எப்போதுமே பெரிய அளவிலான வேலை வாய்ப்பை வழங்கியதில்லை. உதாரணமாக,  ஐடி துறை மொத்த உள் நாட்டு உற்பத்தியில் ஒன்பது சதவீதத்தை வழங்கியபோதிலும் அதில் வெறும் முப்பத்தேழு லட்சம் பணியாளர்கள்  மட்டுமே வேலை செய்கிறார்கள். ஆனால், நாளை கடுமையாகப் பாதிக்கப்பட போகிறவர்களாகவும் இந்த குறைந்தபட்ச விகிதத்தினரே  இருக்கப் போகிறார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் ஒழுங்கமைக்கப்படாத தொழில்துறையின் வேலை வாய்ப்புகள்தான் பெருகிக்  கொண்டேயிருக்கின்றன. ஏற்கெனவே, அமைப்பு சார்ந்த துறைக்குள்ளேயே எழுபது சதவீதம் பேருக்கு எந்தவிதமான பணிப் பாதுகாப்போ,  மூப்பு கால சலுகைகளோ, முறையான ஒப்பந்தங்களோ கிடையாது.

உதாரணமாக, மிகப் பெரிய அளவில் கார் வாடகை சேவை தரும் சர்வதேச நிறுவனங்களைச் சொல்லலாம். இந்த நிறுவனங்களில்  பணியாற்றும் வாகன ஓட்டிகளுக்கு எந்தவிதமான பணிப் பாதுகாப்பும் கிடையாது. இப்படித்தான் பெரும்பாலான நிறுவனங்களின் நிலை  உள்ளது. இச்சூழலில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச பேரையும் அமைப்புசாரா தொழில்களை நோக்கி விரட்டத்தான் இந்தத் தொழில்நுட்பங்கள்  பயன்படப் போகின்றனவா என்ற கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை. இந்தியாவின் உற்பத்தித் துறை தானியங்கித் தொழில்நுட்பத்துக்கு  மாறினால் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இது ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கும் சூழல்தான். ஏற்கெனவே ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் 47 சதவீதம் பேர் ஒப்பந்தத்  தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.பாரம்பரியமான அமைப்புசார்ந்த தொழில்களில் கிடைக்கும் பணிப் பாதுகாப்பு, அந்தஸ்து,  எதிர்காலம் குறித்த உத்தரவாதம் போன்றவை அமைப்புசாரா தொழில்களில் கிடையாது என்பதே இத்தனை நாட்களாகப் பணிபுரிவோருக்கு  இருந்துவந்த குறை. இனி, அமைப்பு சார்ந்த தொழில்களில் இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளும் எளிய மனிதர்களுக்கு இல்லை என்ற  செய்தி நிச்சயம் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டுக்கு கசப்பான செய்திதான்.நம் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கெனவே  செல்வந்தர்கள் பெரும் செல்வந்தர்களாகவும் ஓட்டாண்டிகள் அதி ஓட்டாண்டிகளாகவும் மாறுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தியத் தொழில்துறையில் நிகழ உள்ள இப்புதிய மாற்றம், தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரிந்து பயன் பெறுபவர்களுக்கும்;  குறைந்தபட்ச அன்றாடத் தேவையை நிறைவேற்றக்கூட சிரமப்படுவோருக்குமான இடைவெளியை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று  எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.   ஏற்கெனவே இந்தியத் தொழில்துறையும் சேவைத்துறையும் கணினி மயமானபோது அதற்கு  எதிரான குரல்கள் எழவே செய்தன. ஆனால், ராட்சஷ வேகத்தில் நிகழ்ந்த தொழில் துறையின் மாற்றங்கள் அந்தக் குரல்களை எளிதாகக்  கடந்து சென்றுவிட்டன. இதோ இப்போது 4IR காலத்தில் மீண்டும் அப்படியான குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதன் நிஜமான  விளைவுகள் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும்.

-இளங்கோ கிருஷ்ணன்