அரசியல்வாதிகளும் குற்றப் பின்னணியும்!



ரமணன்

கிரிமினல் வழக்குகளில் எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் தேர்தலில் போட்டியிட  எந்தத் தடையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அண்மையில்  தீர்ப்பளித்துள்ளது!கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கூட 6 ஆண்டு களுக்குப் பின்னர் மீண்டும் எம்பி, எம்எல்ஏ மற்றும்  அமைச்சராகக் கூட பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதிகள் உள்ளன. இதை மாற்றி, தேர்தலில் நிற்க வாழ்நாள் முழுவதும் நிரந்தரத்  தடை விதிக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த அஸ்வனி உபாயாயா மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தரப்பட்ட தீர்ப்புதான் இது.

இதில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச  நீதிமன்றம் ஏற்றிருந்தால் இப்போது பதவியில் இருக்கும் 1,765 அரசியல்வாதிகளின் பதவி பறிபோயிருக்கும்! இது தேர்தல் கமிஷனின்  விதிகளில் செய்யவேண்டிய மாற்றம் என்கிறது நீதிமன்றம். தேர்தல் ஆணையமோ தனது வாதத்தில், ‘அரசியலில் கிரிமினல்களின்  தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக 1997ம் ஆண்டே பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட  வேண்டும்!’ என்று சொல்லியிருந்தது.

ஆக, பந்து இப்போது அரசின் கையில் இருக்கிறது. பாரபட்சமின்றி எல்லா அரசியல் கட்சிகளிலும் கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  எம்பி, எம்எல்ஏவாக இருப்பதால் தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படுமா என்பது கேள்விக்குறிதான்! போகிற போக்கில்  இதைச் சொல்லவில்லை. புள்ளிவிவரங்கள் இதைத்தான் மெய்ப்பிக்கின்றன.

* நாடு முழுவதும் மொத்தமுள்ள 4,896 எம்பி, எம்எல்ஏக்களில், 36 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
* 1,765 எம்பி, எம்எல்ஏக்கள் மீது மொத்தம் 3,045 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் ஊழல், கொலை, பாலியல் பலாத்காரம், கடத்தல், வெறுக்கத்தக்க பேச்சு, பெண்களுக்கு எதிரான  கொடுமைகள் ஆகியன முக்கியமாக அடங்கும்!இப்படி வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டிருந்தாலும் உடனடியாக விசாரணைகள் எதுவும்  நடைபெறுவதில்லை என்றும், சட்ட இடுக்குகளில் புகுந்து விசாரணையைத் தாமதப்படுத்தி தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்  கொள்கிறார்கள் என்றும் தக்க ஆதாரங்களுடன் சொல்கிறது ஏடிஆர் என்ற பொது நல அமைப்பு. அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக்  ரிஃபார்மஸ் என்பதன் சுருக்கம்தான் ஏடிஆர். இந்திய அரசியலில் குற்றப்பின்னணி கொண்டவர்களை நீண்ட நாட்களாக ஆராய்ந்து  அறிக்கைகளை அளித்து வருவதே இவர்களது பணி.

இந்த அமைப்பு 4,852 (774 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4078 சட்டமன்ற உறுப்பினர்கள்) நபர்களின் தேர்தல் வாக்குமுலங்களை  (ELECTION AFFIDAVITS) ஆய்வு செய்து 1,581 பேர் பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற விவரத்தை  வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள மொத்த நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களில் 36% பேர் குற்றப் பின்னணி  உடையவர்கள்! இந்த 1,581 பேரில் 51 பேர் பெண்களுக்கு எதிரான கடுமையான வழக்குகளில் தொடர்புடையவர்கள். குறிப்பாக, பிரதான  கட்சிகளால் தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 334 பேர் பெண்களுக்கு எதிரான குற்றப் பின்னணி கொண்டவர்கள்! நாடு முழுவதும் எல்லா அரசியல் கட்சிகளும் பாரபட்சமில்லாமல் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன.  அவர்களது குற்றப்பின்னணியைக் கண்டு கொள்வதில்லை என்கிறது இவர்கள் அறிக்கை.

இதில் ஊழல் ஒழிப்பு மற்றும் பொது வாழ்வில் தூய்மையைப் பேசும் பாஜகவும் இடம்பெற்றிருக்கிறது!  உதாரணமாக 2015 பீகார் சட்டசபைத்  தேர்தலில், குற்றப் பின்னணி உடைய 99 பேர் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாகக் களத்தில் நிறுத்தப்பட்டனர். இவர்களில்  பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 47 பேர். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட பிரதீப்குமார் மீது 32 வழக்குகளும்; ராஷ்ட்ரீய  ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ராஜ்ய வல்லப யாதவ் மீது 17 வழக்குகளும் உள்ளன!இப்படி வழக்குகள் இருந்தும் எப்படி மக்கள்  தேர்ந்தெடுக்கிறார்கள்? சிம்பிள். வேட்புமனு செய்யும் போது பிரமாணப் பத்திரத்தில் இக்குற்றப் பின்னணி குறிப்பிடப்பட்டாலும் தேர்தல்  நேரங்களில் இது பேசப்படுவதில்லை என்பதால் 60% வாக்காளர்களுக்கு இந்தப் பின்னணி விஷயம் தெரிவதேயில்லை என்கிறது இந்திய  அரசியல் விஷயங்களை ஆராய்ந்து பதிவு செய்யும் அமைப்பான ஸ்டடி சென்டர்.

அடுத்த அதிர்ச்சியான விஷயம், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும்,  பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்பதுதான்!குற்றவழக்குகளில் தொடர்புடைய எம்பி, எம்எல்ஏக்களில் வெறும் 6  சதவீதம் பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் என்பதை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கையாகவே தாக்கல்  செய்திருக்கிறது! குற்றவழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் 6 வருடம் தேர்தலில் நிற்க தடை என இருந்தாலும் 38 வழக்குகளில்  மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது; 560 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்கிறது அந்த அறிக்கை!

வழக்குத் தள்ளுபடி ஒரு பக்கம் என்றால் நீண்ட நாட்கள் (வருடங்கள்!) நிலுவையில் இருக்கும் வழக்குகள் மறுபக்கம்! இப்படி இழுத்தடிப்பது  ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமில்லை என்கிறது ஸ்டடி சென்டர். இதில் ஹைலைட் என்ன தெரியுமா..? நீதிமன்ற சரித்திரத்திலேயே அதிக  முறை வாய்தா பெறப்பட்ட வழக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடையதுதான்! இச்சூழலில்தான் உச்ச நீதிமன்றம்  குற்றப்பின்னணி கொண்டவர்களைத் தேர்தலில் பங்கு கொள்ள தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றுவது குறித்து அரசியல்  கட்சிகள் ஆலோசனை செய்ய வேண்டும் என்கிறது! அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் என்கிறார் சாமுவேல் ஜான்சன் என்ற  எழுத்தாளர். இந்தியாவைப் பொறுத்தவரை அது முதல் புகலிடமாக இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.