கள்ளக்காதலுக்கு சட்டம் ஆதரவா?



நியூஸ் வியூஸ்

சில நாட்களுக்கு முன்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலின  பாகுபாடு கூடாது என்கிற எண்ணத்தில் கொடுக்கப்பட்ட இத்தீர்ப்பினை, நமது மக்கள் பலரும் கள்ளக் காதலுக்கு ஆதரவான தீர்ப்பு என்று  கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றே செய்திகளைக் காணும்போது தோன்றுகிறது.சமீபத்தில் சென்னை எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ஒருவர்,  திருமணம் தாண்டிய உறவு ஒன்றை வைத்திருக்கிறார். இதைத் தட்டிக்கேட்ட மனைவியிடம், “கள்ளக்காதல் தப்பில்லை என்று  உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்திருக்கிறது. நீ எங்கு சென்று புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது...” என்று  சொல்லியிருக்கிறார். சட்டமே தன்னை கைவிட்டு விட்டதாகக் கருதிய மனைவி தூக்கில் தொங்கியிருக்கிறார்.

இதுபோல நாடெங்கும் ஆங்காங்கே சில சம்பவங்கள் சுடச்சுட நடந்திருக்கின்றன. கள்ளக்காதல் தவறில்லை என்று உச்சநீதிமன்றம்  சொல்லியிருக்கிறதா?சட்டப்படி திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். திருமண வயது வந்த ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்கிறோம்  என்று பரஸ்பரம் உறுதி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு. அது ஆண் - பெண் இருவரும் பாலுறவு கொள்ளுவதற்கான அனுமதிப் பத்திரம்  அல்ல.திருமணத்தையும், பாலுறவையும் இணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் பரஸ்பர  சம்மதத்தோடு, அவர்களுக்குள் திருமண பந்தம் இல்லையென்றாலும் பாலுறவு கொள்வதை (consensual sex) சட்டம் உட்பட யாரும் தடுக்க  முடியாது.இப்போது ஐபிசி 497வது சட்டப் பிரிவுக்கு வருவோம்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பாக 1860ம் ஆண்டு வயது வந்தோர் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின்  அடிப்படையில் ஆண் ஒருவர், இன்னொருவரின் மனைவியோடு (சம்மதத்தோடுதான்) பாலுறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம்.  அந்த இன்னொருவர் புகார் செய்யும் நிலையில், சம்பந்தப்பட்ட ஆண் குற்றவாளி ஆகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து  ஆண்டுகள் சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ, இரண்டுமோ சேர்த்து வழங்கப்படும்.இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் பார்க்கப்  போனால், தன் மனைவியின் பாலுறவுத் தேர்வினை ஒரு கணவர் கட்டுப்படுத்துகிறார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றத்தில் ஆண் மட்டுமே  தண்டிக்கப்படுகிறார்.

150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவரும் இந்த சட்டப்பிரிவு ஆண் - பெண் இருவருக்குமே எதிரானது, அபத்தமானது  என்கிற குரல்கள் எழுந்துவந்தன. அதன் அடிப்படையில் நடந்த வழக்கு ஒன்றில்தான் 497வது சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டிருக்கிறதே தவிர, ‘கள்ளக் காதல் குற்றமல்ல’ என்று சொல்லி ஆதரவு அளிக்கவில்லை.உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்  வழங்கியிருக்கும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும் முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும்.திருமண ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும்  ஆண் - பெண் இருவரில் ஒருவர் மூன்றாம் நபரோடு உறவு வைத்திருந்தால், மற்றொருவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது  திருமணம் தாண்டிய உறவு சிவில் பிரச்னையாக கவனிக்கப்பட வேண்டும். மகிழ்ச்சியற்ற திருமணத்தின் விளைவாகவே திருமணம்  தாண்டிய உறவு ஏற்படுகிறது.திருமணம் தாண்டிய உறவில் கணவன் - மனைவி இருவரில் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டால்  மட்டுமே அது குற்றமாகும்.

பெண்களை சொத்தாக, தனியுடைமையாக ஆண்கள் கருத முடியாது.சமூகத்தின் விருப்பப்படியோ அல்லது கணவனின் விருப்பப்படியோ  நடந்து கொள்ளும்படி பெண்களை கட்டாயப்படுத்த முடியாது.சட்டப்பிரிவு 497வது பிரிவு தன்னிச்சையானது. குழப்பமானது மட்டுமின்றி,  அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சம உரிமை மற்றும் சமவாய்ப்பு உரிமைகளை மீறியதாக உள்ளது.கற்பு என்பது ஆண்,  பெண் இருபாலருக்கும் பொதுவானது.மேற்கண்ட அம்சங்களை கவனிக்கும்போது, உச்சநீதிமன்றம் ‘திருமணம்’ என்கிற ஆண் - பெண்  இருவருக்குமான ஒப்பந்தத்தில் ஏற்படும் பிரச்னைகளை சிவில் பிரச்னையாகத்தான் பார்க்கிறதே ஒழிய, குற்றமாகக் கருதவில்லை என்பது  தெளிவாகப் புரிகிறது. எனவே, கள்ளக் காதலுக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவான தீர்ப்பை வழங்கியிருப்பதாக இதைப் புரிந்து கொள்வது  அபத்தமானது; ஆபத்தானது.

திருமணம் என்பது ஆண் - பெண் இருவரின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த சமூகம் அமைத்திருக்கும் சடங்கு. ஒருவனுக்கு ஒருத்தி  என்பதெல்லாம் சுமுகமான குடும்ப வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கோட்பாடு. இந்தக் குடும்ப அமைப்பு சிதையுமேயானால்  சமூகத்தில் Single parentகள் அதிகமாவார்கள். பிரச்னைக்கு உள்ளானவர்களின் குழந்தைகள் அலைக்கழிக்கப்படுவார்கள். மனமொத்து  வாழமுடியாத தம்பதியினர் முறையாக விவாகரத்து பெற்று பிரிவதே இருவரின் வாழ்வுக்கும் நல்லது. அவ்வாறு விவாகரத்து பெறக்கூடிய  தம்பதியினரும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளைத் திட்டமிட வேண்டும். இவையெல்லாம் முற்றிலுமாக  சிவில் பிரச்னைகள். இதில் குற்றப் பிரிவுகளுக்கு வேலையில்லை என்றுதான் உச்சநீதிமன்றம் சொல்கிறதே தவிர, நீதிமன்றமே கள்ள  உறவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருப்பதாகக் கருதிக் கொள்வது முற்றிலும் முட்டாள்தனம்.

-யுவகிருஷ்ணா