சென்னை மாநிலக் கல்லூரி



தலபுராணம்

‘‘இது ஒரு புதிய பள்ளியின் திறப்பு விழா அல்ல. ஒரு புதிய சகாப்தத்தின் விடியல்!’’ கடந்த 1841ம் வருடம் மெட்ராஸில் முதல்  உயர்நிலைப் பள்ளியைத் திறந்து வைத்த போது அன்றைய கவர்னர் லார்டு எல்பின்ஸ்டன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வார்த்தைகள்  இவை.உண்மையில், அவர் சொன்னது போலவே அந்த சகாப்தத்தின் விடியல் விறுவிறுப்பாகவே ஆரம்பமானது. ஆம்; இந்த உயர்நிலைப்  பள்ளியே சிறிது காலத்தில் மாநிலக் கல்லூரியாக வளர்ந்தது. மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை எதிரே ஓர் அரண்மனை போலவே  கம்பீரமாகக் காட்சியளிக்கும் சென்னை மாநிலக் கல்லூரிக்கு இப்போது வயது 17.

ஆயத்தப் பள்ளியாகத் தொடங்கி, உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து, பின்னர் கல்லூரியாக மிளிர்ந்ததைப் பற்றிப் பேச நிறைய விஷயங்கள்  இருக்கின்றன. அதற்குமுன் மெட்ராஸின் அன்றைய கல்வி நிலை பற்றி கொஞ்சம் அறிவது அவசியம். இங்கே கிழக்கிந்தியக்  கம்பெனியினர் காலடி வைத்த போது பள்ளிகள் தனி அமைப்பாக இருக்கவில்லை. குருகுலக் கல்வி முறையே வழக்கத்தில் இருந்து  வந்தது. அது ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால், இந்நிலைமை ஆங்கிலேயர்கள் ஆட்சி அமைந்ததும் கொஞ்சம்  கொஞ்சமாக மாறியது.

1678ல் ரால்ஃப் ஆர்டு என்கிற பள்ளி ஆசிரியருக்கு வருட சம்பளமாக 50 பவுண்ட் கொடுத்ததாகக் கம்பெனியின் குறிப்புகள்  தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் பள்ளி எங்கிருந்து செயல்பட்டது என்ற விவரங்கள் இல்லை. பின்னர், 1784ம் வருடம் கிறிஸ்துவ மத  அறிவைப் பரப்பும் சங்கம் (Society for Promoting Chiristian Knowledge) மெட்ராஸில் முதல் பள்ளியைத் தொடங்கியது.ஆங்கிலோ இந்தியக்  குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளி ஓர் ஆசிரியர் பள்ளியாகச் செயல்பட்டது. இந்தப் பள்ளியே பிறகு ‘வேப்பேரி இலக்கணப்  பள்ளி’ என மாறியது.

இதன்பிறகு, 19ம் நூற்றாண்டில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. குறிப்பாக, ஆங்கிலேய, பிரெஞ்சு அமைப்புகள்  மேற்கத்திய கல்வி முறையைப் புகுத்த பள்ளி களையும், கல்லூரிகளையும் தொடங்கலாயினர். இதில், கவர்னர் தாமஸ் மன்றோ பற்றிக்  குறிப்பிட வேண்டும். இவரே உள்நாட்டுக் கல்வி மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டகவர்னர். அப்போது மாகாணத்தில் ஒரு கோடியே 20  லட்சம் மக்களுக்கு 12 ஆயிரத்து 500 உள்ளூர் பள்ளிகளே இருந்தன. ஒரு விசாரணைக் குழுவை ஏற்படுத்திய மன்றோ, கல்வியின் தரத்தை  உயர்த்த சில கருத்துகளையும் முன்வைத்தார். அதில், ஆங்கிலக் கல்வி முறை முக்கியமானது.

குறிப்பாக, மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஓர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும், மாவட்ட கலெக்டர் உள்ள இடங்களில் இரண்டு  முதன்மை பள்ளிகளும், தாசில்தார் உள்ள இடங்களில் ஒரு சாதாரண பள்ளியும் அமைக்கவேண்டுமெனத் தீர்மானித்தார். இதற்காக, மன்றோ  ஒரு பொது கல்விக் குழுவை நியமித்தார். இதன் நோக்கங்களில் ஒன்று, மாகாணத்தின் கல்வி நிலை பற்றியும், அதனை அவ்வப்போது  சீர்திருத்தம் செய்வது பற்றியும் விவாதிக்க வேண்டும் என்பது. இந்தக் கல்விக் குழு பின்னர் கல்லூரி வாரியத்துடன் இணைந்தது. இந்தக்  கல்லூரி வாரியம், ஆங்கிேலயர் படிப்பதற்கென தொடங்கப்பட்ட ‘College of Fort St.George’ என்ற கல்லூரிக்காக உருவான ஒன்று. பொது  கல்விக் குழு என்பது ‘பொது கல்வி வாரியம்’ என்றானது. இதுவே பின்னாளில் இன்று டி.பி.ஐ எனப்படும் பொதுக் கல்வி இயக்குநரகமாக  மாறியது.

மன்றோவிற்குப் பிறகு அடுத்தடுத்து கவர்னர்கள் வந்தாலும் லார்டு எல்பின்ஸ்டனே கல்விக்கான முன்முயற்சிகளை எடுத்தவர். இவர்  1837ல் மெட்ராஸ் மாகாண கவர்னராக வந்து சேர்ந்தார்.இதற்கிடையில் 1830ம் வருடம் லண்டனிலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின்  இயக்குநர்கள் மாகாணத்தில் உயர்கல்வியைக் கொண்டு வரவும், ஐரோப்பிய இலக்கியத்தையும், அறிவியலையும் ஆங்கிலத்தில் கற்றுத்  தரவும் உத்தரவிட்டனர். இதே கருத்தை வலியுறுத்தியே மெக்காலே என்பவர் மேற்கத்திய ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றிய கல்வித்  திட்டம் ஒன்றை அளித்திருந்தார். இது அரசின் பரிசீலனையில் இருந்தது.

இவையெல்லாம் இருந்தாலும் கூட, 1839ம் வருடம் அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜார்ஜ் நார்ட்டன் என்பவர் தலைமையில் மெட்ராஸ்  மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் பேர்  ஒன்றுகூடி உயர்கல்வி நிறுவனத்தின் தேவை கருதி கவர்னர் லார்டு எல்பின்ஸ்டனிடம்  மனு ஒன்றை அளித்தனர். அதைப் பரிசீலித்தவர் உடனே, ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தொடங்க இசைந்தார்.உயர்நிலைப்  பள்ளியில் ஆங்கில இலக்கியம், அந்தப் பகுதியின் மொழி, தத்துவம் மற்றும் அறிவியல் பாடங்களைச் சொல்லித்தர வேண்டும் என்றும்,  பிறகு இவர்களைக் கல்லூரிக்கு தயார்படுத்தி இதே பாடங்களை உயர்தரத்தில் கற்றுத் தர வேண்டும் என்றும் கூறினார். உடனே,  பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது. இதற்கு ஜார்ஜ் நார்ட்டனே தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த வாரியம் 1840ம் வருடம் ஒரு ஆயத்தப் பள்ளியை எழும்பூரில் இருந்த எடின்பர்க் வீட்டில் தொடங்கியது. இந்தப் பள்ளியே பின்னர்  உயர்நிலை அந்தஸ்து பெற்றது. இப்படியாக, 1841ல் ஏப்ரல் 14ம் தேதி முதல் உயர்நிலைப் பள்ளியை கவர்னர் எல்பில்ஸ்டன் தொடங்கி  வைத்தார். இந்நிகழ்வில் ஊரின் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அயர் பர்ட்டன்  பவல் நியமிக்கப்பட்டார். இவருக்கு மாதம் 700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இவர் இங்கிலாந்திலிருந்து வந்து சேர தாமதமானதால்  கல்கத்தாவின் ஹூக்ளி கல்லூரியின் முதல்வராக இருந்த கூப்பர் சில மாதங்கள் தலைமை  ஆசிரி யர் பொறுப்பை ஏற்று செயல்பட்டார்.

பள்ளியில் 67 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களிடம் மாதம் நான்கு ரூபாய் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ‘ஒரு  தனிநபரின் பயனுக்காக பொதுப் பணத்தைக் கொடுப்பது நியாயமானதல்ல’ என்று அரசு இதற்கு விளக்கம் தந்தது. இந்தப் பள்ளியில்  ஆங்கில இலக்கணம், கணக்கு, வரலாறு, புவியியல், அல்ஜீப்ரா போன்ற பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. இதற்கான புத்தகங்கள்  இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்டன. இந்தப் பள்ளியே, ‘தி ைஹஸ்கூல் ஆஃப் மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ என அழைக்கப்பட்டது.  இதனாலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய்வீடு என மாநிலக் கல்லூரியை அழைக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப் பள்ளி 1853ம் வருடம் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. ‘‘அப்படி ஆரம்பித்தவுடன் பல மாணவர்கள் கல்லூரிப்  படிப்பிற்கு ஆவல் கொண்டது தெரிந்து 1855ல் ‘பிரசிடென்சி கல்லூரி’ நிறுவப்பட்டது’’ என ‘மதராசபட்டினம்’ நூலில் குறிப்பிடுகிறார்  எழுத்தாளர் நரசய்யா. இப்படியாக உயர்நிலைப் பள்ளி மெட்ராஸ் மாநிலக் கல்லூரியாக உருவெடுத்தது. இதன் முதல் முதல்வராக அயர்  பர்ட்டன் பவலே நியமிக்கப்பட்டார். 1862ம் வருடம் வரை முதல்வராகப் பணியாற்றிய இவர், பிறகு டி.பி.ஐக்கு இயக்குநராக   பணியமர்த்தப்பட்டார்.

ஏற்கனவே, மருத்துவத்திற்கும், பொறியியலுக்கும், ஓவியத்திற்கும் கல்லூரிகள் தனியாகத் துவங்கப்பட்டதால் இக்கல்லூரி கலைக்  கல்லூரியாக மட்டும் செயல்பட்டது. ஆனால், சட்டக் கல்லூரி தொடங்கப்படாததால் சட்டப் படிப்பும் இக்கல்லூரியிலே கற்றுத் தரப்பட்டது. இதன்பிறகு, 1857ம் வருடம் லண்டன் பல்கலைக்கழகத்தை மாதிரியாகக் கொண்டு ஒட்டு மொத்தக் கல்விமுறையை ஒருங்கிணைத்து  மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத்திற்கெனத் தனியாகக் கட்டடம் அமைக்கப்படாததால் மாநிலக்  கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டது.

இந்நேரம், மாநிலக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட வடிவமைப்புப் போட்டி ஒன்றை மெட்ராஸ் அரசு நடத்தியது. இதில் இளம் கட்டிடக்  கலை நிபுணராக கல்கத்தாவில் இருந்த ராபர்ட் சிஸ்ஹோல்ம் தேர்வு பெற்று 1865ல் மெட்ராஸ் வந்தார். மெரினா கடற்கரை எதிரே புதிய  கட்டடத்தை இத்தாலிய மறுமலர்ச்சி கட்டடப் பாணியில் வடிவமைத்தார். இதை 1870ல் எடின்பர்க் பிரபு திறந்து வைத்தார்.அதுவரை  எழும்பூரில் செயல்பட்டு வந்த மாநிலக் கல்லூரி மெரினா வளாகத்திற்கு உற்சாகமாக மாறியது. ஆரம்பத்தில் கட்டடத்தின் கூரையில்  கடிகாரம் எதுவும் நிறுவப்படவில்லை. 1940ம் வருடம் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நினைவாக நான்கு பக்கமும் ஓசையெழுப்பக் கூடிய  கடிகாரம் நிறுவப்பட்டது.

இதற்கான நிதியை பழைய மாணவர்களும், மெட்ராஸ் மக்களும் தந்து உதவினர். இந்தக் கடிகாரத்திற்கு முன்னாள் முதல்வராக இருந்த  ஃபைசன் பெயர் சூட்டப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு புதிய துறைகள், ஆராய்ச்சிப் படிப்புகள், செமஸ்டர் சிஸ்டம் எனப் பல்வேறு  மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று இந்தியாவில் சிறந்த கல்லூரிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து சிறப்பாகச் செயலாற்றி வருகிறது  சென்னை மாநிலக் கல்லூரி!                

-பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்/ராஜா

ஒரு பார்வை...


* கல்லூரியும், மாணவர் விடுதியும் 30.51 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
* ஆரம்பத்தில் ஆறு பேராசிரியர்களுடன் இக்கல்லூரி தொடங்கியது.
* 1874ம் வருடம் பிஸிக்கல் சயின்ஸ் கோர்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. இத்துறைக்கு 1886ம் வருடம் வில்சன் என்பவர் பேராசிரியராக  நியமிக்கப்பட்டார். பின்னர் இதுவே இயற்பியல், வேதியியல் என இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டு ஜோன்ஸ் என்பவர் இயற்பியல்  பேராசிரியராகவும், வில்சன் வேதியியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டனர்.
*1889ம் வருடம் உயிரியல் துறை தொடங்கப்பட்டு டாக்டர் ஏ.ஜி.போர்னே என்பவர் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
* 1943ல் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட பி.பி.டே என்பவரே முதல் இந்திய முதல்வர்.
* ஆங்கில இலக்கியம், கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மண்ணியல், தத்துவயியல், சமஸ்கிருதம்  மற்றும் வரலாறு போன்ற துறைகளில் முழுவீச்சில் முதன்முதலாகச் செயல்பட்ட கல்லூரி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
* நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர், ராஜாஜி, சி.பி.ராமசாமி அய்யர், பி.எஸ்.சிவசாமி அய்யர் என பல்வேறு  ஆளுமைகள் இந்தக் கல்லூரியில் பயின்றவர்கள். தவிர, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், குடியரசுத் தலைவர் சர்வபள்ளி  ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இங்கே ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளனர்.
* 1987ம் வருடம் தன்னாட்சி அந்தஸ்தைப் பெற்றது.
* இப்போது 27 துறைகள், 230 இணை மற்றும் உதவி பேராசிரியர்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுடன் செயலாற்றி  வருகிறது.