பிள்ளையார் சுழி போட்ட 2000 காசுகள்



கலெக்டர்ஸ்

எந்தக் காரியத்தை தொடங்கும் முன்பும் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். அப்போதுதான் நினைத்த காரியம் கைகூடும் என்பது  பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. இப்படி சின்னச் சின்ன செயல்களுக்குக் கூட இவரை முன்னிருத்தும் போது, ஒரு நாட்டின்  பொருளாதாரத்தை மாற்றி அமைக்கையில் அவருக்கு மரியாதை செலுத்தாமல் இருக்க முடியுமா? ‘‘நாட்டின் பொருளாதாரத்தை நியமிக்கும்  காசுகளை அச்சிடும்போது முதலில் விநாயகர் உருவம் பதித்த காசுகளைப் பொறிப்பது பழங்கால வழக்கமாக இருந்தது...’’ என தன்  தரப்புக்கு விளக்கம் அளித்தபடி பேசத் தொடங்குகிறார் சென்னை அடையாரைச் சேர்ந்த சங்கரராமன். இவர் பிள்ளையார் உருவம் பதித்த  பழங்காலக் காசுகள் மற்றும் ஒரு இஞ்ச் அளவிலான பழம்பெரும் விநாயகர் விக்கிரகங்களைச் சேகரித்து வருகிறார்.

‘‘சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் கல்லிடைக்குறிச்சி. எனக்கு 6 வயசானப்ப இருதயப் பிரச்னை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செஞ்சாங்க.  அதனால மூச்சு வாங்கும் விளையாட்டை எல்லாம் விளையாட முடியாத நிலை. என் வயசுப் பசங்க விளையாடறதை வேடிக்கை  பார்ப்பேன். ஏக்கமா இருக்கும். இதைப் போக்க காசுகளோடு விளையாட ஆரம்பிச்சேன்.என் தாத்தாகிட்ட 200 வருட காசு இருந்தது. அதுதான்  எனக்கு விளையாட்டு சாமான்! இப்படி விளையாட்டா ஆரம்பிச்சது இப்ப 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலக் காசுகளை சேகரிச்சு  வைச்சிருக்கிற அளவுக்கு வந்திருக்கு! ஆமா... தாத்தா காசோட விளையாடிட்டு இருந்த எனக்கு நமக்குனு காசுகளை வாங்கினா என்னனு  தோண ஆரம்பிச்சது. அப்பாகிட்ட சொன்னேன். சேகரிப்பு நல்லதுதான். ஆனா, அதை உன் சம்பாத்தியத்துல செய்னு சொல்லிட்டார்!

படிப்பு முடிச்சுட்டு 1984ல வேலைக்குச் சேர்ந்தேன். மூணு மாச பயிற்சிக்கு அப்புறம் ரூ.1500 சம்பளம்! கைல காசைப் பார்த்ததும் அப்பா  சொன்னது நினைவுக்கு வந்தது. நேரா பஸ் பிடிச்சு காஞ்சிபுரம் போனேன். அங்கிருந்த பழைய கடைல ஒரு மூட்டை நிறைய பழங்கால  காசுக்களை ரூ.400க்கு வாங்கினேன். அப்ப அது என்ன காசுன்னே தெரியாது! அந்தக் காலத்துல இது பெரிய தொகை! பழைய ஸ்க்ராப்  விற்கிற இவங்க யார்கிட்டேந்து வாங்கறாங்கனு தேடினப்ப மணல் அரிப்பவர்கள்கிட்ட இருந்துனு தெரிய வந்தது...’’ என தன் பயணத்தை  விவரிக்கும் சங்கரராமன், ஆரணி, ஈரோடு, கரூர்... என நேரடியாகச் சென்று காசுகளை வாங்கியிருக்கிறார்.  ‘‘பெரும்பாலும் இருளர் இன  மக்கள்தான் மணலை அரிக்கும் வேலையைச் செய்றாங்க. நாடோடிகளான இவங்க ஆத்தங்கரை ஓரமா சட்டியால மணலை அரிப்பாங்க.  அப்ப வர்ற தங்கம், இரும்புத் துகள்களை சேகரிச்சு விற்பாங்க.

ஆத்தங்கரைல இதெல்லாம் கிடைக்கக் காரணம், எந்த ஆற்றைக் கடக்கும்போதும் அதுல காசு வீசற பழக்கம் நம்மகிட்ட இருந்ததுதான்.  பெருமழைக் காலங்கள்ல ஊர்ல இருக்கிற பொருட்களை எல்லாம் அடிச்சுட்டு வந்து ஆத்துலதான் வெள்ளம் சேர்க்கும். சேர்ந்த பொருட்கள்  மணல்ல புதைஞ்சுடும்.இதைத்தான் அவங்க அரிச்சு எடுப்பாங்க. அவங்களை சந்திச்சுப் பேசி நேரடியாவே அவங்ககிட்ட இருந்து காசுகளை  வாங்க ஆரம்பிச்சேன். ஆயிரம் வருட பழமையான காசுகள் எல்லாம் கிடைக்கும்! ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், கரூர் ஆத்தங்கரைல  இப்பவும் காசுகள் கிடைக்குது! கரூர்ல ஒரு முறை 20 கிலோ காசை அவங்க எடுத்தாங்க. இதை என் கண்ணால பார்த்தேன்!’’ வியக்கும்  சங்கரராமன், இதன்பிறகு காசுகள் குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கிறார்.

‘‘தென்னிந்திய நுமாஸ்டிக் அமைப்புல உறுப்பினரா சேர்ந்தேன். பலவகையான காசுகள் பத்தி தெரிஞ்சுகிட்டேன். நிறைய புத்தகங்கள்  படிச்சேன். ஆலோசனைக் கூட்டத்துல தவறாம கலந்துக்கிட்டேன்...’’ பேசியபடியே தன்னிடம் இருக்கும் காசுகள் குறித்து விவரிக்கத்  தொடங்கினார். ‘‘2 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி பஞ்சுமார்க் காசுகள்தான் புழக்கத்துல இருந்தது. ஒரு பெரிய வெள்ளித் தகட்டுல  காசுகளை அச்சிடுவாங்க. யானை, கோழி, மீன், சூரியன், சந்திரன்னு அந்தந்த நாட்டை பிரதிபலிக்கிற உருவங்களைப் பொறிப்பாங்க.கி.மு.3ம் நூற்றாண்டுல இருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரையுள்ள காசுகள் கரூர்ல கிடைச்சது. ரோமானியர்கள் இங்க வணிகம் செய்ய  ஆரம்பிச்சபிறகு அவங்க அச்சிட்ட தங்கக் காசுகள் புழங்க ஆரம்பிச்சது.

இதையெல்லாம் படிச்சு, காசுகளையும் வாங்கி சேகரிக்கிறப்பதான் திடீர்னு அந்த எண்ணம். இதனால என்ன பயன்..? இந்தக் கேள்விக்கு  விடை தேடினப்ப, குறிப்பிட்ட காசுகளை மட்டும் சேரிக்கலாம் என்கிற ஐடியா உதிச்சது.இதன் ஒரு பகுதியா, பல்லவர்கள் கால காசுகளைத்  தேடத் தொடங்கினேன். ஒரு வகையான கோட்டிங் உலோகத்துல அவங்க காசு இருக்கும். கீழ போட்டா உடைஞ்சுடும். ரீசைக்கிளிங்கோ  உருக்கவோ முடியாது. இரும்பு, செப்பு, டின், வெள்ளி, லெட்னு எல்லா உலோகங்களையும் கலந்து செஞ்ச இந்த காசுகள் கி.பி.9ம்  நூற்றாண்டு வரை புழக்கத்துல இருந்திருக்கு.

இதுக்கு அப்புறம் பிற்காலச் சோழர்கள், நாயக்கர்கள்னு காசுகளை சேகரிச்சேன். தமிழகத்துல முதன் முதல்ல தங்கக் காசுகளை  வெளியிட்டவர் ராஜராஜசோழன்தான். 24 கேரட் தங்கம். 4 கிராம் எடை. இதுவரை ஒரேயொரு காசுதான் எனக்குக் கிடைச்சிருக்கு. இதையும்  அதிக விலை கொடுத்து ஒரு கண்காட்சில வாங்கினேன். விஜயநகரப் பேரரசு காலத்துல நாட்டின் சின்னம் / அரசர் முகம் பொறிக்கப்பட்ட  காசுகளுக்கு பதிலா சாமி படங்கள் அச்சிடப்பட்ட காசுகள் பெருக ஆரம்பிச்சது. சிவன், விஷ்ணு, அனுமார், பிள்ளையார், நரசிம்மர்னு  புழக்கத்துக்கு வந்த இந்தக் காசுகள் நவாப் ஆட்சிக்காலம் வரை இருந்தது...’’ என்று அடுக்கிய சங்கரராமன், இதன்பிறகுதான் பிள்ளையார்  உருவம் பதித்த காசுகளை மட்டும் சேகரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.  

‘‘பல சாமி உருவ காசுகள் பத்தின குறிப்புகள் இருக்கு. ஆனா, பிள்ளையார் பத்தி மட்டும் இல்ல. அப்படீன்னா என்கிட்ட மட்டும் எப்படி  பிள்ளையார் காசுகள் இருக்குனு யோசிச்சேன். ஏன்னா இந்த 30 வருடங்கள்ல என்கிட்டயே 2 ஆயிரம் பிள்ளையார் காசுகள் இருக்கு!அப்பதான் எல்லா விஷயங்களையும் பிள்ளையார் சுழியோடு ஆரம்பிக்கிற நம்ம வழக்கம், காசுகள்லயும் இருந்திருக்குனு புரிஞ்சுது.  அதாவது, எந்த உருவம் பொறிச்ச காசை அச்சிடுவதற்கு முன்னாலயும் ஒரு பிள்ளையார் உருவம் பொறிச்ச காசை அச்சிட்டிருக்காங்க!  இதை மட்டுமே குறி வைச்சு தேடித் தேடி வாங்கத் தொடங்கினேன்...’’ புன்னகைக்கும் சங்கரராமன், ஒரு இன்ச் பழங்கால பிள்ளையார்  சிலைகளையும் கலெக்ட் செய்கிறார்.   

‘‘ஒரு முறை அரிப்பவர்கள்கிட்ட காசு வாங்கறப்ப ஈயத்துல செய்த ஒரு சின்ன பிள்ளையார் சிலை கிடைச்சது. அவர் வந்த பிறகு  வரிசையா பல பழங்காலப் பிள்ளையார் சிலைகள் சேர ஆரம்பிச்சது! எல்லாமே ஓர் இன்ச்தான்! இதுக்கு மேல இருக்கிற பழங்கால  சிலைகளை நான் வாங்கறதில்ல. அப்படி வாங்கணும்னா அதுக்கு உரிமம் பெறணும். அது அவ்வளவு சுலபமில்ல.இந்த வகைல பல்லவர்,  பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசுக் கால பிள்ளையார் சிலைகள் என்கிட்ட இருக்கு!’’ என்ற சங்கரராமனின் அண்ணன் மகனும்  காசுகளைச் சேகரிக்கும் வழக்கம் கொண்டவர். எனவே, தன் கலெக்‌ஷனை அவருக்குக் கொடுக்கப் போகிறாராம்!     

- ப்ரியா
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்