சர்கார் அப்டேட்ஸ்



டபுள்குஷியில் மிதக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். தளபதியின் பர்த் டே ட்ரீட்டாக ‘சர்கார்’ ஃபர்ஸ்ட் லுக்ஸ் கொடுத்த அசத்தல் சந்தோஷம்தான் அது. தரமான படங்களைத் தரும் சன் பிக்சர்ஸின் தயாரிப்பு, மீண்டும் கூட்டணி அமைக்கும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், தூள் கிளப்பும் ஏ.ஆர்.ரஹ்மான்  இசை... என பிரமாண்டமான காம்போ இணைவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அத்தனை வுட்டிலும் ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது.

* சென்னையில் நடந்த ‘விஜய் 62’ படத்தின் பூஜையை விஜய் கிளாப் அடித்து தொடங்கி வைத்தது இனிமையான மொமன்ட். ‘துப்பாக்கி’, ‘கத்தி’க்குப்  பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணி என்பதால், ரசிகர்கள் உட்பட அனைவருமே படத்தின் டைட்டில் ஏதாவது ஓர் ஆயுதம்  தொடர்பானதாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், லக்கி ட்விஸ்ட். சற்றும் எதிர்பார்க்காத ‘சர்கார்’! ஆச்சரியங்கள் துள்ள  ஆரம்பித்துவிட்டன.

* விஜய்யின் ‘சர்க்கார்’ லுக், செம மாஸ் அட்ராக்‌ஷனை அள்ளியிருக்கிறது. விஜய்யைப் பற்றி முருகதாஸ் சொல்லும் போது கூட, ‘‘விஜய்யோடு  ‘துப்பாக்கி’ பண்ணும்போது அவர் ‘இப்படி இருப்பார்... இப்படி அவரை வைச்சு பண்ணலாம்’னு எதுவும் அப்ப எனக்குத் தெரியாது. அவரை எப்படி  யெல்லாம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கலாம்னு மட்டும் தெளிவா ஒரு ஐடியா இருந்தது. ‘கத்தி’ பண்ணும்போது ‘துப்பாக்கி’யை விடவும் நல்லா  அமையணும்னு நினைச்சேன். அது நிறைவேறிச்சு. ரெண்டு படத்துக்குமே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தாங்க. இப்ப ‘சர்கார்’. முந்தைய இரு  படங்களைவிட பெஸ்ட்டா என்ன பண்ண முடியுமோ அதை நோக்கி உழைச்சிட்டு இருக்கோம்...’’ என நம்பிக்கை தெரிவிக்கிறார்.  விவசாயிகளின்  நலன், கார்ப்பரேட் அரசியல்.. ஆகியவற்றையும் இந்த ‘சர்கார்’ தொடும் என்பதில் நோ டவுட்.

* ‘பைரவா’வுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட கீர்த்தி,  அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஷெட்யூலுக்கு ரெடியாக நிற்கிறார். ‘‘விஜய் சாரை கேரளாவில் முதன் முதலா ‘போக்கிரி’ பட பிரஸ் மீட்ல ஒரு  ரசிகையா பார்த்தேன். அப்படிப்பட்டவரோடு ஜோடி சேருவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. சக நடிகர் என்பதைத் தாண்டி என் நலனில் அக்கறை  உள்ளவர். ஃபேமிலி ஃப்ரெண்ட். எனக்கு இன்ஸ்பிரேஷனும் அவர்தான்..!’’ என நெகிழ்கிறார் கீர்த்தி.

* இந்தி ‘கஜினி’க்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானோடு தமிழில் இப்போதுதான் கூட்டணி அமைத்திருக்கிறார் முருகதாஸ். தனது படங்களுக்கு ரசனையான  பாடல்களைக் கேட்டு வாங்குவதில் வல்லவரான அவர், ரஹ்மானிடம் அசத்தல் மெலடி
களையும் பக்கா மாஸையும் கேட்டு வாங்கியிருக்கிறாராம்.

* ‘மெர்சல்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு விஜய்க்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘ஆளப்போறான் தமிழன்...’ போலவே ஹார்ட் பீட்டை அதிர  வைக்கும் பாடல் ‘சர்காரி’லும் உண்டாம்! தீம் சாங்குக்கான ஷூட், அமெரிக்காவில் படமாக்கப்படலாம் என்கிறார்கள்.

* வரலட்சுமிக்கு திருப்புமுனை கேரக்டர். இவர்கள் தவிர ராதாரவி, யோகிபாபு, வைஷாலி தனிகா, பழ.கருப்பையா ஆகியோர் நடிக்கிறார்கள்.  விஜய்யுடன் ஃபுல் லெங்க்த் கேரக்டர் செய்திருக்கிறார் யோகிபாபு. பவர்ஃபுல் வில்லன் கேரக்டரில் நடிப்பவரை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

* மலையாளத்தில் ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஹே ஜூட்’ உட்பட கவனிக்கத்தக்க படங்களின் ஒளிப்பதி வாளரான கிரிஷ் கங்காதரனுடன் இம்முறை  கைகோர்த்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். எடிட்டிங், ஸ்ரீகர் பிரசாத்.

* சென்னை, கொல்கத்தாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மேஜர் போர்ஷனை எடுக்க மொத்த யூனிட்டும் அமெரிக்கா செல்கிறது.

* படம் முழுக்க ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* 2018 தீபாவளி, ‘சர்கார்’ தீபாவளி! சரவெடி, அதிர்வேட்டு நிச்சயம்!


மை.பாரதிராஜா