குட்டி கிராண்ட் மாஸ்டர்!
இதனால்தானோ என்னவோ இந்தியர்கள் எனில் உலக நாடுகள் பின்வாங்குகின்றன! இதோ அடுத்த சாதனையுடன் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை சத்தமாகச் சொல்ல வைத்துத் திரும்பியுள்ளார் இந்த குட்டி கிராண்ட் மாஸ்டர்.
வயது, பனிரெண்டு வருடங்கள், பத்து மாதங்கள், 19 நாட்கள்! சதுரங்க விளையாட்டில் உலக அளவில் இரண்டாவது, தேசிய அளவில் முதலாவது மிகச்சிறிய வயது கிராண்ட் மாஸ்டராக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பிரக்னாநந்தா, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இத்தாலியில் நடைபெற்ற நான்காவது கிரேடின் ஓபன் செஸ் போட்டியின் 8வது சுற்றில் இத்தாலியின் மொரோனி லைக்காவுடன் மோதினார்.
வெள்ளை நிற காயின்களுடன் விளையாடத் தொடங்கிய பிரக்னாநந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி வாகை சூடினார். 9வது சுற்றில் நெதர்லாந்து ரோலண்ட் உடன் மோதியவர் கடைசி சுற்றில் 2482 புள்ளிகள் கொண்ட போட்டியாளருடன் மோதி ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தைத் தட்டிச் சென்றார். அதாவது தன்னைவிட அதீத புள்ளிகள் கொண்ட போட்டி யாளருடன் மோதி மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார்!
இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த பரிமராஜன் நெகி தனது 13 வயது, 4 மாதங்கள், 22 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றிருந்தார். அவரைக் காட்டிலும் ஐந்து மாதங்கள் சிறிய வயதான பிரக்னாவுக்கு தேசிய அளவில் முதலிடம் கிடைத்துள்ளது. போதாதா... விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி பலரும் பிரக்னாவை மனதாரப் பாராட்டி டுவீட் செய்துள்ளனர்.
ஆனால், பிரக்னாநந்தாவின் அப்பாவோ, குடும்பச் சூழல் காரணமாக சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தன் மகனை அனுப்ப முடியாமல் தவித்திருக்கிறார்; தவிர்த்திருக்கிறார். இதில் மகிழ்ச்சி கலந்த சோகம் ஒன்று இருக்கிறது. பிரக்னாநந்தாவின் சகோதரி வைஷாலியும் செஸ் சாம்பியன்தான். உலக அளவில் அவரும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர்தான்.
அப்படிப்பட்ட வைஷாலிக்கும் போக்கு வரத்துச் செலவுக்குப் பணம் திரட்ட முடியாமல் பெற்றோர் தவித்துள்ளனர். ‘‘ஆனாலும் யாருடைய திறமையையும் தடுத்து விட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம். கஷ்டத்தோடு கஷ்டமாக பிரக்னாவையும் செஸ் கோச்சிங்கில் சேர்த்திருக்கிறோம்...’’ என்கிறார் பிரக்னாநந்தாவின் தந்தையான ரமேஷ் பாபு.
உலக அளவில் ஜூனியர் கிராண்ட் மாஸ்டர்ஸ்
செர்ஜி கர்ஜாக்கின், 12 வயது, 7 மாதங்கள் - உக்ரைன். ஆர்.பிரக்னாநந்தா, 12 வயது, 10 மாதங்கள் - இந்தியா. நோடிர்பெக் அபுதஸ்த்ரோவ், 13 வயது, ஒரு மாதம் - உஸ்பெகிஸ்தான். பரிமராஜன் நெகி, 13 வயது, 4 மாதங்கள் - இந்தியா. மாக்னஸ் கார்ல்ஸன், 13 வயது, 4 மாதங்கள் - நார்வே.
ஷாலினி நியூட்டன்
|