ரத்த மகுடம்- பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன்-8

பிரமை தட்டும் காட்சியைக் கண்ட கரிகாலனின் உள்ள உணர்ச்சிகள் ஒரு நிலையில் இல்லாமல் பெரிதும் கலங்கிவிட்டதால் அடுத்து என்ன செய்வது  என்பதை அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டவன் போல் சிலையென நின்றான். வனாந்திரத்தின் மறைவிடத்தில் பெரும் மரமொன்றில் சாய்ந்தும்  சாயாமல் கிடந்த சிவகாமியின் அழகிய உடலின் ஒரு பாதியை இலைகளை ஊடுருவிய கதிரவனின் கிரணங்கள் வந்து வந்து தழுவியதால்  வெளிப்பட்ட அங்கங்களின் ஜொலிப்பு அவன் சித்தத்தை சிதறடித்தது.

அதுவரை அவன் மனதை அரித்து வந்த சிவகாமி யாராக இருப்பாள் என்ற வினாவும், கதம்ப இளவரசர் இரவிவர்மன் அவளைக் குறித்து எழுப்பிய  சர்ச்சைகள் எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற தேடுதலும், யார் என்ன சொன்னாலும் சிவகாமியை நம்பு எனத் திரும்பத் திரும்ப ஆட்கள்  வழியே எதற்காக புலவர் தண்டி சொல்லி அனுப்பியிருக்கிறார் என்ற கேள்வியும் இருந்த இடம் தெரியாமல் அகன்றது. எதற்கும் அசையாத  கரிகாலனின் இரும்பு நெஞ்சம் தன் முன் வெளிப்பட்ட மோகனாஸ்திரத்தின் வசியப் பிணைப்பில் இறுகியது.

அந்த சமயத்தில் புற்களின் வழியே தன் காலில் ஏறிய சிற்றெறும்புகள் தங்கள் இயல்புப்படி கடித்ததைக்கூட அவன் பொருட்படுத்தவில்லை.  பொருட்படுத்தும் நிலையிலும் அவனில்லை. அதுவரையில் அவன் செவியில் லேசாக விழுந்து கொண்டிருந்த பறவைகளின் ஒலியும், பூச்சிகளின்  ரீங்காரமும்கூட அடியோடு அகன்றது. உலகமே ஒலியிலிருந்து விடுபட்ட சூன்யம் போலவும், அருகில் இருக்கும் சிவகாமியின் அழகிய உடல்  பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர் நிலை போலவும் தோன்றியதால், அப்புறமோ இப்புறமோ... எப்புறமும் நகரக் கூடிய உணர்வை  இழந்து நின்றான்.

மெய்மறந்து கிடந்தது மரத்தில் சாய்ந்திருந்த சிவகாமியா அல்லது அவளைப் பார்த்து பிரமை தட்டி நின்றுவிட்ட கரிகாலனா என்பதை ஊகிக்க முடியாத  அந்த வனாந்திரத்தின் பூச்சிகளில் சில அந்தப் பாவையையும் அவனையும் சுற்றிச் சுற்றி வந்து உண்மையை அறிய முற்பட்டன. தோல்வியைத் தழுவி  அகன்றன. இதனையடுத்து, மந்திரத்தை மந்திரத்தால்தான் எடுக்க முடியும்... அதை எடுக்கும் நேரமும் வந்துவிட்டது என்பதை நிரூபிக்க எண்ணிய  வானவெளி, நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டத்தையும், கோண்மீன் எனப்பட்ட செவ்வாய், புதன் முதலிய கிரகங்களையும் மெல்ல  மெல்ல அந்திசாயும் அந்த நேரத்திலும் ஒன்று திரட்டி கரிகாலனின் மனோநிலையை அந்த அழகியின் மாயா சக்தியிலிருந்து விடுவிக்க ஏற்பாடு  செய்துகொண்டிருந்தது.

விண்ணின் விருப்பப்படி விதி வகுக்கப்படுகிறது; நட்சத்திரங்களின் அசைவுக்குத் தகுந்தபடி மனித வாழ்க்கை இயங்குகிறது என்று கூறும் ஜோதிட  சாஸ்திரத்தை மெய்ப்பிக்கவே அந்த வனத்தில் ஒதுங்கியவள் போல் அதுவரை கிடந்த அந்தப் பேரழகியும், அசுவினியும் செவ்வாயும் புதனும் ஒளிவிடத்  தொடங்கிய அந்த மாலை நேரத்தில் கரிகாலனின் மனதைக் கட்டுப்படுத்தியிருந்த மந்திரக் கணையை மெல்ல அவிழ்க்கவும், அவன் உணர்ச்சிகளை  மெல்ல மெல்ல அவனுக்குத் திரும்ப அளிக்கவும் தன் பூவுடலை லேசாக ஒருமுறை அசைத்தாள்.

அந்த ஓர் அசைவு கரிகாலனின் இதயக் கட்டை அவிழ்த்து அவனை இந்த உலகுக்குக் கொண்டு வந்துவிட்டதால், அவள் அங்கங்களை வெறித்துப்  பார்த்து நேரத்தைக் கடத்திய தன் மதியீனத்தை நினைத்து நொந்துகொண்டான். என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் ஆண் - பெண் நெருக்கம் என்பது  உணர்ச்சியை ஊசி முனையில் வைப்பது என்ற உண்மை அந்த நேரத்தில் அவனுக்குப் புரிந்தது. தன்னை நிதானப்படுத்திக்கொள்ளும் விதமாக தன்  தொண்டையைச் செருமிக் கொண்டான். பல்லவ இளவலைக் காணவேண்டியும், அவரிடம் தகவல் சொல்வதற்காகவும் தன்னுடன் பயணிக்கும்  சிவகாமியை அப்படி, தான் வெறிப்பது சரியல்ல என்பது காலம் கடந்தே அவனுக்கு உறைத்தது.

அதுவும் பல்லவ மன்னரின் வளர்ப்பு மகள் என வல்லபனால் அறிமுகப்படுத்தப்பட்டவள் அல்லவா இவள்... எனில், இளவரசியாக அல்லவா இவளை  மரியாதையுடன் நடத்த வேண்டும்... அப்படியிருக்க... மேற்கொண்டு கரிகாலனால் யோசிக்க முடியவில்லை. சில கணங்களுக்கு முன் கதிரவனின்  வெளிச்சத்தில் பளபளத்த அவள் அங்கங்கள் மீண்டும் அவன் மனக்கண்ணில் எழுந்தன. மல்லைக் கடற்கரையில் உற்றுக் கவனிக்காத, கவனிக்கத்  தவறவிட்ட பாகங்கள் எல்லாம் தெள்ளத் தெளிவாக இப்போது தெரிந்தன. ‘ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, வேற்கண், வெம்புருவம் போர்வில்’ என்று  பெண்களின் அங்கங்களிலும் அணிகலன்களிலும் போர்க்கலங்களைப் பிற்காலத்தில்தான் கம்பன் கண்டான்.

இதன் காரணமாகவும் கவிச்சக்கரவர்த்தி எனக் கொண்டாடப்பட்டான். அந்தக் கற்பனைக்கு எல்லாம் முன்கூட்டியே இலக்கணம் வகுக்க முளைத்த  காவியப் பாவை போல் அன்றிருந்தாள் சிவகாமி. தமிழகத்து மரபுப்படி மஞ்சளைத் தேய்த்துத் தேய்த்துத் தினம் நீராடியதால் செண்பக மலரின்  இதழ்களின் மஞ்சள் நிறத்தையும் வழுவழுப்பையும் பெற்று, பொன் அவிழ்ந்து கொட்டுவது போன்ற மேனியைப் படைத்த சிவகாமியின் ஓவிய உடலை  சிவப்பு நிற மெல்லிய ஆடை ஆசையுடன் தழுவியிருந்தது. அப்படித் தழுவி நின்ற ஆடை, உடலின் வழுவழுப்புக் காரணமாக நழுவி விடாமல் இருக்க  இடுப்பில் இறுக முடிச்சிட்டிருந்தாள்.

குவிந்து நின்ற கால்களுக்கு இடையில் அந்த ஆடை உள்ளடங்கி, கால் தொகுப்புகளின் பரிமாணத்தைப் பற்றி மட்டுமின்றி அவள் மகோன்னத அழகைப்  பற்றிய இதர ஊகங்களுக்கும் வரம்பற்ற இடத்தைக் கொடுத்தன. இடை ஆடை நழுவாமல் இருக்கத்தான் முடிச்சிட்டிருந்தாள். இடைக்கு மேலே  கொங்கை வரை தந்தங்கள் மட்டுமே வழுவழுப்புடன் பளபளத்தன. அப்படியிருந்தும் சிவகாமி பிறந்த பூமியும், வளர்ந்த குடியும் கற்றுக் கொடுத்த  பண்பின் காரணமாக கச்சையை நன்றாக இழுத்துக் கட்டியிருந்தாள். சங்குக் கழுத்து வெற்றிடமாகவே காட்சியளித்தது. கச்சைக்கு மேலே தெரிந்த பிறை  வடிவமான விளிம்புகள், கண்களையும் கருத்தையும் அள்ளிச் சென்றன.

அந்த வனப்பு சிவகாமியின் கண்களிலும் வெட்கமாகப் படர ஆரம்பித்திருந்தது. சந்திர வதனத்தில் வளைந்து கிடந்த கறுப்பு விற்புருவங்களுக்குக் கீழே  மீன் உருவத்தில் ஓடிய இமைகளின் அமைப்புக்குள்ளே இந்திரஜாலம் செய்துகொண்டிருந்தது இரு கருவிழிகளா அல்லது காமன் கணைகளா? விடை  சொல்ல முடியாத பெரும் புதிர்! அந்தக் காமன் கண்கள் இரண்டையும் தடுத்து நிறுத்திய நாசியின் ஒருபுறத்தில் அந்தத் தமிழ்ப் பெண் கதிரவனைப்  போன்று வேலைப்பாடுள்ள பொட்டு அணிந்திருந்தாள். அந்தப் பொட்டில் சுற்றிக் கிடந்த வைரங்களும் நடு மத்தியில் பதிக்கப்பட்டிருந்த மரகதக் கல்லும்  பச்சையும் வெள்ளையும் கலந்த புது நிறத்தை வழவழப்பான அவள் கன்னத்தில் பாய்ச்சி அங்கு நகையில்லாத குறையைப் போக்கிக் கொண்டிருந்தன.

எத்தனை வர்ண ஜாலங்களையும் என்னால் விழுங்க முடியும் என்று அறைகூவுவது போல் நன்றாகக் கறுத்து அடர்த்தியாக நுதலுக்கு மேலே  தலையில் எழுந்த அவள் கறுங்குழலின் மயிரிழைகளில் இரண்டு, கன்னத்தின் பக்கமாக வந்து, முக்கனியின் செயற்கைக் கற்கள் என்ன அப்படி  பிரமாதமான வர்ண ஜாலத்தைக் காட்டி விடுகின்றன என எட்டிப் பார்த்தன. எழும்பி மோதும் அலைகளாலும், ஆழ இறங்கிச் செல்லும் சுழல்களாலும்  இணையற்ற வனப்பைப் பெறும் நீலக் கடலைப் போலவே வளைந்தும் எழுந்தும் தாழ்ந்தும் உள்ளடங்கியும் கிடந்த உடலமைப்பினால்  சொல்லவொண்ணா எழில் ஜாலங்களைப் பெற்றிருந்த சிவகாமி, அழகில் மட்டுமன்று, ஒரு கையை இடையில் கொடுத்து மற்றொரு கையால் மரத்தைப்  பிடித்து நின்ற தோரணையிலும் பெரும் கம்பீரத்தைப் பெற்று மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் ராணியைப் போல் தோன்றினாள்.

இந்தத் தோற்றம் கரிகாலனின் மனக் கண்ணை அகற்றி நடப்புக்குக் கொண்டு வரவே... மீண்டும் தொண்டையைக் கனைத்தான். இதைக் கேட்டு  சிவகாமி மெல்லச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு கரிகாலனுக்கு சங்கடத்துக்கு பதில் கோபத்தையே வரவழைத்தது. தனது உணர்ச்சிகளை அவள்  புரிந்துகொண்டாள் என்பதை உணர அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எனவே ‘‘எதற்காக சிரிக்கிறாய்?’’ என அவள் மீது பாய்ந்தான். ‘‘இடைவெளி  விட்டு இருமுறை கனைக்கிறீர்கள்... சிரிக்காமல் வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்?’’ கேட்ட சிவகாமியால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை.  அவன் மனக்கண்ணில் என்ன காட்சிகள் வெளிப்பட்டிருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.

மல்லைக் கடலில் தன் கண்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசிய கரிகாலன் அல்ல தன்னருகில் இப்போது நிற்கும் கரிகாலன் என்பதை  கணப்பொழுதில் உணர்ந்தாள். அதனாலேயே எப்போதும் சுடர் விடும் கம்பீரம் மறைந்து நாணம் அவள் மேனியெங்கும் பரவ, படரத் தொடங்கியது.  இதற்கு மேலும் நிற்க முடியாது... கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டன... என்பதை அறிந்தவள் மெல்லச் சரிந்தாள். புல்தரையில் அமரவேண்டும்  என்றுதான் நினைத்தாள். ஆனால், மரத்தோடு சரிந்ததில் இடுப்பு தடுமாறி அவளை விழவைத்தது. எழுந்திருக்கத் தோன்றாமல் அப்படியே தரையில்  படுத்தாள். இருவரது நிலையும் இருவருக்கும் புரிந்தது. அது தனிப்பட்ட கரிகாலன் / சிவகாமியின் உணர்ச்சிகள் அல்ல.

இயற்கை வகுத்த விதிப்படி நர்த்தனமாடும் ஆண் / பெண் உணர்ச்சிகள். புலன்களை அடக்கிய முனிவர்களே தடுமாறும் கட்டத்தில் அப்போது  இருவரும் இருந்தார்கள். கரை உடையக் கூடாது என இருவரது புத்தியும் எச்சரிக்கை செய்யவே முற்பட்டது. அதைக் கேட்கும் நிலையில் இருவரது  உணர்வுகளும் இல்லை. ஒருவரையொருவர் நம்பாமல் சந்தேகப்படுகிறோம்... ஒருவரைக் குறித்த குழப்பம் மற்றவருக்கு இருக்கிறது... நம்பிக்கையை  விட பரஸ்பரம் அவநம்பிக்கையே மேலோங்கி நிற்கிறது... என்பதையெல்லாம் இருவரும் அறிந்திருந்தாலும்... அந்தக் கணத்தின் அடிமைகளாகவே  இருவரும் காட்சி தந்தார்கள்.

ஊசி முனையில் இன்னும் எத்தனை கணங்கள் தவம் செய்ய முடியும்? ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்துதானே ஆகவேண்டும்..? திரும்பிப் படுக்காமல்,  எழுந்திருக்கவும் செய்யாமல், குப்புறவும் கிடக்காமல், மல்லாந்தபடி தன் வலது காலை உயர்த்திப் படுத்திருந்த சிவகாமியின் அருகில் கரிகாலன்  அமர்ந்தான். அவனது இடது கையை அவளது வழுவழுப்பான இடுப்பு வரவேற்றது. பதிந்த உள்ளங்கையின் ரேகைகள் அவளது இதயத்தை ஊடுருவி  முத்திரை பதிக்க முற்பட்டன. புறத்தை மறந்து இருவரும் அகத்துக்குள் மூழ்கினார்கள். முத்தெடுக்கும் தருணத்தில் அந்த ஒலி எழும்பியது.

நூறு வராகங்கள் ஒருசேர சத்தம் எழுப்பினால் என்ன ஒலி கேட்குமோ அந்த ஒலி அந்த வனப் பகுதியின் அமைதியைக் கிழித்தது. சட்டென்று  சுயநினைவுக்கு வந்த இருவரும் எழுந்து நின்றார்கள். தரையில் வைத்திருந்த தன் வாளை கரிகாலன் எடுத்துக் கொண்டான். இருவரின் கண்களும்  தங்களைச் சுற்றிலும் சலித்து அலசின. செவிகள் கூர்மையடைந்து, சருகுகள் மிதிபடும் ஒலியைத் துல்லியமாக உள்வாங்கின. ஒருவர் பின்னால்  மற்றவர் நின்றபடி தங்களைச் சுற்றிலும் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வை எதிர்கொள்ளத் தயாரானார்கள். அதற்கேற்ப ஏழெட்டு வீரர்கள் உருவிய  வாட்களுடன் வட்டமாக அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.

(தொடரும்)                 
ஓவியம்: ஸ்யாம்