விண்வெளி சுற்றுலா!
இனி அந்தரத்தில் மிதந்துகொண்டே செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளலாம். விண்வெளியிலிருந்து பூமிப்பந்தை கண்சிமிட்டாமல் ரசிக்கலாம். நிலவின் அருகில் நின்றுகொண்டு குளிக்கலாம்; தேநீர் அருந்தலாம். நட்சத்திர சூட்டில் பிறந்த நாளைக் கொண்டாடலாம். எடையற்ற தன்மையை உணரலாம்.
வாய்ப்பு கிடைத்தால் ஏலியன்களுடன் உரையாடலாம். இதுமாதிரி எண்ணற்ற ஆச்சர்யங்களை சாத்தியமாக்க காத்திருக்கிறது விண்வெளிச் சுற்றுலா! எவ்வளவு நாளைக்குத்தான் பூமியையே சுற்றிக் கொண்டிருப்பீர்கள். விண்வெளிக்குப் போய் அங்கே என்ன இருக்கிறது... அதன் அனுபவம் என்னவென்று பார்க்க வேண்டாமா? என்று பெரும் பணக்காரர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த விண்வெளிச் சுற்றுலா.
ஆனால், ‘‘ஒரு காலத்தில் விமானத்தில் பயணிப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இன்றோ யார் வேண்டுமானாலும் விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல விண்வெளிச் சுற்றுலாவும் காலப்போக்கில் மாறும்...’’ என்கின்றனர் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள். ‘‘இருபது வருடங்களுக்கு முன்பு முறையாகப் பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே விண்வெளிக்குச் செல்ல முடியும். பொருட்செலவும் மிக அதிகம்.
இன்று கை நிறைய பணமும், நெஞ்சம் நிறைய துணிச்சலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் சென்று வர முடியும்...’’ என்று நம்பிக்கை தெரிவிக்கின்றன விண்வெளிச் சுற்றுலா நிறுவனங்கள். இதற்காக பில்லியன் கணக்கில் முதலீடு செய்து பிரத்யேகமான விண்கலங்களை வடிவமைத்து வருகின்றன அந்த நிறுவனங்கள். ‘யார் முதலில் மக்களை விண்வெளிக்கு அழைத்துப் போகிறார்கள்’ என்பதே அவர்களுக்குள் நிலவுகின்ற முக்கிய போட்டி.
இந்தப் போட்டியில் பங்கேற்க சோதனை ஓட்டங்களை நிகழ்த்தி, ‘நாசா’ போன்ற விண்வெளி நிலையங்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும். சோதனை ஓட்டத்திலேயே பல உயிர்களையும், கோடிக்கணக்கான பணத்தையும் இழந்த நிறுவனங்கள் பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன. ‘என்ன ஆனாலும் பரவாயில்லை, மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம்’ என்று உறுதியாக சில நிறுவனங்கள் இன்றும் களத்தில் நிற்கின்றன. அவற்றில் முக்கியமானது ‘வர்ஜின் கேலக்டிக்’, ‘ஸ்பேஸ் எக்ஸ்’, ‘புளூ ஆரிஜின்’.
வர்ஜின் கேலக்டிக்:
‘வர்ஜின் குரூப்’ நிறுவனத்தின் ஓர் அங்கம் இது. நானூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிர்வகித்து வரும் இதன் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன், கடந்த பதினான்கு வருடங்களாக விண்வெளிச் சுற்றுலாவில் மட்டுமே முழு மூச்சாக கவனம் செலுத்தி வருகிறார். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்து விண்வெளிக்கு விமானத்தை அனுப்புவதும், அது தோல்வியடைந்தால், தோல்வியைச் சரிசெய்து மறுபடியும் அனுப்புவதுமாக இருக்கிறார்.
கடந்த வருட சோதனை ஓட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விணகலத்தையும், இரண்டு உயிர்களையும் பலி கொடுக்க நேர்ந்தது. இருந்தாலும் பிரான்சன் துவண்டு போகவில்லை. கடந்த மாதம் இன்னொரு சோதனை ஓட்டத்தை நிகழ்த்தினார். அது பெரும் வெற்றி பெற்றதிலிருந்து இந்த வருட இறுதிக்குள் விண்வெளிச் சுற்றுலாவை ‘வர்ஜின் கேலக்டிக்’ தொடங்கிவிடும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விண்வெளிச் சுற்றுலாவுக்காக மணிக்கு 1,400 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய விண்கலத்தை பிரத்யேகமாக வடிவமைத்திருக்கின்றனர். இதில் ஆறு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.
அப்படி பயணிக்கும்போது பூமியிலிருந்து சுமார் 120 கி.மீ. உயரத்தில் உள்ள வளிமண்டலத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டி, விண்வெளியின் பரப்பைத் தொடும்போது 6 நிமிடங்கள் எடையில்லாத நிலையை பயணிகள் அனுபவிக்கலாம். விமானத்துக்குள் ஒரு பறவையைப் போல மிதக்கலாம். இந்த மாதிரி பூமியில் அனுபவிக்க முடியாத பல அனுபவங்கள் இந்தச் சுற்றுலாவில் காத்திருக்கின்றன. ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் உட்பட பல பிரபலங்கள் இந்த விண்வெளிச் சுற்றுலாவுக்காக முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக் கட்டணம் 2,50,000 டாலர்; அதாவது 1.70 கோடி ரூபாய். மொத்த பயண நேரமே மூன்றரை மணி நேரம்தான்.
ஸ்பேஸ் எக்ஸ்:
ஆரம்பத்தில் மிகவும் மந்தமாகத்தான் விண்வெளிச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க். இப்போது மற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பார்த்து எலனும் வேலையைத் துரிதப்படுத்திவிட்டார். பூமிக்கு மேலே அழகாகப் பரந்து விரிந்திருக்கும் விண்வெளியின் வெளிவட்டப் பாதையில் மக்களை அழைத்துச் சென்று, பூமியைச் சுற்றிவரச் செய்து அசத்துவதே ‘ஸ்பேஸ் எக்ஸி’ன் முக்கிய குறிக்கோள். ‘‘விண்வெளிப் பயணம் காரில் செல்வது போல சொகுசானது அல்ல. பூமியை விட்டு மேலே உயரத்துக்குச் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசை நம் உடலை கடுமையாக அழுத்தும். அது பயணிகளுக்கு மோசமான அனுபவத்தைக் கொடுக்கலாம்.
இதை நிவர்த்தி செய்து ஒரு சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். தவிர, பயண நேரம் குறையக் குறைய விண்வெளிப் பயணம் அற்புதமான அனுபவமாக மாறும். அதனால் மிக வேகமாகச் செல்லும் விண்கலத்தையும் வடிவமைத்து வருகிறோம்...’’ என்கிறார் எலன். இப்போது சோதனை ஓட்டத்துக்கான விண்கலத்தை செலுத்தியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். அதன் ஒவ்வொரு அசைவையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகிறார் அவர். 2019க்குள் மக்களை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது ஸ்பேஸ் எக்ஸின் திட்டம். இன்னும் கட்டணம், பயண நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
புளூ ஆரிஜின்:
‘‘நாம் எல்லோரும் நிலவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட வேண்டும்...’’ என்று வேடிக்கையாகச் சொல்கிறார் இதன் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ். மிகக் குறைந்த செலவில், அதிகளவில் சாதாரண மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதே பெஸோஸின் முக்கிய நோக்கம். 2005ம் வருடத்திலிருந்து 15 முறைக்கு மேல் சோதனை ஓட்டங்களை நிகழ்த்தியிருந்தாலும், இன்னும் ஆறு சோதனை ஓட்டங்களைச் செய்து பார்த்த பிறகே மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது புளூ ஆரிஜின். மணிக்கு 3,675 கி.மீ. வேகத்தில் செல்கின்ற இவர்களின் விண்கலம் சோதனை ஓட்டத்தில் விண்வெளிக்குச் சென்று வர 11 நிமிடங்களே ஆகியிருக்கிறது. ‘புளூ ஆரிஜின்’ இந்த வருடத்தின் இறுதிக்குள் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது.
முதல் நபர்
விண்வெளிச் சுற்றுலா சென்ற முதல் நபர் டென்னிஸ் டிட்டோ. அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான இவருக்கு ஆரம்பத்தில் விண்வெளிச் சுற்றுலா செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ஏனென்றால் இவர் விண்வெளி வீரர் அல்ல. பல போராட்டங்களுக்குப் பின் 2001ம் வருடம் விண்வெளிக்குச் சென்று அங்கே 8 நாட்கள் தங்கியிருக்கிறார். 128 முறை பூமியைச் சுற்றி வந்திருக்கிறார். இதற்காக இவர் செலவிட்ட தொகை சுமார் 80 கோடி ரூபாய். இவருக்குப் பின் ஆறு பேர் விண்வெளிச் சுற்றுலா சென்று வந்திருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பெரும் பணக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|