சூழல் அகதிகள்
போர், வன்முறை, அரசியல் சீர்குலைவுகளால் 68.5 மில்லியன் மக்கள் தாய்நிலத்தை இழந்து சூழல் அகதிகளாக உலகை வலம் வருகின்றனர் என்கிறது ஐ.நா. அறிக்கை. இதில் மியான்மர் மற்றும் சிரியா நாடுகள் 50%க்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கி வருகிறது. 16.2 மில்லியன் மக்கள் கடந்தாண்டு அகதிகளானார்கள் எனில் தினந்தோறும் 44 ஆயிரத்து 500 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள்; அதாவது 2 நொடிகளுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் என தகவல் தருகிறது ஐ.நா அமைப்பு.
சிரியாவில் 6.3 மில்லியன், பாலஸ்தீனத்தில் 5.4 மில்லியன், ஆஃப்கானிஸ்தானில் 2.6 மில்லியன், தெற்கு சூடானில் 2.4 மில்லியன், மியான்மரில் 1.3 மில்லியன் என எகிறிய அகதி மக்கள் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர். கடந்தாண்டில் 3.5 மில்லியன் மக்களுக்கு (சிரியா மக்கள் அதிகம்) அடைக்கலம் தந்து முன்னணி இடம் பிடித்துள்ள நாடு துருக்கி.
சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ!
தெலுங்குதேச எம்எல்ஏ நிம்மலராம நாயுடு, மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள பாலகோல் நகரின் சுடுகாட்டில் மூன்று நாட்கள் தூங்கியுள்ளார்! எதற்குத் தெரியுமா? பயத்தில் நடுங்கிய தொழிலாளர்களுக்காகத்தான். ‘‘பிணங்களை எரிக்க சரியான வசதிகள் இங்கில்லை. பிணங்களை கழுவக்கூட நீரில்லை. அதற்காகவே அரசிடம் 3 கோடி நிதி பெற்று குப்பைகளை அகற்றி தகன வசதிகள் செய்ய முற்பட்டால், தொழிலாளர்கள் பேய் அச்சத்தால் நடுங்குகின்றனர்...’’ என அச்சமின்றி பேசுகிறார் எம்எல்ஏ நிம்மலராம நாயுடு. இப்போது பயம் நீங்கிய தொழிலாளர்கள் விறுவிறுவென வேலையில் வேகம் காட்டி வருகின்றனர்.
ஆகாயத்தில் கல்யாணம்!
லை ஃபில் ஒருமுறை நடக்கும் கல்யாணத்தை மறக்கமுடியாதபடி கிராண்டாகக் கொண்டாடுவது அட்வென்ச்சர் தலைமுறையின் புதிய கலாசாரம். அந்தவகையில் கிழக்கு ஜெர்மனியில் புத்தம் புதிய கல்யாண ஜோடி அந்தரத்தில் தொங்கும் ரோப்காரில் அமர்ந்தபடி கல்யாணம் செய்துள்ளதுதான் டாக் ஆப் தி டவுன்!
பூமியிலிருந்து 46 அடி உயரத்தில் நடந்த நிக்கோல் பெக்காஸ், ஜென்ஸ் நார் ஜோடியின் புதுமைத் திருமணம் அது. உயரத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தொங்கிய ரோப்காரில் அமர்ந்த மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர். 3 ஆயிரம் மக்களுக்கும் அதிகமானார் இந்த சர்க்கஸ் கல்யாணத்தை வேடிக்கை பார்த்து பூக்களை வீசி வாழ்த்துகளைச் சொல்லியுள்ளனர்.
தொகுப்பு: ரோனி
|