தமிழ்ப் பெண் இப்ப மிஸ் இந்தியா!



‘‘குறைந்தது 30 திருநங்கைகளை தத்தெடுக்கப் போறேன்!’’ ஆரம்பமே ஷாக் கொடுத்து வாயடைக்க வைத்திருக்கிறார் அனுகிரீத்தி. இவர்தான் மிஸ்  இந்தியா 2018. அக்மார்க் தமிழ்ப் பெண். திருச்சியைச் சேர்ந்தவர். இப்போது மிஸ் வோர்ல்ட் கனவை நினைவாக்க முயற்சித்து வருகிறார். வயது 19.  லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்சு படித்து வரும் அனுகிரீத்தியின் பள்ளிப் படிப்பு எல்லாம் திருச்சியில்தான்.

ஓவர் நைட்டில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த டஸ்கி டார்லிங் வீட்டின் முன்தான் காத்துக் கிடக்கிறார்கள். தென்னிந்தியர்களின் பல வருடக்  கனவு, தமிழர்களின் நிறைவேறாமலேயே இருந்த ஆசை... என அத்தனைக்கும் பதிலாக நிற்கிறார் இந்த மலைக்கோட்டை மங்கை. ‘‘அம்மா, சிங்கிள்  மதர். ரொம்ப கஷ்டப்பட்டு என்னை வளர்த்தாங்க. நாங்க திருச்சில டவுன் கூட கிடையாது. கொஞ்சம் அவுட்டர்தான். அதனாலேயே தைரியமான  பொண்ணா வளர்த்திருக்காங்க...’’ என்னும் அனு கிரீத்தி பத்தாவது வரை திருச்சி மான்ஃபோர்ட் பள்ளியிலும், +1, +2வை ஆர்.எஸ்.கே பள்ளியிலும்  படித்திருக்கிறார்.

2018ன் மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்டிருக்கும் அனு, இந்த வருடம் டிசம்பர் 8 அன்று சீனாவில் நடக்கவிருக்கும் மிஸ் வோர்ல்ட் போட்டியில்  இந்தியா சார்பாக கலந்து கொள்ளப் போகிறார். எப்போதும் புன்னகையைத் தாங்கி நிற்கும் அனு, ‘மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்’ மற்றும் ‘பியூட்டி வித் ஏ  பர்போஸ்’ பட்டங்களையும் வென்றிருக்கிறார். இவர், மாநில தடகள சாம்பியனும் கூட. பைக் என்றால் கொள்ளை ஆசை. பிரமாதமான டான்சர்... என  அனுகிரீத்தி குறித்துச் சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன. வாங்க அனு... வாங்க!

ஷாலினி நியூட்டன்