சொரணை இருக்கிறதா நமக்கு?



நியூஸ் வியூஸ்

முன்பொரு காலம் இருந்தது. நல்ல வெயிலில் நடந்துகொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும்,  செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். வீட்டுக்கு  வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளைக் கட்டி, நீரை நிரப்பி வைத்த காலமும் இருந்தது.  தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாகக் கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம். ஆனால், இன்று? யார் வீட்டுக்காவது  போனால், “தண்ணீ குடிக்கறீங்களா?” என்று சம்மதம் கேட்டுவிட்டுத்தான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை  காசு கொடுத்துத்தானே வாங்குகிறோம்? இன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை.

தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளைச் செய்து வருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான  குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்தக் குடிநீரை அப்படியே  பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்க வேண்டும் அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும்.

அதற்காக ஓர் இயந்திரத்தை பணம் கொடுத்து வாங்க வேண்டும். குடிமக்களுக்கு அரசு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமை கூட  தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர். ஆம். கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை, தாங்கள்  பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது. சுமார் 16  லட்சம் மக்களுக்கு அடுத்த 26 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி  ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.

குடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்க்கும் இச்செயல், ஏற்கனவே தில்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களில் நடக்கிறது. சில  தனியார் நிறுவனங்கள் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கின்றன. ஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில்  பயணிக்க சுங்கம் செலுத்துவதைப் போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கு தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய  நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை.

அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம்  சம்பாதிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க  வேண்டியது அரசின் கடமை. ஆனால், உலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக  இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களைச் சுரண்டுவதற்குக்  காரணமாகிறது.

அதுபோல தண்ணீரைக் கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்...” என்று சொல்லியிருக்கிறார். என்னவோ, இயற்கை  வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களைச் சுரண்டுவதாகவும் குற்றம்சாட்டி அவர் உதிர்த்த இந்த  முத்துக்கள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில்  இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999 - 2000 ஆண்டுகளில் போராட்டம்  நடத்தினார்கள்.

தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.  அந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக  முயற்சித்தன. சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.

கடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று  அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்தப் போர், 2010ம் ஆண்டு ‘Even the Rain’  என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.

இன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாயப் பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த  முனைவார்கள் என்றுதான் அர்த்தம். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி வாங்கும்.  லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை  வாங்கிப் பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம். பொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா?

யுவகிருஷ்ணா